கீரைகள், பாதாம், மஞ்சள், பீர்க்கங்காய், விதை வகைகள், தானியங்கள் போன்றவை ஆரோக்கியமானதா?



ஆண்டாண்டுகளாக, நாம் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல உணவுகளை விரும்பிச் சாப்பிடுகிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். கீரைகள், பாதாம், மஞ்சள், பீர்க்கங்காய், விதை வகைகள், தானியங்கள் போன்றவை ‘சூப்பர் ஃபுட்ஸ்’ என போற்றப்படுகின்றன. 
ஆனால், இவைகளுக்குள் மறைந்து இருக்கும் ஓர் அபாயகரமான சக்திதான் - ஆக்சலேட் (Oxalate). இதுகுறித்துதான் உயிரியல் வல்லுனரும் டயட் நிபுணருமான சாலி கே.நார்டன் தனது புத்தகமான ‘டாக்சிக் சூப்பர் ஃபுட்ஸ்’ (Toxic Super foods) மூலம் எச்சரிக்கிறார்.

ஆக்சலேட் என்றால் என்ன?

ஆக்சலேட் என்பது ஓர் இயற்கையான வேதிச் சேர்மம். இது தாவரங்களில், குறிப்பாக இலைகளில், விதைகளில் மற்றும் விதை முடிச்சுகளில் காணப்படும் ஒரு பாதுகாப்புக் கவசம்.
தாவரங்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள இயற்கையாகவே கொண்டுள்ள ஒரு வேதியியல் ஆயுதம் இது. 
அதாவது விலங்குகளுக்கு பற்கள், கொம்புகள், நகங்கள் போல இது தாவரங்களுக்கான பாதுகாப்பு கவசம்.ஆக்சலேட் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மூல ஆக்சலிக் அமிலம்; ஆக்சலேட் உப்புகள். இவை தாவரங்களில் கால்சியம், இரும்பு, மெக்னீசியம் போன்ற கனிமங்களுடன் இணைந்து மெதுவாகக் கரையக் கூடிய கிரிஸ்டல்களாக உருவாகின்றன.

ஆக்சலேட் உடலில் என்ன செய்கிறது?

நாம் ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை உண்ணும்போது, சத்துகள் குடலிலேயே உறிஞ்சப்படாமல் கழிவாக வெளியேறலாம்.ஏற்கனவே உட்கொள்ளப்பட்ட ஆக்சலேட்களால் குடல் சுவர் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மேலும் ஆக்சலேட் அதிகமாக உறிஞ்சப்படுகிறது. இதுதான் சிறுநீரக கற்கள் உருவாவதற்கு முக்கிய காரணியாகிறது.

ரத்த ஓட்டத்தில் கலந்து, மூட்டு, தசை, நரம்பு, மூளை மற்றும் தோல் உள்ளிட்ட திசுக்களில் படிகங்களாக சேமிக்கப்படும்.மூட்டு வலி, நரம்பியல் பிரச்னைகள், சோர்வுத் தன்மை, தலை வலி , மன அழுத்தம், மூளை மந்தம் போன்றவை ஏற்படுகின்றன. மட்டுமல்ல, குடல் சுவர்களில் பாதிப்பு, துளைகள் உண்டாகலாம்.

சாலி நார்டன் கூறும் முக்கியமான முன்னெச்சரிக்கை என்ன தெரியுமா?

“நாம் சாப்பிடும் உணவின் அளவைக் காட்டிலும், எவ்வளவு ஆக்சலேட் நம் உடலில் ஊடுருவுகிறது என்பதே முக்கியம்...”இதைத் தீர்மானிக்கும் முக்கிய காரணி குடல் சுவர். லீக்கி கட் - குடல் சுவர் துளையுடன் கூடிய நிலையில் இருந்தால், ஆக்சலேட் எளிதில் ரத்தத்தில் கலக்க முடியும். குடலில் இருக்கும் நல்ல நுண்ணுயிரிகள் (மிக்சோனெல்லா, ஓக்ஸலோபாக்டர் போன்றவை) ஆக்சலேட்டை உடைத்து வெளியேற்ற உதவுகின்றன.

ஆனால், ஏற்கனவே அதிக அளவிலான ஆன்டிபயாடிக் பயன்பாடு, மோசமான உணவுகள் மற்றும் வாழ்வியல் ஆகியவை இந்த நுண்ணுயிரிகளை பெரும்பாலும் அழித்துவிடுகின்றன அல்லது குறைத்து விடுகின்றன.குறிப்பாக, பிரசவத்திற்கான அறுவை சிகிச்சை, பாட்டில் பால், அதிக ஸ்டெரிலைசேஷன் போன்றவை  இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை அழித்து விடுகின்றன.

இதனால் எவ்வித தடையும் இன்றி ஆக்சலேட் தனது ஊடுருவுகளை தடையின்றி செய்கின்றன. இதனை ‘Your Baby’s Microbiome’ என்கிறார்கள்.200 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ஆக்சலேட் ஒரு நச்சு என எடுத்துக்காட்ட பலவிதமான ஆராய்ச்சிகள் உள்ளன. ஆனால், எந்த ஆராய்ச்சியும் ஆக்சலேட் குறித்த முழுமையான விழிப்புணர்வை உலக மக்களிடம் இன்னும் ஏற்படுத்தவில்லை.

இதற்கான காரணங்கள்:

* தொன்று தொட்டு கடைப் பிடிக்கப்பட்டு வரும் ஆரோக்கிய உணவுகள் குறித்த விழிப்புணர்வுகள்.

* சைவ உணவுக் கலாசாரத்திற்கு முன்னுரிமை தரும் உலகளாவிய உந்துதல்.

* மீடியா மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் செய்யும் தாவர உணவுகளை ஆதரிக்கும் பிரசாரங்கள்.

* இதுதான் ஆரோக்கியம் என பட்டியலிடப்பட்டு உருவாக்கப்பட்ட உணவுகளின் மீதான நம்பிக்கை.சரி, எதுதான் ஆரோக்கியமான உணவு? இந்த ஆக்சலேட் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் ஆபத்திலிருந்து தப்பிக்க முடியுமா? தீர்வுகள் உள்ளதா?சாலி நார்டன் தனது ‘Toxic Super foods’ நூலில் தீர்வுகளும் குறிப்பிட்டிருக்கிறார்.

* குறைந்த ஆக்சலேட் கொண்ட உணவுகள்.

* ஆக்சலேட் அளவை திடீரென குறைப்பது கூட பெரும் ரியாக்‌ஷனை ஏற்படுத்தும். ‘Oxalate dumping’ எனப்படும் அதிர்வுகள் ஏற்படலாம்.

* நல்ல நுண்ணுயிரிகளை ஊக்குவிக்கும் உணவுகள் - ப்ரொபயாடிக் உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.

மருத்துவர்கள் இதனை உணர்ந்து நோயாளிகளின் குறைகளுக்கு ஆணிவேரிலிருந்து தீர்வு காண வேண்டும்.

தினந்தோறும் எடுத்துக்கொள்ளும் உணவில் உயர் ஆக்சலேட் உள்ள உணவுகளும் இருக்கின்றன. உதாரணமாக கீரைகள் மற்றும் காய்கறிகள்.முளைக்கீரையில் மிக அதிக அளவில் ஆக்சலேட் உள்ளது. பீட்ரூட் மற்றும் அதன் இலைகள், கொத் தமல்லி இலை, பீன்ஸ் வகைகள், சுவீட் பொட்டேட்டோ, தக்காளி விதைகள் - குறிப்பாக சாறு வடிக்காத போது, ஊது கத்திரிக்காய்... ஆகியவற்றில் உயர் ஆக்சலேட் உணவுகள் உள்ளன.

அதுபோலவே பருப்பு, தானியங்கள் & உலர் பழங்களிலும் உள்ளன. முளைகட்டிய பருப்பு வகைகள், நாட்டு வகை சோளம், சோயா வகைகள், முந்திரிப் பருப்பு, நிலக்கடலை, அல்மண்ட், வால்நட், பிஸ்தா, ஹஸல்நட், சியா விதை ஆகியவற்றையும் அதிகம் உண்ணக் கூடாது. இவற்றிலும் ஆக்சலேட் அதிகளவில் உள்ளன.பானங்களும் விதிவிலக்கல்ல. கோகோ மற்றும் டார்க் சாக்லேட், பிளாக் டீ, சிலவகை ஹெர்பல் டீ... இவை மட்டுமல்ல பழங்களிலும் எச்சரிக்கை தேவை.

ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி, டேட்ஸ், புளியம் பழம், அவகாடோ... பிறகு மல்டி கிரெய்ன் தானியங்கள், பாசிப்பருப்பு மாவு, ராகி மாவு, கம்பு, சாமை, வரகு... வெள்ளை ரொட்டி வகைகள்... ஆகியவற்றிலும் ஆக்சலேட் அதிகளவில் உள்ளன.

சரி, ஆக்சலேட் குறைவாக உள்ள உணவுகள் இருக்கிறதா?

இருக்கின்றன. முட்டை, மீன், இறைச்சி, வெள்ளரிக்காய்,பீன்ஸ் வகைகள் (சில), பப்பாளி, குருமணி இலை, கோஸ்... ஆகியவற்றில் ஆக்சலேட் குறைவாக உள்ளன.

அதிகம் ஆக்சலேட் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளக் கூடாது என்றில்லை. அவற்றை தினந்தோறும் அதிக அளவில் எடுத்துக்கொள்ளாமல் குறிப்பிட்ட அளவில் எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்பவர்கள் தயிர், யோகார்ட் போன்ற புரோ - பயாடிக் உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் நல்லது செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சாலி நார்டனின் ‘டாக்சிக் ஃபுட்ஸ்’ நூல், நாம் ஆரோக்கியம் என நினைக்கும் அத்தனை உணவுகளையும் தொகுத்து அதில் உள்ள ஆக்சலேட் குறித்த அளவீடுகளையும்
விளக்கிக் கூறுகிறது.சுருக்கமாகச் சொல்வதென்றால் அதிக சத்தாகத் தெரியும் உணவுகள், சில நேரங்களில் நம் நலத்தை வீழ்த்தும் நச்சாக மாறலாம்..!

ஷாலினி நியூட்டன்