சிரிப்பும் சிந்தனையும்



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                                சும்மா இருந்தால் சுகமில்லை!

                  என் நண்பர் ஒரு மொட்டைத்தலை இருக்கிறார். அறிவாளித்தனமாக அவ்வப்போது ஏதாவது சொல்லி வைத்துவிடுவார். நான் படித்திராத புத்தகங்கள் என் வீட்டு அலமாரியிலேயே நிறையக் கிடப்பதை அறிந்து, ‘எனக்கு உதவி செய்கிறேன் பேர்வழி’ என்று அடிக்கடி பல புத்தகங்களைக் கடத்திச் சென்றுவிடுவார்.

எனக்கு அதில் வருத்தமில்லை. சில வீடுகளில் புறக்கடைப்பக்கம் தேய்ப்பதற்குப் பாத்திரங்கள் போட்டிருந்தால் சிறிய கிண்ணத்தையோ ஸ்பூனையோ காக்கா கொத்திக்கொண்டு போய்விடும் (காக்கா ‘ஓஷ்’ என்றால் காணாமல் போய்விடும். நாம் துரத்துகிற சமயம் அதன் வாயில் ஒரு ஸ்பூனைக் கவ்விக் கொண்டிருந்தால் நாம் ‘ஓஷ்’ என்று விரட்டியதும் ஸ்பூனுடனேயே பறந்துவிடும். இதுவே ‘காக்கா உஷ்’ என்பது).

‘கிவ் அண்ட் டேக்’ பாலிஸி மாதிரி ‘Take and Give’ பாலிஸி காக்கையுடையது. அதனிடம் ஒரு நல்ல குணம். எடுத்துப் போவதைப் போலவே சிலவேளை யார் வீட்டுடையதாவது நம்ம வீட்டில் கொண்டு வந்து போட்டுவிடும். (ஒசத்தியாக இருந்தால் நாம் எடுத்துக்கொள்வோம்!)

அறிவாளியான மொட்டைத்தலை நண்பரைப் பற்றி சொல்ல ஆரம்பித்து காக்கா ஓஷுக்கு வந்துவிட்டேன்.

மொட்டைத்தலை என்ன சொன்னார் என்றால் ஒரு வெள்ளைக்கார எழுத்தாளர் பெயரைச் சொல்லி, ‘‘அந்த மனுஷன் மகா கெட்டிக்காரர். நமக்கெல்லாம் தெரிகிற ஒரு மிகச்
சாதாரண விஷயத்தைத்தான் சொல்கிறார். ஆனால், அது என்னவோ ரொம்பப் பெரிய விஷயம், அதைப் படிக்காவிட்டால் நாசமாகத்தான் போவோம், படித்துவிட்டாலோ பட்ட மரம்கூடப் பச்சைப் பசேலெனத் துளிர்க்கும் என்று நம்ப வைத்துவிடுவார்கள். சொன்னால் சிரிப்பாய்’’ என்றார்.

‘‘சொல்லுங்கள். அதற்குத்தானே வந்திருக்கிறீர்கள். என் அலமாரியிலிருந்தும் எதையோ தூக்கிப் போனீர்கள்?’’ என்றேன்.

மொட்டைக்குக் கோபம் வராது. எனக்கும் அப்படியே. இருவருக்கும் ஒரு பொதுப் புரிந்து கொள்ளுதல் நிலவி வந்தது.

மொட்டை பாபு சொன்னார்...

‘‘அவன் என்னவோ பெரிய விஷயம் மாதிரி சொல்றான். ‘அபூர்வ சந்தர்ப்பம் என்பது ஒவ்வொருத்தருக்கும் எப்பவாவதுதான் வரும். அதைப் பயன்படுத்திக்கத் தயங்கக்கூடாது. முயற்சியிலே தோற்றாலும் பரவாயில்லை’ என்கிறான்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தான். ஒரு எழுத்தாளர் விமானக் கூடத்தில் பயணிப்பதற்காக காத்திருந்தார். பக்கத்திலேயே இன்னொரு பிரயாணி. அவர் மிகவும் பெரிய புள்ளி. தொழிலதிபர். ஆன்மிகவாதி. ஒரு பெரிய பக்திப்பணி செய்திருந்தார்... ஏராளமான பக்திப் பாடல்களைத் தொகுத்து விரிவுரையுடன் பெரும்புத்தகமாக வெளியிட்டிருந்தார். விலை ஆயிரம் ரூபாய். சிறிய தலையணை போன்ற பெரிய புத்தகமாகத் தொகுத்துவிட்டார். அதில் இல்லாத பாடலே கிடையாது என்ற சிறப்பைப் பெற்றிருந்தது அந்தத் தொகுப்பு.

நம்ம எழுத்தாளருக்கு அந்தத் தொழிலதிபரிடம் பேசி அவர் செய்த ஆன்மிகப் பணியை பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. ஆனால், ஏதோ ஒரு கூச்சம். அவருடன் பேசத் தயங்கியவாறு தன் கையிலுள்ள ஏதோ ஒரு புத்தகத்தைப் படிப்பவர் போலிருந்தாராம்.

அவர்கள் ஏற வேண்டிய விமானம் வந்துவிட்டதாக அறிவிப்பு வந்தாயிற்று... ‘ஃபிளைட் ஜஸ்ட் அரை மணியில் கிளம்பும்’ என்றது தகவல்.தொழிலதிபர் புன்னகைத்துக் கொண்டார். அதையே அவர் பேசியதைப் போல எடுத்துக் கொண்டு நம்ம எழுத்தாளர் பேச்சைத் தொடங்கிவிட்டாராம்... ‘‘ஜஸ்ட் அரை மணி என்பது சாதாரணமானதல்லவே. அதுவும் தங்கள் மாதிரி வி.வி.ஐ.பி&கள் நேரத்தோடு போட்டியிட்டு விரைகிறவர்கள்’’ என்றாராம்.

‘‘என்ன செய்வது? காலத்தின் கட்டாயம். சில நேரம் பொறுத்துத்தான் போகவேண்டும்’’ என்றாராம் பிரமுகர் புன்னகையோடு.

உடனே நண்பர், ‘‘நீங்கள் தெய்வக் கவிஞர்களின் பாடல்களைத் தொகுத்துச் சில ஆண்டுகள் முன் வெளியிட்டீர்கள் அல்லவா? அந்தப் பிரதியை புத்தம்புதியதுபோல பாதுகாத்து வருகிறேன். ஆனால் ஒரு சங்கடம். பிரயாணத்தின்போதெல்லாம் அதைச் சுமந்து செல்வது சாத்தியமல்ல. சுலபமாக தூக்கிச் செல்கிற மாதிரி கனமில்லாதபடி இன்னொரு பதிப்பு கொண்டுவரலாமே’’ என்றார்.

அவ்வளவு பெரிய தொழிலதிபர் ரொம்ப மகிழ்ச்சியுடன் தனது விசிட்டிங் கார்டு ஒன்றைத் தந்தார். ‘‘நீங்கள் சவுகரியப்பட்டபோது போன் செய்துவிட்டு இந்த முகவரிக்கு வாருங்கள். விரிவாகப் பேசலாம்’’ என்று தமது கோவை முகவரியைத் தந்தாராம்.

சில நாட்கள் கழித்து எழுத்தாளர் கோவை சென்றபோது தொழிலதிபரைப் பார்க்கச் சென்றாராம்.

ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக அந்தத் தொழிலதிபர் அவரிடம் பேசினார். க்ளைமாக்ஸாக குட்டிப் புத்தகம் கொண்டுவரும் பொறுப்பையும் எழுத்தாளருக்கே தந்துவிட்டார். அந்தப் பணியை செய்து முடிக்க ஒரு மாபெரும் சன்மானமும் கிடைத்தது.

இத்தகைய நல்ல வாய்ப்பு அன்று விமானக் கூடத்தில் மௌனமாக அவர் இருந்திருந்தால் கிடைத்திருக்குமா?’

நாம் உம்முணாமூஞ்சிக் குரங்காக உட்கார்ந்திருக்காமல் சக மனிதர்களிடம் பேச வேண்டும், உறவாட வேண்டும், வாய் மூடி இருந்தால் அபூர்வமாக நமக்குக் கிடைக்கும் பெரிய சந்தர்ப்பங்களை இழக்க நேரலாம்.’’

சொல்லி முடித்து விட்டு நண்பர் மொட்டை பாபு என் புத்தக அலமாரியைக் குடையத் தொடங்கினார். அடுத்த புத்தகத்தைக் கொத்திச் செல்ல வேண்டுமே!
(சிந்திப்போம்...)
பாக்கியம் ராமசாமி