கண்ணீரை வரவழைக்கும் மிளகாய் விலை!



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine 
Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                  மிளகாய் விலையைக் கேட்டாலே காரம் உச்சிக்கு ஏறுகிறது. 3 மாதங்களுக்கு முன் கிலோ 80 முதல் 100 ரூபாய் விற்ற காய்ந்த மிளகாய் இப்போது 170 ரூபாய். இன்னும் சில தினங்களில் 200 ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள். சாம்பாரும் குழம்பும் வைத்து சாப்பிடுவதே காஸ்ட்லியான விஷயமாகும் போல. இதற்குக் காரணம்?

ராமநாதபுரம், சிவகங்கை, விளாத்திகுளம், விருதுநகர் பகுதிகளில் குண்டுமிளகாய் விளைகிறது. ஆந்திராவின் குண்டூர், நெல்லூர் பகுதிகளில் இருந்து நீட்டுமிளகாய் வருகிறது. நீட்டுமிளகாயில் காரம் குறைவு. கலர் பளிச். குண்டு மிளகாயில் எல்லாம் சமநிலையில் இருப்பதால் தமிழ்நாட்டில் அதுவே அதிகம் விற்பனையாகிறது. வழக்கமாக பிப்ரவரி மாதத்தில் அறுவடை தொடங்குவதால் செப்டம்பர், அக்டோபர் வரை விலை நிலையாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே விலையேற்றம் தொடங்கிவிட்டது.

‘‘பரமக்குடி, ராமநாதபுரம், விளாத்திகுளம், மாதவரம், ரெட்ஹில்ஸ் பகுதிகளில் விவசாயப் பொருட்களைப் பாதுகாப்பதற்கான ஏசி கிடங்குகள் உள்ளன. தனியார்கள் நடத்தும் அந்தக் கிடங்கில் மூட்டைக்கு 20 ரூபாய் வாடகை. ஒவ்வொரு கிடங்கிலும் 10 ஆயிரத்துக்கும் அதிக மூட்டைகளை ஸ்டாக் வைக்க முடியும். விவசாயிகள் மிளகாயை பறித்துக் காய வைத்து, இந்த ஏசி கிடங்குகளில் பாதுகாத்து, நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் விற்பார்கள். ஏசியில் இருப்பதால் நிற மாற்றம் இருக்காது. இந்த ஆண்டு தொடக்கம் முதலே மிளகாய் வரத்து குறைவாக இருந்தது. பலரும் மொத்தமாக இந்தக் கிடங்குகளில் மிளகாயைப் பதுக்கிவிட்டார்கள். அதனால் சீராக டிமாண்ட் ஏற்பட்டு விலை ஏறிவிட்டது’’ என்கிற தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத்தலைவர் எஸ்.பி.சொரூபன், ‘‘விலைவாசி நிலவரத்தை அரசாங்கம் கண்காணிக்க வேண்டும். ஏ.சி குடோன்கள் விவசாயிகளின் நலனுக்காக தொடங்கப்பட்டவை.

அவற்றை வணிகத்துக்கும் விவசாயத்துக்கும் தொடர்பில்லாதவர்கள் ஆக்கிரமித்து பதுக்கலுக்குப் பயன்படுத்துகிறார்கள். அந்த குடோன்களில் ஆய்வு செய்து மிளகாய் மூட்டைகளை ரிலீஸ் செய்தால் விலை குறைந்துவிடும்’’ என்கிறார்.

வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன், ‘‘மிளகாய் மட்டுமல்ல... புளி, பருப்பு உள்பட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதற்கு பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஒரு காரணம். சரக்குகளை கொண்டுசெல்வதற்கே பெரும்செலவு ஏற்படுகிறது. இதுதவிர ஆன்லைன் வர்த்தகமும் இந்த விலையேற்றத்துக்கு முக்கியக் காரணம்’’ என்கிறார்.

‘‘ஆன்லைன் வர்த்தகம் வந்தபிறகு, உற்பத்திக்கும் விற்பனைக்கும் தொடர்பே இல்லாமல் போய்விட்டது. விவசாயம், வியாபாரம் இரண்டுக்கும் சம்பந்தமே இல்லாத தரகர்கள் உள்ளே நுழைந்து, எழுத்து வடிவிலேயே பொருட்களை வாங்குகிறார்கள். இருப்பு வைத்து செயற்கையாக விலை உயர்த்துகிறார்கள். வியாபாரம் என்பதே சூதாட்டமாகி விட்டது. ஆன்லைன் வர்த்தகத்தில் அத்தியாவசியப் பொருட்கள் இடம்பெறக் கூடாது என்று பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனாலும், மிளகாய் ஆன்லைன் வர்த்தகத்தில் இருக்கிறது. 10 சதவீதம் மட்டும் பணம் செலுத்தி எவ்வளவு மிளகாயை வேண்டுமானாலும் ஸ்டாக் செய்யமுடியும்.

விளைந்த மிளகாய்க்கு மட்டுமல்ல... இனி விளையப்போகும் மிளகாயைக்கூட கொள்ளை ரேட்டுக்கு விற்பனை செய்யமுடியும். ஆன்லைன் வர்த்தகம் இப்படித்தான் செய்யப்படுகிறது. இதில் விவசாயிகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஏசி குடோன்களில் இருப்பு வைத்திருப்பது பதுக்கல் என்றால், ஆன்லைன் வர்த்தகம் அங்கீகரிக்கப்பட்ட பதுக்கல்’’ என்று குமுறுகிறார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகி மாரித்தங்கம்.

மிளகாய் விலை உயர்வு பற்றி சென்னை மிளகாய் வியாபாரிகள் சங்க முன்னாள் செயலாளர் சந்திரய்யாவிடம் பேசினோம். பதுக்கல் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த சந்திரய்யா, ‘‘இந்த ஆண்டு தென்மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் உற்பத்தி பாதியாக குறைந்து விட்டது. அதனால் விவசாயிகளே அதிக விலை வைத்துதான் விற்கிறார்கள். போன வருடம் நல்ல விளைச்சல் கிடைத்தது. போன வருட மிளகாய் இப்போது கிலோ 100&110 ரூபாய்தான். விளாத்திகுளத்தில் ஏசியில் வைக்காத இந்த வருட மிளகாயை ரூ.130 முதல் 150 வரை விற்கிறார்கள். நாங்கள் முன்னரே வாங்கி இருப்பு வைத்ததால் ரூ.125 முதல் 140 வரைதான் விற்கிறோம். சில்லரை வியாபாரிகள் கழிவு, டிரான்ஸ்போர்ட் சேர்த்து 170 முதல் 180 ரூபாய் வரை விற்கிறார்கள்.

இப்போது பெய்துவரும் மழையால் வரும் பிப்ரவரியில் நல்ல விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. அப்போது விலை குறையும்’’ என்கிறார் சந்திரய்யா.

தேங்காய்க்கு விலை இல்லாமல் விவசாயிகள் தவிக்கும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்கிறார்கள். மிளகாய் விலை அதிகரித்து உள்நாட்டு மக்கள் தவிக்கும் நிலையில் இங்கிருந்து மிளகாய்த்தூளை ஏற்றுமதி செய்கிறார்கள். மக்களை முன்னிறுத்தி கொள்கைகளை வகுத்தால்தான் விலைவாசி கட்டுக்குள் வரும். இல்லாதபட்சத்தில் அப்பாவி நடுத்தர மக்கள் வீதிக்குத்தான் வரவேண்டும்.
வெ.நீலகண்டன்