ஒலிம்பிக்ல தமிழ்நாடு கோல்டுமெடல் வாங்கணும்!



சொல்கிறார் மாநில அரசுடன் கைகோர்த்திருக்கும் பயிற்சியாளர் சரத் கமல்

இந்தியாவில் ஒவ்வொரு விளையாட்டிலும் ஏதாவது ஒரு வீரர் அந்த விளையாட்டிற்கான முகமாக ஜொலிப்பார். அந்தவகையில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் உலக அரங்கில் இந்தியாவின் முகமாக பிரகாசித்தவர் சரத் கமல்.
ஐந்து முறை ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்று விளையாடியவர். காமன்வெல்த்தில் மட்டும் 13 பதக்கங்கள் இந்தியாவிற்காக வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றிலும் பதக்கங்களை வென்றவர்.  

சமீபத்தில் அவர் டேபிள் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் உள்ள டேபிள் டென்னிஸ் அகாடமியில், அடுத்த தலைமுறையினரை உருவாக்கும் தீவிர முயற்சியில் பயிற்சியாளராக களம் இறங்கியிருந்தவரைச் சந்தித்தோம்.

திடீரென ஓய்வு பெற்றது ஏன்?

இது திடீர் முடிவல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே யோசிச்சு எடுத்ததுதான். பொதுவாக விளையாட்டுல 36, 37 வயசுதான் ஓய்வுக்கான வயசாக இருக்கு. அப்படி பார்க்கிறப்ப நான் ஓய்வு வயதை எப்பவோ தாண்டிட்டேன்.
நான் உடலை நல்லா ஃபிட்டாகவே வச்சிருந்தேன். அதனால்தான் பாரிஸ் ஒலிம்பிக் வரை என்னால் விளையாட முடிஞ்சது.முக்கியமாக 2022ம் ஆண்டு பர்மிங்ஹாமில் நடந்த காமன்வெல்த்தில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி ஜெயிச்சேன். அப்ப என் வயசு 40. இந்தப் போட்டிகள் காலை, மாலைனு நடக்கும்.

ஒவ்வொரு செஷனிலும் சிங்கிள்ஸ், டபுள்ஸ், மிக்ஸ்டு டபுள்ஸ்னு மூணு மூணு மேட்ச்கள் ஆடுவேன். மொத்தமாக உள்ள ஆறு மணி நேரத்தில் ஐந்து மணி நேரம் நான் களத்தில் இருந்தேன். 
தொடர்ந்து ஐந்து நாட்கள் இப்படி விளையாடித்தான் நான்கு பதக்கங்கள் வாங்கினேன். இதெல்லாம் ஃபிட்னஸ் இருந்ததால்தான் முடிந்தது. உண்மையில் 2021ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு போனபோதே எப்ப ஓய்வுபெறலாம்னு ஒரு யோசனை வந்தது.

டோக்கியோவிற்குப் பிறகு ஒரு ஆண்டுதானே காமன்வெல்த் விளையாட்டு. அத்துடன் முடிச்சுக்கலாம்னு நினைச்சேன். அப்புறம், அடுத்த ஆண்டு ஆசிய விளையாட்டு வந்தது. இதற்கு அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸ் வந்திடுச்சு. 

இப்படியே ஒவ்வொரு ஆண்டும் தள்ளித்தள்ளி போயிடுச்சு. அதனால், இப்ப ஒரு வீரராக என்னால் என்ன செய்யமுடியுமோ அதை செய்திட்டேன்னு மனதிருப்தி வந்தது. இந்தியாவுக்காக நான் முதல் உலக சாம்பியன்ஷிப் விளையாட போனப்ப டேபிள் டென்னிஸில் இந்தியாவின் உலகத் தர வரிசை 36.

அங்கிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாடி 8வது இடத்திற்கு வந்தோம். இப்ப நாம் 10, 11ல் இருக்கோம். அவ்வளவு தூரம் டேபிள் டென்னிஸை எல்லோருமாகக் கொண்டு வந்தோம்.
அடுத்த ஒலிம்பிக்கில் என்னால் மெடல் ஜெயிக்கமுடியுமா என்கிற கேள்விக்கு என்னிடம் தெளிவான பதிலும் இல்ல. 

அதனால், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்பு இதுவே கடைசினு முடிவெடுத்திட்டேன். இன்னொரு ஒலிம்பிக் என்றால் 46 வயசாகிடும். அந்த நேரம் கண்டிப்பாக முடியாது.

ஆனால், இப்போதிலிருந்து ஒரு பயிற்சியாளராக ஆரம்பிச்சால் இன்னும் எட்டு அல்லது 12 ஆண்டுகளில் டேபிள் டென்னிஸுக்கு ஒரு ஒலிம்பிக் மெடல் பெற்றுத் தருபவரை உருவாக்கமுடியும்.

இந்நிலையில் சென்னையில் டபிள்யு.டி.டி டோர்னமென்ட் வந்தது. சென்னையில்தான் நான் டேபிள் டென்னிஸ் பயணத்தை ஆரம்பிச்சேன். அதனை இங்கேயே முடிப்போம்னு ஓய்வை அறிவிச்சேன்.  

உங்கள் டேபிள் டென்னிஸ் பயணம் எப்படி ஆரம்பித்தது?

என் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஆந்திராவைச் சேர்ந்தவங்க. நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை. அப்பா ஸ்ரீனிவாச ராவ் டேபிள் டென்னிஸ் ப்ளேயர். அம்மா பெயர் அன்னபூர்ணா. அப்பா ஆந்திர மாநிலத்திற்காக ஆடியவர். அதனால், அவருக்கு சென்னை வருமானவரித் துறையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை கிடைச்சது. சித்தப்பாவும் டேபிள் டென்னிஸ் ப்ளேயர்தான்.

பிறகு, அப்பா பயிற்சியாளருக்குப் படிச்சிட்டு வந்து கோச்சிங் பண்ணினார். நான் பிறக்கிறதுக்கு முன்பிருந்தே அவர் பயிற்சியாளராக இருக்கார். எனக்கு நான்கு வயசு இருக்கும்போதே அவர் என்னை கோச்சிங் கிளப்பிற்கு அழைச்சிட்டு போனார்.  

ஆனால், டேபிள் டென்னிஸில் எனக்கென தனிப்பட்ட ஆர்வம் வந்தது 12 வயசுலதான். பிறகு, பத்தாம் வகுப்பு முடிக்கும்போது படிப்பா, விளையாட்டானு முடிவெடுக்க வேண்டிய நிலை. அப்பாவுக்கு விளையாட்டுல நான் ஜொலிக்கணும்னு ஆசை. அம்மாவுக்கோ நான் படிக்கணும்.

ஆனா, முடிவை என்கிட்ட ஒப்படைச்சாங்க. நான் விளையாட்டு பக்கம் முடிவெடுத்தேன். பிறகு காமர்ஸ் படிச்சேன். அப்புறம், லயோலாவுல பி.காம் சேர்ந்தேன். என் தம்பி ரஜத் கமலும் டேபிள் டென்னிஸில் ஜொலித்தார். 

என்னையும் தம்பியையும் தேசிய அளவில் கொண்டு போகணும்னு அப்பா நினைச்சார். ஆனால், அவரால் செலவை சமாளிக்கமுடியல.அதனால், எனக்கு ரயில்வேயில் வாய்ப்பு வந்ததும் வேலைக்குச் சேர்ந்தேன். 

அங்கே இரண்டு ஆண்டுகள் இருந்தேன். இதற்கிடையில், 11ம் வகுப்பு முதல் காலேஜ் முடிக்கிற வரை அந்த ஐந்து ஆண்டுகள்ல மாநில அளவுல நம்பர் ஒன்னாக வந்திட்டு இருந்தேன். ஆனா, தேசிய அளவுல வரமுடியல.

அதனால், டேபிள் டென்னிஸ் விளையாடணுமா... இல்ல படிப்பு பக்கம் போயிடலாமானு சந்தேகமாக இருந்தது. அந்த நேரத்தில் என் மேல் ரொம்ப நம்பிக்கை வச்சது என் பயிற்சியாளர்களும் என்கூட விளையாடுகிற பசங்களும்தான். 2002ம் ஆண்டில் தேசிய அளவிலான கேம்பில் என்னை கூப்பிட்டாங்க. 16 மெம்பர் கேம்ப்ல நான் 15வது உறுப்பினராக உள்ளே போனேன். அப்ப எனக்கு 20 வயசு.

அங்க இந்தியா நம்பர் ஒன் வீரர்களுடன் பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன். அந்த எக்ஸ்போஸர், நிறைய நம்பிக்கையைக் கொடுத்தது. அந்த ஆண்டு கடைசியில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு வந்து தோற்றேன். 2004ம் ஆண்டு காமன்வெல்த் சாம்பியன்ஷிப் வெற்றி, ஏதென்ஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி என எல்லாமும் சிறப்பாக நடந்தது இல்லையா?

ஆமாம். 2003ல் முதல்முறையாக நான் தேசிய சாம்பியன் ஆனேன். 2004ல் டேபிள் டென்னிஸிற்கான காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. மலேசியாவில் நடந்த அந்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று காமன்வெல்த் சாம்பியன்ஷிப் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றேன்.

அது முடிஞ்சதும் ஏதென்ஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்று கலந்துக்கிட்டேன். எல்லாமே எட்டு மாதங்களில் அடுத்தடுத்து நடந்தன. இதற்கிடையில் இந்தியன் ஆயில்ல வேலை கிடைச்சது.
அப்புறம், 2004ம் ஆண்டிற்கான அர்ஜுனா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். இதனை 2005ம் ஆண்டு என் அம்மா அப்போதைய ஜனாதிபதி அப்துல் கலாம் சார் கையால் வாங்கினாங்க. அப்ப நான் ஆசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியில் இருந்தேன்.

2006ம் ஆண்டு மெல்போர்ன் காமன்வெல்த் விளையாட்டில் நாங்க டீம் பிரிவில் சிங்கப்பூரை வென்று டேபிள் டென்னிஸில் முதல் தங்கப் பதக்கம் வாங்கினோம். காமன்வெல்த்தில் டேபிள் டென்னிஸ் போட்டியில் வாங்கின முதல் தங்கம் அது. 

அப்புறம், தனிநபர் பிரிவுலயும் நான் இறுதிப்போட்டிக்கு வந்தேன். அப்ப இந்தியாவிலிருந்து காமன்வெல்த் போட்டிகளுக்கு வந்த அத்தனை வீரர், வீராங்கனைகளும் போட்டியைப் பார்க்க வந்தாங்க. என்னை உற்சாகப்படுத்தினாங்க. அதில் ஜெயிச்சேன்.

அப்போதான் சரத் கமல்னு ஒரு பையன் டேபிள் டென்னிஸில் இருக்கான்னு தெரிய ஆரம்பிச்சது. அதன்பிறகு நான் ஐரோப்பா போயிட்டேன். காரணம் அங்க வாரம்தோறும் போட்டிகள் நடக்கும்.

வெவ்வேறு ப்ளேயர்ஸ் உடன் விளையாடுகிற வாய்ப்பு இருக்கும். ஸ்பெயின்ல 4 ஆண்டுகளும், ஜெர்மனியில் பத்து ஆண்டுகளுமாக 14 ஆண்டுகள் அங்க இருந்தேன். ஆண்டுக்கு பத்து மாதங்கள் அங்கதான். அங்க இங்கிலீஷ் பிரிமியர் லீக் மாதிரி, டேபிள் டென்னிஸ் லீக் இருக்கும்.

அப்ப எல்லாம் நம் வீரர்கள் நான்கு முதல் ஆறு டோர்னமென்ட்தான் விளையாடுவோம். ஆனா, சர்வதேச வீரர்கள் பத்து பதினைந்து டோர்னமென்ட் ஆடுவாங்க. ஏன்னா, ஐரோப்பாவில் இருக்காங்க. ஐரோப்பாவில் என்ன சிறப்புனா பக்கத்து நாடுகள்ல நடந்தால்கூட ரயில்லயோ, கார்லயோ போயிடுவாங்க. அதனால்தான் நான் அங்கே தங்கினேன். 2010 வரைக்கும் என் பெர்ஃபாமன்ஸ் பீக்ல இருந்தது. அப்புறம், ஒரு இறக்கம் வந்தது. தகுதிச் சுற்றில்கூட தோற்றேன்.

அதனால், 2012ம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கிற்கு நான் தகுதி பெறல. பிறகு இன்னும் சிறப்பாக பயிற்சியெடுத்தேன். 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்ஸ்ல கலந்துகிட்டேன். 2021ம் ஆண்டு டோக்கியோ, 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் வரை விளையாடினேன். உண்மையில் நான் ஆறு ஒலிம்பிக்ஸ் ஆடியிருக்கணும். 

ஆனா, ஐந்துதான் ஆடினேன். விளையாட்டில் ஏற்ற, இறக்கம் எப்போதும் வரும். நான் ஆரம்பிக்கும்போது உலகத் தரவரிசையில் 320வது இடத்தில் இருந்தேன். அங்கிருந்து முன்னேறி 30வது இடத்திற்கு வந்தேன்.

இன்னைக்கு இளம் தலைமுறையினர் இன்னும் சிறப்பாக வர்றாங்க. மணிகா பத்ரா டாப் 24ல் வந்தாங்க. என்னுடைய டைம்ல என்னால் இவ்வளவு தூரமே வரமுடிஞ்சது. அதுவே மகிழ்ச்சிதான்.  

உங்கள் குடும்பம் பற்றி?

என் மனைவி ஸ்ரீபூரணி. திருமணத்திற்குப் பிறகு வேலையை விட்டுட்டு எனக்கு சப்போர்ட்டாக என்னுடனே டிராவல் பண்ணினாங்க. எங்களுக்கு ரெண்டு பசங்க. பொண்ணு சுயாஹ்சா. 14 வயசாகுது. பையன் தேஜஸுக்கு 7 வயசு. பொண்ணுக்கு டேபிள் டென்னிஸ்ல ஆர்வமில்ல. பையன் ஆர்வமாக இருக்கான்.

அடுத்து என்ன?  

இப்ப நம் மாநில அரசுடன் இணைந்து உயர் செயல்திறன் மையம் ஆரம்பிக்கப் போறோம். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம் வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் இருக்கு. 

அங்கே இந்த மையத்தை ஜூன் அல்லது ஜூலையில் ஆரம்பிச்சிடுவோம். தமிழ்நாட்டுல இருந்து டேபிள் டென்னிஸில் ஒரு ஒலிம்பிக் கோல்டு மெடல் வெல்லவைப்பதே என் இலக்கு.  

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்