சிறுகதை - நேரம் வரட்டும் சூரி



எத்தனை முறைதான் அதே வீடியோவைப் பார்ப்பது?

இருக்கிற நூற்று சொச்ச சதுர அடி போதாமல் கர்ப்பம் தாங்கிய பெண்ணைப் போல், சற்றே பிளாட்ஃபார்ம் வரை பிதுங்கி நின்ற குளிர்ப்பெட்டி. அதன் மேல் தாளம் போட்டபடி சிறுவன் ஒருவன் ஏதோ கடைக்காரரிடம் கேட்கிறான். ஐஸ்கிரீம் பார்லரில் வேறென்ன கேட்பான்? ஐஸ்கிரீம்தான். குளிர்ப்பெட்டியின் மூடியைக் கடைக்காரர் திறக்கிறார். குனிந்து ஐஸ்கிரீமை எடுத்துக் கொடுப்பதற்குள்...

கடையின் மூலையிலிருந்த சிசிடிவி காமிராவின் பார்வையில் தெருவின் மறுபக்கத்திலிருந்து ஒரு கார் படுவேகமாக நுழைகிறது. நடுவிலிருக்கும் மீடியனை உடைத்து அதன் மேல் ஏறிக் குதித்து ஐஸ்கிரீம் கடைக்குள் பாய்கிறது. ஓட்டி வந்தவன் பன்னிரெண்டு வயது சிறுவனாம். அதெல்லாம் அப்போது தெரியவில்லை. போலீஸ் விசாரணையில்  பிற்பாடு வெளிவந்த தகவல்கள்.

யூடியூப்பில் தொடங்கி இன்னபிற சமூக ஊடகங்களிலும், டிவி சானல்களிலும் அதுவும் டிவியில், அந்த இருபது நொடிக் காட்சியைத் திரும்பத் திரும்பப் போடும்போது...
மற்றவர்களுக்கு அது ஒரு விபத்து மட்டுமே. இருபது நொடி ரீல். டிவியில் பேசு பொருள்.

ஒவ்வொரு முறை அதைப் பார்க்கும்போதும் சூரியின் உடல் முழுக்க வலித்தது. கண்களில் நீர் ததும்பி நின்றது. எதற்காக அவனது மகன் தனியாகப் போகவேண்டும்?
“அம்மாவோட போயிருக்கலாமே அர்ஜூ...” என்று சொல்லி அழத்தான் முடிகிறது அவனால். அர்ஜுன் அதைக் கேட்கும் நிலையிலா இருக்கிறான்?
உயிருடன்தான் இருக்கிறான். ஆனால், ஒரு கார்ப்பரேட் ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுயநினைவு ஏதுமின்றி. அதன் வாசலில் சூரி தவம் கிடக்கிறான்.

அதே ஆஸ்பத்திரியின் மற்றொரு பிரிவில் அவனது அப்பா மகுடேஸ்வரன் இரண்டு வாரங்களாகப் படுக்கையில் கிடக்கிறார். போன வருடந்தான் சதாபிஷேகம். தினமும் அவர் செய்து வந்த  பூஜைகள் என்ன... விரதங்கள் எத்தனை? ஆனாலும் , ஊழ்வினையும், கர்மாவும் விரித்த  அம்புப் படுக்கையில் உடலைக் கிடத்தாமல் உயிர் போகாது போல...

அவருக்கு சுயநினைவு அவ்வப்போது வந்து போகிறது. இரண்டு வாரங்களாக சூரியின் அண்ணன் சங்கரனும், தங்கையும் வெளியூரிலிருந்து வந்து அவனது வீட்டில் தங்கியிருக்கின்றனர். சங்கரனின் மனைவி ஒரு வாரத்திற்குள் மாமனார் போய்விடுவார் என்று காத்திருந்துவிட்டு, தனது பிறந்தவீட்டிற்குப் போய்விட்டாள்.

அப்பா போகப்போகிறார் என்கிற வருத்தத்தில் ஓடோடி வந்தவர்கள், இன்னமும் ‘இழுத்துக் கொண்டிருக்கிறாரே’ என்னும் சோகத்தில் இருக்கிறார்கள். ‘பகவான் சீக்கிரம் கூட்டிண்டு போகக் கூடாதா’ என்பதெல்லாம் வந்த வேலை சீக்கிரம் முடிந்தால் அவரவர் வேலையைப் பார்க்கப் போகலாமே  என்கிற தன்னல வேண்டுதல் அல்லாமல் வேறென்ன?

மகுடேஸ்வரனின் உடல்நிலை மட்டும் சரியாக இருந்திருந்தால், அர்ஜுன் இருக்கும் நிலையில் அவனது பிரச்னைகளை மந்திர, தந்திர உபாயங்களைப் பிரயோகித்து எளிதில் சமாளித்திருப்பார். அவருக்கு அர்ஜுனின் ஜாதகமும், கிரகநிலைகளும் அத்துப்படி. பரிகார பூஜைகளும் வீட்டில் அமர்க்களப்படுத்தியிருப்பார்.

அவ்வளவு ஏன்... ஒன்றுமே தெரியாதவர் போல் அர்ஜுன் கூடவே கடைக்குச் சென்று அவனைக் காப்பாற்றியிருப்பார். இல்லையென்றால், ஏதாவது காரணத்தைச் சொல்லி அவனை வெளியில் அனுப்பியிருக்கவே மாட்டார். ஜோசியக் கணக்குகளில் அப்படி ஒரு துல்லியம்.ஏனெனில் அவர் வந்த பரம்பரை அப்படி. 

பூர்வீகம் கேரளா, ஆலப்புழையை அடுத்த மங்கொம்பு கிராமம். ஒருபுறம் வரிசையாக வீடுகள், மறுபுறம் சாலை. நடுவில் சலசலவென்று ஓடும் மணிமாலா ஆறு என்று  இயற்கையின் பேரெழிலைக் கொண்ட சிறிய கிராமம். கடல் மட்டத்திலிருந்து அப்பகுதி சற்று தாழ்ந்திருப்பதால் குட்டநாடு என்று அப்பகுதிக்குப் பெயர்.

பரம்பரையாகவே யார் கற்றுத் தந்ததோ, தானாகவே வந்ததோ என்னவோ தெரியாது என்று அப்பா சொல்வார். அவரது சிறுவயதில், சுற்றுப்புறங்களில் யாரையாவது பாம்பு கடித்துவிட்டால், அவர்களைத் தூக்கிக் கொண்டுவந்து வீட்டின் வாசலில் கிடத்தி விடுவார்களாம்.“சாமி... நிங்கள்தன்னே ரட்சிக்கணம்...” என்று கைகூப்பி நிற்பார்கள்.

தாத்தா தன்னுடைய முறுக்கான் பெட்டியை மடக்கி ஊஞ்சலில் வைத்துவிட்டு தோளிலிருக்கும் துண்டை எடுத்துக் கிணற்றில் நனைத்து எடுத்து வருவார். பாம்பு கடித்தவனை ஒரு நோட்டம் விடுவார். நேரம் கடந்துவிட்டதை அறிந்தால் முடியாது என்று அனுப்பிவிடுவார். யமனின் பாசக்கயிறு இறுக்கிவிட்டிருந்தால் அதுவே அவனது விதிப்பயன் என்றறிவார்.

பெரும் சக்தியோடு யுத்தம் புரிய அவர் யார்?

கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறமாதிரி இருந்தால் போதும். அது கடிபட்டவனின் கண்களில் தெரியும். சட்டென்று ஈரத்துண்டை கடித்தவனின் உடம்பின் மீது போர்த்திவிட்டு சற்று ஜெபிப்பார். பின்னர் துண்டை எடுத்து ஈரம் போக முறுக்கிப் பிழிவார். துண்டிலிருக்கும் தண்ணீர்த் திவலைகள் தரையை நோக்கிப் பாய, அடுத்த கணம் கடிபட்டவனின் உடலில் அசைவு காணும். ஓரிரு நிமிடங்களில் எழுந்து உட்கார்ந்து விடுவான் அவ்வளவுதான். 

விஷம் இறங்கிவிட்டது என்று அர்த்தம்.“செல்லு...” என்று ஒற்றை வார்த்தையில் சொல்வது மட்டுமல்லாமல், காசு பணம் எதுவும் வேண்டாமென்று சொல்லி அனுப்பிவிடுவார். சில சமயம் , மங்கொம்பு பகவதி கோயிலில் உள்ள பாம்புக்காவுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுப் போகச் சொல்லுவார்.

அவரது மந்திரப் பிரயோகத்தில், கடிபட்டவன் பிழைக்கும் அதே வேளையில் கடித்த பாம்பு உயிரை விட்டிருக்கும் என்று அவருக்குத் தெரியும். சர்ப்ப தோஷக் கணக்கு அவர் வகையில் கூடிக்கொண்டே போகிறது என்றும், அது அவருடைய சந்ததியைப் பாதிக்கும் என்பதையும் அறிவார்.

வினையை அவரா விதைத்தார்..? ஆனால், அதனை அவரும் அவரது சந்ததிகளும் அல்லவா அறுக்கும்படி ஆகிவிட்டது?

அப்படித்தான் ஆயிற்று. அவரது ஒரே மகன் மகுடேஸ்வரனின் திருமணம் முடிந்து முதல்  வருடத்திற்குள் மருமகள் பிரசவத்தில் இறந்து போனாள். இரண்டாம் கல்யாணம்தான் தங்கியது. அதிலும், சீமந்த பேரன் பிறந்து ஓரிரு வருடங்களில் ஜன்னி வந்து இறந்து போனான்.அப்புறம் பிறந்தவர்கள்தான் இப்போது மகுடேஸ்வரனின் இறுதி மூச்சிற்காகக் காத்திருக்கின்றனர்.

அர்ஜுன் ஐசியூவிற்கு கொண்டு வரப்பட்டதும் டாக்டர் விபரமாகவே கூறிவிட்டார். அவன் சிறு பையன் என்பதுதான் அந்த விபத்தில் ஆறுதலான விஷயம். ஏனெனில் வண்டி மோதும்போது அவனது சிறு உடல் அடிபடக்கூடிய சதவிகிதம் மிகவும் குறைவு. கடைக்காரர் ஆஸ்பத்திரிக்கு வரும்போதே கோமாவிற்குப் போய்விட்டார்.

அதுபோன்று சீரியசாக ஏதும் ஆக வாய்ப்பில்லைதான். ஆனாலும், கன்கஷன், கழுத்தெலும்பு, இடுப்பு எலும்புகள் முறிவிற்கெல்லாம் கேட் ஸ்கேன் செய்ய வேண்டும். இரத்த இழப்பிற்கு ஓரிரண்டு பாட்டில்கள் ரத்தம் ஏற்றியாயிற்று. 

ஐவி ப்லூயிட், மார்பின் கலந்து ஏற்றினால் வலி குறைய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், உள்காயம் தெரியாமல் என்ன மேற்கொண்டு செய்வது? அர்ஜுன் எந்தவிதமான சிகிச்சைக்கும் ரெஸ்பான்ஸ் செய்யவில்லை. மூளையில் அடிபட்டிருக்கிறதா என்று பார்ப்பதோடு அங்கும் ரத்தக் கசிவு இருக்கிறதா என்றும் பார்க்கவேண்டும்.டாக்டர்கள் சூரியையும் அவனது மனைவியையும் அழைத்து நிலைமையைக் கூறி அனுப்பிவிட்டார்கள்.

சூரியின் மனைவிக்குத்தான் ஆறுதல் சொல்ல யாருமில்லை. உண்மையில், அர்ஜுன் அவளை நச்சரித்துத்தான் ஐஸ்கிரீம் வாங்குவதற்கு காசு வாங்கிக் கொண்டு போயிருந்தான். அதன் குற்ற
உணர்ச்சி வேறு அவளைப் படுத்திக் கொண்டிருந்தது. அவளை அப்படி நினைத்து வருத்தப்படவேண்டாம் என்று சூரி சொன்னாலும் அவள் அதைக் கேட்பதற்குத் தயாரில்லை.
தாத்தா மகுடேஸ்வரனும் பேரன் அர்ஜுனும் ஒரே ஆஸ்பத்திரியில்... இருவரும் கோமாவில். சூரிக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போயிருந்தான்.

அவனது அப்பா கோமாவிற்குப் போவதற்கும் முன்னால் சரியாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். அவனது அண்ணனும் தங்கையும் கூட “அப்பா நன்றாகத்தானே இருக்கார். எதுக்கு இப்போ எங்களை வரச் சொன்னாய்?” என்று அவனை ஒரு பிடிபிடித்தனர்.“எனக்கென்ன தெரியும்? அப்பா சொன்னார் அவ்வளவுதான். எதுக்காகன்னு கேட்டா சொல்லிடுவாரா? நம்மளோட எக்ஸ்பீரியன்ஸ்ல அப்பா இதுமாதிரி சொன்னா ஏதோ இருக்குன்னு அர்த்தம்...” என்றான் சூரி.

“அப்படி என்ன சொன்னார்?”

“என்னைக் கூப்பிட்டு ‘அர்ஜுனை  ஜாக்கிரதையா பாத்துக்கோ. கிரகங்கள் சரியில்லை. தனியா அனுப்பாதே. அவனுக்கு என்னோட ஆசீர்வாதம் எப்பவும் உண்டு. நான் எங்கே இருந்தாலும் அவனுக்கு ஒரு பாடிகார்ட் மாதிரியாக்கும்’ன்னு சொன்னார். இதைக் கேட்ட பிறகு அவர் தன்னோட கடைசிக் காலத்தில் இருக்கிற மாதிரித்தானே நமக்குத் தோணும்?’’ என்றான் சூரி.

ஜாதக ரீதியாகவும் தன்னுடைய இறுதிக்காலத்தைப் பற்றி எப்பவோ பேசியிருக்கிறார். ஜாதகத்தில் ஏழாம் இடம் மாரக வீடு என்பார். வராஹமிஹிரர் கணிப்பின் அடிப்படையில் தன்னுடைய மரணத்தைக் கணித்து வைத்திருக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

சத்தியமாக அவனுக்கு எதுவும் புரிந்ததில்லை. அவர் ஜோசியம் கற்றுக்கொள்ளவில்லை. எனினும் தாத்தா கூடவே இருந்ததில் ஜோசியக்கலை அவருக்கு நன்றாக அத்துப்படியாகியிருந்தது. 

வீட்டை விட்டு ஆஸ்பத்திரிக்கு கிளம்பும்போதுகூட “வீட்டுக்கு வந்துட்டு எடுத்துண்டு போ... நேரா தூக்கிண்டு போயிடாதடா...” என்றார் தெளிவாக.இப்போது ஏதேதோ தொடர்பில்லாமல் பேசுகிறார். டாக்டரிடம் போய்ச் சொன்னால், அவர் உட்கொள்கிற மருந்துகளின் பக்கவிளைவுகள் அப்படித்தான் இருக்குமாம். “நேரம் வரட்டும்  சூரி...” எங்கேயோ பார்த்தபடி ஒரு முறை சொன்னார்.

“எதுக்குப்பா... மாத்திரை இப்பத்தானே கழிச்சேள்..?” என்றான் சூரி.வெறுமையாய் அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உனக்கு எங்க புரியப் போறது. எல்லாம் கணக்காக்கும்...” என்றார் பதிலுக்கு. அது இப்போது நினைவிற்கு வந்தது.அர்ஜுனுக்கு நிகழ்ந்த ஆக்சிடெண்டைத்தான் குறிப்பிட்டாரா? ஒருவேளை  அவரே கோமாவிலிருந்து வெளிவந்து, பேரனுக்காக ஏதாவது மந்திரங்கள் ஜெபித்து காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருக்கிறாரோ? அதற்காகத்தான் உயிரைப் பிடித்தபடி படுத்துக் கிடக்கிறாரோ?

அப்படி ஏதாவது செய்தாலும் பரவாயில்லை என்று வேண்டிக் கொண்டான். “அப்பா... எழுந்து வந்து உங்க அர்ஜூவைக் காப்பாத்திக் கொடுங்கோ...”டாக்டர்கள் அர்ஜுனுக்கு கெடு விதித்துவிட்டனர். இன்னும் எட்டு மணி நேரத்தில் அவன் கண் விழிக்கவில்லை எனில், மருந்துகள் வேலை செய்யவில்லை என்றும், அதன் அர்த்தம் மூளைச்சாவு என்றும் புரிந்து கொள்ளவேண்டுமாம்.

சூரி தனது மகன் அர்ஜுனின் தலைமாட்டில் அமர்ந்து கொண்டான். மானிட்டரில் ஒளிப்புள்ளிகளின் ஓட்டமும் அடுத்தடுத்த படுக்கைகளிலிருந்து எழும் பீப் பீப் என்று நிற்காமல் ஒலிக்கும் சப்தங்களும் அவனை என்னவோ செய்தன.‘அர்ஜூ...’ அவன் கையைப் பிடித்து முதன்முறையாக நடந்ததும் ‘கால் வலிக்கிறதப்பா...’ என்று நடித்து தூக்கிக் கொள்ளச் சொன்னதும் ஞாபகத்திற்கு வந்தது. 

சட்டென்று யாரோ கையைத் தொடுவது போல் உணர்ந்தான். கண் விழித்துப் பார்த்தால், அர்ஜுன் மிகுந்த சிரமத்துடன் இடது கையை உயரத்தில் காட்டியபடி ’தாத்தா...’ என்றான். வலதுகை சூரியைத் தொட்டுக்கொண்டிருந்தது.

ஒலி வெளிவரவில்லையெனினும், அவனது உதடுகளின் அசைவில் அப்படித்தான் புரிந்து கொண்டான் சூரி.தூக்கத்திலிருந்து முழுமையாக விழித்தபோது சூரிக்கு சட்டென்று புலப்பட்ட உண்மையின் வெளிச்சம் அவனுள் மகிழ்ச்சியைப் பாய்ச்சியது. 

அர்ஜுன் பிழைத்துக் கொண்டான்! “அர்ஜூ...” என்று அவன் பெயரை மீண்டும் மீண்டும் கூறி அவனை அசைத்தான்.மறுபடி ‘தாத்தா...’ என்பது போல் அவனது உதடுகள் அசைந்தன.சூரி அவனது கைகளைப் பற்றிக்கொண்டான். மேற்கூரையைப் பார்த்தான். ஒன்றும் புரியவில்லை.

அவனுடைய அப்பா பேரனைக் காப்பாற்றிவிட்டாரா?

எதுவும் புரியவேண்டாம். அவனது மகன் பிழைத்துக் கொண்டான். அது போதும். விரல்கள் நடுநடுங்க மனைவிக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். பாவம்... அவள் ஒரு வாரமாய் படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறாள். வேண்டாத தெய்வமில்லை.அப்பாவிடம் வேண்டிக் கொண்டது வீண் போகவில்லை. அவர் காப்பாற்றித் தந்துவிட்டார். 

கோமாவில் இருந்தால் என்ன? அவரிடம் போய்ச் சொல்லவேண்டும் என்று நினைத்தபடி எழுந்தபோது, அவர் சொன்னது நினைவிற்கு வந்தது. “நேரம் வரட்டும் சூரி...”  என்றாரே ..  அப்படியென்றால்..?சட்டென்று  அப்பாவின் வார்டை நோக்கி  சூரி ஓட்டமும் நடையுமாக விரைந்தான்.

ஹெச்.என்.ஹரிஹரன்