அடடா நீ அழகா...
கேட்க வைக்கிறார் பிரகதி குரு!
அடடா நீ அழகா ஆசையா உறங்கும் நான் வரவா கனவா ? இது நிஜமா? காதலா எனையே நான் தரவா..?
- இப்படி ஒரு பெண்ணின் மென்மையான காதல் வரிகள், மெலோடியான இசை, சென்னையின் தெரிந்த கிளாசிக் பகுதிகளில் ஓர் இளம் ஆண், பெண்ணின் சந்திப்பு, அதைச் சார்ந்த காட்சிகள் என நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு மென்மையான தனியிசை பாடல் மில்லியன்களைக் கடந்து டிரெண்டாகியிருக்கிறது.  இப்போதும் டிஜிட்டல் உலகத்தில் பீட்டான, இளைஞர்களை இழுக்கக்கூடிய வார்த்தைப் பிரயோகங்கள் மட்டுமே உடனடி டிரெண்டிங்கை சந்திக்கும். ஆனால், பிரகதி குரு இசை மற்றும் குரலில், பிஏ ஹரிஹரன் வரிகளில் ‘அடடா நீ அழகா...’ என்னும் பாடல் வெளியாகி நான்கு நாட்களில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து டிரெண்டிங்கில் உள்ளது.  ‘‘நல்லா இருக்கா பாட்டு..? எனக்கு நெருக்கமான மற்றும் பிடிச்ச சென்னையை இன்னும் அழகா காட்ட நினைச்சேன். அப்படி உருவானதுதான் இந்தப் பாடல்...’’ முகம் நிறைய புன்னகை மின்ன, வசீகரிக்கும் சுருள் முடியை சற்றே வருடியபடி பேசத் துவங்கினார் பிரகதி குரு. சிங்கப்பூர் மற்றும் கலிபோர்னியா என உங்கள் வாழ்விடங்களிலேயே இந்தப் பாடலை உருவாக்காமல் ஏன் சென்னை பின்னணியில் உருவாக்கி இருக்கீங்க?

ரொம்ப நாட்களுக்கு முன்னாடியே இந்தப் பாடல் மேக்கிங் முடிச்சிட்டோம். வைரல் சவுத் டீம் உள்ளே வந்ததும் பாடல் இன்னும் பிரம்மாண்டமா மாறிடுச்சு. ஒரு பொண் ணு... அவளுடைய முதல் காதல், அந்தச் சந்திப்பு எப்படி இயல்பா நடக்கும், ஒரு பொண்ணுக்கு பிடிச்சா எந்த மெனக்கெடலும் தேவையே கிடையாது.
அழகா இயல்பா அந்தச் சந்திப்பு நட்பாகவும் காதலாகவும் மாற ஆரம்பிச்சுடும். இந்த ஓர் அடிப்படை விஷயத்தை மையமாக வைத்துதான் இந்தப் பாடல். அதில் சென்னையின் அழகு... இப்படி யோசிச்சு உருவானதுதான் இந்த பாட்டு. அஸ்வின் எப்படி இந்த பாடலுக்குள் வந்தார்?
இந்தப் பாடல் உருவாக்கத்தில் கடைசியாக வந்து சேர்ந்தவர்தான் அஸ்வின். நானும் அஸ்வினும் 2018ல் இருந்து பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ். ஆனாலும் ஒருநாளும் ப்ரொஃபஷனலா பேசியதே கிடையாது.எப்பவுமே ஜாலியா சாப்பிட, ஃபிரண்ட்ஸ் கேங்கா சேர்ந்து வெளியே போக, சினிமா... இப்படித்தான் இருப்போம். இந்தப் பாட்டு எல்லாம் முடிஞ்சு யார் மெயின் மேல் (ஆண்) லீட் கேரக்டர் என்கிற பேச்சு வரும்போதுதான் அஸ்வின் பெயர் யோசிச்சோம்.
இந்த ப்ராஜெக்டுக்காகவே பெரும்பாலும் பெண்களாக வேலை செய்திருப்போம். இயக்குநர் ரஞ்சினி ரமேஷ், காஸ்ட்யூம்ஸ் காஷ்வி. அசிஸ்டெண்ட் டைரக்டர் எல்லோருமே பெண்கள். இந்தப் பாடலுக்கு குரல் மற்றும் பின்னணி இசை நான்தான்.
‘பரதேசி’ படம் துவங்கி நிறைய பாடல்கள் பாடியிருக்கீங்க... ஏன் அதில் அதிகம் பிரேக் எடுத்துக்கிறீங்க?
ரியாலிட்டி நிகழ்ச்சிக்குப் பிறகு நிறைய பாடுகிற வாய்ப்பு வந்துச்சு. ஆனால், தொடர்ந்து சிங்கப்பூர் வாழ்க்கை, பிறகு குடும்பமா கலிபோர்னியாவுக்கு மாற்றல் ஆகிட்டோம். அங்கிருந்து இங்கே பாடுவதில் நிறைய நடைமுறை சிக்கல் இருந்துச்சு. அதனால எனக்கு வந்த நிறைய வாய்ப்புகளையும் தவற விட்டுட்டேன். ‘பரதேசி’ படத்தில் ஆரம்பிச்ச இசைப்பயணம், இடையில் வயசு ரொம்ப கம்மி என்கிறதாலேயே தனியாகவும் பயணம் செய்து இங்கே வர முடியல.
இப்போ கொஞ்சம் வீட்டில் தைரியமா நாடு விட்டு நாடு போக அனுமதி கொடுக்குறாங்க. கலிபோர்னியாவில் நான் லா (சட்டம்) படிச்சிருக்கேன். எதுவுமே நான் திட்டமிடலை. மேலும் வீட்டிலும் எல்லோருமே ரொம்ப சாதாரணமா சங்கீதம் கத்துக்குவாங்க. ஆனால், அதை ப்ரொஃபஷனலா எடுத்துக்க மாட்டாங்க.
அப்பாதான் என்னுடைய முதல் குரு. அஞ்சு வயதில் இருந்து மியூசிக் பயிற்சி எடுக்கறேன். தொடர்ந்து சங்கீதம் சுவாமிநாதன் குருகிட்ட மேற்கொண்டு இசைப் பயிற்சி. ரியாலிட்டி ஷோ... அடுத்து சினிமாவில் பாட வாய்ப்பாக ‘பரதேசி’, ‘வணக்கம் சென்னை’, ‘காதலும் கடந்து போகும்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘ராட்சசன்’ உள்ளிட்ட 10க்கும் மேலான படங்களில் 20க்கும் மேற்பட்ட பாடல்கள். இதற்கிடையில் படிப்பு காரணமாக நான் பிரேக் எடுத்தேன். தொடர்ந்து கொரோனா என்னை பிரேக் எடுக்க வெச்சது. இப்போ தனி இசைப் பாடல். அப்புறம் கொரோனா காலத்திலேயே எடுக்கப்பட்ட நிறைய பாடல்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகப்போகுது.‘Never have I ever’ வெப் தொடரில் ஒரு சின்ன ரோல்ல நடிச்சிருந்தீங்களே... தொடர்ந்து நடிப்பில் அடுத்து என்ன திட்டம்?
இயக்குநர் பாலா சாருடைய ‘தாரை தப்பட்டை’ படத்திலேயே ஒரு ரோல் நடிக்க வேண்டியிருந்தது. படிப்பு காரணமா நடிக்கலை. அடுத்ததாக அவருடைய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருந்தேன். ஒரு சில காரணங்களால் அந்தப் படம் ஆரம்பிக்கப்படலை. இப்போ அமெரிக்காவில் ஒருசில ப்ராஜெக்ட்சில் ஒப்பந்தமாகி இருக்கேன். ஆனால், இப்போதைக்கு எதுவுமே சொல்ல முடியாத சூழல்.
அப்பா, அம்மா ரெண்டு பேருமே நான் என்ன செய்தாலும் அதற்கு முழு சப்போர்ட் கொடுப்பாங்க. அந்த சப்போர்ட் காரணமாதான் தொடர்ந்து முன்னேறி போயிட்டு இருக்கேன். இயக்குநராகும் எண்ணமும் இருக்கு.
செய்தி: ஷாலினி நியூட்டன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|