வழக்கமான கதையாக எதிரியை வெல்லாமல் பாசத்தை வெல்லும் இளைஞனின் கதை. அதற்குள் மாயப்பந்தாக காதலை வைத்து இளமை ஆட்டம் ஆடியிருக்கிறார் இயக்குநர் கண்ணன்.
மும்பையில் பணத்துக்காக எதையும் செய்யும் அண்டர்கிரவுண்ட் டானாக இருக்கும் நந்தாவிடம் ஒரு அசைன்மென்ட்டோடு வருகிறார் ஹீரோ ஜீவா. தான் காதலிக்கும் தப்ஸியை சேர்த்துவைக்க உதவுமாறு கேட்கும் ஜீவா தன் காதல் கதையைச் சொல்ல, முடிவில் நந்தாவுக்கே ஒரு ஷாக் இருக்க, அந்த அசைன்மென்ட்டை அவர் ஏற்றுக்கொண்டாரா, இல்லையா என்று போகிறது திரைக்கதை.
ஹீரோ என்பதற்கான தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் இன்றி கதைக்கான நாயகனாக மட்டும் நடித்திருக்கும் ஜீவாவின் துணிவு பாராட்டத்தக்கது. கிளைமாக்ஸ் தவிர்த்த பிற சண்டைகளை நந்தாவே ஏற்க, பாசப்போராட்டத்தை மட்டும் மேற்கொண்டிருப்பதில் ஜீவாவைப் பாராட்டலாம். தப்ஸியின் காதலைப்பெற பொய்சொல்லி தன்னுடனேயே அவரைப் பயணத்தில் அழைத்துச் சென்றாலும், அதை மறைக்காமல் சொல்லிவிடும் நேர்மை நிறைவானது. தாமரைப்பூ மடியில் விழுந்ததைப் போல் தப்ஸி மடியில் அமர, பெருமையுடன் பூரிப்பதிலும் ஜீவா மிளிர்கிறார்.

காதலை மட்டும் கழித்துவிட்டால் ஜீவாவைவிட சில அங்குலங்கள் விரிந்த பரப்புடையது நந்தாவுக்கான பாத்திரம். இறுக்கமான முகமும், இரும்பான இதயமுமாக வரும் அவர் தனக்குப் பிடிக்காத விஷயத்தைச் சொல்வது தன் ஆட்களே ஆனாலும் அவர்களை எதிரி முகாமில் இறக்கிவிட்டு வரும் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார்.
ஒருபக்கமாகக் குழையும் அழகோடு சிரிக்கும் தப்ஸிக்கு ஆடவும், பாடவும் வாய்ப்புள்ள பாத்திரம். ஐந்து நிமிடத்தில் தன் வாழ்க்கையில் ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டிய ஜீவாவுக்காக ஒரு பெண் அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சும் அழகில் ‘டாப்’ஸி. எங்கிருந்து வருகிறார், எங்கே போகிறார் என்றே தெரியாமல் வரும் அவரது கேரக்டரின் லாஜிக் கடைசியில் புரிந்துவிடுகிறது. ஓரிரு காட்சிகளில் வந்தாலும் அழகம்பெருமாளும், மாளவிகா அவினாஷும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.
அசைன்மென்ட்டுக்கான பணத்தைக் கொடுக்கமுடியாமல், நந்தா கேங்கில் சமையல்காரராகும் சந்தானத்தின் நிலை பரிதாபம். அவரை நந்தாவின் பிடியிலிருந்து காப்பாற்றும் நோக்கில், ‘‘ரமணா (நந்தா) போய்ட்டான்னா நீ என்ன பண்ணுவே..?’’ எனும் ஜீவாவின் கேள்வியைப் புரிந்துகொள்ளாமல், ‘‘ஒரு ஆழாக்கு அரிசி கம்மியா வைப்பேன்...’’ என்கிற காமெடி சந்தானம் பிராண்டு. அவர் பேசும் புரோக்கன் இந்தியைக் கண்டு, ‘‘நீங்க தமிழ்தானே..?’’ என்று ஜீவா கண்டுபிடிக்கும் இடம் ரகளை.
இருந்தும் நந்தா, ஜீவாவின் சிறுவயது ஃபிளாஷ்பேக்கை முதலிலேயே சொல்லிவிடுவது படத்தின் சஸ்பென்ஸைக் குறைக்கிறது. காதலே கட்டுக்கதை எனும்போது அதில் லாஜிக்கெல்லாம் பார்க்காமல் இன்னும் கூட சுவாரஸ்யமாக சொல்லியிருக்க முடியும். வருடங்கள் கடந்தும் அதே வன்மத்துடன் நந்தா இருப்பதிலும், அப்படி கல்மனதுடன் இருப்பவரை ஜீவா கரைக்க நினைப்பதிலும் வலு இல்லை.
எஸ்.தமனின் இசையில் ‘அஞ்சனா’, ‘காஞ்சனமாலா’ பாடல்கள் தியேட்டரை விட்டு வெளியேறியபோதும் காதுகளில் ஒலிக்கின்றன. பி.ஜி.முத்தையாவின் வண்ணமிகு ஒளிப்பதிவில் ஏகப்பட்ட இந்திய லொகேஷன்களுக்கு நம்மை சுற்றுலா அழைத்துச் சென்றிருக்கிறார் இயக்குநர்.
வந்தான் வென்றான் - அன்பால் நின்றான்..!
குங்குமம் விமர்சனக்குழு