துன்பம் வரும் நேரத்திலும் சிரிக்கும் ஃபேமிலி!



இயக்குநராகவும் நடிகராகவும் பேர் வாங்கியவர் சசிகுமார். இவர் பேசியதைவிட இவர் படங்கள் பேசியது அதிகம். இவருடைய கதைத் தேர்வு, படம் பேசப்படுவதற்கு அச்சாரமாக அமைந்துவிடும்.
இவருடைய ‘சுப்ரமணியபுரம்’, ‘நாடோடிகள்’, ‘அயோத்தி, ‘கருடன்’, ‘நந்தன்’ உட்பட ஏராளமான படங்கள் ரசிகர்களிடையே பேசப்பட்டது. அந்த வரிசையில் இவர் நடித்து வெளியாகவுள்ள படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்  இயக்கியுள்ளார். இதன் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இயக்குநர் அபிஷனிடம் பேசினோம்.

இது புலம் பெயர்ந்த தமிழர்களின் கதையா?

எனக்கு  ஃபேமிலி டிராமா படங்கள் பிடிக்கும். அந்த வகையில் கமல் சார் நடித்த ‘தெனாலி’ என்னுடைய ஃபேவரைட். அதற்குக் காரணம் கமல் சார் மனசுக்குள் வேதனை இருந்தாலும் மகிழ்ச்சியை நோக்கி பயணம் செய்திருப்பார்.தமிழ் சினிமாவில் இலங்கைத் தமிழர்களை மையமாக வைத்து வெளியான படங்கள் மிகக்குறைவு. அப்படி சில படங்கள் வெளிவந்திருந்தாலும் அது அரசியல் சார்ந்த படங்களாக இருக்கும்.

இதில் எந்த அரசியலையும் நாங்கள் பேசவில்லை. கோவிட் சமயத்தில் உலகமெங்கும் பொருளாதார ரீதியில் பல மாற்றங்கள் நடந்தது. இலங்கையிலும் கோவிட் வந்த பிறகு பொருளாதார ரீதியாக பல நெருக்கடிகள் ஏற்பட்டன. அந்த அசாதாரண சூழ்நிலையில் நாட்டை விட்டு வெளியேறும் ஒரு சாதாரண குடும்பத்தைப் பற்றிய கதை இது.  
படத்தின் மையக் கருத்து திரைக்கதைக்கு ஏற்ப மட்டுமே இருக்கும்.

முடிந்தளவுக்கு அரசியல் பேசுவதைத் தவிர்த்து உள்ளோம். ஃபேமிலி என்று வரும்போது உறவுகளுக்கிடையே உள்ள சிக்கல்கள், அன்பு, பாசம், நேசம், பிரிவு போன்ற அம்சங்கள் இருக்கும். அந்த உள் உணர்வுகளைத் தாங்கிப்பிடிக்கும் கதை மாந்தர்களின் உணர்வுபூர்வமான வெளிப்பாடு உண்மைக்கு நெருக்கமாக இருக்கும்.

இதில் நாங்கள் சொல்ல முயற்சித்துள்ள உணர்வுகள் உலகம் முழுவதுக்குமானது. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அனைத்து  ரசிகர்களையும் நெகிழச் செய்யும். அந்த நெகிழ்ச்சி வேதனைக்காக  அல்லாமல், மகிழ்ச்சிக்கானதாக  இருக்கும்.அந்தவகையில் இது மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படமாகவும் இருக்கும்.

அப்பா கேரக்டரில் நடிக்க கேட்டபோது சசிகுமார் ரியாக்‌ஷன் எப்படி இருந்தது?

இந்தக் கதைக்கு சசிகுமார் சாரிடம் நாங்கள் போவதற்கு காரணம் அவரை நாம் பல படங்களில் கிராமப்புற பின்னணியில் பார்த்திருப்போம். இந்த மாதிரி வேடம் அவருக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும் புது அனுபவமாக இருக்கும் என்று உறுதியாக நம்பினோம்.சசிகுமார் சார் முழுக் கதையைக் கேட்டதும் 16 வயது பையனுக்கு அப்பாவாக நடிக்க வேண்டிய அவசியத்தைப் புரிந்துகொண்டார். 

கதை சொல்லும்போதே அவருக்கு இந்தப் படத்தில் நடிக்க விருப்பம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தளவுக்கு ஆர்வத்துடன் கதை கேட்டதோடு நல்ல சினிமாவுக்கு கதைதான் முக்கியம் என்பதை அவருடைய ஒப்புதல் மூலம் உறுதிப்படுத்தினார்.

சிம்ரன் மேடம் கதை தேர்வு எப்படியிருக்கும் என்று தெரியும். சமீபத்தில் வெளிவந்த படத்திலும் மிரட்டியிருந்தார். அவரிடம் கதை சொல்லும்போது பொறுமையாகக் கேட்டு, உடனே ஓகே சொன்னார்.சசிகுமார் சார், சிமரன் மேடம் இருவருடைய அனுபவ நடிப்பு கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்க்குமளவுக்கு கச்சிதமாக இருந்தது.சிம்ரன் மேடம் ஏராளமான படங்களில்,பெரிய நடிகர்கள், பெரிய இயக்குநர்களின் படங்களில் நடித்தவர். ஆனாலும் இப்போதும் அதே எனர்ஜியை அவரிடம் பார்க்க முடிந்தது.

சசிகுமார் சார் இயக்குநராகவும், நடிகராகவும் பேர் வாங்கியவர். அந்தப் பெருமையை எந்த இடத்திலும் பார்க்க முடியாது. கேரக்டருக்கு என்ன தேவையோ அதைக் கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்தார். கதை கேட்டு ஓகே சொன்ன நாள் முதல் இந்நாள் வரை அவர் காண்பிக்கும் ஆர்வமும், உற்சாகமும் அவர்  சினிமாவை எப்படி நேசிக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது.

அந்த வகையில் சசிகுமார் சார், சிம்ரன் மேடம் ஆகிய இருவரும் சேர்ந்து நடித்திருப்பது படத்துக்கான முக்கியத்துவத்தையும், எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியுள்ளது.மகன்களாக ‘ஆவேசம்’ மிதுன், கமலேஷ் நடித்துள்ளார்கள். இவர்களுடன் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர், குமரவேல், பக்ஸ், ரமேஷ் திலக் என அனுபவ நடிகர்கள் இருக்கிறார்கள்.

பாடல்கள் எப்படி வந்துள்ளன?

ஷான் ரோல்டன் இசை எனக்குப் பிடிக்கும். அவருடைய ஸ்பெஷல் பாடல்கள் கதையோடு கலந்திருக்கும். அத்துடன் பாடல்களையும் ஹிட்டாக் கிவிடுவார். அந்த மேஜிக் இதில் நடந்துள்ளது. 

பாடல்களை மோகன்ராஜன் எழுதியுள்ளார். ஒவ்வொரு வார்த்தையும் கதாபாத்திரங்களின் மனதை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கும்.அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். டெக்னிக்கலாகவும், கதைக்காகவும் அதிகம் உழைத்துள்ளார்.

‘குட்நைட்’, ‘லவ்வர்’ போன்ற ஹிட் படங்களைத் தயாரித்த யுவராஜ் கணேசன், எம்.ஆர்.பி. என்டர்டெயின்மென்ட் மகேஷ்ராஜ் சேர்ந்து தயாரித்துள்ளார்கள்.புலம் பெயர்ந்த தமிழர்களின் கதை என்றால் அவர்களின் வலி நிறைந்த வாழ்க்கையை சொல்லும் படங்களுக்கு மத்தியில் சூழ்நிலையை குற்றவாளியாக பார்க்காமல் தங்கள் வேதனையையும், வலியையும் தாங்கிக்கொண்டு முடிந்தளவுக்கு சந்தோஷமாக வாழும் இந்த ஃபேமிலியோட கதை ரசிகர்களின் மனதைத் தொடும்!

எஸ்.ராஜா