சிறுகதை - இர்ரா...



இர்ரா - ஒரு மனுசனுக்கு இப்படி ஒரு பெயர் இருக்குமான்னு ஆச்சரியமா இருக்கா?

இர்ரா நம்ம நாயகனோட இயற்பெயர் இல்லீங்க. இர்ராவுக்கு அவங்க அம்மா வச்சதென்னமோ அழகான பேருதான் - இருதயராஜ். ஆனா, ஏன் அப்படி நீட்டி முழக்கணும்னு கூட இருக்குற நண்பர்கள்லாம் தீர்மானிச்சதால இர்ராவா சுருங்கிப் போச்சு பேரு. இர்ராவுக்கு சின்ன வயசுலேருந்தே படிப்பு தலைல ஏறலை.
ஔவையாரை ‘உளவையார்’ன்னு வாசிச்சதுலேருந்து தமிழன்னை அவனோடு ஐக்கியப்பட மறுத்து விட்டாள். தமிழில் இருக்கும் ல,ள,ழ வை எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒரே லகரத்துக்குள் அடைக்க முயன்ற அவனது தமிழ் சீர்திருத்த முயற்சிகள் எந்த ஆசிரியருக்கும் பிடித்ததாகத் தெரியவில்லை.

பலம், பல்லி, பல்லிக்கூடம் என்று அவன் எழுதியதால் அவனை அடித்துப் பிரம்பை உடைத்துக் கொண்டார்கள். தமிழ்தான் இப்படியென்றால் ஆங்கிலத்தில் இர்ராவின் நாட்டம் அளவிட முடியாமல் இருந்தது. ஆனால், அவன் கெட்ட நேரம் சோறு தின்ற உடனேயே ஆங்கில வகுப்பு இருந்ததால் உண்ட மயக்கத்தில் இருந்த தொண்டனுக்கு கண்விழித்துப்
படிக்க முடியாமல் போய்விட்டது.

அசோகர் மரம் வெட்டியதோ, பூமிக்கு மேலும் கீழும் இடமும் வலமும் கோடுகள் போட்டு பூமியைப் பிரித்ததோ சுத்தமாக அவனுக்குப் பிடிக்கவேயில்லை.
சரி, கதையை வளர்ப்பானேன்? ஆறாம் வகுப்போடு இர்ரா அவனுக்குப் பிடிக்காத பள்ளியை விட்டு விலகி வந்துவிட்டான். ஆனாலும் மாலையானால் பழைய தோழர்களோடு கபடி ஆடுவதில் இருந்த ஆர்வம் மட்டும் குறையவேயில்லை.

இர்ராவின் இந்தக் கபடி காதல்தான் அவனுக்கு மூச்சு என்று சொல்பவர்களும் உண்டு. அது என்னவென்றே தெரியாத அபாரமான வெறியோடுதான் இர்ரா கபடி விளையாடுவான். கோட்டிலிருந்து கிளம்பும்போது துள்ளிக்கொண்டு தொடையில் தட்டியவாறே ‘கபாட்ஸ், கபாட்ஸ்’ என்று களமிறங்கினால் ஒரே ‘திரைச்சலாக’த்தான் இருக்கும்.
என்ன, எதிரில்தான் யாரும் இருக்க மாட்டார்கள்.

கேட்டால் ‘ஆள் இல்லாம ஆடிப்பழகணும் மக்கா!’ என்று புதுக் கதை சொல்வான். எதிரில் யாருமில்லாத களத்தில் ஆள் இருப்பதாக பாவனை செய்துகொண்டு அங்குமிங்கும் பாய்ந்து கபடி பாடிக்கொண்டு போவது இர்ராவுக்கு மட்டுமே கைவந்த கலை. விளையாட்டில் கூட புனைவை அறிமுகப்படுத்திய முதல் மனிதன் இர்ராவாகத்தான் இருக்கக் கூடும்.

ஊரில் மேரியன்ஸ் கிளப் என்று கபடி அணி உருவாக்கப்பட்டபோது இர்ராவும் சேர்ந்து கொள்ள ஆசைப்பட்டான். ஆனால், ‘ஆளில்லாத இடத்துல வெளயாட மட்டும்தாம்ல அவன் லாயக்கு’ என்று சொல்லி அவனை ஒதுக்கிவிட்டதில் கோபப்பட்டு ஓடிப் போய் கிணற்றில் குதித்து விட்டான். அவனது கெட்ட நேரம் அவனுக்கு நீந்தத் தெரிந்ததால் பிழைத்துக்கொண்டான். இருந்தாலும் அவனது ஆட்சேபணையை மனதில் கொண்டு அவனை மேரியன்ஸ் இரண்டாவது அணியில் சேர்த்துக் கொள்வதாகச் சொன்ன பின்னரே தலையைக் கூடத் துவட்டிக் கொண்டான்.

‘இனிமே எங்கயாவது கிணத்துல குதிச்சன்னா உன்னை மேல தூக்க கயிறு போட மாட்டேம்ல. உன் தலைல கல்லைத்தான் போடுவேன் பாத்துக்க. கோட்டிக்கார மூதி! சந்தைல வந்து யாவாரம் பாத்து நாலு காசு பாக்க துப்பில்ல. வெளயாட்டு கேக்குதாக்கும்’ என்று வாழ்த்தி விட்டுப் போனார் இர்ராவின் அப்பா. 

ஆனால், அவர் சொல்வது போல மோசமெல்லாம் இல்லை இர்ரா. சந்தையில் புயலாக இருப்பான். வெங்காயம், கத்திரிக்காய் எல்லாம் கூறுகட்டி வைத்து ஒருபக்கமென்றால் மறுபக்கம் மொத்தமாகவும் கணக்கு போடுவான். ‘150 கிராம் கத்தரிக்கா, 150 கிராம் கிழங்கு, 50 கிராம் பச்சமொளகா’ என்று கலந்து கட்டி கணக்கு சொன்னாலும் நொடிக்குள் எவ்வளவு என்பதைச் சொல்வதில் பெரும் சாமர்த்தியக்காரன்.

இர்ராவுக்கு சந்தைக்குப் போவதிலோ வியாபாரம் பார்ப்பதிலோ கொஞ்சமும் வருத்தமில்லை. ஆனால், எங்கேயாவது  கபடி டோர்ணமெண்டில் ஆடப் போகிறோம் என்றால் இர்ராவுக்கு இருப்புக் கொள்ளாது. சந்தை முடிந்தால் இர்ரா நேரே ஏதாவது ஒரு கையேந்தி பவனில் போய் 8 பரோட்டாவும், ஒரு வாளி சால்னாவும், ரெண்டு முட்டை பொரியலும் போடுவான்.

இவனது சால்னா குளியலுக்கு பயந்தே அவனை வாடிக்கையாக்க எவரும் விரும்புவதில்லை. ஆனாலும் முட்டை பொரியல், சமயங்களில் மட்டன் சுக்கா என்று கொஞ்சம் காசு செலவழித்துத் தின்பவன் என்பதால் ஒரேயடியாகத் துரத்துவதும் இல்லை.

சந்தையில் கடும் உழைப்பும் இம்மாதிரி அசுரத்தீனியும் சேர்ந்ததால் நல்ல வாட்டசாட்டமாக இருப்பான். காலையில் கோழி முட்டை போடாவிட்டால் கோழி ------ தில் கையை விட்டாவது முட்டையை எடுத்து பச்சையாகக் குடித்து விடுவான். எனவே அவ்வப்போது தனது நெஞ்சை விரித்து காட்டிக் கொண்டு ‘‘மாப்பிள்ளை, அண்ணன் ‘பட்டக்ஸ்’ எப்படி விரியுது பாத்தியா?’’ என்று சிரிப்பான்.

எவனோ இர்ராவிடம் ஆங்கிலத்தில் ‘பட்டக்ஸ்’ன்னா நெஞ்சுன்னு அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுத்திருக்கான்னு அர்த்தம். அப்புறம் காலைல திண்ணைல உக்காந்து கருப்பட்டி காப்பி குடிச்சுக்கிட்டே பள்ளிக்கு போற பொம்பளைப் புள்ளைங்கள்ல யாரைக் காதலிக்கலாம்னு யோசனையில நேரத்தைப் போக்குவான். இவ்வளவு நாளாகியும் அவனால் இந்த விசயத்தில் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. வியாழக்கிழமை சந்தைக்கு வரும் கோகிலாவையே காதலித்து விடலாமா என்றும் குழப்பம் அவனுக்கு.

சந்தையும், சாப்பாடும் முடிந்தால் இரவில் நேரே வேதக் கோயில் மேடைக்குத்தான் போவான். அதுதான் வீட்டில் கைவிடப்பட்டவர்கள், ‘தண்ணி தெளிக்கப்பட்டவர்’களின் சரணாலயம். அங்கு எப்போதும் ஏதேனும் ஒரு கூட்டம் ஏதாவது வெட்டிக் கதை பேசிக்கொண்டு கிடக்கும். அன்றும் கிடந்தது.‘‘லே மக்கா! இர்ரா வராம் பாரு...’’‘‘வந்துட்டானா? இனி முட்டை காத்தா விட்டு மனுசனை நாறடிச்சுப்புடுவானே?’’ யாரோ முனகினார்கள்.இர்ராவின் இந்த வாயு வெளியேற்றமும் அவனது ‘ஆங்கில அறிவு’ போல பிரசித்தமானது.

‘‘என்ன மக்கா! எல்லாம் நேரமே வந்துட்டியளா? எப்படி இருக்கிய எல்லாரும்?’’ இர்ரா குசலம் விசாரித்தான்.‘‘நல்லாத்தான் இருக்கோம் மக்கா. நீ பாட்டுக்கு காத்தைத் தொறந்து விட்டுடாதே சரியா?’’ யாரோ சொல்ல சிரிப்பெழுந்தது கூட்டமாக.‘‘என்னடே! எவனுமே இதுவரைக்கும் குசு வுட்டதே இல்லங்குற மாதிரில்லா பேசுதிய’’ என்றான் இர்ரா கோபமாக. சொல்லிக்கொண்டே தனது வாயுக்கிடங்கை அவன் திறக்க, கதறிக்கொண்டு ஓடியது படுத்திருந்த கூட்டம்.

இதுவும் வழக்கமான செயல்தான். இர்ராவுக்கு இப்படிச் செய்வதில் துளியும் சங்கடம் இருப்பதாகத் தெரியவில்லை. அவனைப் பொறுத்தவரை ஏதேனும் ஒரு டோர்ணமெண்டில் கபடி ஆடவேண்டுமென்பதுதான் கொள்கையாக இருந்தது. அதற்காக என்ன தியாகத்திற்கும் அவன் தயாராக இருந்தான். சந்தைக்களைப்பு மேலிட இர்ரா தன்னை மறந்து குறட்டை விட்டு மீதமிருந்தவர்களையும் விரட்டியடித்த நேரத்தில் வந்து சேர்ந்தது செல்வராஜ் குழு.

செல்வராஜ்தான் அணித்தலைவன். ஜெயபால், பாண்டி, பால்சிங், கந்தன் அப்படின்னு மீதி கொஞ்சம் பேரும் வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக, ‘‘லே! இர்ரா, எழுந்திருலே!’’ என்று இர்ராவை அடாவடியாக எழுப்பினார்கள்.

கூட நின்ற பால்சிங் ‘‘வேண்டாம் செல்ராசு, எழுப்பாண்டாம். தூங்கட்டு’’ என்றான். பாண்டி ஆமோதித்தான். பாண்டி இப்படிச் சொல்வதை மட்டும் வைத்து அது இர்ராசின் மேலுள்ள அதீத பாசமென்றோ பரிதாபமென்றோ நீங்கள் நினைத்தால் உங்கள் மேல்தான் நான் பரிதாப்பட வேண்டியிருக்கும்.

இர்ராவுக்குத் தூக்கம் கலைந்தால் தூக்கக் கலக்கத்தில் எழுந்து ‘சடவு முறித்து’ கொட்டாவி விடுவான். அப்படி விட்டால் எதிரில் நிற்பவன் அதோடு பரலோகப் பிதாவிடம் போய்விடவேண்டியதுதான். ‘என்ன எழவத்தான் திம்பானோ’ன்னு அவங்கப்பாவே வீட்டில திட்டினதாலதான் கோயில் மேடைக்கே வந்து படுக்கிறான் அவன். இர்ராவை எழுப்புவது பிணத்தை உயிர் பெறச்செய்வது போலத்தான் என்றாலும் இர்ரா எப்படியோ எழுந்து விட்டான்.

‘‘என்னடே! இன்னைக்கு எங்க வெளயாண்டிய?’’

‘‘இட்டமொழில...’’‘‘இட்டமொழியா? ஏய்! அப்படின்னா என்னை சேத்துக்குங்கடே. திசையன்விளைல சந்தை முடிச்சுட்டு வரும்போது நானும் வெளயாடுவம்லா...’’
‘‘நீ வெளயாடுவ சரிலே. நாங்க ஜெயிக்கணும்னுல்லா வெளயாடப் போறோம்...’’

‘‘இந்த ...த்தச் சொல்லத்தான் எலுப்பினியாக்கும்?’’

‘‘சரிலே மூதி.ரொம்பத்தான் கோவப்படுதே. நாளைக்கு இட்டமொழில மேட்ச் இருக்கு. பாண்டியும் பால்சிங்கும் மதுரா கோட்ஸ் செலக்‌ஷனுக்குப் போறானுவல்லா. அதான் நாளைக்கு நீ வெளயாடுதியா?’’ கேட்டு முடிப்பதற்குள் துள்ளி எழுந்தான் இர்ரா. எழுந்த வேகத்திலேயே பட்டாசு போல வாயு வெளியேறியது. 

காற்று உடனே கலவரப்பட்டு போனது.
“ஏய் நாளைக்கு நான் வரேண்டே! சும்மா பிச்சிப் போடுதேன்...” “இவன் பாடி போவும்போது இப்படி நாலு பட்டாசு போட்டாலே எதிர் டீம்ல எல்லாப் பயலுவளும் மோட்சத்துக்குப் போவானுவல்லா...” என்றான் கந்தன்.

அன்று சந்தையிலும் இர்ரா ரொம்ப உற்சாகமாக இருந்தான். சந்தைக்கு வந்திருந்த கோகிலாவிடம், தான் கபடி விளையாடப் போகும் பெருமையைப் பறைசாற்றினான். கொசுறு கேட்டால் நாயை அவிழ்த்து விடும் தயாள குணம் கொண்ட இர்ரா அன்று மட்டும் அபரிமிதமான பெருந்தன்மையுடன் நடந்து கொண்டான்.

இட்டமொழியில் டியூப் லைட் கட்டி மைதானமும் இர்ரா குழுவும் தயாராக இருந்தது. இர்ரா முதன்முறையாக டோர்ணமெண்ட் ஆடும் பதற்றத்தில் இருந்தான். மற்றவர்களெல்லாம் அமைதியாக இருக்க இவன் மட்டும் உடம்பை வளைத்து வளைத்து நடனமாடிக்கொண்டிருந்தான் - கபடி ஆடிப் பார்க்கிறானாம்.

ஆனால், போட்டி துவங்க வழியிருப்பதாகத் தெரியவில்லை. பத்தரை மணியாகியும் அந்தப் பகுதியிலேயே முக்கியமான எதிரணி வராததால் மேரியன்ஸே வெற்றி பெற்றதாக அறிவிக்க விழாக்குழு தயாரானதில் எல்லாரும் மகிழ்ச்சியடைந்தார்கள் - இர்ராவைத்தவிர. 

‘‘வெளயாடாம ஜெயிச்சா என்னடே அர்த்தம்? வெள்யாண்டுதானே ஜெயிக்கணும்?” என்று முணுமுணுத்ததை எவரும் சட்டை செய்யவில்லைஆனால், அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டுமென்றால் மேரியன்ஸ் கபடிக்குழு களத்தில் இறங்கி ஒருவர் சும்மாவாவது பாடிக்கொண்டு போய் கட்டாயக் கோட்டைத் தாண்டி வர வேண்டும்.

இந்த மரபுப்படி மேரியன்ஸ் களமிறங்கியது. செல்வராஜ் பாடிச் செல்ல முற்பட்டபோது இர்ரா வழிமறித்தான். ‘‘நான் போறேன்’’ என்றான் இர்ரா. ‘‘எலே சும்மா கட்டாயக்கோடு தாண்டிட்டு வந்தா போதும், என்ன, போயிட்டு வா...’’ என்று அனுமதித்தான் செல்வா.அவ்வளவுதான். தனது 21 ஆண்டு கால கபடித் திறமையைக் காட்ட தனக்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கி புகுந்து விளையாடத் துவங்கினான் இர்ரா.

ஏற்கெனவே இம்மாதிரி புனைவு ஆட்டம் பழகியிருந்ததால் எதிராளிகளை மனக்கண்ணில் நினைத்துக் கொண்டு உள்புகுந்தும் வெளிவந்தும் காலால் உதைத்தும் இர்ரா தனிஆவர்த்தனம் நடத்தியதை அவனைத் தவிர யாரும் ரசித்ததாகத் தெரியவில்லை.

நடுவர் விசில் அடித்து முடித்தும் இர்ராவின் காத்திரமான ஆட்டம் கூடியிருந்தவர்களைக் குதூகலிக்க வைத்தது. அணியினர் ‘எலே போதும் வந்து தொலை’ என்று சொல்லியும் ஒரு தவம் போல ஆடிக் கொண்டிருந்த இர்ராவின் காதில் அது சுத்தமாக விழவில்லை.

‘‘எலே மானத்தை வாங்காதல!’’ சொல்லிக்கொண்டே செல்வராஜ் போய் இர்ராவைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல், ஒரு முழுமையான போட்டியில் ஆடியதைப் போல வியர்த்துக் குளித்திருந்த இர்ராவை நிலைக்குக் கொண்டு வர மேரியன்ஸின் மீதமுள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து பெரும்பாடு பட்டே கட்டுப்படுத்த முடிந்தது. 

அணியில் மற்றவர்கள் கோபத்தில் முகம் சிவந்தாலும், தான் ஆடிய முதல் ஆட்டத்திலேயே வெற்றியை அணிக்குப் பெற்றுத் தந்த பெருமிதம் இர்ராவுக்கு.சுழற் காற்றாக சுழன்றாடிய அந்த ஆட்டம்தான் இர்ராவின் கடைசி ஆட்டமாகிப் போனது கபடிக்கு நிகழ்ந்த காலக்கொடுமை!.

டோர்ணமெண்டில் ஆடிய மகிழ்ச்சியோடு ஊர் முழுக்க இட்டமொழியில் அவன் ஆடி ஜெயித்துக் கொடுத்த கதையைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டு திரிந்தான்.
இர்ரா - அதன் பின்  எவரும் சேர்த்துக் கொள்ளாததால் -  கபடி ஆட வழியில்லாமல், தான் காதலித்த எந்தப் பெண்ணையும் கட்ட முடியவில்லையே என்ற கவலையேதும் இல்லாமல் புஷ்பமேரியைக் கல்யாணம் செய்து கொண்டான்.

எண்ணி ஒரே வருடத்தில் ஞானபாஸ்கர் பிறந்து வளர்ந்து கபடி ஆடத் துவங்கினான். கபடி மீது உயிரையே வைத்திருந்த இர்ரா மகன் கபடி ஆடுவது தெரிந்ததும் அவனைப் பார்த்து “கபடி கிபடி வெளயாடுனேன்னு வை. கையையும் காலையும் உடைச்சுப் போடுவேன் கிறுக்குப் பயலே...’’ என்றான்.

- ஆசிப் மீரான்