காற்றின் கையெழுத்து



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine

                                  ந்தியாவில் 80 கோடிக்கும் மேலான மக்கள், ஒரு நாளைக்கு இருபது ரூபாய் வருமானத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். உலகில் விற்பனையாகும் தங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியர்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வறுமைக்கும் பஞ்சத்துக்கும் உள்ளாகிறபோது கஞ்சித்தொட்டிகளைத் திறப்பதைத்தான் பார்த்திருக்கிறோம். இந்தியாவிலோ நகைக்கடைகள் திறக்கப்படுகின்றன. இது ஒரு விசித்திரமான முரண்பாடு.

தாறுமாறாக விலையேறும் இந்தத் தங்க நகைகளை யார் வாங்குகிறார்கள்?

‘ஒண்ணுலேயிருந்து இருபது வரைக்கும்
கொண்டாட்டம் கொண்டாட்டம் & இருபத்
தொண்ணிலே இருந்து முப்பது வரைக்கும்
திண்டாட்டம் திண்டாட்டம்’

 இப்படி ‘முதல் தேதி’ படத்தில் உடுமலை நாராயண கவியின் பாடலை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பாடுவார். இந்த நடுத்தர வர்க்கம்தான் தங்கத்தைக் கொண்டாடவும் செய்கிறது; தங்கத்தினால் திண்டாடவும் செய்கிறது.

திருமணம், வளைகாப்பு, காதுகுத்து என்று நமது எல்லா நிகழ்வுகளிலும் தங்கம்தான் மையமாக இருக்கிறது. மங்கலப்பொருளாக இருக்கிறது. அந்தஸ்தின் அடையாளமாக இருக்கிறது. விளம்பர வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘அன்பைத் தெரிவிக்கும் அழகான மொழி’யாக இருக்கிறது. அனைத்துக்கும் மேலாக அந்த மஞ்சள் உலோகம் நமது மக்களின் மாபெரும் கடவுளாக மாற்றப்பட்டிருக்கிறது.

இந்த மஞ்சள் நிறக் கடவுள் சில பெண்களை சௌபாக்கியவதிகளாக ஆசீர்வதித்திருக்கிறார்; சில பெண்களை முதிர்கன்னிகளாகச் சபித்திருக்கிறார். பல பெண்களை பலி வாங்கியிருக்கிறார்.

தங்கம் ஐஸ்வர்யத்தின் அடையாளம் என்பதும், ‘அட்சய திருதியை’யில் தங்கம் வாங்கினால் அடுத்தடுத்துப் பெருகும் என்பதும் அடிப்படையில் உண்மையில்லாத கருத்து. இது நமது மூளைக்குள் தங்க வியாபாரிகள் செருகிய ஒரு ‘சாஃப்ட்வேர்’. இந்த சாஃப்ட்வேர் நமது வாழ்க்கையை ஹார்ட்வேராக மாற்றிவிட்டது.

‘‘நம் பெண்கள் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா? நகைக்கும் துணிக்கும் போடும் பணத்தைப் பாங்கியில் போட்டு குறைந்த வட்டியாவது வாங்கி, குழந்தை பிறந்தவுடன் அதை எடுக்க, அந்த வட்டியில் ஓர் ஆள் வைத்தாவது அதைப் பார்த்துக்கொள்ளச் செய்தால் அன்பு குறைந்துவிடுமா?’’ என்று கேட்டார் தந்தை பெரியார்.

‘தங்கம் இருக்கும்போது எதற்கு பேங்க் லோன்?’ என்று கேட்கின்றன அடகுக்கடை நிறுவனங்கள். உலகச்சந்தையில் தங்கத்தின் விலை சரிந்துகொண்டே இருந்தால் கடன் தர மாட்டார்கள் இந்தக் கடைக்காரர்கள்.

மேலை நாடுகளில் ஆண்களும் பெண்களும் தங்க நகைகளை அள்ளி அணியும் மோகம் தணிந்துவிட்டது. நகையணிவதில் அழகுணர்வுடன் கூடிய ஓர் எளிமையைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டார்கள். இந்தியாவில் உள்ள ஆண்களும் பெண்களும்தான் இப்போது தங்கத்தை சரஞ்சரமாகத் தொங்கவிட்டுக்கொண்டு அலைகிறார்கள். தரத்தில் அளக்க வேண்டிய ‘மனித மதிப்பை’த் தங்கத்தில் அளந்து கொண்டிருக்கிறார்கள்.

தங்கத்துக்கு ‘மஞ்சள் பிசாசு’ என்று ஒரு பெயர் உண்டு. அதுவும் பொருத்தமாகத்தான் இருக்கிறது. தங்க நகைகளுக்காக நடக்கிற கொலைகளையும் கோயில்களில் நடக்கிற கொள்ளைகளையும் பார்க்கிறபோது தங்கம் பாதுகாப்பானது என்று உணர முடியவில்லை.

கேரளாவில் பத்மநாப சுவாமி கோயிலின் பாதாள அறைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலமாக கண்டெடுக்கப்பட்ட கணக்கிட முடியாத தங்கக்குவியல் பக்தர்களின் சுதந்திரத்தைப் பறித்துவிட்டது. கடவுளைச் சுற்றிலும் காவலர்கள் நிற்கிறார்கள். இந்தப் பொற்குவியலைவிட பெரும் மதிப்பு கொண்ட ஒரு கேள்வி இருக்கிறது. பல லட்சம் கோடி மதிப்புள்ள & பயன்படுத்தப்படாத இந்தத் தங்கத்தை இனி என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் அது. மன்னர்கள் கொடுத்திருந்தாலும் அது மக்களின் வரிப்பணம்தானே?

தங்கத்தைப் பற்றிப் பேசும்போது அதைக் கலைநுட்பத்துடன் நகைகளாக்கும் அந்தத் தொழிலாளர்களைப் பற்றிய செய்தி சோகமும் துயரமும் ஆனது. ‘உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்’ என்னும் தாணு பிச்சையாவின் கவிதை நூலில் ஹெச்.ஜி. ரசூல் அதைப் பதிவு செய்திருக்கிறார். தட்டார்களின் வாழ்நிலையைச் சித்தரிக்கும் ஒரே தமிழ்க்கவிதைத் தொகுதி இதுதான்.
‘தமிழகத்தில் மட்டும் மரபுவழித் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ இரண்டு லட்சம் தட்டார்கள் வறுமைக்கும் பட்டினிக்கும் ஆளாகியுள்ளனர். தங்க இறக்குமதி கொள்கையின் தாராளமயமாக்கலும் எந்திரமயமாக்கலும் இந்தப் பொருளாதார, தொழில் நசிவுக்கான காரணங்களாகும்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நவீனரக நகை உருவாக்கும் தொழில் எந்திரங்கள் தட்டார் சமூகத்தின் மரபுவழித் தொழில் வாய்ப்புகளை அழித்துவிட்டன. இந்த எந்திரம் ஒரு மணி நேரத்தில் 25 கிலோ அளவிலான தங்கச்சங்கிலிகளை உற்பத்தி செய்து வடிவமைத்துவிடுகிறது. ஒரு வருடம் முழுவதும் உழைத்தாலும்கூட ஒரு தட்டாரால் இந்த அளவு உற்பத்தி செய்ய முடியாது. இதன் விளைவுதான் வேலையின்மை; கோவை, திருச்சி, விழுப்புரம் என பல பகுதிகளிலும் நிகழ்ந்த கூட்டுத் தற்கொலைச் சாவுகள்.

1998&2001 காலகட்டத்தில் 200லிருந்து 250 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளதாக கள ஆய்வுக் குறிப்பொன்றின் தகவல் தெரிவிக்கிறது.

தட்டார் சமூகம் தமது தொழிலில் தங்கத்தைக் கரைக்க, பழுப்புப் போட பயன்படுத்தும் சயனடைத்தான் தற்கொலை செய்வதற்குப் பயன்படுத்துகிறார்கள் என்பது இன்னும் துக்ககரமான விஷயமாகும்...’ என்று போகிறது அந்தப் பதிவு. இத்தனைச் சிதைவுகளுக்கும் மத்தியில்தான் இந்தியா, உலகின் விற்பனையில் மூன்றில் இரண்டு பங்கு தங்கத்தை வாங்கி விற்று நடுத்தர மக்களைக் கொன்று கொண்டிருக்கிறது. வல்லரசு என்ற கனவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. அதற்கான சிம்மாசனமும் கிரீடமும் ஏற்கனவே தயாராகிவிட்டன.

கர்நாடக முன்னாள் மந்திரி ஜி.ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் கண்டெடுத்த தங்க சிம்மாசனமும் அவர் திருப்பதி ஏழுமலையானிடம் கொடுத்து வைத்திருக்கும் தங்க கிரீடமும்தான் அவை.

நிழல் விளையாட்டு ‘‘பொது மேய்ச்சல் நிலத்திலிருந்து ஒரு வாத்தைத் திருடும் அற்பத் திருடனைச் சட்டம் சிறைப்படுத்துகிறது. ஆனால், வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தையே கையகப்படுத்திவிடும் பெருங்கொள்ளைக்காரனை அவன் விருப்பத்துக்குத் திரிய விட்டு விடுகிறது’’

 ‘இந்தியாவின் ஜனநாயகம்’ பற்றிய கட்டுரையொன்றில் அருந்ததி ராய் இந்த மேற்கோளை முன் வைத்து எழுதியிருந்தார்.

ஊழலுக்கு எதிரான குரல் இப்போது இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது.

அன்னா ஹசாரே உண்ணாவிரதமிருந்து எழுந்து, தனது உடல்நலத்தை மருத்துவமனையில் சரிசெய்து கொண்டு இப்போதுதான் வீடு திரும்பியிருக்கிறார்.பிரதமர் மன்மோகன்சிங், ‘‘ஊழல்தான் இந்தியாவின் முழுவளர்ச்சிக்குப் பெரிய சவாலாக இருக்கிறது’’ என்று கண்டித்திருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியிலிருந்து எல்.கே.அத்வானி ஊழலுக்கு எதிராக ஒரு யாத்திரை தொடங்க இருக்கிறார்.

யோகா குரு பாபா ராம்தேவ், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியாவின் கறுப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வர ஒரு யாத்திரையைத் திட்டமிட்டிருக்கிறார்.

‘சபாஷ்... சரியான போட்டி’ என்று சாமானிய இந்தியன் உற்சாகத்தோடு தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்திருக்கிறான். எனக்கு நா.வானமாமலை தொகுத்த ஒரு நாட்டுப்புற விளையாட்டுப் பாட்டு நினைவுக்கு வருகிறது.

கே: இதாரு கொம்பு?
ப: ஐயன் கொம்பு

கே: ஐயன் எங்கே?
ப: பூப்பறிக்கப் போய்விட்டான்

கே: பூ எங்கே?
ப:  தண்ணியிலே கிடக்கு

கே: தண்ணி எங்கே?
ப: ஆடு, மாடு குடிச்சிடுச்சு

கே: ஆடு, மாடு எங்கே?
ப: கள்ளன் கொண்டு போய் விட்டான்

கே: கள்ளன் எங்கே?
ப: மரத்தில் இருக்கான்

கே: வெட்டவா குத்தவா,
    வெண்ணித் தண்ணி ஊத்தவா?

அம்மாவின் அட்டிகை

அக்காவின்
கல்யாணத்திற்காய்
விற்ற வீடு
அம்மாவின் அட்டிகையில்
வாங்கியது

அம்மாவின்
அம்மாவும் புலம்புகிறாள்
தன் பூர்வீக வீட்டை விற்று
எங்கள் தாத்தா 
அந்த அட்டிகையை
செய்து போட்டாரென்று

அட்டிகை
செய்து செய்தே
குறடாகி விட்ட அத்தானின்
கவுரவத்தை மீட்க
அக்காவின்
அட்டிகையும் அடைந்தது
மீட்க முடியாத
துயரத்தின் வெற்றிடத்தை
 தாணு பிச்சையா


(சலசலக்கும்...)

 
பழநிபாரதி