பயணத்தில் நடக்கும் ஒரு விபத்து எத்தனை பேரின் வாழ்க்கை, கனவுகள், எதிர்காலத்தை சம்மட்டி அடியாக அடித்து நசுக்கிப் போட்டுவிடுகிறது என்பதை விபத்துக்கேயான வலியுடன் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் எம். சரவணன்.
முதல் காட்சியே நெடுஞ்சாலையில் நேருக்குநேர் பேருந்துகள் மோதிக்கொள்ளும் ஒரு விபத்தைக் காட்டி அதிரவைத்து, அதற்கு சில மணிநேரங்களுக்கு முன் நடந்த பயண ஏற்பாடுகளையும், பயண மாந்தர்களைப் பற்றியும் விரிகிறது கதை. சென்னையையும், திருச்சியையும் களமாகக்கொண்ட படத்தில் திருச்சியில் ஜெய்&அஞ்சலி ஜோடியும் சென்னையில் சர்வா&அனன்யா ஜோடியும் காதல் கொள்கிறார்கள்.
திருச்சியிலிருந்து சென்னைக்கு இன்டர்வியூவுக்கு வந்த இடத்தில் அனன்யா நம்பிவந்த உறவினர் தவிக்கவிட, விரும்பாவிட்டாலும் உதவிக்கு வருகிறார் சர்வா. அன்றைக்கு முழுதும் இருவரும் ஒன்றாகக் கழிக்க நேர, சந்தேகமாகவே சர்வாவை பார்க்கும் அனன்யாவுக்குத்தான் அவர்மீது முதலில் காதல் வருகிறது. பெயரைக்கூட கேட்டுக்கொள்ளாமல் அன்றைக்கே முடிவடையும் காதலில் சர்வாவின் முறுக்கும், அனன்யாவின் அப்பாவித் தனமும் அழகோ அழகு.
இன்னொருபக்கம் தூரத்து மொட்டை மாடியிலிருந்து தன்னை ‘சைட்’ அடிக்கும் ஜெய்யை மிரட்டியே காதலிக்கும் அஞ்சலி அமளிதுமளி படுத்துகிறார். சொன்னதையெல்லாம் கேட்டபடி அவர் பின்னால் நாய்க்குட்டி போல் ஓடிவரும் ஜெய்யின் வெள்ளந்தி நடிப்பும் ஓகே. தூரத்திலேயே பார்த்த அஞ்சலி பக்கத்தில் வரும்போது ஜெய்க்கு அடையாளம் தெரியாமல் போவதும், சமயங்களில் அஞ்சலி என்று நினைத்து அவரது அம்மாவை ஜெய் லுக் விடுவதும் நல்ல நையாண்டிகள்.

இவர்களெல்லாம் எதிரெதிர் பேருந்துகளில் பயணப்பட, இவர்களுடன் தன் குழந்தையைப் பார்க்க துபாயிலிருந்து வருபவர், ஏற்றிவிட வந்த மனைவியைப் பிரிய மனமில்லாமல் கூடவே வரும் புதுக்கணவன், அம்மாவைத் தொல்லை செய்த படியே பஸ்ஸில் கலக்கும் பொடிசு, பஸ்ஸுக்குள்ளேயே காதல் மலர்ந்த ஜோடி என்று மற்றவர்களும் பயணிக்க, எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் முடிவு கட்டுகிறது விபத்து.
அத்தனை பேரின் வாழ்க்கையையும் உருக்குலைத்துப் போட்ட விபத்து ஸ்பாட், சில மணி நேரங்களில் சிதிலங்கள் அப்புறப்படுத்தப்பட்டு இயல்பாகிவிடுவதும், மற்ற வாகனங்கள் எப்போதும்போல் பயணிப்பதையும், விபத்தைப்பற்றிய குறிப்புப் பலகை ஒன்று மட்டுமே அதன் சாட்சியாக நிற்பதையும் வேகக்காட்சிகளில் ஒரு ரத்த ஹைகூவாகக் காட்டும் இடத்தில் இயக்குநர் கைதட்டல் பெறுகிறார்.
இப்படியொரு நல்ல செய்தி சொல்லும் படத்தில் திரைக்கதை விபத்துகளும் இல்லாமலில்லை. ஃபிளாஷ்பேக்கின் உள்ளேயே இன்னொரு ஃபிளாஷ்பேக்கும் இடம்பிடிப்பது குழப்படியான உத்தி. படம் பார்ப்பவர்கள் கொஞ்சம் அசந்தாலும் எங்கே, எப்போது, என்ன நடந்தது என்று குழம்பி விடும் சாத்தியம் இருக்கிறது.
அதேபோல் முக்கிய நிகழ்வான விபத்தின் காரணம் பறந்து வரும் துணியொன்று பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை முழுதுமாக மூடிக் கொள்வதுதான் என்றிருக்க, கடைசியில் சொல்லப்படும் எச்சரிக்கையும் எடுபடாமல் போகிறது.
ஆர்.வேல்ராஜின் ஒளிப்பதிவுதான் கதையின் உண்மையான ஹீரோ. வண்ண நேர்த்தியிலும் சரி, நெடுஞ்சாலைப் பயணத்தை எதிர்வரும் விபத்துக்குக் கட்டியம் கூறும் விதத்தில் படமாக்கியிருப்பதிலும் சரி, ‘வெல்டன்’ ராஜ்..! நாமும் பஸ்ஸிலேயே போய்க்கொண்டிருப்பதுபோல் ஏற்படும் பிரமைக்கு வேல்ராஜுடன் கைகோர்த்துக்கொண்டிருக்கும் இசையமைப்பாளர் சத்யாவுக்கும் பங்குண்டு. பாடல்கள் ரசிக்கவைத்தாலும் ஹாரிஸின் தாக்கம் நிறையவே இருக்கிறது.
எங்கேயும் எப்போதும் - வழியில் வாழ்க்கையைத் தவறவிட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு திரையஞ்சலி..!
குங்குமம் விமர்சனக்குழு