கோடையில் அதிக நேரம் ஏசி, ஃபேன் பயன்படுத்துகிறோம். மழைக்காலத்தில் அந்த அளவு மின்சாரப் பயன்பாடு இல்லை. ஆனாலும் அதிக அளவு மின்கட்டணம் வருகிறது. என்ன காரணம்? எப்படித் தவிர்க்கலாம்? ஆர்.ரகோத்தமன், வேலூர்-7.
பதில் சொல்கின்றனர் சுற்றுச்சூழல் கல்வி மையத்தினர்உங்கள் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள மின் கணக்கீடு மீட்டர் சரியாக இயங்குகிறதா என சோதித்துக் கொள்ளுங்கள். அது சரியாக இருந்தால், பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தி, மின்கட்டணத்தைக் கணிசமாகக் குறைக்கலாம்.
வாஷிங் மெஷினை கூடிய வரை ஃபுல் லோடில் பயன்படுத்துங்கள். அவசரம் இல்லையெனில், டிரையர் பயன்படுத்துவதைத் தவிர்த்து காற்றிலேயே உலர விடலாம்.
பகலில் ஏசி பயன்படுத்துகையில் சூரிய ஒளி புகாமல் இருக்கும்படி கனத்த திரைகளைப் பயன் படுத்துங்கள். அறை வெப்பம் குறைந்த பிறகு, மின்விசிறியைப் பயன்படுத்தலாம்.
பழைய ஜன்னல்களுக்குப் பதிலாக பீuணீறீஜீணீஸீமீ ஜன்னல்களை அமைக்கலாம். இது ஏசியின் குளிர்ச்சியை வெளியேற்றாமல் தக்க வைக்கும்.
பயன்படுத்திய உடனே சார்ஜர்களை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அவசியம். முழுக்க சார்ஜ் ஆன பிறகும்கூட, மொபைல்போனை அகற்றிய பிறகும் கூட, சார்ஜர் மின்சாரத்தை இழுக்கும்.
10 நிமிடங்களைத் தாண்டி கம்ப்யூட்டர் / லேப்டாப் பயன்படுத்தாமல் இருந்தால் ‘ஸ்லீப் மோடு’க்கு மாற்றுங்கள். தேவையான வேளையில் மட்டுமே இன்டர்நெட், ப்ளூடூத் அமைப்புகளை ‘ஆன்’ செய்யுங்கள். இதுவும் மின்சிக்கனத்துக்கு வழிவகுக்கும்.
அதிக ஸ்டார் ரேட்டிங் இல்லாத மின் உபகரணங்களை வாங்க வேண்டாம்.
பகலில் தேவையில்லாமல் மின்விளக்குகளைப் பயன்படுத்தாதீர்கள். பழைய பல்புகளுக்குப் பதிலாக ‘எனர்ஜி சேவிங்’ பல்புகளை மாற்றலாம்.
சமீபகாலமாக நிறைய சமையல் குறிப்புகளிலும் மருத்துவக் குறிப்புகளிலும் ‘ஃபிளாக்ஸ் சீட்ஸ்’ பற்றிக் கேள்விப்படுகிறேன். அது என்ன? டி.ஜீவிதா, சென்னை-20.
பதில் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் அம்பிகா சேகர்‘ஃபிளாக்ஸ் சீட்ஸ்’ என்பது ஒரு வகை விதை. மீன்களில் மட்டுமே பிரதானமாகக் கிடைக்கிற ஒமேகா 3 கொழுப்பு அமிலம் ஃபிளாக்ஸ் சீட்ஸில் அதிகமுள்ளது. இது உடலில் நல்ல கொழுப்பு அதிகமாக உதவும். மூளைக்கு நல்லது என நாம் சேர்த்துக்கொள்கிற பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்றவற்றுக்கு இணையான சக்தி கொண்டது. ஹார்மோன் சமநிலையின்மையை சரி செய்யக்கூடியது. குறிப்பாக மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்க உதவும். நார்ச்சத்து அதிகமுள்ளது என்பதால் மலச்சிக்கலுக்கும் தீர்வு தரும்.
இதை குழந்தைகளுக்குத் தர வேண்டாம். ஓரளவு வளர்ந்த பிள்ளைகள் முதல் எல்லா வயதினரும் சாப்பிடலாம். காலையில் தினம் ஒரு டீஸ்பூன் ஃபிளாக்ஸ் சீட்ஸை வெறும் வயிற்றில் நன்றாக மென்று தின்ன வேண்டும். ஃபிளாக்ஸ் சீட்ஸ் பவுடர் வடிவிலும் கிடைக்கிறது. அதை சப்பாத்தி மாவு, இட்லி மாவுடன் கலந்தும் சமைத்து சாப்பிடலாம்.
5 வயது மகள் எந்த சோப்பு பயன்படுத்தினாலும் தடிப்பு ஏற்படுகிறது. என்ன செய்வது? கே.ராமலட்சுமி, திருநெல்வேலி-2.
பதில் சொல்கிறார் சரும மருத்துவர் சீனிவாசன்சோப்புகளின் கார, அமிலத் தன்மையை அதன் ஜீபி மதிப்பு வாயிலாக அறியலாம். பிஹெச் மதிப்பு 9&10 என இருந்தால் நம் தோலுக்குத் தீங்கு விளைவிக்கும். பிஹெச் அளவு 7 எனில் அது அமிலமோ காரமோ இன்றி நடுநிலையாக இருக்கும். இதையே ‘மைல்டு சோப்’ என்கிறார்கள். பெரிய மருந்துக்கடைகளில் கிடைக்கும் லிட்மஸ் காகிதத்தைக் கொண்டு நாமே சோதிக்கலாம். ஈர சோப்பின் மீது லிட்மஸ் காகிதத்தை 10 நொடி வையுங்கள். அது நீல நிறமாக மாறினால் காரத்தன்மை அதிகமுள்ளது எனப் பொருள். நிறம் மாறாமல் இருக்கும் சோப்புகளைப் பயன்படுத்தினால் அரிப்போ, தடிமனோ வராது.