திருப்பு முனை கல்.ராமன்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                   கல்லும் மண்ணும் இறுகிக் கிடக்கும் பூமியின் அடியில், தனக்கான ஈரத்தைத் தேடிப்போகும் வேரை ஞாபகப்படுத்துகிறார் கல்.ராமன். விதை விழுந்த இடம் திருநெல்வேலி மாவட்டம் அம்பா
சமுத்திரத்துக்கு அருகில் இருக்கும் சின்ன கிராமம் மன்னார்கோயில். வேர் பரவியிருக்கும் இடம், பில்கேட்ஸின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சியாட்டில் நகரம். ‘வால்மார்ட்’, ‘அமேசான்.காம்’, ‘ப்ளாக்பஸ்டர்’ வீடியோ ரென்டல் நிறுவனம், ‘டிரக்ஸ்டோர்.காம்’ போன்ற உலகின் பிரபலமான நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பை வகித்த திருநெல்வேலி தமிழர்.

அமெரிக்காவில் மிக இளம் வயதில்  தன்னுடைய 31வது வயதில் & சி.இ.ஓ. பதவி வகித்த இந்தியர். மில்லியன் டாலர் நிறுவனங்களை பொறுப்பெடுத்து லாபத்தில் கொழிக்க வைத்தவர். பொருளாதார தடுமாற்றத்தில் தவிக்கும் அமெரிக்காவில், தடுமாறாமல் உயரப் பயணிக்கும் நிறுவனங்களில் கல்.ராமனின் ‘குளோபல் ஸ்காலர்’ நிறுவனமும் ஒன்று. இதற்காக இவரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

 அமெரிக்க அதிபர் அழைத்து சந்திக்கும் இரண்டாவது சர்வதேசத் தமிழர் இவர். திருநெல்வேலியின் கல்யாணராமன், அமெரிக்காவின் கல்.ராமனாக உருவான மாற்றத்தில் ஒரு திரைப்படத்திற்கான திருப்பங்கள் நிறைந்து வழிகின்றன.

‘‘திடீரென்று ஒருநாள் அப்பா இறந்து போனார். நாங்கள் ஐந்து பிள்ளைகள், அம்மா, அப்பாவின் அம்மா என ஏழு ஜீவன்கள். அதுவரைக்கும் அத்தனை பேரும் ஜில்லா தாசில்தாரின் பிள்ளைகள், மனைவி, அம்மா என்று அழைக்கப்பட்டனர். அப்பாவின் மரணம் எங்களை நடுத்தெருவில் நிறுத்தியது. இளம்வயதில் தாசில்தாராக இருந்தார் என்கிற பெருமை அப்பாவுக்கு உண்டு. இங்கிலீஷ் படங்களைப் பார்ப்பதற்காக மதுரைக்குப் போய்வருவார் என்று சொல்வார்கள். நல்ல படிப்பு, நல்ல வேலை, நல்ல குடும்பம் என்கிற நிறைவான வாழ்க்கைக்குத் திருஷ்டிப் பொட்டாக இருந்தது குடிப்பழக்கம். குடித்துவிட்டு யாரையும் துன்புறுத்த மாட்டார். ஆனாலும், குடி என்பது தன்னைத்தானே துன்புறுத்திக்கொள்கிற பழக்கமாகிவிட்டது. இளம் வயதில் மரணத்தைத் தழுவுகிற துயரம், குடிப்பழக்கத்தால் நேர்ந்தது. இப்பவும் எங்க கிராமத்தில் குடிக்கிற ஆண்களுக்கு சின்னக் குழந்தைகள் இருந்தால் என் மனம் தவிக்க ஆரம்பிச்சுடும்.

 நூறு  ரூபாய் சம்பாத்தியத்தில் 70 ரூபாயைக் குடிக்கு செலவழிக்கிற விபரீதப் பழக்கத்தால், அந்தச் சின்னப் பிள்ளையின் படிப்போ, ஆரோக்கியமோ, வளமான வாழ்வோ பாதிக்கப்படுகிறது.

அப்பா இறந்தபிறகு ஒவ்வொரு நாளும் எங்கள் குடும்பம் செத்துப் பிழைத்தது. எட்டாம் வகுப்புவரை படித்திருந்த அம்மாவுக்கு வெளியுலகம் தெரியாது. மாதம் பென்ஷன் 420 ரூபாய் வரும். அதில்தான் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும். பள்ளியில், கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் நான் கற்ற பாடங்களைவிட, அம்மாவைப் பார்த்து தெரிந்து கொண்ட பாடங்கள்தான் அதிகம். அன்பு காட்ட அம்மாக்கள் மட்டும் இல்லாமல் போனால், பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் கிரிமினல்களாக, இலக்கற்றவர்களாக, அநாதை
களாக மாறிவிடுவார்கள் என்பது என் தாழ்மையான கருத்து. எங்கள் குடும்பத்தின் ஆணிவேர் அம்மா. இன்று என்னுடைய நிறுவனத்தின் கிளை உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.

வருடத்திற்கு மூன்று முறையாவது சொந்த கிராமத்திற்குச் சென்று, பனியனோடு திண்ணையில் உட்கார்ந்து, எங்கள் கிராமத்து மனிதர்களை நலம் விசாரிக்கிற எளிமை அந்த ஆணிவேரிடம் இருந்து வந்தது. தன்னுடைய வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொண்டு, கொஞ்சமே இருக்கிற சாப்பாட்டை பிள்ளைகளுக்குப் பரிமாறுவதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். தட்டில் போட்டு சாப்பிடுகிற அளவு உணவு இருக்காது. ஐந்து பிள்ளைகளையும் கைகளை நீட்டச் சொல்லி, ஒரு பாத்திரத்தில் இருந்து அத்தனை பேருக்கும் பரிமாறுகிற வித்தையை அவருக்கு வாழ்க்கை கற்றுத் தந்தது.

உறவுகளின் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவு இல்லை. கஷ்டம் என்று கண்களை கசக்க ஒரு இடம் இல்லை. அன்றாடத் தேவைகளுக்கே தினம் தினம் போராட்டம். அண்ணன் போட்டுத் தந்த உடை, எனக்குப் புதுசு. அதை நான் போட்டு பழசாக்கிய பிறகு, என் தம்பிக்கு அது புது உடை. இருக்கிற ஒவ்வொரு நகையாக அடகுக்கடைக்குச் சென்று மீட்க முடியாமல் கடனில் மூழ்கிப்போகும்.

 அண்ணன் பாலிடெக்னிக்கில் படித்துக் கொண்டிருந்தார். ‘‘சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்போது பிள்ளைகளுக்கு படிப்பு முக்கியமா?’’ என்று கேட்ட அனைவருக்கும் அழுத்தம் திருத்தமாக ‘‘ஆமாம்’’ என்கிற பதிலை அம்மா தந்தார். ஐந்து பிள்ளைகளில் மூத்தவனை மட்டுமாவது வேலைக்கு அனுப்பினால்கூட பாதி கஷ்டம் தீருமே என்று மற்றவர்கள் எடுத்துச் சொன்னபோது, ‘‘குழந்தைகளின் படிப்பை நிறுத்த முடியாது’’ என்று தீர்க்கமாக அம்மா சொன்னதை நினைத்தால் இப்போதுகூட என் கண்களில் நீர் துளிர்க்கும். அத்தனை கஷ்டத்திலும், ‘‘படிப்புதான் நிரந்தர சொத்து. அதை நிறுத்தி வேலைக்கு அனுப்பி, ஒரு வாய் சோறுகூட என்னால் சாப்பிட முடியாது’’ என்று அம்மா சொன்னதால்தான் இன்று நான் தொட்ட அத்தனை உயரமும் சாத்தியமானது.

‘‘எவ்ளோ திமிர் இருந்தா, சோறு இல்லேன்னாலும் பரவாயில்லை; படிப்பு வேணும்னு சொல்லுவா’’ என்று ஆறுதல் சொன்னவர்களும் விலகிப்போனார்கள். அம்மாவுக்காக படிக்க வேண்டும் என்கிற வெறி மனதில் வந்தது. மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சம்கூட வீட்டிற்கு நிரந்தரமில்லாத சூழல். தெருவிளக்கில், கொசுக்கடியில் படித்த நாட்கள்தான் பின்னாளில் எதையும் எதிர்த்து நிற்கிற தைரியத்தை எனக்குத் தந்திருக்கக்கூடும்.

பணம் இல்லாமல் இருந்தாலும், படிப்பில் சக்கரவர்த்தியாக இருக்க முடிந்தது. அத்தனை பாடங்களில் உயர்ந்த மதிப்பெண்களோடு ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சியானேன். பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தேன். மருத்துவம், பொறியியல் இரண்டு படிப்புக்கும் விண்ணப்பம் வாங்கவே ரொம்ப சிரமப்பட வேண்டி இருந்தது. இரண்டுக்குமே நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். நண்பர்கள் கோச்சிங் வகுப்பு போவார்கள். நான் அப்போதும் தெருவிளக்கில்தான் படித்தேன். திருநெல்வேலி சென்று நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். உறவுகள் இருந்தாலும், யார் வீட்டில் சென்று தங்கி, தேர்வெழுதப் போவது என்று தெரியவில்லை. முந்திய நாள் இரவு ஒரு சர்ச்சில் போய் தங்கினேன். ‘இங்கெல்லாம் தங்க முடியாது’ என்று வெளியே அனுப்பப் பார்த்தார்கள். தேர்வெழுத வந்திருப்பது தெரிந்ததும் இன்முகத்தோடு அனுமதித்தார்கள்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazineஎனக்கு மருத்துவம், பொறியியல் இரண்டுக்குமே இடம் கிடைத்தது. ‘திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் மகன் டாக்டர் படிப்பு படிக்கப்போகிறான்’ என்பதில் எவ்வளவு சந்தோஷம் இருந்ததோ, அதே அளவு கலக்கமும் அம்மாவுக்கு இருந்திருக்க வேண்டும். பெண்கள் புனிதமாகக் கருதிய தாலிச்சங்கிலி வரை விற்று முடிந்துவிட்டது. மிச்சம் எதுவுமில்லை வீட்டில். பள்ளிப்படிப்பிற்கு அவ்வளவாக செலவு இல்லை. அப்படி இருந்தும் குறைந்தபட்சமாக தரவேண்டிய பணத்தையே ஒருமுறைகூட உரிய நேரத்தில் தந்ததில்லை. அதற்காக பலமுறை வகுப்பிற்கு வெளியே நிற்க வைக்கப்பட்டிருக்கிறேன். இதில் மருத்துவம் படிக்க என்ன செய்யப்போகிறோம் என்கிற கவலை எனக்கே வந்தது. அம்மாவுக்கு எப்படி வராமல் போகும்?

இரண்டில் ஏதேனும் ஒன்றில் இடம் கிடைக்காதா என்று பணம் இருக்கிற பலர் ஏங்கி நிற்க, எனக்கு இரண்டிலும் ஏன் இடம் கிடைத்தது என்று நினைக்கிற அளவு வறுமை விஸ்வரூபம் எடுத்து மிரட்டியது. ‘‘கடவுள் இருக்காரு... எப்படியாவது சேர்த்து படிக்க வெச்சுடுறேன்’’ என்ற அம்மாவின் வார்த்தைகள் அதீத நம்பிக்கையாகவே அடுத்தவர்களுக்குப் பட்டது.
என் வாழ்வின் மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய ஒரு தருணம் வந்ததாக உணர்ந்தேன். திருநெல்வேலியில் மருத்துவம் படித்தால், என் வாழ்க்கை அந்தச் சின்ன நகரத்திற்குள்ளேயே முடிந்துவிடும். எனக்கு அதில் விருப்பம் இல்லை. ‘இவ்வளவு பணத்தை எப்படி நான் செலவு பண்ணுவது?’ என்று என் அம்மா திணறுகிற அளவு பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பது என் கனவு. அதற்கு திருநெல்வேலி நிச்சயம் எனக்குப் போதாது. அம்மாவை உட்கார வைத்துப் பேசினேன். ‘‘கஷ்டப்பட்டு படித்து டாக்டராகி இங்கேயே முடங்கிப்போக நான் தயாராக இல்லை. எனக்கு உலகத்தைப் பார்க்க வேண்டும். பல நாடுகளுக்குப் போகவேண்டும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும். அதனால் நான் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்கிறேன்’’ என்று சொன்னபோது அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்து பார்த்தார் அம்மா.

என் வாழ்வில் பல திருப்பங்களைத் தந்த மிக முக்கியமான முடிவு அது. உள்ளூரில் படித்தால் வீட்டில் இருப்பதை சாப்பிட்டு விட்டு போய்ப் படிக்கலாம். சென்னை என்றால் ஹாஸ்டலுக்குப் பணம், மெஸ்ஸிற்குப் பணம், போக்குவரத்து செலவு, படிப்பு செலவு என தேவைகள் அதிகமாகும். அப்போதைய குடும்பச் சூழலில் பிள்ளைகளை வேலைக்கு அனுப்ப ஆயிரம் காரணங்கள் இருந்தன. மேல்படிப்பு படிக்க வைக்க ஒரே ஒரு காரணம்கூட இல்லை. ஒரு சின்னப் பையன் சென்னைக்கு சென்று படிக்கப்போவதாக சொன்னபோது, அம்மாவின் மனசு சரி என்று சொல்லலாம். யதார்த்தம் அனுமதிக்காது. என் ஒருத்தனுக்காக தலையசைத்தால், ஒட்டுமொத்த குடும்பமும் இன்னும் பத்து மடங்கு அதிகமான கஷ்டங்களைச் சந்திக்க வேண்டி வரும்.

ஆனாலும், எந்த தைரியத்தில் அம்மா என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தார் என்று எனக்கு இன்னும்கூட தெரியவில்லை. தாய்மையின் பலமா? இல்லை பலவீனமா? வலிகளைத் தாங்கிப் பழகிய அனுபவமா? எதையும் கணக்கு போட்டு பார்க்கத் தெரியாத அறியாமையா? அம்மாவும், கடவுளும் எனக்கு ஆதர்சமானது இது போன்ற சந்தர்ப்பங்களில்தான்.

ஒரு டிரங்க் பெட்டி, துவைத்து துவைத்து நிறம் மங்கிய உடை, காலில் பழைய ரப்பர் செருப்பு. தலைசிறந்த மாணவர்களின் சரணாலயமான சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி இந்த ஏழை கல்யாணராமனை, வெறும் மதிப்பெண்களைத் தகுதியாக எடுத்துக் கொண்டு வரவேற்கத் தயாரானது...  
(திருப்பங்கள் தொடரும்...)
 படங்கள்: புதூர் சரவணன்
த.செ.ஞானவேல்