சினிமா பிசினஸில் எம்.பி.ஏ. மாணவர்கள்!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                ரு திரைப்படத்தின் பின்னால் பலநூறு பேரின் உழைப்பு இருக்கிறது. படத்தின் வெற்றிதான் தயாரிப்பாளர் முதல் லைட்பாய் வரை அனைவரின் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. ஆனால், பல படங்கள் தோல்வியைத் தழுவுகின்றன. இவற்றில் நல்ல கதையம்சம் உள்ள படங்களும் அடக்கம். ‘‘படத்தை சரியாக மக்களிடம் கொண்டு சென்றால் தோல்வி வராது’’ என்கிறார் இயக்குனரும் மின்வெளி மீடியா ஒர்க்ஸ் நிறுவனத் தலைவருமான தனபால் பத்மநாபன். இந்தியத் திரையுலகில் இதுவரை யாரும் யோசிக்காத வியாபார யுக்தி ஒன்றை தனது ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார் இவர். தமிழகக் கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் 103 எம்.பி.ஏ. மாணவர்கள் இந்தப் படத்தை புரமோஷன் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

‘‘ஒருகாலத்தில் சினிமா கொட்டகைகள் தான் மக்களுக்குப் பொழுதுபோக்கு. இன்றோ தியேட்டருக்கு மக்களை வரவழைக்க கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.  குறைந்தது 2 கோடி இல்லாமல் படம் எடுக்க முடியாது. லோ பட்ஜெட் படங்கள் பெரும்பாலும் கதையை நம்பியே எடுக்கப்படுகின்றன. இப்போது மூன்றே நாட்களில் படத்தின் ரிசல்ட்டை முடிவுசெய்து விடுகிறார்கள்.

ஜனவரி முதல் ஜூலை வரை வெளிவந்த 60 லோ பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்துள்ளன. முதல் இரு நாட்கள் மக்கள் வராவிட்டால் படத்தை மாற்றி விடுவார்கள். வழக்கமான விளம்பர யுக்திகளைத்தாண்டி, படத்தை மக்களிடம் கொண்டுசெல்ல புதிதாக யோசித்தோம். அதற்காகத்தான் இப்படி. எம்.பி.ஏ. மாணவர்கள், அவர்கள் படிப்புக்குத் தேவைப்படும் ‘இன்டர்ன்ஷிப் புராஜெக்ட்’டாக இப்பணியைச் செய்வார்கள்’’ என்கிறார் தனபால்.

Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சென்னையில் இரண்டு நாள் பயிலரங்கம். பாலுமகேந்திரா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர், அவர்களுக்கு சினிமா பற்றிய புரிதல்களை உருவாக்கினர்.

‘‘தியேட்டருக்கு ஒருவராக மாணவர்கள் நியமிக்கப்படுவார்கள். தியேட்டரைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு படத்தைப் பற்றிய செய்திகளைக் கொண்டு செல்வதோடு, தியேட்டருக்கு வரும் 1000 பேரிடம் ஒரு சர்வே செய்வார்கள். தியேட்டரில் என்னென்ன வசதிகள் வேண்டும், படங்களில் எதை அதிகம் ரசிக்கிறார்கள் போன்ற கேள்விகள் கேட்கப்படும். சர்வே முடிவுகளை திரையுலகத்தோடு பகிர்ந்து கொள்வோம்’’ என்கிறார் படத்தின் ‘காஸ்டிங் டைரக்டர்’ சண்முகராஜன்.

டிஸ்னி, ஃபாக்ஸ் ஸ்டார் போன்ற மல்டிநேஷனல் கம்பெனிகள் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பியுள்ளன. சினிமா தயாரிப்பு கார்ப்பரேட்மயமாகிவரும் நிலையில், மேலாண்மை படித்த மாணவர்களின் தேவையும் அதிகமாகியுள்ளது. அவர்களுக்கான முதல் களத்தை அமைத்துத் தந்திருக்கிறது ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’!
வெ.நீலகண்டன்
படங்கள்: ஆர்.சி.எஸ்