இந்தியாவின் முதல் டால்பி சினிமா!



இந்தியாவில் கடந்த முப்பது வருடங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிங்கிள் - ஸ்கிரீன் திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. ஐந்தாயிரத்துக்கும் மேலான சிங்கிள் - ஸ்கிரீன் திரையரங்குகள் தொடர்ந்து இயங்குவதற்காகப் போராடி வருகின்றன. 
ஒரு பக்கம் திரையரங்குகள் மூடப்பட்டாலும், இன்னொரு பக்கம் புதிது புதிதாக மல்டிபிளக்ஸ் திரையரங்குகளும், ஐமேக்ஸ் போன்ற பிரமாண்ட திரையரங்குகளும் உதயமாகிக்கொண்டே இருக்கின்றன.

உதாரணத்துக்கு, கடந்த சில வருடங்களில் இந்தியாவில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஐமேக்ஸ் திரையரங்குகள் திறக்கப்பட்டு, நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
அடுத்த இரண்டு வருடங்களில் ஐமேக்ஸ் திரையரங்குகளின் எண்ணிக்கை நாற்பத்தைந்தைத் தொட்டுவிடும் என்கின்றனர். 
இத்தனைக்கும் சிங்கிள் - ஸ்கிரீன் திரையரங்க நுழைவுச்சீட்டு விலையுடன் ஒப்பிடும்போது, ஐமேக்ஸில் மிகவும் அதிகம். இதுபோக ஏராளமான மல்டிபிளக்ஸ் திரையரங்குகளும் திறக்கப்பட்டுள்ளன.

திரையரங்குக்குச் சென்று ஒரு படம் பார்க்கிறோம் என்பதைத் தாண்டி, பிரமாண்டமான, வித்தியாசமான, புதுவிதமான அனுபவங்களைத் தருகின்ற திரையரங்குகளை நோக்கி மக்கள் செல்ல ஆரம்பித்துவிட்டனர். பழைய திரையரங்குகள் எல்லாம் தொலைக்காட்சியில் படம் பார்ப்பதைப் போன்ற உணர்வையே தருகின்றன. அதனால் ஐமேக்ஸ் மாதிரியான பெரிய திரைகளுக்கு மவுசு அதிகமாகிவிட்டது.

உதாரணத்துக்கு, சமீபத்தில் ‘இண்டர்ஸ்டெல்லர்’ என்ற ஆங்கிலப்படம் மறு வெளியீடு செய்யப்பட்டது. இத்திரைப்படம் சாதாரண திரையரங்குகளிலும், ஐமேக்ஸ் திரையரங்குகளிலும் வெளியானது. 

பெரிய திரையைக் கொண்ட ஐமேக்ஸ் திரையரங்குகளை நோக்கித்தான் மக்கள் படையெடுத்தனர். பலருக்கு ஐமேக்ஸில் டிக்கெட் கிடைக்கவில்லை. காரணம், இந்தப் படத்தை  முன்பே பார்த்திருந்தாலும் கூட, ஐமேக்ஸ் திரையரங்க அனுபவம் எப்படியிருக்கும் என்பதற்காகவே அத்திரையரங்குக்குப் படையெடுத்தனர்.

மக்கள் திரையரங்க அனுபவத்தைத் தேடிச் செல்வதால், பழைய சாதாரண திரையரங்குகளை நோக்கிச் செல்வது குறைந்திருக்கிறது. அதே நேரத்தில் புது அனுபவங்களைத் தரும் திரையரங்குகளை நோக்கிச் செல்வதால், அந்த திரையரங்குகளுக்கான தேவையும் அதிகரித்திருக்கிறது. 

அதனால் ஐமேக்ஸ், 4டிஎக்ஸ், ஸ்கிரீன் எக்ஸ், ஐஸ் 3டி, எம்எக்ஸ்4டி, ரியல்டி 3டி, எபிக், ஐமேக்ஸ் வித் லேசர், டால்பி சினிமா போன்ற திரையரங்குகள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ரியல்டி 3டி, டால்பி சினிமா ஆகிய திரையரங்குகள் இந்தியாவில் இல்லை.

பொதுவாக ஐமேக்ஸ், 4 டிஎக்ஸ், டால்பி சினிமா மாதிரியான திரையரங்குகளில் ஹாலிவுட் படங்களைத்தான் வெளியிடுவார்கள். காரணம், அந்த திரையரங்குகளில் திரையிடுவதற்கான முறையில் ஹாலிவுட் படங்களைப் படமாக்கியிருக்கின்றனர். 

இன்று, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளப்படங்களைக் கூட ஐமேக்ஸ் அல்லது டால்பி சினிமா திரையரங்குகளில் வெளியிடும் வகையில் படமாக்குகின்றனர். இதிலிருந்தே ஐமேக்ஸ், டால்பி  சினிமா தான் திரையரங்க தொழில்நுட்பத்தின் எதிர்காலம் என்பது தெரிகிறது.

மட்டுமல்ல, இன்றைய தேதியில் உலகிலேயே மிகச்சிறந்த திரையரங்க அனுபவத்தைத் தருவது, ஐமேக்ஸ் 70எம்எம் திரையரங்கம்தான்.உலகில் முப்பது இடங்களில் மட்டுமே இந்த திரையரங்குகள் எஞ்சியிருக்கின்றன. 

இதற்குப் பிறகு ஐமேக்ஸ் வித் லேசர் திரையரங்குகள் நல்லனுபவத்தைத் தருவதாக சினிமா ரசிகர்கள் சொல்கின்றனர். இந்த ஐமேக்ஸ் வித் லேசர் உட்பட பெரிய திரைகளைக் கொண்ட திரையரங்குகளுக்குப் போட்டியாக ‘டால்பி’ நிறுவனத்தால் களமிறக்கப்பட்டதுதான், டால்பி சினிமா.

‘அவதார் 2’, ‘டியூன்’ போன்ற சிறந்த காட்சியனுபவங்களைத் தரும் திரைப்படங்களை டால்பி சினிமா திரையரங்குகளில் பார்த்தவர்கள், ‘‘ஐமேக்ஸ் லேசரைவிட, டால்பி சினிமாதான் சிறந்தது’’ என்கின்றனர்.

டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸும் இணைந்த திரையரங்கம்தான், டால்பி சினிமா. ஹெச்டிஆர் தரத்தில் ப்ரொஜக்‌ஷன் பண்ணுவதற்காக இரண்டு கிறிஸ்டி 4கே லேசர் புரஜக்டர்களைப் பயன்படுத்துகின்றனர். இதை டால்பி விஷன் என்கின்றனர்.

அடுத்து அற்புதமான, துல்லியமான சவுண்ட் அனுபவத்திற்காக டால்பி அட்மோஸைப் பயன்படுத்துகின்றனர். இதுபோக பிரமாண்ட திரை, எங்கே அமர்ந்து பார்த்தாலும் சிறப்பான காட்சியனுபவத்தைக் கொடுக்கும் இருக்கை அமைப்பு, திரையரங்கில் இருப்பதையே மறக்கடித்து, நம்மை திரைக்குள் இழுத்துச் செல்லும் டால்பி விஷன் ப்ரொஜக்‌ஷன், பிரமிக்க வைக்கும் அரங்க அமைப்பு என இதன் சிறப்புகள் நீள்கின்றன.

குறிப்பாக டால்பி சினிமாதான் வண்ணங்களை மிகத் துல்லியமாக ப்ரொஜக்ட் பண்ணுகிறது என்கின்றனர். அத்துடன் குண்டூசி விழும் சத்தத்தைக் கூட பார்வையாளர்களின் செவிகளுக்குத் துல்லியமாக கடத்தக்கூடியது டால்பி அட்மோஸ் என்றும் சொல்கின்றனர். சாதாரண திரையரங்குகளுடன் ஒப்பிடும்போது இதன் நுழைவுச்சீட்டின் விலை அதிகம். ஆனால், டால்பி சினிமாவில் படம் பார்க்கும்போது கிடைக்கும் அனுபவம் வாழ்நாளுக்கும் மறக்காது.

கடந்த 2014ம் வருடம்தான் நெதர்லாந்தில் முதல் டால்பி சினிமா திரையரங்கம் திறக்கப்பட்டது. இன்று 14 நாடுகளில் டால்பி சினிமா திரையரங்குகள் உள்ளன. விரைவில் இந்தியாவிலும் வரப்போகிறது டால்பி சினிமா என்பதுதான் இதில் ஹைலைட்.

ஆம் ; இந்தியாவிலேயே முதல் முறையாக புனேவில் உள்ள சிட்டி பிரைடு, ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் அல்லு சினிபிளக்ஸ், திருச்சியில் உள்ள எல்ஏ சினிமா, பெங்களூருவில் உள்ள ஏஎம்பி சினிமாஸ், கொச்சியில் உள்ள ஈவிஎம் சினிமாஸ், உலிக்கலில் உள்ள ஜி சினிபிளக்ஸ் ஆகிய 6 இடங்களில் டால்பி சினிமா திரையரங்குகள் வரப்போகின்றன என்று டால்பி நிறுவனமே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதுவும் 2025ம் வருடத்திலேயே டால்பி சினிமா இந்தியாவில் திறக்கப்பட்டுவிடும் என்கின்றனர்.

த.சக்திவேல்