மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டது போல இருக்கிறதா? நெசமாலுமே உண்மைதான். சேலம் ஹெலிக்ஸ் சிறப்புப்பள்ளி மாணவர்கள் மூங்கில் பொருட்கள் செய்யப் பழகும்போது கையெழுத்தும் அழகாகிறதாம்! எப்படியாம்?
கேரளாவில் சாலக்குடி அருகிலுள்ள வாழச்சால் கிராமத்தில் உன்னிகிருஷ்ண பக்கனார் ‘பேம்பூ சிம்பொனி’ இசைக்குழு நடத்துகிறார். இக்குழுவின் அனைத்து இசைக்கருவிகளுமே மூங்கிலால் தயாரிக்கப்பட்டவை. அங்கோலா, புல்லாங்குழல், தபேலா, ரெயின் டிராப் உள்பட பல மூங்கில் இசைக்கருவிகள் பிரமிக்க வைக்கின்றன. ஒரு மூங்கில் கருவியில் மணல் மற்றும் சிறுவிதைகளைப் போட்டு அசைக்கும்போது மழை பெய்யும் ஓசை கேட்கிறது. இந்தக் கருவிகளைச் செய்யும் பயிற்சி பெறுகிறார்கள் பள்ளி மாணவர்கள்.
‘‘கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கும். அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதே முதல் வேலை. அதன் பிறகே குறைபாட்டுக்குத் தகுந்தாற்போல எளிமைப்படுத்திப் படிக்க வைத்தல் மற்றும் புரிதல் பயிற்சிகள். இவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அனிமேஷன், ஓவியம், இயற்கை வேளாண்மை, நாடகம், மூங்கில் கலைப்பொருட்கள் தயாரித்தல், இசை என பல விஷயங்களும் வொக்கேஷனல் டிரெயினிங்கில் கற்றுத்தரப்படுகிறது.
மூங்கில் கலைப்பொருட்கள் செய்யும் குழந்தைகள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடுகின்றனர். மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சி கிடைக்கிறது. நினைவாற்றலுக்கும் உதவுகிறது. மூங்கில் பொருட்கள் செய்யும்போது விரல்களுக்கு நல்ல பயிற்சி கிடைப்பதால் தெளிவாக எழுத முடிகிறது. இதன் மூலம் கிறுக்கலாக எழுதிய பல குழந்தைகளின் கையெழுத்து அழகாகியுள்ளது’’ என்கிறார் தலைமை ஆசிரியர் தேவிப்பிரியா.
‘‘மூங்கில் கிடார் வாசிக்க ரொம்ப சந்தோஷமா இருந்தது. மூங்கிலாலேயே மழை பெய்வதை இசையாக்க முடிந்தது. காடுகள், பூச்சிகள், மரங்களில் இருந்து கிடைக்கும் சத்தத்தை வைத்து புதிய இசைக்கருவிகளை உருவாக்கப் போகிறோம். காதில் விழும் ஓசையை இனி கூர்ந்து கவனிப்போம். மூங்கில் பொருட்கள் செய்ய ஆரம்பித்த பிறகு எழுதுவது எளிதாக உள்ளது’’ என்கின்றனர் பயிற்சி பெற்ற குழந்தைகள்.
மூங்கில் இசை கையெழுத்தை மட்டும் அல்ல... வாழ்வையும் அழகுபடுத்தி காற்றில் உயிர்த்து நதிகளின் வழியே வழிந்தோடுகிறது. குயில்களின் குரல்வளையில் அமர்ந்து பூக்கிறது. விழி மூடி அமர்ந்தால் இசை வெள்ளம் தலைக்கு மேலே செல்லச் செல்ல எடை கரைந்து மிதக்கிறது மனம்!
ஸ்ரீதேவி