
தமிழகத்தைக் கலக்கிய வதந்தி
பசுமாடு ஆண் கன்று போட்டிருக்கிறது என்றால் நம்பலாம். ஆண் குழந்தை பெற்றிருக்கிறது என்றால்..? கிளப்பிவிட்ட புண்ணியவான் யாரென்று தெரியவில்லை. ஆனால், இந்த வதந்தி பாதி தமிழகத்தை உண்டு இல்லை என்றாக்கி விட்டது.
மேல்மலையனூர் அம்மன் கோயிலை விட்டு வெளியேறிவிட்டாள், கார்த்திகை தீபம் பாதியில் அணைந்து விட்டது, சிதம்பரத்தில் கலசம் பெயர்ந்து விழுந்தது என மாதமொரு வதந்தி பரவுவது வாடிக்கையாகி விட்டது. போகிற போக்கில் யாராவது இதற்கு பரிகாரம் என்று எதையாவது சொல்லிவைக்க, கொஞ்சமும் யோசிக்காமல் அதையும் செய்ய அலை மோதுகிறார்கள் மக்கள். அந்த வரிசையில் லேட்டஸ்ட், பசு மாடு ஆண் பிள்ளை பெற்றது.
''மாயனூர்ல ஒரு பசுமாடு ஆண்குழந்தை பெத்துருக்குன்னு ஊருக்குள்ள ஒரே பேச்சு. மாடு புள்ளைப் பெத்தா அது கிருஷ்ணராதான் இருக்கணும்னு சொல்லி, கிருஷ்ணர் படத்தை வச்சு சில பேரு கும்பிட்டாங்க. ஒரு எட்டு மாட்டையும் புள்ளையையும் பாத்துட்டு வந்துருவோம்னு சில பேரு கிளம்பினாங்க. அங்கே போனா, 'எங்க ஊர்ல அப்படி ஏதும் இல்லை. திருக்கோவிலூர்ல போயிப் பாருங்க’ன்னு அனுப்பிட்டாங்க. திருக்கோவிலூர்ல விசாரிச்சா, சம்பவம் நடந்தது கள்ளக்குறிச்சியிலன்னு சொல்றாங்க. கடைசியா இப்போ சேலத்துலதான் நடந்ததா சொல்றாங்க...’’ என்று கலக்கமாகப் பேசுகிறார் விழுப்புரம் மாவட்டம் கோழியூரைச் சேர்ந்த செல்வி.

‘மாடு ஆண்பிள்ளை பெற்றால் 6 வயதுக்கு உட்பட்ட ஆண் பிள்ளைகளுக்கு ஆகாது. வாசல்ல கோலம் போட்டு, நடுவில வௌக்கேத்தி வச்சு, தேங்காயை உரிச்சு, குடுமியில கற்பூரத்தை வச்சு, கோலத்து நடுவில புள்ளையப் படுக்கப் போட்டு அது தலையை மூணு முறை சுத்தி வீட்டுக்கு முன்னாடி சிதறுகாய் அடிங்க... தோஷம் விட்டுப்போகும்’ என யாரோ வதந்தியைக் கிளப்பி பரிகாரமும் சொல்லிவைக்க, அடுத்த ஒருமணி நேரத்தில் ஜிவ்வென்று உயர்ந்தது தேங்காய் விலை.
திருக்கோவிலூர், திட்டக்குடி, கள்ளக்குறிச்சி, சேலம் பூலாவாரி பகுதிகளில் ரோடெங்கும் தேங்காய் சிதறல்கள். உடைத்த தேங்காயை எடுத்துச் சாப்பிட்டால் தோஷம் ஒட்டிக்கொள்ளும் என்று சொன்னதால் சீண்டுவார் இல்லை.
திருக்கோவிலூர் பகுதியில் கூடுதலாக இன்னொரு வதந்தியும் பரவியது. ‘‘அரியலூர்ல ஒரு பொண்ணுக்கு கொம்பு முளைச்ச குழந்தை பொறந்துருச்சாம். அதேமாதிரி மலையம்பட்டுல எருமைமாடு போட்ட கன்னுக்குட்டி குழந்தை
முகத்தோட பிறந்திருச்சாம். அதனால தலைச்சன் ஆம்புளைப் புள்ளைகளுக்கு திருஷ்டி சுத்தணும்னு எஸ்எம்எஸ் வந்துச்சு. எல்லாரும் சுத்தினதால நானும் சுத்திப்போட்டேன்...’’ என்கிறார் தேவியகரத்தைச் சேர்ந்த நிர்மலா.
உண்மையில் மாட்டுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புண்டா..? ‘‘வாய்ப்பில்லை...’’ என்கிறார் திருக்கோவிலூர் அரசு கால்நடை மருத்துவர் ரமேஷ். ‘‘மாட்டின் மரபணு வேறு. மனிதனின் மரபணு வேறு. மரபணு மாற்றத்தால் கன்றுக்குட்டியின் வடிவத்தில் மாற்றம் இருக்கலாம். அல்லது குறைபாட்டோடு பிறக்கும் கன்றுக்குட்டிகள் குழந்தையின் உருவத்தை ஒத்திருக்கலாம். மற்றபடி குழந்தையாகப் பிறக்க வாய்ப்பேயில்லை..’’ என்கிறார் அவர்.
இந்த வதந்தியைப் பரப்பியது யார்..? ‘‘தேங்காய்க்கு இப்போ சரியான விலை கிடைக்கலேங்க.
அதனால ஏதோ ஒரு தேங்காய் வியாபாரி திட்டமிட்டு பரப்பிவிட்ட வதந்திங்க இது. முன்னாடி, சகோதரிகளுக்கு பச்சைச்சேலை வாங்கிக்குடுத்தா, ஆம்பிளைக்கு நல்லதுன்னு ஒரு வதந்தி
பரவுச்சு. அது சில ஜவுளிக்கடைக்காரங்க கிளப்பிவிட்டதுன்னு கண்டுபிடிச்சாங்க.. சுயநலத்துக்காக வதந்தி கிளப்பி விடுற ஆட்களை கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுத்தாத்தான் பயம் வரும்...’’ என்கிறார் வள்ளிமதுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்.
வெ.நீலகண்டன்
படங்கள்: கார்த்திகேயன், பாஸ்கர்