அறிவியல் மீது வழக்கு!
‘பூகம்பம் வருவதை முன்கூட்டியே கணிக்க முடியாது’ என்பதுதான் விஞ்ஞானிகள் வாதம். இதனால்தான் உயிர்களையும் உடமைகளையும் இயற்கைச் சீற்றத்தில் இழந்துகொண்டிருக்கிறோம். ஆனால், பூகம்பம் வருவது பற்றி முன்கூட்டியே எச்சரிக்கவில்லை என விஞ்ஞானிகள் மீது வழக்குப் போட்டால்?
இத்தாலியில் இதுதான் நடக்கிறது. 2009ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி இத்தாலியின் லாகுய்லா பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதில் 300 பேர் பலியாகினர். இந்த பூகம்பம் வருவதற்கு சில நாட்கள் முன்பாகவே லேசான நிலநடுக்கம் அடிக்கடி உணரப்பட்டது. இதைத் தொடர்ந்து 6 விஞ்ஞானிகளும் அரசு உயர் அதிகாரி ஒருவரும் கூடி விவாதித்தனர். ‘‘இதனால் பயமில்லை. பெரிய நிலநடுக்கம் வராது’’ என கூட்டம் முடிந்து அவர்கள் அறிவித்தனர். அடுத்த ஆறாவது நாள் பூகம்பம் வந்தது.
முறையாக மக்களை எச்சரிக்கும் கடமையைச் செய்யத் தவறியதற்காக இப்போது வழக்கு போடப்பட்டுள்ளது. 68 மில்லியன் டாலர் நஷ்டஈடும் கேட்கிறார்கள். ‘‘அறிவியலை சட்டத்தின் முன்னால் நிறுத்த முடியாது. இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாது’’ என எச்சரிக்கிறார்கள் மூத்த விஞ்ஞானிகள் பலரும். என்ன ஆகப் போகிறதோ?
அசிங்க காமெடி!
‘அரசாங்க டி.வி.யில் இப்படியெல்லாமா செய்வார்கள்’ என அதிர்ச்சியில் உறைந்து கிடக்கிறார்கள் ஆஸ்தி ரேலியர்கள். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனற வித்தியாசம் இல்லாமல் அரசியல்வாதிகள் கொந்த ளிக்கிறார்கள்.
ஆஸ்திரேலியா வை இப்போது ஆள்வது, பெண் பிரதமர் ஜூலியா கில்லார்டு. திருமணம் ஆகாத இவருக்கு டிம் மேத்திசன் என்ற துணைவர் இருக்கிறார். இருவரும் சீக்கிரமே திருமணம் செய்துகொள்வது தொடர்பான பேச்சில் இருக்கிறார்கள். பிரதமர் அரசுமுறைப் பயணமாக எங்கு சென்றாலும், டிம் கூடப் போகிறார்.
ஆஸ்திரேலிய அரசு சேனலான ஏபிசி டி.வியில் ஒரு காமெடி புரோக்ராம். ஜூலியா போன்ற தோற்றமுள்ள ஒரு பெண் பிரதமர், தனது பிரதமர் அலுவலக அறையில் வெறுந்தரையிலேயே துணைவரோடு உறவுகொண்டுவிட்டு, ஆஸ்திரேலிய தேசியக் கொடியை உடம்பில் போர்த்திக்கொண்டு இருக்கிறார். கொடியைத் தவிர உடலில் வேறு ஆடைகள் இல்லை.
இதைப் பார்த்து கடுப்பான எம்.பிக்கள் பலரும், ‘‘தேசியக்கொடியை அவமதிக்கும் இதுபோன்ற மட்டமான காமெடி நிகழ்ச்சிகளை நடத்தும் டி.விக்கு மக்கள் வரிப்பணத்தை செலவிடுவதை நிறுத்த வேண்டும்’’ என பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். டி.வி நிர்வாகமோ, ‘‘பலரும் கொடியைப் போர்த்திக்கொண்டு போஸ் கொடுப்பது சாதாரணமாகிவிட்டது. ஒரு அன்பான சூழலில் பிரதமர் இதைப் போர்த்தியிருப்பதில் என்ன தப்பு?’’ எனக் கேட்கிறது.