சினிமாவில் ஹீரோவாக அடையாளப்படுவது கடினம். ஆனால் ஹீரோவாகி விட்டாலோ பிறகு ராஜபாட்டைதான்..! அதற்காகவே இயக்குநர்கள் நடிகர்களாக ஆசைப்படுவது முதல் சினிமாவில் எந்தப்பிரிவைச் சேர்ந்தவர்களின் வாரிசுகளும்கூட ‘ஹீரோ’வாகவே விரும்புகிறார்கள்.
இதற்கும் விதிவிலக்கான ஒருவர் உண்டு. அவர் ஹீரோவாக நடிக்க ஓ.கே. என்றால் எந்த இயக்குநரும் அவரை வைத்துப் படமெடுக்கத் தயாராக இருக்க, அவரோ இயக்குநராக இருப்பதில் மட்டுமே திருப்தி அடைந்தபடி இருக்கிறார். அவர் பிரபுதேவா...
நடனக் கலைஞராகப் பெயர் வாங்கி, டான்ஸ் மாஸ்டராக இந்தியாவெங்கும் அறியப்பட்டு பின்னர் ஹீரோவாக உயர்ந்தும் அவரது சாய்ஸ் இயக்கமாகவே இருக்க, ‘‘ஹீரோவா இருக்கிற வசதியான ரூட்டைக் கையில வச்சுக்கிட்டு கடினமான இயக்குநர் வேலையில ஏன் ட்ராவல் பண்றீங்க..?’’ என்றால், ‘‘எனக்குக் கஷ்டப்படப் பிடிச்சிருக்கு... அதான்..!’’ என்கிறார் கூலாகச் சிரித்தபடி. இந்தமுறை அவர் களமிறங்கியிருப்பது சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்க, ஜி.கே. பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்திருக்கும் ‘வெடி’ படத்தின் மூலம்.
‘‘படத்தில என்ன வெடி வச்சிருக்கீங்க..?’’ என்றபோது அவரது வழக்கமான உற்சாகத்துடனேயே பதில் சொன்னார்.
‘‘ஒரு வெடி உடனே வெடிச்சுடாது இல்லையா..? அதுக்கு ஒரு திரி இருக்கும். திரியைக் கொளுத்தி அது பரபரன்னு வெடிக்குப் போய்ச் சேர சில நொடிகள் ஆகும். வெடிக்குமா, வெடிக்காதாங்கிற சஸ்பென்ஸை நொடிக்கும் குறைவான நேரத்தில பரவவிட்டு ‘டமார்...’னு வெடிச்சு த்ரில் கொடுக்கும் பாருங்க... அந்த மாதிரி ஒரு த்ரில்லான அனுபவமா படம் இருக்கும். விஷால்தான் ஹீரோ. ஒரு தேடல்ல இருக்கிற அவர், ஒருகட்டத்தில அதோட ஆதாரமூலத்தைப் பிடிக்கும்போது அது வெடியா வெடிக்கும். முழுக்கக் கமர்ஷியலா, ஜனரஞ்சகத்துக்கு அர்த்தமா இந்தப்படம் இருக்கும்..!’’

‘‘விஷாலை எப்படிப் பயன் படுத்தியி ருக்கீங்க..?’’
‘‘விஷாலாகவே தான். டைரக்டர் பாலா அவரை டோட்டலா மாத்தியது போலவோ, பல்வேறு கெட்டப்புகள் கொடுத்தோ அவரை மாற்றாம, அந்த நெடிதுயர்ந்த தோற்றத்தில அவரை எப்படிப் பார்க்கிறோமோ அப்படியே வர்ற ஒரு கேரக்டர்தான் அவருக்கு. அவரோட கட்டான உடலுக்கேத்தமாதிரி ஃபிஸிக்கல் ட்ரெய்னரா வர்றார். ஆனா ஒரு விஷயத்தில அவர் வேறுபட்டுத் தெரிவார். அது ஸ்டைல். அவரை இதுவரை பார்க்காத பாடி லாங்குவேஜ்ல ஸ்டைலிஷா இதுல பார்க்கலாம். மாஸ், கிளாஸ், ஆக்ஷன்ல அடிச்சு தூள் பண்ணியிருக்கார்..!’’
‘‘சமீராதான் எனக்குப் பொருத்தமான ஜோடின்னு சொல்லியிருக்காரே விஷால்... உங்க கமென்ட்ஸ்?’’
‘‘உயரப் பொருத்தம், உருவப் பொருத்தத்தில அவர் சொன்னது ரொம்ப சரி... பல டெக்னீஷியன்கள், நடிகர்கள் கூட நான் ட்ராவல் பண்ணியிருந்தாலும் இந்தப்படத்தைப் பொருத்தவரை எனக்கு இது புதுசான, ஃப்ரெஷ்ஷான டீம். ‘வி 3’ன்னு சொல்லத்தக்க விஷால், விவேக், விஜய் ஆன்டனி... மூணு பேர் கூடவும் எனக்கு இது முதல்படம். அதேபோலத்தான் சமீரா ரெட்டியும். கேள்விப்பட்டதைவிட சுறுசுறுப்பான, ஹார்ட்வொர்க் பண்ற நடிகை சமீரா. அவங்களுக்கும் ஜாலியான கேரக்டர்ங்கிறதால என்ஜாய் பண்ணி நடிச்சாங்க...’’ என்ற பிரபுதேவா படத்தின் மற்ற சுவாரஸ்யங்களைப் பற்றியும் சொன்னார்.
‘‘விவேக் ஒரு அற்புதமான காமெடியன். இப்படிப்பட்டவர் கூட இதுவரை நான் வேலை பார்க்கலையே ன்னு நினைச்சேன். அவரோட காமெடி படத்துக்கு ஹைலைட்டா இருக்கும். அவரை இதில பி.டி.மாஸ்டரா காண்பிச்சிருக்கோம். அகல ஜிம் பாடி வச்சு, ரெண்டரை அடியில குள்ளமா வந்து சமீராவை அடைய அவர் அடிக்கிற லூட்டிகளை இப்ப சொல்லிக் கேட்கிறதைவிட படத்தில பார்த்தீங்கன்னா மனசு விட்டுச் சிரிக்கலாம்.
அதேபோல மியூசிக் டைரக்டர் விஜய் ஆன்டனி. நமக்குத் தேவை நாலஞ்சு டியூன்கள்தான். ஆனா அதுக்காக அவர் போட்டுத் தர்றது 40, 50 டியூன்கள். போதும் போதும்ங்கிற அளவில சாய்ஸ் கொடுத்துக்கிட்டே இருக்கார். அதிலேர்ந்து தேர்ந்தெடுக்கிறது மட்டும்தான் நமக்கு வேலை. பாடல்கள் அற்புதமா வந்திருக்கு.
இங்கே கேமராமேன் ஆர்.டி. ராஜசேகரைப் பத்தியும் சொல்லணும். இவர்கூடவும் எனக்குப் புது அனுபவம்தான். வேகத்துக்கு ஏத்தமாதிரி பரபரப்பா வேலை செஞ்சதோட, அந்த வேகத்திலயும் அற்புதமான குவாலிட்டி கொடுத்திருக்கார். ‘இது முடியுமா’ன்னு அவர்கிட்ட கேட்கக் கூடாது. முடிச்சுட்டு வந்து நிற்பார். ஒரு டைரக்டருக்கு சினிமாட்டோகிராபரோட கோ ஆபரேஷன் முக்கியம். அந்த விதத்தில அவர் எனக்கு முழுசா ஒத்துவந்தார். இப்படி டீம் அமைச்சுக் கொடுத்த தயாரிப்பாளர் விக்ரம் கிருஷ்ணாவுக்குத்தான் நான் நன்றி சொல்லணும், படத்தை சன் பிக்சர்ஸ்கிட்ட சேர்த்ததுக்கும். இனி உலகமெல்லாம் வெடிக்கப்போகுது இந்தப்பட புரமோஷன்கள்!’’

‘‘சரி... ஒரு பாட்டுக்கு இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தை ஆடவச்ச காரணமென்ன..?’’
‘‘அவர் ஒரு நல்ல பெர்ஃபார்மர். அவரைப் பல காலமாவே கவனிச்சு க்கிட்டிருக்கேன். நல்ல எனர்ஜெடிக்கான இளைஞர். படத்தில சமீராவோட இன்ட்ரொடக்ஷன் பாடல் அது. அதுக்கு ஒரு சென்டர் பிகர் தேவைப்பட்டப்ப, எனக்கு ஏதோ அவரை ஆடவைக்கணும்னு தோணிச்சு. அந்த ஐடியாவை என் டீம்ல சொன்னப்ப, ஒருத்தர் விடாம அத்தனைபேரும் சூப்பர்ன்னாங்க. அதனால தான் அவரை ஆட வச்சேன். என் நம்பிக்கையை உண்மையாக்கி அற்புதமா ஆடி நடிச்ச அவருக்கும் ஒரு ‘தேங்க்ஸ்’ சொல்லியாகணும். இதெல்லாம் எதுக்குன்னா இது ஒரு மாஸ் என்டர்டெயினர். ஸோ, இதுல ஒரு ‘ஜாலி வெடி’ வெடிக்கப்போறேன்..!’’