புலிகளால் விதவையாக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் சமூக ஆர்வலர்!



சுந்தரவனக்காடுகளைப் பற்றி நிறைய கதைகள் இருக்கின்றன. அவற்றில் மனதை உறைய வைக்கும் கதை இது. உலகின் மிகப்பெரிய மாங்குரோவ் காடுகளில் ஒன்று, சுந்தரவனம். மேற்கு வங்காளத்திலிருந்து வங்காள தேசம் வரையில் பரந்து விரிந்திருக்கும் இந்தக் காட்டின் பரப்பளவு, 10,277 சதுர கிலோமீட்டர். 
நூற்றுக்கும் மேலான வங்காளப் புலிகள் (Bengal Tigers) வாழும் இடம் இது. ஒரே இடத்தில் அதிகளவில் புலிகள் வாழும் காடும் இதுவே. சுந்தரவனக் காட்டில் கிடைக்கின்ற தேனுக்கு உலகம் முழுவதும் செம மவுசு.

இன்னொரு பக்கம் சுந்தரவனக்காட்டில் வாழும் ஆண்களை மிகவும் துணிச்சல் மிகுந்தவர்கள் என்கின்றனர். காரணம், சுந்தரவனத்தில் வசிக்கும் மக்களின் முக்கிய வாழ்வாதாரமே தேன் விற்பனைதான். காட்டுக்குள் சென்று தேனைச் சேகரிக்க வேண்டும் என்றால் முதலை, புலியின் கொடூரத் தாக்குதல் மற்றும் விஷப்பாம்புகளின் கடியைக் கடந்து சென்றாக வேண்டும்.
இதுபோக பாதைகள் கரடு முரடாக இருக்கும்.

அதில் நடந்து செல்வது மிக சிரமம். அடர்ந்த மரங்களின் காரணமாக பகல் நேரத்திலேயே வெளிச்சம் இருக்காது. நீர்நிலைகள் எல்லாம் இருண்டு, தெளிவற்று இருக்கும். அதில்தான் முதலைகள் இருக்கின்றன. 

அந்த நீரை விஷப்பாம்புகள் சீண்டியிருக்கும். அதனால் அதில் பாம்பின் விஷம் கூட பரவியிருக்கலாம். காடு இருண்டிருந்தாலும் புலிகளின் கண்களுக்கு மனிதர்கள் சுலபமாக அகப்பட்டு விடுவார்கள். ஆனால், மனிதர்களின் கண்களுக்குப் புலிகள் அகப்படுவது சிரமம்.  

இவ்வளவு ஆபத்துகளைக் கடந்துதான் சுந்தரவனக்காடுகளின் ஆண்கள் தேனைச் சேகரிக்கின்றனர். இப்படித் தேனைச் சேகரிக்கச் செல்லும்போது, அடிக்கடி யாராவது ஒருவர் புலிகளுக்கு இரையாகின்றனர் அல்லது பாம்பு கடித்தோ, முதலைகள் தாக்கியோ மரணமடைகின்றனர். அவர்களது குடும்பம் அனாதையாகிறது; வறுமையில் தத்தளிக்கிறது.

இதுவரைக்கும் 3000க்கும் மேலான பெண்களின் கணவர்கள் புலிகளால் தாக்கப்பட்டு, இறந்துபோயிருக்கின்றனர். இவர்களைப் புலிகளால் விதவையாக்கப்பட்டவர்கள் என்கின்றனர்.
தினமும் மாலை நேரமானாலே போதும். தேன் சேகரிக்கப் போயிருக்கும் கணவர் எப்போது வருவார் என்று கவலையுடன் அவரது  மனைவி காத்திருப்பார். 

ஒருவேளை இரவிலும் கணவர் வரவில்லை என்றால் மனைவி மட்டுமல்ல, அந்த கிராமமே  வீடு திரும்பாதவருக்காக காத்திருக்கும். அவரைத் தேடி காட்டுக்குள் போவார்கள். ஒரு நாள் கடந்தும் அவர் திரும்பவில்லை என்றால் புலி அடித்துவிட்டது என்று முடிவுக்கு வந்துவிடுவார்கள். அந்த மனைவி புலிகளால் விதவையாக்கப்பட்டவர் ஆகிவிடுவார். இது சுந்தரவனக் காட்டில் தொடர் கதையாகவே இருந்தது.

‘‘கங்கையில் அணை கட்டுவதற்கு முன்பாக இறந்தவர்களின் உடல்களை நதியில் மிதக்கவிட்டு மறு கரைக்கு அனுப்புவது வழக்கம். அந்த நாட்களில் கரைப்பகுதியில் உள்ள காடுகளில் வாழும் புலிகளுக்கு இறந்தவர்களின் உடல்கள்தான் உணவாகும். 

இப்படித்தான் மனித உடலைப் புலிகள் உண்ண ஆரம்பித்தன. நாளடைவில் மனித உடலின் சுவை புலிகளுக்கு மிகவும் பிடித்துப்போனது. கங்கையில் அணை கட்டிவிட்டார்கள். இறந்தவர்களின் உடல்களை மறு கரைக்கும் அனுப்புவதில்லை. ஆனால், சுவை கண்ட புலிகளுக்கோ மனித உடல் தேவை.  அதனால் மனித உடலைத் தேடி புலிகள் வர ஆரம்பித்துவிட்டன...’’ என்கின்றனர்.

கடந்த 2010ம் வருடம் இயற்கைக்காக நிதியளிக்கும் ஓர் அயல்நாட்டைச் நேர்ந்த அமைப்பு சார்பாக சிரஞ்சிப் என்ற அதிகாரி சுந்தரவனக்காடுகளில் பயணம் செய்தார். சுந்தரவனப் புலிகள் காப்பகத்துக்குள் பயணிக்கும்போது, ஒரு வங்காளப் புலி அவரது கண்ணில் பட்டது. அதைப் பார்த்ததும் வியப்பில் அசந்து போய்விட்டார்.

 “அதுவரை நான் பார்த்த புலிகளைப் போல சுந்தரவனப் புலி இல்லை. அசாதாரணமாக இருந்தது. மனிதர்களைவிட மிக வேகமாக நீச்சலடித்துக்கொண்டு சென்றது. அதன் தோற்றமும் பிரமாண்டமாக இருந்தது...” என்கிறார் சிரஞ்சிப். “இந்தப் புலிகளிடம் சிக்கினால் உயிர் பிழைப்பது கடினம்...” என்கின்றனர் சுந்தரவனக் காட்டில் வசிக்கும் மக்கள்.

கடந்த 2008ம் வருடத்திலிருந்து 2022ம் வருடம் வரையில் சுந்தரவனத்தில் 275 மனிதர்களைப் புலிகள் கொன்றிருக்கிறது. இதுபோக 349 கால்நடைகளையும் தாக்கியிருக்கிறது. இந்தியா முழுவதும் வருடத்துக்கு 100 பேராவது புலிகளால் தாக்கப்பட்டு மரணமடைகின்றனர். புலியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர் மரணிப்பதோடு, அவரைச் சார்ந்த குடும்பத்தினர் பொருளாதார ரீதியாக கடும் சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர்.

மட்டுமல்ல, மனரீதியான பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். புலியின் தாக்குதலில் இருந்து உயிர்பிழைத்தவர்களின் நிலையும் கடினம்தான். அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. மீண்டும் காட்டுக்குள் போக பெரிய மனத்தடை ஏற்படும். “சுந்தரவனக் காடுகளில் வாழும் மக்களுக்கு ஏற்படும் மன ரீதியான பாதிப்புகளுக்கு, 72 சதவீத காரணம் புலிகளின் தாக்குதல்தான்...”  என்கிறார் புலிகளின் விஞ்ஞானியான ஆசிஷ்.

இந்நிலையில் கடந்த 2022ம் வருடம் சமூக ஆர்வலரான நீட்டி கோயல், சுந்தரவனக்காடுகளில் வாழும் மக்களைச் சந்தித்தார். புலிகளால் விதவையாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை
3,000த்தைத் தாண்டிவிட்டது என்று கேள்விப்பட்டதும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். ‘காட்டுக்குள் புலிகள் இருக்கும்போது, எதற்காக அங்கே செல்ல வேண்டும்’ என்று புலிகளால் விதவையாக்கப்பட்ட பெண்களிடம் கேட்டிருக்கிறார் நீட்டி.

‘காட்டுக்குள் செல்லாமல் எப்படித் தேனைச் சேகரிப்பது? தேன் கிடைக்கவில்லை என்றால், எங்களுக்கு வருமானமே இல்லை. ஒன்று புலி எங்களைக் கொல்லும். இல்லையென்றால் பசியில் சாவோம்...’ என்று அந்தப் பெண்கள் சொல்ல, அப்படியே நிலைகுலைந்து போனார் நீட்டி. புலிகளின் தாக்குதலால் கணவர்களை இழந்த பெண்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தார் நீட்டி.

பண உதவியோ அல்லது உணவோ ஒரு சில நாட்களுக்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால், அது அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்த வகையிலும் பயன்படாது என்று மீன் வளர்ப்புத் தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தந்தார் நீட்டி.  

இன்று புலிகளால் விதவையாக்கப்பட்ட பெண்களில் நூற்றுக்கும் அதிகமானோர் மீன் வளர்ப்பில் ஈடுபடுகின்றனர். தங்களின் வீட்டுக்கு முன்பே குளத்தை வெட்டி மீன்களை வளர்க்கின்றனர். குளத்தை வெட்டுவது மட்டுமே அந்தப் பெண்களின் பணி. 

மீன் வளர்ப்புக்குத் தேவையான மற்ற விஷயங்கள் அனைத்தையும் நீட்டி செய்து தருகிறார். மீன் வளர்ப்பு மூலம் அந்தப் பெண்களுக்குத் தினமும் குறைந்தபட்சம் 350 ரூபாய் கிடைக்கிறது. அவர்களின் உணவுத் தேவைக்கும் மீன்கள் பயன்படுகிறது.

சுந்தரவனத்தைச் சுற்றியிருக்கும் மீன் சந்தை முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் வரை பல இடங்களுக்கும் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. தேன் எடுப்பதும் தொடர்கிறது.
முன்பு போல் புலியின் தாக்குதல்..?அரிதாக நடக்கிறது!

த.சக்திவேல்