வெற்றியின் பாதையில் தங்களை திருப்பிவிட்ட தருணங்களை,
ஜெயித்தவர்கள் அடையாளம் காட்டும் தொடர் கல்.ராமன்
பஸ் ஸ்டாண்ட். எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பாமரனும், பார்வையற்ற ஒருவரும் காத்திருக்கிறார்கள். ஒரு பஸ் வந்து நின்றது. இருவரும் ஓடிப்போய், ‘பஸ் எங்க போவுது?’ என்று ஒரே நேரத்தில் கோரஸாக கேட்டனராம். பாமர மக்களுக்கும் எழுத்தறிவைத் தந்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் அறிமுகமான ‘அறிவொளி இயக்கத்தில்’ இந்தக் கதை பிரபலம். ‘எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்’ என்கிற வள்ளுவரின் வாக்கை பாமரர்களுக்கும் புரியும் வகையில் கதையாக்கித் தந்தனர்.
ஏழைகளுக்குக் கல்வி வெறும் கண் மட்டுமல்ல. வாழ்வை புரட்டிப்போடுகிற நெம்புகோல். கல்வியே ஞானம் தரும் போதிமரம். கல்வியே வாழ்வின் பசி தீர்க்கிற அட்சய பாத்திரம். மறுக்கப்பட்ட நீதியைப் பெற்றுத்தரும் தற்காப்பு ஆயுதம். ஒருவரின் படிப்பு ஒரு குடும்பத்தைத் தலைநிமிர்த்தும். வாழ்வில் ஒளிகூட்டும். அவமானத்தை நீக்கி கௌரவத்தை கிரீடமாகச் சூட்டும். அதற்கு வாழும் சாட்சி கல்.ராமன் என்கிற கல்யாணராமன்.
‘‘திருநெல்வேலிக்கு அந்தப்பக்கம் இருக்கிற மன்னார்கோயில் என்கிற ஊரிலிருந்து ஒரு பொடியன் வருகிறான் என்கிற அக்கறை சென்னை பெருநகரிடம் இல்லவே இல்லை. எங்க ஊருக்குள் வருகிற எந்த புதுமுகத்தையும் ஏதேனும் ஒரு குரல் நிறுத்தி விசாரிக்கும். ‘தம்பி யாரு... ஊருக்குப் புதுசா இருக்கீங்க?’ என்கிற விசாரிப்பினைத் தொடர்ந்து குடிப்பதற்கு நீரோ, மோரோ கிடைக்கலாம். வெறுங்கையோடும், பெரும் கனவோடும் தினம் தினம் வந்து இறங்குகிற ஆயிரக்கணக்கான புதுமுகங்களை விசாரிக்க சென்னையில் யாருக்கு நேரம் இருக்கிறது? சின்னமலை பஸ் ஸ்டாப்பில், கையில் டிரங் பெட்டியோடும் மனசு நிறைய கனவுகளோடும் வந்து இறங்கினேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இருக்கும் கிண்டி பொறியியல் கல்லூரி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் இருக்கும். ‘நடைராஜா சர்வீஸ்’ மூலம் வந்து சேர்ந்தேன். படித்து முடித்த நான்கு ஆண்டுகளில் ஒருமுறைகூட என்னால் ஆட்டோவில் பயணிக்க முடிந்ததில்லை. திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வரத் தேவையான பஸ் கட்டணத்தை மட்டுமே அம்மாவால் தரமுடிந்தது.

பள்ளியில் ‘காக்கி கலர் பேன்ட்’தான் யூனிபார்ம். தீபாவளி, பொங்கலுக்கு புதுத் துணி எடுக்கிற பாக்கியம் எப்போதும் வாய்க்காது. பழைய துணியை ஆல்டர் செய்து போடுகிற வாய்ப்பு மட்டுமே! அப்பவும் ஆல்டர் கூலி கொடுத்து அந்தத் துணியை வாங்க முடியாமல், சட்டையை கூலியாகக் கொடுத்துவிட்டு, வெறும் பேன்ட்டை வாங்கி வந்தது அநேக முறை. அப்படி சட்டையைத் தையல்காரரிடம் விட்டுக்கொடுத்து வாங்கிய காக்கி பேன்ட்தான் என்னிடம் இருந்ததிலேயே நல்ல உடை. அந்த பள்ளி யூனிபார்ம் அணிந்து, கல்லூரிக்கு முதல் நாள் வந்தவன்மேல் எல்லோரின் பார்வையும் பதிந்தது. போட்டிருந்த உடைகளில் நெய்த நூல்களைவிட, கிழிசலைத் தைத்த நூல்கள் துருத்திக்கொண்டு தெரியும். வெள்ளை நிற நூல் தெரியாமல் இருக்க நீல நிற இங்க் தடவிக் கொள்வேன்.
‘கொடிது கொடிது இளமையில் வறுமை’ என்றாள் ஔவை. என் வறுமை கொடுமையாகத்தான் இருந்தது. ‘எங்கிருந்து வந்திருக்கிறேன்’ என்று திரும்பிப் பார்த்தால் இப்போது பயமாகக்கூட இருக்கிறது. நினைத்துப் பார்க்க முடியாத வறுமையைத் தந்த கடவுளை சபிப்பதைவிட, அதை நினைத்து முடங்கிப்போகாமல் ஏற்றுக் கொள்கிற பக்குவத்தை அப்போதே அளித்ததற்காக நன்றி சொல்லத்தான் முடிகிறது. நீச்சல்கூட தெரியாமல் கடலில் விழுந்துவிட்டோமே என்று பயப்படாமல், எதிர்த்து நின்று நீச்சல் பழக சரியான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டேன்.
நான் எலெக்ட்ரிகல் எஞ்சினியரிங் படித்துக் கொண்டிருந்த போதுதான் ‘ஐ.டி’ என்கிற இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கொடிகட்டிப் பறந்தது. என் வயதுடைய நண்பர்கள் ஷாப்பிங், சினிமா, ஸ்டைல் என்று கலக்கிக் கொண்டிருக்க, நான் பிராக்டிகல் வகுப்பிற்குப் போட ஷூ இல்லாமல் வெளியே நின்று கொண்டிருப்பேன். படிக்க ஆர்வம் இல்லாமல் கட் அடிக்கிறவர்கள் இருப்பார்கள். செய்முறை செய்யத் தெரியாமல் சிலர் ‘பங்க்’ அடிப்பார்கள். நான் அடிக்கடி ஆப்சென்ட் வாங்கக் காரணம், ஒரு ஜோடி ஷூ இல்லை என்பது மட்டுமே. பிரசன்ட் ஆன நாட்கள் என்றால், ஏதோ ஒரு நண்பன் நன்றிக்குரியவனாகி இருப்பான்.
விடுதியில் தங்கிப் படித்ததில் ஒரு வசதி... நண்பர்களின் உதவி எளிதாகக் கிடைக்கும். பரீட்சை எழுத பணம் கட்டியதில் தொடங்கி, புத்தகம், பேனா, பிராக்டிகல் உபகரணங்கள் என அத்தனைக்கும் ஆபத்பாந்தவன்களாக நண்பர்களே இருந்தார்கள். ‘கொடுக்கிறோம்’ என்கிற தர்ம சிந்தனையோடு தராமல், ‘நண்பன்’ என்கிற உரிமையில் தந்த நட்புகளுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
விடுமுறை நாட்களை எல்லோரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். எனக்கு விடுமுறை என்றால் வயிற்றுக்குள் பயப்பந்து உருளும். ஊருக்குப் போக அம்மாவிடம் பஸ் கட்டணம் வாங்க வேண்டும். திரும்பும்போதும் அதே சிக்கல் வரும். கல்லூரியில் இருந்தால் குறைந்தபட்சம் அம்மாவுக்கு எனக்கான உணவு குறித்த கவலையாவது இல்லாமல் போகும். அதற்காகவே ஊருக்குப் போக எனக்கு விருப்பம் இருக்காது. விடுதியே வெறிச்சோடி இருக்கிற நாளில், என்னைப் போல சில ஜீவன்கள் வீட்டிற்குப் போக மனமில்லாமல் கல்லூரியிலேயே இருக்கும். இங்கு வேளை தவறாமல் நல்ல உணவு கிடைத்துவிடும். மூன்று வேளையும் சூடான உணவு சாப்பிட்டது கல்லூரி விடுதியில்தான். ஆனால், அதற்கு மாதா மாதம் பணம் கட்ட வேண்டும்.

உரிய நேரத்தில் நான் ஒருமுறைகூட கட்டியதில்லை. ‘கீழ்க்கண்ட மாணவர்கள் பணம் கட்டிவிட்டு சாப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’ என்று அறிவிப்புப் பலகையில் ஒட்டப்படும் பட்டியலில் என் பெயர் முதலாவதாக இருக்கும். பல நாட்கள் நண்பர்கள், யாருக்கும் தெரியாமல் அறைக்கு உணவு கொண்டு வந்து தந்திருக்கிறார்கள். மெஸ்ஸில் வேலை செய்கிற தோழர்கள், ‘பாவம் இந்தப் பையன்’ என்று அழைத்து சோறு போட்டிருக்கிறார்கள். எப்போது நினைத்தாலும் கண்ணில் ஈரம் கட்டுகிற காலம் அது.
ஒருபக்கம் இப்படி வாழ்க்கை சுழற்றி அடிக்க, மறுபக்கம் படிப்பும் பெரிய சவாலாக இருக்கும். புத்தகம் இருக்காது. எழுதிப் பார்க்க நோட்டு இருக்காது. பேனா, பென்சில், கால்குலேட்டர் எதுவும் இருக்காது. நண்பர்களிடம் ஓசியில் வாங்கிப் படித்தாக வேண்டும். அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்துவிட்டு எஞ்சினியரிங் சேர்கிற எல்லோரும் தடுமாறி சுதாரிப்பதற்கு ஒரு வருடமாவது ஆகும். திடீரென்று எல்லாவற்றையும் ஆங்கிலத்தில் படித்துப் புரிந்து, ஆங்கிலத்திலேயே தேர்வு எழுத வேண்டும். என்னோடு படித்தவர்கள் இங்கிலீஷில் பிச்சி உதறும்போது, எனக்கு பயத்தில் உதறும். ஆனாலும் ஒவ்வொரு முறை தேர்வு முடிவுகள் வரும்போதும் இந்தக் கல்யாணராமனை நிமிர்ந்து பார்க்காத விழிகள் இருக்காது. வகுப்பில் ஒரு பாடத்திலாவது முதல் மதிப்பெண் என்னுடையதாக இருக்கும்.
நோட்டு இல்லை, புத்தகம் இல்லை என பெரும்பாலும் வகுப்பிற்கு வெளியே நிற்கிற ஒரு மாணவன் நல்ல மதிப்பெண் எடுப்பதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ‘யூனிவர்சிட்டி டாப்பர்’ என்கிற பெருமையோடு படிப்பை முடித்தேன். வீட்டில் இருந்து எனக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு ரூபாயும் என் குடும்பத்தினரின் உணவுக்கானது; உடைக்கானது. அன்று அவர்கள் தலையில் எண்ணெய் வைக்காமல் போனதற்கு நான் காரணமாக இருக்கலாம். இதை என் ஞாபகத்திலிருந்து ஒருநாளும் எடுத்தது இல்லை.
உலகத்தில் இருக்கிற அத்தனை நாடுகளையும் பார்த்தாகிவிட்டது. மல்டி பில்லியனர்கள் இருக்கிற மேடையில் சரிக்கு சமமாக அமர்கிற உயரம் தொட்டாகிவிட்டது. இப்போதும் பழைய நினைவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். என்னுடைய ஏழ்மையை எல்லா மேடைகளிலும் கம்பீரமாகப் பேசுகிறேன். என் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியவை அந்த நினைவுகள்தான். ஏழ்மையை நினைத்து நினைத்து வெறியோடு படிக்க முடிந்தது.
டாடா நிறுவனத்தில் படிப்பு முடியும்போதே வேலையும் கிடைத்தது. ஒரு வேலை இல்லை. சென்னையில் ரூ.2,600 சம்பளத்தில் ஒரு வேலை. இப்போது மும்பையான பம்பாயில் ரூ.2,900 சம்பளத்தில் இன்னொரு வேலை. 420 ரூபாய் பென்ஷன் பணத்தில் வாழுகிற குடும்பத்திற்கு இது வரப்பிரசாதம். மும்பையில் வாழ்க்கைச் செலவு அதிகம்; அங்கு போய் தங்கி வேலை செய்து வீட்டிற்கு அனுப்புகிற பணம் சென்னையில் வேலை செய்வதைவிட குறைவாகவே இருக்கும். தெரியாத மும்பையில் வேலை செய்வதைவிட, நன்றாகத் தெரிந்த சென்னையில் நான் இருப்பது அம்மாவுக்குப் பிடித்திருந்தது.
சென்னை போதும் என செட்டில் ஆகவா நான் வந்தேன்? வாழ்வின் அடுத்த திருப்புமுனையை ஏற்படுத்தும் முடிவை எடுக்க வேண்டிய தருணத்தில் நின்று கொண்டிருந்தேன். மொழி தெரியாத, அறிமுகம் இல்லாத, செலவு அதிகம் ஆகிற இந்தியாவின் பிசினஸ் தலைநகரம் மும்பை என்னுடைய சாய்ஸ். அங்கு போனால் வளர்ச்சி யின் பாதை நன்றாக இருக்கும் என்று உள்ளுணர்வு சொல்ல, மும்பைக்கு ரயிலேறினேன். அதே ரப்பர் செருப்பு.. .அதே டிரங் பெட்டி...
(திருப்பங்கள் தொடரும்...)
த.செ.ஞானவேல்
படங்கள்:புதூர் சரவணன்