வீட்டில் அமிர்தமாக சமைத்துக் கொடுத்தாலும், ‘ஓட்டல் டேஸ்ட் வரலையே...’ என்பதுதான் பலரின் ஆதங்கம். வீட்டுச் சமையலில் ஆரோக்கியமே பிரதானம். ஓட்டல் சாப்பாட்டில் சுவை தூக்கலாக இருந்தாலும், உடல்நலத்துக்கு உத்தரவாத மில்லை. சுவையும் ஆரோக்கிய முமான சாப்பாடு வீட்டிலேயே சாத்தியமில்லையா? உண்டு என்கிறார் உமா ஸ்ரீனிவாசன். ஓட்டல் சுவையில், வீட்டுத் தரத்தில் வெரைட்டி உணவுகள் தயாரிப்பதில் நிபுணி இவர்.
‘‘எல்லா குழந்தைங்களையும் போல என் பிள்ளைங்களும் பரோட்டா, நாண், சோளா பூரினு வீட்ல செய்ய முடியாததை அடிக்கடி கேட்பாங்க. ஓட்டல்ல அடிக்கடி சாப்பிடறது உடம்புக்கு நல்லதில்லைங்கிறதால, நானே ஒவ்வொண்ணா வீட்ல முயற்சி பண்ண ஆரம்பிச்சேன். இப்போ பார்ட்டி ஆர்டர்களும் எடுத்துச் செய்யறேன்’’ என்கிற உமா, விருப்பமுள்ளோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.
என்னென்ன தேவை? முதலீடு?‘‘மைதா, கோதுமை, எண்ணெய், மசாலா உள்ளிட்ட மளிகை சாமான்கள்தான்... 500 ரூபாய் முதலீடு தாராளம்.’’
எத்தனை வெரைட்டி? என்ன ஸ்பெஷல்?‘‘சப்பாத்தி, பரோட்டாலயே நூற்றுக்கணக்கான வகைகள் செய்யலாம். காய்கறிகளும் கீரைகளும் சாப்பிடாத குழந்தைகளுக்கு அதையெல்லாம் ஸ்டஃப் செய்து, வித்தியாசமான கலர்ல, சுவைல செய்து தரலாம். ஓட்டல்ல சில சமயம் ருசிக்காகவும் மிருதுவா வரணுங்கிறதுக்காகவும் சோடா உப்பு, டால்டா எல்லாம் சேர்க்கறாங்க. அதெல்லாம் இல்லாமலும் அதே சுவைல செய்யலாம்!’’
விற்பனை வாய்ப்பு? லாபம்?‘‘இன்னிக்கு சப்பாத்தி, பூரின்னு எல்லாமே இன்ஸ்டன்ட்டா பாக்கெட்ல வர ஆரம்பிச்சிருக்கு. இன்ஸ்டன்ட் பாக்கெட்டுகள்ல உள்ளதை ஒரு வாரம், பத்து நாள் வரை வச்சு உபயோகிக்கலாம்னு சொல்றாங்க. அப்படின்னா அதுல கட்டாயம் கெமிக்கல் கலந்திருக்கும். நாம வீட்ல தினமும் ஃப்ரெஷ்ஷா செய்து தரலாம். அக்கம்பக்கத்துல வேலைக்குப் போற குடும்பங்களுக்கு, குழந்தைகள் உள்ள வீடுகளுக்கு தினமும் சப்ளை பண்ணாலே போதும்.
சின்னச் சின்ன பார்ட்டி, விசேஷங்களுக்கு ஆர்டர் எடுத்துப் பண்ணலாம். வீட்ல இடம் இருக்கிற பட்சத்துல, ஒரு சின்ன அறையை இதுக்காக ஒதுக்கி சின்ன அளவுல பிசினஸா பண்ணலாம். உணவுப் பொருள் பிசினஸைப் பொறுத்தவரை எப்போதும் 50 சதவீத லாபம் நிச்சயம்!’’
பயிற்சி?‘‘பரோட்டா, ஸ்டஃப்டு சப்பாத்தி, நாண், சோளா பூரி, சில்லி பரோட்டா, சைட் டிஷ் கத்துக்க ஒரே நாள் பயிற்சி. கட்டணம் 300 ரூபாய்.’’
ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.சந்திரசேகர்