ஓய்வு பெற்றபிறகு ஒன்றாக வாழ இந்த நகரத்தையே நண்பர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்!
நமக்கு பிடித்த நண்பர்கள், நெருங்கிய நண்பர்கள் எனில் அதிகபட்சம் என்ன செய்வோம்?
ஒன்றாக இணைந்து குடும்பமாக அத்தனை விழாக்களிலும் கலந்து கொள்வோம். குடும்பமாக சுற்றுலாக்கள் செல்வோம். ஒரே கல்லூரியில் அல்லது ஒரே அலுவலகத்தில் வேலைக்கு ஒன்றாக சேர்வோம். அதையும் தாண்டி பண உதவிகள் என நெருக்கடியான சூழலில் உற்ற துணையாக நிற்போம்.
 வாழ்நாளுக்கும் இணைந்து ஒரே இடத்தில் வீடு கட்டி வாழ வேண்டும் என நினைப்போமா?
ஆனால், டெக்சாஸ் மாநிலத்தில் ஒரு நண்பர்கள் குழு தங்களது ஓய்வு காலத்திற்குப் பிறகு ஒரே இடத்தில் ஒற்றுமையாக வாழ ஒரு சின்ன நகரத்தையே உருவாக்கியிருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறதா?!

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம், ஆஸ்டினின் லானோ நதிக்கரையில், சூரியன் முத்தமிடும் ஆற்றங்கரை. அழகிய தோட்டம். எங்கும் பூக்கள். சோலார் பேனல்கள், மழை நீர் சேமிப்புக் கலன்கள் உடன் சின்னதாக மிக எளிமையாக காட்சியளிக்கிறது அந்த நான்கு வீடுகள். இக்காலத்திலும் இப்படி ஒரு நட்பா எனும் ஆச்சரியத்தை உருவாக்கி நிற்கிறது அந்த வீடுகள்.  நண்பர்கள் எட்டு பேர் முறையே நான்கு தம்பதிகள் தங்களது ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கையை ஒன்றாக தன் நண்பர்களுடன் கழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இயற்கையான வீடுகளைக் கட்டியிருக்கிறார்கள். 
ஃபிரட்- ஜோடி ஸிப், டவுக் - கெரால் கல்லர், மேட் - சாரா கார்சியா, டேவிட் - பெக்கி மார்டின் ஆகிய நால்வரும் சிறுவயது முதலே ஒன்றாக சுற்றித் திரிந்த 20 வருடங்கள் கடந்த நண்பர்கள். தங்களது 30+ வயதுகளில் இருக்கும் இவர்கள் அனைவருமே வெவ்வேறு தொழில், வேலை என வாரந்தோறும் பரபரப்புடன் வேலை செய்வர்.
வார இறுதியானால் ஏதாவது ஓர் இடத்தில் அல்லது யாருடைய வீட்டிலாவது ஒன்றாக இணைந்து பேசி, மகிழ்ந்து நான்கு குடும்பமாக பொழுதைக் கழிக்கிறார்கள்.
அப்படியான ஒரு சந்திப்பில்தான் ஜாலியாக ‘வயதான பிறகும் நாம எல்லாரும் ஒண்ணா ஓர் இடத்தில் இருந்தால் எப்படி இருக்கும்’ எனக் கேட்க அந்த ஜாலி வார்த்தைகள் ஒவ்வொரு சந்திப்பிலும் உயிர் பெறத் துவங்கியிருக்கிறது.
இவர்கள் நால்வரில் மேட் மற்றும் சாரா கார்சியா கட்டடக் கலை நிபுணர்கள். இந்த ஆசையை ஒரு புராஜெக்டாகவே உருவாக்க ஆரம்பித்தனர்.
‘லானோ எக்ஸிட் ஸ்ட்ராட்டர்ஜி’, ‘பெஸ்டி ரோ’, ‘பிரண்ட்ஸ் பார்க்’ எனச் செல்லமாக அழைக்கப்படும் ஒரு சின்ன நகரத்தை நான்கு வீடுகளுடன் உருவாக்கினர்.
இதற்கு நால்வர் குடும்பமும் இணைந்து பணம் முதலீடு செய்தனர்.‘‘நாங்கள் உருவாக்கிய இந்த வீடுகள் இயற்கைக்கு நண்பனாகவும், எவ்வித செயற்கை மற்றும் கெமிக்கல் சார்ந்த கலவைகள் இல்லாத நிலையான ஆர்கானிக் வீடுகளாக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம்.
ஒவ்வொரு வீடும் 400 சதுர அடியில் பார்ப்பதற்கு எளிமையாக ஒரு சின்ன ஓட்டு வீடு போல் கட்டினோம். அதிலேயே சோலார் பேனல்கள் அமைத்து மின்சார வசதி, மேலே வண்ணத்துப்பூச்சி கூரை முறையில் மழை நீரை சேமிக்கும் வசதி, வீட்டைச் சுற்றி காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கள் தோட்டங்களை அமைத்தோம். மழை நீர் சேமிக்க ஒவ்வொரு வீட்டிலும் 5000 லிட்டர் கொள்ளளவில் தொட்டிகளும் உள்ளன. ஒளியை மீண்டும் பிரதிபலிக்கும் சுவர்கள், பெரிய ஜன்னல்கள் என நான்கு வீடுகளும் வெயில் மற்றும் குளிர் காலத்தில் சரியான அறை வெப்பநிலையை தாக்குப்பிடித்து நிற்கும் விதமாக கட்டியிருக்கிறோம்...’’ என தங்களது நண்பர்களுக்காக உருவாக்கிய இந்த வீடுகள் குறித்து சந்தோஷமாக பேசுகிறார்கள் மேட் மற்றும் சாரா கார்சியா.
ஒவ்வொரு வீடும் 40,000 டாலர் - அதாவது நம் இந்திய மதிப்பில் ரூபாய் 35 லட்சம். பெரிய டைனிங் ஏரியா, நான்கு குடும்பங்களும் ஒன்றாக இணைந்து பேசி மகிழ அதற்கென பொது தனி தோட்ட இருக்கைகள் கொண்ட பிரத்யேக இடம்... பார்பிக்யூ போன்றவை செய்து சாப்பிட்டு மகிழ தனி அமைப்புகள்... என ஒரு எளிமையான குடும்பம் வாழ்வதற்கு தேவையான அத்தனையும் இங்கே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
தற்சமயம் வாரம் முழுக்க வேலை பார்த்துவிட்டு வார இறுதிகளில் இந்த நான்கு குடும்பமும் தங்களது குழந்தைகளுடன் இங்கே பொழுதைக் கழிக்க வருகிறார்கள்.
தங்களது ஓய்வு காலத்திற்குப் பிறகு குடும்பமாக இங்கே செட்டிலாகும் மனநிலையில் இருக்கிறார்கள்.இவர்களின் இந்த பெஸ்டி ரோ வீடுகள் நகரம் முழுக்க பிரபலமாகி தற்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. சூழலுக்கு நண்பனாக இருக்கும் இந்தக் கட்டடக்கலையை நகரவாசிகளும் விரும்பத் துவங்கி இதற்கான பட்ஜெட்டையும் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது இந்த பெஸ்டி ரோ’ லானோ நதிக்கரையில் முக்கிய அம்சமாக கட்டடக்கலை தொழிலில் அதிகம் விரும்பப்படும் கான்செப்ட் ஆக மாறி இருக்கிறது. மேட் மற்றும் சாரா கார்சியா உள்ளிட்ட நான்கு தம்பதிகள் அடங்கிய நண்பர்கள் குழு இதனை தங்களது நட்பு அடிப்படையிலான தொழிலாகவே மாற்றி தங்களைப் போலவே நண்பர்களாக, உறவினர்களாக ஒன்றாக வசிக்க விரும்பும் மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும் திட்டமாக மாற்றியிருக்கிறார்கள்.
இவர்களின் நான்கு வீடுகளைச் சுற்றியும் கூட ஒருசில வீடுகள் இவர்கள் கட்டமைப்பில் உருவாகி வருகின்றன. இவர்களின் பெஸ்டி ரோ வீடுகள் மேல் ஆர்வம் கொண்டு இந்த நால்வர் நண்பர்கள் குழுவுக்கு அரசாங்க ரீதியாகவும் ஆதரவுகள் வழங்க முன்வந்திருக்கிறது டேக்ஸாட் அரசு.‘ஃப்ரெண்ட்ஷிப்தான் சொத்து நமக்கு...’ என வெறுமனே வார்த்தைகளில் இல்லாமல் சூழலுக்கு நண்பனான ஒரு மிகப்பெரிய சொத்தையேஉருவாக்கி இருக்கிறார்கள் இந்த நண்பர்கள்.
ஷாலினி நியூட்டன்
|