20 ஆண்டுகள்... 3 கோடி மரங்கள்... ஒற்றை மனிதர்...



ஆம். 1978ம் ஆண்டு துருக்கி சினோப் நகரில் உள்ள காடுகளில் நிர்வாக அதிகாரியாக வேலை செய்யத் தொடங்கினார் ஹிக்மெட் கயா. 19 வருடங்கள் பணியாற்றிய பிறகு அங்கிருந்து ஓய்வு பெற்றார். இந்த 19 வருடத்தில் அவருக்கு கிடைத்த கிராம மக்களின் அன்பு மற்றும் காடுகளில் உள்ள அதிகாரிகளின் தொடர்புகள் என அனைவரையும் ஒன்றிணைத்தார்.

பெரும் பொட்டல் பூமியாக கிடந்த பொயாபத் பேரன் மலைத்தொடரை படம் பிடித்து வைத்துக் கொண்டார். மீண்டும் 19 வருடங்கள் கழித்து அதே இடத்தில், தான் உருவாக்கிய காடுகளின் முன்பு அந்த வறண்ட பூமியின் புகைப்படத்துடன் பின்புறம் அவர் உருவாக்கிய காடு சகிதமாக மீண்டும் புகைப்படம் எடுத்தார்.
அந்தப் படம்தான் இப்பொழுது வைரலாகி வருகிறது. ‘காடு மனிதர்’ என துருக்கி மக்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார் ஹிக்மெட் கயா. இவரின் 30 மில்லியன் மரங்கள் காரணமாக கடந்த 2000ம் ஆண்டிலிருந்து துருக்கியின் காற்று மாசு விகிதாசாரம் 5.4% குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கயா ஓய்வு பெற்ற பிறகும் கூட, தான் நட்டு வைத்த மரங்களை உள்ளூர் விவசாயிகளுடன் இணைந்து கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டார். பத்தாயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருக்கும் பேரன் மலைத்தொடர் முழுக்க எவ்வளவு முடியுமோ அவ்வளவு மரங்களை கயா மற்றும் அவரது குழு நட்டு வைத்தனர். விளைவு... இன்று பேரன் மலை மற்றும் அதன் சுற்றுப்புறமே மிகப்பெரிய காடாக மாறி இருக்கிறது.

‘‘உங்கள் பகுதி மக்களை ஒன்றிணைத்து மரங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுங்கள். ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தது இரண்டு மரங்கள் நட்டு வைத்தாலே ஓரளவிற்கு உலக வெப்பமயமாதலையும், சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். பணம், பொருள் என அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைப்பதைக் காட்டிலும் நல்ல காற்றையும் அவர்கள் வாழத் தகுதியான பூமியையும் விட்டுச் செல்வதுதான் மிக அவசியம்.

நான் ஓய்வு பெற்ற பிறகும் கூட மரங்கள் மற்றும் காடுகளின் மீதான எனது காதல் குறையவில்லை. வேலையில் நான் பெற்ற அனுபவங்களை ஒரு புத்தகமாக பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. 

அதில் இந்தக் காடுகள் உருவாக்கம் குறித்த விளக்கமான பதிவுகளை கொடுக்க நினைத்தேன். எனவே 2004ம் ஆண்டு ‘தொப்பரக் யேசெரின்ஜே’ அதாவது மண் பசுமையடைந்தால்  (When the Soil Turns Green or When the Land Becomes Verdant) என்ற புத்தகத்தை வெளியிட்டேன்.

அந்தப் புத்தகத்தில், பொயாபாத் என்னும் பகுதி எவ்வளவு வறண்ட நிலமாக இருந்தது, பின்னர் எப்படி அது ஒரு பசுமையான காடாக மாறியது என்பதைக் குறித்து பதிவு செய்துள்ளேன்.
அந்த மாற்றத்தை 250 புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தியிருக்கிறேன். 

நேர்மையாக, சோம்பேறித்தனமின்றி, திட்டமிட்டு உழைத்தால் நீங்கள் செய்ய முடியாதது எதுவும் இல்லை. இது மரங்கள் மற்றும் காடுகளுக்கு மட்டுல்ல; எந்த தொழிலுக்கும் இதுவே ஃபார்முலா...’’ அழுத்தமாகச் சொல்கிறார் இந்த காடு மனிதர்.

ஷாலினி நியூட்டன்