சன் பிக்சர்ஸ் + #AA22XA6 + LOLA VFX = மெகா மகா பிரம்மாண்டம்!



‘#AA22 XA6’... இந்திய டிரெண்ட் மட்டும் அல்ல உலக டிரெண்டே இதுதான். இந்த ஹேஷ்டாக்கில் தற்போது ஹாலிவுட் சினிமா யூடியூப் குழுக்கள் கூட அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். 
 
‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ள படத்தின் மேக்கிங்கிற்காக பிரபல ஹாலிவுட் LOLA VFX நிறுவன தொழில்நுட்ப கலைஞர்களுடன் கைகோத்துள்ளனர்.

‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகும் அடுத்த படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அட்லீ இயக்கவுள்ள இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த ஏப்ரல் 8ம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படம் குறித்த அறிவிப்பு ‘சன் பிக்சர்ஸ்’ டிஜிட்டல் பக்கங்களில் பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கிறது.
‘சன் பிக்சர்ஸ்’ சேர்மன் கலாநிதி மாறனுடன், அட்லீ, அல்லு அர்ஜுன் இணைந்து பேசி நடந்து வருவதாகத் துவங்கி பின்பு அமெரிக்காவில் உள்ள ஹாலிவுட் லோலா நிறுவன கலைஞர்களுடன் உரையாடுவது என 2:34 நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோவாக வெளியாகி இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

இந்த வீடியோ பதிவின் மூலம் உலகத் தரத்தில் பிரம்மாண்ட மாக உருவாக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் உடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்ற விவரம் எதையும் படக்குழு இன்னும் வெளியிடவில்லை. இந்த வீடியோ பதிவுக்கு சாய் அபயங்கர்தான் பின்னணி இசை அமைத்துள்ளார். எனவே படத்துக்கும் அவர் இசையமைப்பாளராக இருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும் அதிகாரபூர்வ அறிவுப்புகள் இனிதான் வரும்.

இந்நிலையில் இந்த லோலா விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனம் ஏன் அவ்வளவு ஸ்பெஷல், இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன... என்று அறிவது அவசியம்.லோலா விஷுவல் எஃபெக்ட்ஸ் (Lola Visual Effects) திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழிலில் பிரம்மாண்ட விஷுவல் எஃபெக்ட்ஸ் சேவைகளை வழங்கும் அமெரிக்காவின் ஒரு முன்னணி நிறுவனம்.

2000ம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம், லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க், நியூ ஆர்லீன்ஸ் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டு ஹாலிவுட் படங்களின் கிராபிக்ஸ், VFX, அனிமேஷன், மோஷன் கேப்சர் உள்ளிட்ட வேலைகளுக்காக கோல்டன் குளோப், கேன்ஸ், ஆஸ்கர் வரை புகழ்பெற்றுத் திகழ்கிறது. 
லோலா விஷுவல் எஃபெக்ட்ஸ் குறிப்பாக ‘டிஜிட்டல் டி-ஏஜிங்’ பணியில் சிறந்து விளங்கும் நிறுவனம். ‘டிஜிட்டல் காஸ்மெட்டிக்ஸ்’ தொழில்நுட்பத்தில் முதல் சேவையைத் துவங்கிய நிறுவனமும் இதுதான்.

டிஜிட்டல் காஸ்மெட்டிக்ஸ் மூலம் நடிகர்களை திரையில் இளமையாக அல்லது வயதானவர்களாக தோற்றம் கொடுக்க முடியும். எப்படி போட்டோஷாப்பில் ஒருவரின் தோற்றம், முக அமைப்பு என அனைத்தையும் மாற்ற முடியுமோ அப்படி இதில் செய்யலாம். 

குறிப்பாக பிரம்மாண்டமாக... மிக மிக பிரம்மாண்டமாக உருவாக்கலாம்.நடிகர்களின் முக அமைப்பு லேயர்கள், அவர்களின் அசைவுகள் என அனைத்தையும் பதிவு செய்து கதைக்கு - படத்துக்கு - என்ன வயது தேவையோ அதற்கேற்ப அவர்கள் தோற்றத்தை அச்சு அசலாக மாற்றலாம்.

இந்நிறுவனத்தைத் துவங்கியவர்கள் எட்சன் வில்லியம்ஸ் மற்றும் தாமஸ் நிட்மன் என்னும் இரு கிராபிக்ஸ் டிசைனர்கள். எட்சன் வில்லியம்ஸ், விஸ்கான்சினில் உள்ள கிரீன் பேயில் பிறந்து வளர்ந்தவர். 

கிரீன் பே மாடிசனில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். தொடர்ந்து ப்ரூக்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபோட்டோகிராஃபியில் ஒளிப்பதிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

படித்து முடித்து இரண்டு கல்லூரிகளில் துணைப் பேராசிரியராக மேட் பெயிண்டிங், அனிமேஷன் கற்பித்தார். 1994ம் ஆண்டில் விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனமான விர்ச்சுவல் டைனமிக்ஸை வில்லியம்ஸ் நிறுவினார். 

விர்ச்சுவல் டைனமிக்ஸின் உருவாக்கத்தில் ‘ட்ரூ லைஸ்’ (1994), ‘ஸ்ட்ரேஞ்ச் டேஸ்’ (1995), ‘நிக் ஆஃப் டைம்’ (1995) மற்றும் ‘ப்ரோக்கன் ஆரோ’ (1996) ஆகிய படங்கள் சூப்பட் டூப்பர் ஹிட் அடித்தன.

1998ம் ஆண்டில், வில்லியம்ஸ் தனது ஊழியர்களை விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனமான பிக்சல்-என்வியில் கூட்டு சேர்த்தார். இந்தக் கூட்டணியின் கிராபிக்ஸ் அமைப்பில் 30க்கும் மேலான படங்கள் வெளியாகின. அவற்றில் ‘த நட்டி ப்ரொஃபசர்’ (1996), ‘டைட்டானிக்’ (1997), ‘த எக்ஸ் ஃபைல்ஸ்’ (1998), மற்றும் ‘வொல்கானோ’ (1997) உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படங்களும் அடக்கம்.

தாம்சன் நிட்மன், நியூ ஜெர்ஸியைச் சேர்ந்த கிராபிக் டிசைனர். ஸ்டீவன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார்.  பிக்சல்-என்வியில் இணைந்து கிராபிக்ஸ் சாஃப்ட்வேர்கள் உருவாக்க குழு தலைமையாக நியமிக்கப்பட்டார். 

அதே குழுவுடன் இணைந்திருந்த எட்சனுடன், தாம்சனும் நட்பு ரீதியாக பழக, இவர்கள் நட்பு ப்ரொஃபஷனல் பார்ட்னர்ஸாக இவர்களை கைகோர்க்க வைத்தது.

பிக்சல்-என்வியின் உரிமையாளர்களான ஸ்ட்ராஸ் பிரதர்ஸ் (Greg Strause and Colin Strause), எட்சன் மற்றும் தாம்சன் உள்ளிட்ட நால்வருடன் இணைந்து 2000ம் ஆண்டில் உருவாக்கியதுதான் ‘லோலா VFX’. லோலா நிறுவனத்தின் வரவு ஹாலிவுட் படங்களுக்கு மேலும் ஒரு உலகத் தர மார்க்கெட்டை உருவாக்கி, காட்சிகளில் மாயா ஜாலம் நிகழ்த்தியது. 

வெறும் கிராபிக்ஸை நம்பியே அல்லது ரோபாடிக்ஸ் முறைகளைக் கொண்டே பல படங்கள் உருவாகத் துவங்கின. குறிப்பாக மார்வெல், டிசி உள்ளிட்ட காமிக்ஸ் மற்றும் சூப்பர் ஹீரோ அடிப்படையிலான திரைப்பட யூனிவர்ஸ் வளர்ந்ததில் பெரும் பங்கு லோலா நிறுவனத்திற்குதான்.

‘கேப்டன் அமெரிக்கா: த ஃபர்ஸ்ட் அவெஞ்சர்’ படத்தில் ஸ்டீவ் ராஜர்ஸ் (கிறிஸ் எவான்ஸ்) பாத்திரத்தை மெலிந்த தோற்றத்தில் இவர்களே காண்பித்தார்கள்.‘பென்ஜமின் பட்டன்: த க்யூரியஸ் கேஸ் ஆஃப்’ படத்தில் பிராட் பிட்டின் வயது இவர்களது கைவண்ணத்தில் மாற்றப்பட்டது.‘மார்வல் சினிமாடிக் யுனிவர்ஸ்’ படங்களில் பல முக்கிய விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை மேற்கொண்டது லோலாதான்.

ஆக, லோலா இல்லாமல் எந்த ஹாலிவுட் படமும் இல்லை என்கிற நிலை உருவானது. மனித தோற்ற மாற்றங்கள், வயதாக்கம் (aging), இளமையாக்கம் (de-aging), இரட்டையாக்கம் (duplication), உடல் வடிவ மாற்றங்கள் (body reshaping) போன்ற நுட்பமான Visual Effects (VFX) வேலைகளில் லோலா நிறுவனம்தான் இன்றைய தேதியில் உலகளவில் கிங்.

De-Aging -  நடிகர்களை இளமையாகக் காட்டுதல் (எ.கா: Captain America, X-Men).

Aging - கதாபாத்திரங்களை வயதானவர்களாக மாற்றுதல் (எ.கா: Harry Potter).

Face Replacement -  ஒரே நடிகர் இரட்டை பாத்திரத்தில் இருக்கும்போது முக மாற்றங்கள். Body Modification - உடல் வடிவ மாற்றம். அதாவது, மேம்படுத்தல் அல்லது குறைத்தல்.
Digital Doubles - Visual consistencyக்காக நடிகரின் 3D வடிவம் உருவாக்குதல்.இப்படி நம்பமுடியாத சினிமாட்டிக் அனுபவத்திற்கு கேரண்டி இந்த லோலா. இந்த நிறுவனத்துடன்தான் ‘சன் பிக்சர்ஸ்’ கைகோர்த்துள்ளது.

இந்த அடிப்படையில் பார்த்தால் ‘#AA22XA6’ (அல்லு அர்ஜுனின் 22வது படம் + அட்லீயின் இயக்கத்தில் 6வது படம்) மிகப்பெரிய எதிர்பார்ப்பை சர்வதேச திரையுலக மார்க் கெட்டில் ஏற்படுத்தியிருக்கிறது. 

அனைத்துக்கும் சிகரமாக இப்படம் குறைந்தது ரூ.2000 கோடி லாபம் ஈட்டும் என இப்பொழுதே இந்தியத் திரையுலகம் பேசத் தொடங்கிவிட்டது.‘சன் பிக்சர்ஸ்’ என்றாலே பிரம்மாண்டம்தான்; மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெயினர்தான் என்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.

ஷாலினி நியூட்டன்