‘‘அஞ்சாப்பு வரைக்கும்தான் எங்கூர்ல இருக்கு. மேல படிக்கணும்னா விருசம்பட்டி போகணும். தார் ரோடு இல்லாததால பஸ் வராது. பள்ளிக்கூடம் விட்ட உடனே ஓட்டப்பந்தயம் வச்சுத்தான் வந்திட்டிருந்தோம். அப்பத்தான் இருட்டறதுக்குள்ள வீட்டுக்கு வரமுடியும். இனிமே அந்தப் பாதையெல்லாம் லைட் எரியப் போகுது. ஆபீசர்களையெல்லாம் பாத்து நாங்கதான் லைட்டைக் கொண்டாந்துருக்கோம்’’ & வெள்ளந்தி பருவத்துக்கே உரிய குதூகலத்துடன் அந்தப் பொடிசுகள் கூறுகிற விஷயம் நிஜம். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள மாமுநயினார்புரத்துக்கு மின்வசதி வாங்கித்தந்திருக்கிறார்கள் அங்கு 5, 6, 7வது படிக்கும் சிறுசுகள்!
‘‘எந்தவொரு வேலைக்கும் டவுனுக்கு போகணும்னா விருசம்பட்டி விலக்குலதான் பஸ் ஏறணும். 3 கி.மீ தூரம் இருக்கிற இந்தப் பாதையோட ரெண்டு பக்கமும் காடுதான். ராத்திரில விருசம்பட்டி வந்து இறங்குற எங்க ஊர்க்காரங்க, சில வேளைல அங்க தெரிஞ்சவங்க வீட்டுல தங்கிட்டு மறுநாள் காலையிலதான் வருவாங்க. ஓநாய், நரிகளுக்கு பயமில்லைன்னா தைரியமா நடந்து வரலாம். ரெண்டு, மூணு பேர் இருட்டுல பாம்பு கடிச்சு செத்துப் போயிருக்காங்க. அதனாலதான் இந்தப் பாதைக்கு கரன்ட்டும் லைட்டும் கேட்டு ரொம்ப வருஷமா அலைஞ்சிட்டிருந்தாங்க எங்க ஊர்க்காரங்க.

நாங்களும் பள்ளிக்கூடம் போய் வர்றபோது, படற கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. சீக்கிரம் இருட்டுற நாட்கள்ல மத்தியானத்துக்கு மேல வகுப்புல பாடமே கொள்ளாம, ‘எப்படா பள்ளிக்கூடம் விடும்’னுதான் இருக்கும்’’ என்கிறார் விருசம்பட்டியில் ஏழாவது படிக்கும் முத்துமாரி.
‘‘பள்ளிக்கூடம் போகாத பசங்களையெல்லாம் கண்டுபிடிச்சு ஸ்கூலுக்கு அனுப்ப ‘வேம்பு’ அமைப்பைச் சேர்ந்தவங்க அப்பத்தான் வந்தாங்க. ‘ஸ்கூலுக்குப் போற பாதையில லைட் போட்டுத் தந்தா நாங்களும் பள்ளிக்கூடம் போக ரெடி’னு அவங்ககிட்ட சொன்னோம். ‘நாங்க கேக்கறதை விட நீங்க கேட்டா சீக்கிரம் கிடைக்கும்’னு அவங்கதான் எங்களுக்கு ஐடியா தந்தது’’ என்று ஆனந்தராஜ், ‘வேம்பு’ இயக்கம் பற்றிச் சொன்னார்.
‘‘தமிழகத்தின் தென்கிழக்குல உள்ள இந்தப் பகுதி ரொம்பவே பின்தங்கியிருக்கு. பிழைப்புக்கு உறுதியான எந்த ஆதாரமும் இல்லை. இந்தப் பகுதியை சீர்பண்ணணும்னா முதல்ல கல்வியறிவு தரணும்னு ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘விளாத்திகுளம் எம்பவரிங் மூவ்மென்ட்’ங்கிற ‘வேம்பு’ மக்கள் சக்தி இயக்கம். இந்தப் பகுதி கிராமங்கள்ல இருக்கற பசங்களைப் படிக்க வைக்கணும்ங்கிறதுதான் முக்கிய நோக்கம். குழந்தைகளை ஒருங்கிணைக்கணும்னா அவங்க போக்குலயே போனாத்தான் சரியா இருக்கும்னு, விளையாட்டா ‘குழந்தைகள் பாராளுமன்றம்’ அமைப்பை உருவாக்கினோம். பசங்களுக்குள்ளயே பிரதமர், அமைச்சர்கள்னு பிரிச்சு ஆளுக்கு ஒரு பொறுப்பைத் தந்தோம். அப்படிப் பண்ணுனதில நல்லாவே ஐக்கியமானாங்க.
படிக்க ஆரம்பிச்ச குழந்தைகள், வருங்காலத்துல பெரிய ஆளா ஆனா மட்டும் போதாதே? சமூக அக்கறை யுள்ளவங்களா இருக்கணும் இல்லையா? அதனாலதான் இந்தமாதிரி பொதுக் காரியங்கள்லயும் இறக்கி விட்டோம். ஊருல உள்ள அவங்கவங்களுக்குத் தெரிஞ்ச பொதுப் பிரச்னைகளை அடையாளம் காண வச்சோம். அதுல அவங்க என்ன பண்ணலாம்னு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தோம். மேற்கொண்டு அவங்களே பக்காவா பண்ணிடுறாங்க. அப்படிப் பண்ணுனதோட தொடர்ச்சியாத்தான் இன்னிக்கு விருசம்பட்டி & மாமுநயினார்புரம் பாதைக்கு மின் இணைப்பை வாங்கியிருக்காங்க பசங்க’’ என்கிறார் வேம்பு இயக்கத்தின் ரிக்கோ.
‘‘ஊராட்சிமன்றத் தலைவர்ல இருந்து கலெக்டர் வரை நாங்க நேரடியா போய் மனு கொடுத்தோம். வீட்டுல எங்களுக்குத் தர்ற காசைச் சேர்த்து வச்சு, அதுல இருந்துதான் அதுக்கான செலவைக்கூட பகிர்ந்துக்கிட்டோம். எல்லா இடத்துலயும் முதல்ல எங்களைப் பார்த்துச் சிரிப்பாங்க. ‘காட்டுப்பாதைக்கெல்லாம் கரன்ட் தரக்கூடாதுப்பா’ன்னுகூட சொன்னாங்க. கடைசியில என்ன நினைச்சாங்களோ, இப்ப வசதி செஞ்சு தந்துட்டாங்க’’ என்கிற ஆனந்தராஜ்தான் உள்ளூர் நாடாளுமன்றத்தின் உள்துறை அமைச்சர்!
மின்வசதி வாங்கியது இல்லாமல், பொது இடங்களைச் சுத்தம் செய்வது, நூலகங்களைப் பராமரிப்பது போன்ற மற்ற சேவைகளையும் தவறாமல் செய்து வருகிறார்கள் இந்தச்
சிறுவர்கள்.
60 ஆண்டுகளாக மின்விளக்கு இல்லாமல் இருண்டு கிடந்த நிலைக்கு விமோசனம் தேடித் தந்த பள்ளிச் சிறுவர்களைக் கொண்ட மாமுநயினார்புரத்துப் பெரியவர்கள், இப்போது எந்தவொரு வேலைக்கும் ‘அந்தப் பசங்களைப் போய்ப் பாருங்கப்பா’ என்று இவர்களைக் கைகாட்டுகிறார்களாம்.
அய்யனார் ராஜன்
படங்கள்: கண்ணன்