பொழுதுபோக்கு



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

            இனி பாகற்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். தாமச, ராட்சஸ குணங்களைத் தூண்டும் உறைப்பு, புளிப்பு, உப்பு போன்றவற்றை உணவில் குறைக்க வேண்டும். ஞானிகள் எல்லோரும் இந்திரியங்களை அடக்கி ஆளச் சொல்கிறார்கள். எனவே, இறுதி நிலையான பேரின்பத்தை அடைவதற்கு மனதை...

& இதற்கு மேல் ஹரியால் சபதங்களை மேற்கொள்ள முடியவில்லை.

மனதுள் துக்கம் பரவியது. தான் சிக்கியிருப்பது எப்பேர்பட்ட பொறி. விஷயம் வெளியே தெரிந்துவிட்டால் மானம், மரியாதை எல்லாம் கடந்தகால விஷயங்களாகிவிடும். பயத்தினாலும் கவலையாலும் அவனது உடல் லேசாகக் கொதித்தது.

அதைவிட அதிகமாக மனம் கொதிப்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், உள்ளக் காய்ச்சல் தனக்கு மருந்தாகக் கேட்டது சஞ்சனாவை.

சஞ்சனாவை ஹரி சந்தித்தது மிகவும் தற்செயலானது என்று தான் சொல்ல வேண்டும். ஒருவன் ஹரியை திருமண வரவேற்புக்கு அழைத்திருந்தான். அவன் சற்று தூரத்து நண்பன். அதனால் நிகழ்ச்சிக்குப் போக வேண்டாம் என்று ஹரி முதலிலேயே முடிவு செய்திருந்தான். அதனால் அதை மறந்தும் போயிருந்தான். அந்தக் குறிப்பிட்ட நாளில் பல இடையூறுகள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. அலுவலகத்தில் அசாத்திய வேலை; எதிர்பாராத பிரச்னைகள்; வழக்கத்தைவிட அதிகமாக போக்குவரத்து நெரிசல்கள். மழை வேறு வரும் போலிருந்தது.

களைப்பு அதிகமாக இருந்ததால் அப்படியே தூங்க முடிவு செய்தபோது காற்று சிறிது பலமாக அடித்து, ஜன்னலோரம் இருந்து அழைப்பிதழை இவன் பார்க்கிற மாதிரி தள்ளிவிட்டது.
கொட்டக் காத்திருந்த மழை, அசதியையும் மீறி ஒரு கணத்தில் எப்படி தன் மனம் மாறியது என்று அவனுக்குப் புரியவே இல்லை. வரவேற்புக்குச் சென்ற பத்தாவது நிமிடம் அவளைப் பார்த்துவிட்டான். பேச்சு மூச்சின்றி திணறிப் போனான். அந்தக்கூட்டம், மேளச்சத்தம், ஆர்கெஸ்ட்ரா, விருந்தினர்களின் பேச்சொலி, இரைச்சல்... இவற்றையும் மீறி அவளது சிரிப்புச்சத்தத்தை இவனால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. எத்தனையோ பேர் மறைத்தாலும், அவள் எங்கெங்கோ சென்றாலும், அவனால் அந்த அழகு பொக்கேயை பார்க்க முடிந்தது.

ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். சற்று அலட்சியமான அழகு, பிரமிக்க வைக்கிற கவர்ச்சி, அவளது உள்ளங்கை, விரல்களும்கூட என்னமாக இருக்கிறது!

நண்பன் ஒருவனிடம் கேட்டான்... ''யாருடா அது?’’

‘‘டேய், இன்னும் நீ திருந்தலியா?’’

‘‘ஹி... ஹி...’’

‘‘அவ பேரு சஞ்சனா...’’

ஆசையுடன் பெயரை உச்சரித்தான். நண்பன், ‘‘டேய், இன்னொரு விஷயம். உன்னோட எதிர் ஃப்ளாட் காலியாத்தான இருக்கு?’’ என்றான்.

‘‘இப்ப இல்ல. நேத்துதான் ஒருத்தன்கிட்ட அட்வான்ஸ் வாங்கினேன்...’’ என்றான் ஹரி.

‘‘அப்படியா? ஓ.கே, பரவாயில்ல. இந்த சஞ்சனாதான் அவளுக்கு ஒரு வீடு பாருங்கன்னு கேட்டிருந்தா...’’

‘‘டேய், நிஜமாவா சொல்ற... அந்த நாயை அடிச்சுத் துரத்திடறேன். சஞ்சனாவுக்கே கொடுக்கறேன். கூப்பிடுடா, அவளை...’’

‘‘.....................’’

‘‘அட்வான்ஸ்கூட வேணாம்டா. வாடகைகூட அவளால முடிஞ்சதைத் தந்தாப் போதும். இல்ல, அது கூட...’’

‘‘அப்ப முடிச்சிரலாம்ங்கற...’’

‘‘யெஸ்!’’

‘‘அப்படீன்னா, நீ பேச வேண்டியது நரேஷ் கூட. சஞ்சனாவோட புருஷன்!’’

இப்படியாக சஞ்சனா இவனது எதிர்வீட்டிற்கு வந்து ஒரு மாதமாகிறது.

இவன் தன் வீட்டிலிருந்து ஜன்னல் வழியாகவும், வராந்தாவில் நின்றும் அவளைப் பார்த்துக்கொண்டே இருப்பான். அவள் பால் வாங்குவதை, பூ வாங்குவதை, கோலமிடுவதை, காய்கறி வாங்குவதை, குப்பை கொட்டுவதை... சனியனே, ஏன்டி இவ்வளவு அழகா இருக்கற?

அவளுக்கு கல்யாணமாகிவிட்டது என்று தெரிந்த இரண்டு மூன்று நாள் சில முயற்சிகள் செய்து மனதை அடக்க முயன்றான். அது திமிறி எழுந்து, இவனைத் துரத்தி அடித்து பெருந்தோல்வியை அளித்தது. அவளிடம் பரிபூரண சரணாகதி அடைய வற்புறுத்தி, அவளது காலடியில் அவனைக் கிடத்தின. அந்தக் கணத்தில், ‘மனசுக்குத் திருமணம் எப்படி சாத்தியம்? உடலை வேண்டுமானால் கல்யாணம் கட்டுப்படுத்தலாம்’ என்பதுபோன்ற தத்துவங்களை ஹரி உருவாக்கினான்.

எனவே, கவலைப்பட ஏதுமில்லை. அப்புறம் சஞ்சனா நரேஷின் மனைவி என்பதே போய், தன் மனதுக்குப் பிடித்தவளின் அருகில் நடமாடும் ஒரு உருவம் அல்லது ஒரு ஜீவி & இந்த நரேஷ் என்றாகிவிட்டது. பார்த்துக்கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவளது அழகும் கவர்ச்சியும் அதிகமாகிக்கொண்டே இருந்தது. அவளைப் பார்க்கவில்லை என்றால் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. ஒரு தடவை அவளை மாதிரியே ஒருத்தி டூவீலரில் ரோட்டை க்ராஸ் செய்கையில், அவள்தானோ என்று சந்தேகப்பட்டு, அவளது பின்னாலேயே சென்று, அவளைத் தேடி... தன் நடவடிக்கைகளைப் பார்க்கையில் அவனுக்கே சிரிப்பாக இருந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தினுசான அழகு. அவள், அவளது அலட்சியம், வீட்டு உரிமையாளர் என்ற பழக்கத்தில் இவனிடம் அவள் உதிர்க்கும் சம்பிரதாய வார்த்தைகள். அந்த சாதாரண வார்த்தைகளுக்குக்கூட, அவன் ஆழ்ந்த பொருள்தேடி, அதன் அர்த்தங்களை அவனுக்கு வசதியாக மனதுள் துழாவி, கண்டுபிடித்து மகிழ்ந்தான்.

‘‘மழை வர்ற மாதிரி இருக்கே...’’ (ஏன் இவள் சம்பந்தமே இல்லாமல் பேச வேண்டும்? ஏதாவது என்னிடம் பேச வேண்டும் என்ற விருப்பம் அவளிடம் இருக்கிறது)

‘‘சார், நூறு ரூபாய்க்கு சேஞ்ச் இருக்குமா?’’ (இவ்வளவு பேர் இருக்கும்போது, என்னிடம் ஏன் கேட்க வேண்டும்?)

‘‘குட் மார்னிங்!’’ (சொல்வதற்கென்றே வெளியே வந்திருக்கிறாள்)

இப்படி சேகரித்த வார்த்தைகளுடன் ஹரி சந்தோஷமாக அலைந்தான். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவளை ‘தற்செயலாக’ சந்தித்தான். பார்த்தால் சிரிக்கிறாள். இனி அடுத்து எப்படி முன்னேறுவது?

‘‘நானும் பாத்துக்கிட்டே இருக்கேன்... அவளை ஸைட் அடிக்கறீங்க போல இருக்கு...’’ என்றாள் காயத்ரி, ஹரியின் மனைவி... ‘‘நினைவிருக்கட்டும். அடுத்தவன் பொண்டாட்டியைப் பாக்கறது பாவம். நரகத்துல ஹெவி பனிஷ்மென்ட் காத்திட்டிருக்கு...’’

மனைவிக்கும் தன் உள்ளம் தெரிந்து விட்டதே என்று ஹரிக்கு வெட்கமாக இருந்தது. இவளுக்குப் போய் துரோகம் செய்வதா... ஹரி இரண்டு நாட்கள் திருந்தியிருந்தான். ‘இந்தப் பாவச்செயலை ஒரு போதும் செய்யத் துணியமாட்டேன்.’

மூன்றாம் நாள் காலையில் வாக்கிங் போகும்போது, சஞ்சனா ஈரக்கூந்தல் & சில மலர்கள் & நெற்றியில் திருநீறு & சகிதம், ‘‘என்ன, வாக்கிங்கா?’’ என்றாள்.

அழைப்பிதழ் கொடுத்த நண்பனுக்கு, தள்ளிவிட்ட காற்றுக்கு நன்றி சொல்லி ஹரி மீண்டும் காதலானான். இது தொடர்பாக என்ன தண்டனைகள் கிடைத்தாலும் பரவாயில்லை. எத்தனை தண்டனைகள் கிடைத்தாலும் பிரச்னையில்லை. அவன் மனதில் காமம் பொங்கி வழிந்தது. இரவானால் தூங்க முடியவில்லை.

இவளை அடையாமல் உலகில் எதை அடைந்து என்ன புண்ணியம்? ஞானமோ, முக்தியோ, சொர்க்கமோ... எல்லாமே அவளுக்குப் பிறகுதான். அல்லது அவளே ஞானம். அவளே சகலமும்.
ஒரு வாரம் அவள் ஊருக்குப் போய் விட்டாள். ஹரிக்கு எதுவுமே பிடிக்காது போய்விட்டது. அவள் வந்த பிறகுதான் அவனுள் மலர்ச்சி ஏற்பட்டது. தன்னிடமிருந்து டீன் ஏஜ் வெளிப்படுவது அவனுக்குப் பிடித்திருந்தது. அதேநேரம் அவனுள் இருந்த 39 வயசுக்கான முதிர்ச்சியுடன் ஒரு குரலும் கேட்கத்தான் செய்தது. ‘‘டேய், இது தப்புடா...’’

இது வெகு பலவீனமாக இருந்ததாலும், அவன் இதை கேட்காத தூரத்துக்குச் சென்று விட்டதாலும், கேட்க விருப்பம் இல்லாததாலும் அவனை அவனே காப்பாற்ற முடியாதவனாக மாறிக் கொண்டிருந்தான்.

இப்போது ஹரிக்கு சஞ்சனாவின் செல் நம்பர் தேவை. மனைவி வைத்திருக்கிறாளா என்று பரிசோதித்தான். இல்லை. செல் நம்பர் எப்படிக் கிடைக்கும்?

அன்று மாலை ஹரி ஒரு ஷாப்பிங் மாலில் ட்ராலி தள்ளிச் செல்லும்போது, ‘‘ஹலோ சார்...’’ கேட்டது.

சஞ்சனாவின் அருகில் காணப்படும் ஒரு உயிரி. ‘‘ஹரி சார். உங்க செல் தர முடியுமா? என் செல்லுல சார்ஜ் இல்ல. என் மிசஸுக்கு ஒரு போன் பண்ணணும்...’’

ஆசைப்பட்ட மாதிரியே அவளது செல்பேசி எண்கள் கிடைத்துவிட்டது. அதை நினைத்து அவனுக்கே வியப்பாக இருந்தது. எப்படி இதெல்லாம் நடக்கிறது!

இப்போது அந்த எண்களை அவனால் தூக்கத்திலிருந்து எழுப்பிக் கேட்டாலும் சொல்ல முடியும். பெரும் பொக்கிஷத்துக்கான கோட் வேர்ட் கிடைத்த திருப்தியில் மகிழ்ந்தான்.
அவளிடம் பேச வேண்டும். பேச என்ன இருக்கிறது? ‘‘ஹலோ, கருப்பசாமியா? இல்லியா..? என்ன சஞ்சனாவா... ஓ எதிர்வீட்டு சஞ்சனாவா? ஓ ஸாரிங்க... என் ஃப்ரண்ட் கருப்பசாமின்னு நினைச்சு தப்பா கூப்பிட்டுட்டேன்... சரி, சாப்பிட்டாச்சா... அப்புறம்’’ என்று தொடங்கலாமா?

ஒரு மிஸ்டுகால் கொடுத்துப் பார்க்கலாமா? துணிந்து ஒரு அழைப்பு விடுத்தான். சட்டென ஆஃப் செய்து விட்டான். மீண்டும் தைரியம் பெற்று அழைப்பு விடுத்தான். இப்போது அழைப்பு ஒரு முழு சுற்று போய் நின்றது. யாரும் ஏற்கவில்லை. இதற்குள் ஹரியின் உடல் நடுங்கி, வியர்த்து விட்டது.

முட்டாளே, என்ன காரியம் செய்தாய்?

அடுத்து என்ன நடக்கும்? அவனது கற்பனை அவனை மிரட்டியது.

நிச்சயம் அவள் கணவனிடம் சொல்லப்போகிறாள். அவன் நாலு பேரைக் கூட்டி வந்து அடிக்கப் போகிறான். அப்புறம் போலீஸ். ‘இளம்பெண்ணுக்கு செல்லில் மிஸ்டுகால் கொடுத்த வீட்டு உரிமையாளர் கைது’. ஊருக்குப் போயிருக்கும் மனைவி காயத்ரி இதைப் பார்த்து காறித்துப்பி டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பப் போகிறாள். சஞ்சனா, ‘இவன் என்னைப் பாக்கற பார்வையே சரியில்லை...’ என்று நீதிமன்றத்தில் சொல்லப் போகிறாள். என் பையன் ஆகாஷ் என்னை எப்படி மதிப்பான்?

எனக்கு ஏன் புத்தி இப்படிப் போயிற்று? கடவுளே, இந்தப் பிரச்னையிலிருந்து என்னை எப்படியாவது காப்பாற்று. இனி நான் நல்லொழுக்கன்; புலனடக்கன்.

இப்போது நொந்தும் உணர்ந்தும் என்ன பயன்?

சஞ்சனா, என் கண்ணே! உன்னை நான் ஏன் பார்த்தேன்? நீ ஏன் என் அருகில் வந்தாய்? எனக்கு ஏன் உன் செல் நம்பர் கிடைத்தது? விதிதான் காரணமா?

டேய், இந்தத் துயரிலும் அவளை ‘கண்ணே!’ என்கிறாயா? நீ பெரிய மன்மதக்குஞ்சு. இத்தனை வயதில் உனக்கு ஒரு கள்ளக்காதல் தேவையா?

இனி தியானம் செய்து.. உடலைத் தொட்டுப் பார்த்தான். காய்ச்சல் வருகிற மாதிரி உணர்ந்தான். எங்காவது ஓடி விடவேண்டும். போலிருந்தது.

அப்போது ஜன்னல் வழியாகப் பார்த்தவன் திடுக்கிட்டான்.

சஞ்சனா, இவனது வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

‘‘என்னடா, இதுக்கு என்ன பேர் வச்சிருக்கே?’’ என்றான் கணேஷ்.

‘‘ம், சஞ்சனா...’’ என்றான் ஷர்வ்.

‘‘வர வர நீ உன்னோட வளர்ப்புப் பிராணிங்களோட ரொம்ப நேரம் செலவழிக்கிற... மாஸ்டருக்கு இதெல்லாம் பிடிக்காது...’’

‘‘ம், என்ன செய்யறது. ரேண்டமா பிக் பண்ணினேன். ஹரி&சஞ்சனா ஜோடி வந்துச்சு. இதுங்களை மீட் பண்ண வச்சு, பேச வச்சு, மனசை குழப்பி... இப்பதான் தனியா சந்திக்கப் போவுது. பாரேன், என்ன ஒரு ஜோடி... ரசிக்கலாம்! என்னப்பா இதுக ரொம்ப ஃப்ரீயா இருக்காம கல்யாணம், கற்பு, பாவம், புண்ணியம்னு அபத்தமாப் பேசீட்டு அலையுதுங்க...’’

‘‘உனக்கு என்னவோ ஜோடி சேத்து வச்சு, அதுக சந்தோஷப்படறதப் பாக்கறது ஒரு பொழுதுபோக்காப் போச்சு. கூடவே மத்த வேலையையும் கவனி. மாஸ்டருக்கு ரிப்போர்ட் அனுப்பணும்...’’
‘‘ஓ, அதுல எல்லாம் குறையே வைக்க மாட்டேன். நேத்திக்கு ரெண்டு ஏரியாவுக்கு மழை அனுப்பினேன். 88 பிராணிகளை அப்புறப்படுத்தினேன். 23 உயிர்கள் அனுப்பியிருக்கேன்...’’
இந்த ரீதியில் இவர்களின் பேச்சு போகிறது.

இவர்கள், பூமியிலிருந்து பல லட்சம் ஒளி ஆண்டுகள் தூரத்தில¢ உள்ள கய்லா கிரகத்தில் இருப்பவர்கள். பூமியில் ஹரி & சஞ்சனா வாழும் பகுதி ஷர்வ்வின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.
‘‘ஆக்சுவலி, நான் அப்படிப்பட்ட பொண்ணே இல்ல. ஆனா, என் மனசு எப்படி மாறிச்சுன்னே எனக்குத் தெரியல...’’ என்றவாறு ஹரியை நெருங்கினாள் சஞ்சனா!           
 ஷங்கர்பாபு