உலக விவசாயம் எப்படி இருக்கிறது..?



ஆயுத வியாபாரத்தில் மட்டுமல்ல... விவசாய உற்பத்தியிலும் அமெரிக்கா இடம்பிடிக்கிறது என்றால் ஆச்சரியம்தானே!ஆமாம். விவசாயத்தில் எந்தெந்த நாடுகள் முன்னணி வகிக்கின்றன என்று புள்ளிவிபர வஸ்தாதுவைக் கேட்டால் அது சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரேசிலைக் கைகாட்டுகிறது. 
விவசாயம் என்றால் அரிசி, சர்க்கரை, காய்கறிகள் மட்டுமல்ல... ரப்பர், பருத்தி மற்றும் புகையிலை எல்லாமும் சேரும் என்று மனதில் வைத்து இந்தக் கட்டுரையை படித்தால் உங்களுக்கு மோட்சம் நிச்சயம்.

முதலில் இந்த நான்கு நாடுகளின் சில பொதுத் தன்மைகளைப் பட்டியலிட்டால் அது ஏன் இந்த நாடுகள் விவசாயத்தில் முன்னணியில் இருக்கிறது என்று புரிபடும். மற்ற நாடுகளைவிட இந்த நாடுகளில் மக்கள்தொகை அதிகம். 
இத்தோடு விவசாயத்துக்கான நிலமும் அபரிமிதமாக இருக்கிறது. அத்தோடு இடத்துக்கு இடம் காலநிலையிலும் வித்தியாசம் இருப்பதால் விளைச்சலும் பரவலாக இருக்கிறது. இனி ஒவ்வொரு நாட்டிலும் விவசாயத்தின் வெற்றி தோல்விகளை அலசுவோம்.

சீனா

இந்தியாவுக்கு அடுத்து பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு. இது விவசாய உற்பத்தியில் முதலிடம் பிடித்தாலும் விவசாய உணவுப் பொருட்கள் இறக்குமதியிலும் இந்த நாடுதான் மற்ற மூன்று நாடுகளைவிட அதிகமாக இறக்குமதி செய்கிறது. உலகளவில் விவசாயத்துக்கான நிலத்தில் 10 சதவீதத்தைக் கொண்டிருக்கிறது சீனா. இதனால்தான் உலகளவில் சீனாவின் விவசாய உற்பத்தி கால் மடங்காக இருக்கிறது.

சீனாவின் உழைப்பாளர்களில் சுமார் 25 சதவீதம் பேர் விவசாய உற்பத்தியாளர்கள் என்பது ஆச்சரியமானது. இருந்தாலும் ஒருகாலத்தில் இருந்ததுபோல சீனாவின் விவசாயமும் சரிவு நிலைக்குச் சென்றது. காரணம் தொழில்களுக்கு முக்கியத்துவம் மற்றும் நகரமயமாக்கல். தாய்லாந்து, நியூசிலாந்து, பிரேசில் மற்றும் அமெரிக்காவில் இருந்து விவசாயப் பொருட்களை சீனா இன்று இறக்குமதி செய்கிறது.

இந்தியா

உலகில் இரண்டாவது பெரிய விவசாய உற்பத்தியாளர் இந்தியாதான். இந்திய விவசாயம் பொதுவாக மானியத்தை நம்பி நடைபெறுவது. இதனால்தான் விவசாயம் மற்ற மூன்று நாடுகளைப்போல தீவிரமாக இல்லாமல் மந்தமாக இருக்கிறது. அதுவும் இந்திய விவசாயம் பெரிதும் மழை, நீர், காலநிலைக்கு ஏற்ப நடைபெறுவதால் பெரிய பாய்ச்சல் இல்லாமல் இருக்கிறது.

இருந்தாலும் ஒரு பெரிய நாட்டில் வித்தியாசமான காலநிலை இருப்பதால் பரவலான விவசாய உற்பத்தி நடைபெறுகிறது. ஆனாலும் இந்திய விவசாயத்தில் அறுவடைக்குப் பிறகான விவசாயத்தின் நிலை படுமோசமாகத்தான் இருக்கிறது.

உதாரணமாக அறுவடைக்குப் பிறகான இந்திய விவசாயத்தில் சுமார் 40 சதவீத விவசாயப் பொருட்கள் சேதமாவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. இந்திய விவசாயத்தின் நம்பர் ஒன் ஏற்றுமதிகள் சர்க்கரை, சோயாபீன்ஸ் மற்றும் இறைச்சிகள். விவசாயப் பொருள் ஏற்றுமதியில் இந்தியா 9வது இடத்தில் இருப்பதும் இந்தியாவை ஒரு விவசாய நாடாக இன்னும் உயர்த்திக் காட்டுகிறது.

அமெரிக்கா

மற்ற மூன்று நாடுகளைவிட அமெரிக்காவில் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவு. குறைந்த விவசாயிகள் நிறைய நிலங்களுடன் விவசாயம் பார்ப்பதுதான் அமெரிக்காவின் விவசாய முறை.
ஆனாலும் விவசாய உற்பத்தி ஏற்றுமதியில் நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறது அமெரிக்கா. விவசாயத்தில் முக்கியமாக இடம்பிடிக்கும் அமெரிக்க மாகாணம் கலிஃபோர்னியா. அமெரிக்கா அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகள் கனடா, சீனா, மெக்சிகோ மற்றும் ஜப்பான்.

பிரேசில்

விவசாய உற்பத்தியில் நான்காம் இடத்தில் பிரேசில் இருப்பதற்கான காரணம் கரும்பு உற்பத்தி. 1990களில் விவசாயம் செய்பவர்கள் மொத்த தொழிலாளர்களில் 20 சதவீதம் இருந்தனர். ஆனால், இன்று இது 8 சதவீதமாக குறைந்திருக்கிறது. கரும்பு போக சோயாபீன்ஸ், கோழி இறைச்சி உற்பத்தியும் இந்த நாட்டில் அதிகம். ஏற்றுமதியைப் பொறுத்தளவில் சீனாதான் நம்பர் ஒன் இடத்தைப் பிடிக்கிறது.

டி.ரஞ்சித்