விண்வெளி நாயகன்!
ஆம். 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியர் ஒருவரின் முதல் விண்வெளிப் பயணம் இது என்ற பெருமைகளைப் பெற்றுள்ளது இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க விண்வெளிப் பயணம். நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் அவர் ஜூன் 25ம் தேதி இந்திய நேரப்படி நண்பகல் 12.01க்கு விண்வெளிக்குச் சென்றார்.
 காலநிலை, ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் காரணமாக இவரது பயணம் 7 முறை தள்ளி வைக்கப்பட்டது. நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு அவர் விண்வெளிக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
 இந்தப் பயணம் எப்படிப்பட்டது?
தனியார் வணிக விண்வெளி நிறுவனமான ஆக்ஸியம், ஸ்பேஸால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விண்வெளிக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி வருகிறது. இது, ஆக்ஸியத்தின் நான்காவது AX-4 விண்வெளிப் பயணம்.  கடந்த நாற்பது ஆண்டுகளில் இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் வீரர்கள் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல் முறை என்பதால், இந்த நிகழ்வு உற்சாகத்துடன் பார்க்கப்படுகிறது.  இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா 1984ல் விண்வெளிக்குச் சென்று வந்தார். அவர் சோவியத் தலைமையிலான திட்டத்தின் கீழ் சல்யுட் 7 விண்வெளி நிலையத்தில் ஏழு நாட்கள் 21 மணிநேரம் செலவிட்டார். இதேபோல், போலந்தின் மிரோஸ்லாவ் ஹெர்மாஸ்ஸெவ்ஸ்கி (1978) மற்றும் ஹங்கேரியின் பெர்டலான் ஃபர்காஸ் (1980) ஆகியோர் சோவியத் இன்டர் -காஸ்மோஸ் உதவியுடன் பறந்தனர்.
இதுவரை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூன்று பேர் - நாசா விண்வெளி வீரர்கள் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ராஜா சாரி - விண்வெளிப் பயணங்களை முடித்துள்ளனர். இருப்பினும், இதுவரை ஒரே இந்திய குடிமகனாக ராகேஷ் சர்மா இருந்து வருகிறார். இதற்கிடையில் 2026ம் ஆண்டில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் அனில் மேனன், ரஷ்யாவின் சோயுஸ் MS-29 விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
சரி... சுபான்ஷு சுக்லாவின் பயணம் எப்படியிருக்கிறது?
ராக்கெட் ஏவப்பட்ட சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்குப் பிறகு, க்ரூ டிராகன் C213 விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைப்பதற்கான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
சுற்றுப்பாதையில் நுழைந்ததும் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானத் தளபதியுமான பெக்கி, விண்கலத்தை இயக்குவதில் உதவி செய்யும் சுபான்ஷு சுக்லாவுடன் பொறுப்பேற்றார். மிஷன் நிபுணர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி (போலந்தைச் சேர்ந்த ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி விண்வெளி வீரர்) மற்றும் மிஷன் நிபுணர் டிபோர் கபு (ஹங்கேரி) ஆகியோர் மிஷன் பைலட் சுக்லாவுடன் ஆக்சியம் - 4ன் குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
சுமார் 28 முதல் 36 மணி நேரப் பயணத்திற்குப் பிறகு விண்கலம் பூமியிலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் மணிக்கு 27,600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றி வரும் விண்வெளி நிலையத்துடன் விண்கலத்தை மிக சாதுரியமாக இணைப்பது (Docking) மிகவும் சவாலானது. இந்த சவாலை வெற்றிகரமாக செய்து முடித்தனர். பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து தப்பிக்க இந்த அதிவேக சுழற்சி அவசியம்.
இந்த டாக்கிங் என்பது இரண்டு ரயில் பெட்டிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பதைப் போன்றது. என்றாலும் விண்கல டாக்கிங் ஒரு முக்கியமான வேறுபாட்டைக் கொண்டுள்ளது. அது முற்றிலும் காற்று புகாததாக இருக்க வேண்டும். காற்று இல்லாத இடத்தில், சிறிதளவு காற்று கசிவைக் கூடத் தடுக்கக்கூடிய அமைப்பு அங்கு இருக்க வேண்டும். இது விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
டாக்கிங் செய்தவுடன், விண்வெளி வீரர்கள் விண்கலத்திற்கும், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் இடையில் விண்வெளி உடைகள் இல்லாமல் நகரலாம்... ரயில் பெட்டிகளுக்கு இடையில் நகர்வது போல. ஆனால், நுண் ஈர்ப்பு விசையில்.இந்த நகர்வுக்கு பல மணிநேரமாகும். விண்வெளிக்கலம் இணைந்தபிறகு இந்தக் குழுவினர் விண்கலத்திலிருந்து வெளியேறி ISS-க்குள் நுழைந்தார்கள். ஏற்கனவே அங்குள்ள நாசா விண்வெளி வீரர்கள் இவர்களை வரவேற்றனர்.
நான்கு பேர் கொண்ட AX-4 குழுவினர் அவர்களுடன் இரண்டு வாரங்கள் தங்கியிருந்து பல்வேறு அறிவியல் சோதனைகளை மேற்கொள்வார்கள். பணி முடிந்ததும், AX-4 குழுவினர் அதே Crew Dragon C213ல் பூமிக்குத் திரும்புவார்கள். இந்தப் பயணம் 17 முதல் 20 மணி நேரம் நீடிக்கும்.
அறிவியல் சோதனைகள்
விண்வெளி மையத்தில் 14 நாட்கள் தங்கும் AX-4 குழுவினர் சுமார் 60 அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வார்கள். ஒரு முக்கிய ஆய்வு நுண் ஈர்ப்பு விசையில் பயிர்கள் முளைப்பதை உள்ளடக்கியது.
தார்வாட் வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி தார்வாட் ஆராய்ச்சியாளர்கள் பச்சைப்பயறு மற்றும் வெந்தயம் போன்ற வேகமாக வளரும் தாவரங்களின் விதைகளை சோதிப்பார்கள். பூமியில் ஈர்ப்பு விசை வேர்களை கீழேயும், தளிர்கள் மேலேயும் செல்ல வழிநடத்துகிறது. ஈர்ப்பு விசையின் திசை இழுப்பு இல்லாத நிலையில் வேர் மற்றும் தளிர் வளர்ச்சியின் வடிவத்தை அவர்கள் உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.
இந்த ஆராய்ச்சி நீண்டகால பயணங்களுக்கு முக்கியமான விண்வெளி விவசாயத்தை செயல்படுத்தவும், நீண்டகால விண்வெளி ப் பயணிகளின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் உதவும்.
கூடுதலாக விண்வெளி வெளிப்பாட்டின் விளைவுகளை ஆய்வு செய்ய குழுவினர் அரிசி உட்பட ஆறு வகையான விதைகளை எடுத்துச் சென்றுள்ளனர். இந்த விதைகள் பூமிக்குத் திருப்பி அனுப்பப்பட்டு, பயிரிடப்பட்டு, நன்மை பயக்கும் மரபணு பண்புகளை அடையாளம் காண தலைமுறை தலைமுறையாக பகுப்பாய்வு செய்யப்படும்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், PSLV C60 மிஷன் மூலம் விண்வெளியில் கௌபரி விதைகளை இஸ்ரோ வெற்றிகரமாக முளைக்கச் செய்தது. ராக்கெட்டின் நான்காவது கட்டத்தில் விதைகள் முளைக்கும் ஒரு தொகுதி இருந்தது.
இது நுண் ஈர்ப்பு விசையில் முளைப்பு சாத்தியம் என்பதை நிரூபிக்கிறது. இந்த ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கும் ‘விண்வெளி உயிரியல்’ ஆராய்ச்சியின் ஒரு பகுதி. பூமியின் ஈர்ப்பு விசைக்கு அப்பாற்பட்ட வாழ்க்கை தகவமைப்புகளை ஆராய இஸ்ரோ இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.
விண்வெளிப் பயணம் பார்வையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்கான கண்கண்காணிப்பு சோதனைகளிலும் விண்வெளி வீரர்கள் பங்கேற்பார்கள். நுண் ஈர்ப்பு விசையில், கண் அசைவுகள் ஒழுங்கற்றதாக மாறும். இது எதிர்கால பயணங்களுக்கு ஒரு முக்கியமான ஆய்வுப் பகுதி.
சுபான்ஷு சுக்லா ஆறு உயிரியல் பரிசோதனைகளுக்கு தலைமை தாங்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். நாசாவுடனான இஸ்ரோவின் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 2024ல், சுபான்ஷு சுக்லா மற்றும் பாலகிருஷ்ணன் நாயர் ஆகியோர் தீவிர ஆக்சியம் தலைமையிலான பயிற்சியை மேற்கொண்டனர்.
இந்தப் பயணத்திலிருந்து பெறப்பட்ட அனுபவம் இந்தியாவின் ககன்யான் விண்வெளிப் பயணத் திட்டத்திற்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரஷ்யா, அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் கூட்டு முயற்சியான ISS மற்றும் சீனாவின் Tiangong நிலையம் ஆகியவை மட்டுமே இரண்டு விண்வெளி நிலையங்களாகும்.
Axiom முதல் தனியார் விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இது ஒரு போட்டியாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு பல நாடுகளுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் விண்வெளி தளங்களை வழங்குகிறது. சில நாட்கள் நீடிக்கும் வழக்கமான விண்வெளி சுற்றுலாவிற்கான ஒரு விண்வெளி ஹோட்டலும் விரைவில் தொடங்க உள்ளது. AX-4 போன்ற பணிகள் Axiom விண்வெளி கட்டமைப்பு துறையில் நிபுணத்துவத்தைப் பெற உதவுகின்றன.
மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்பு
சர்வதேச விண்வெளி நிலையம் உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளின் உதவியுடன் கட்டப்பட்டுள்ளது. விண்வெளியில் மனிதனால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கட்டமைப்பு சர்வதேச விண்வெளி நிலையமாகும். சர்வதேச விண்வெளி நிலையம் 900 m3 நீளம் உடையது. இது 400,000 கிலோ எடை கொண்டது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 2,247 m2 சூரியத் தகடுகள் உள்ளன. இது ஆண்டுக்கு 7,35,000 கிலோ வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.
சர்வதேச விண்வெளி நிலையம் பூமியிலிருந்து 370-460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுகிறது.சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரே நேரத்தில் ஏழு பேர் ஆய்வுகளை செய்ய முடியும். சர்வதேச விண்வெளி நிலையம் உருவாக்க 36 ஸ்பேஸ் ஷட்டில் அசெம்பிளி விமானங்களும் 6 ரஷ்ய புரோட்டான் மற்றும் சோயுஸ் ராக்கெட்டும் தேவைப்பட்டன.
தளவாடங்கள், மறுவிநியோகம் மற்றும் பணியாளர்கள் பரிமாற்றம் உள்ளிட்டவற்றுக்காக விண்வெளி விண்கலம் ரஷ்ய புரோக்ரஸ் மற்றும் சோயுஸ், ஜப்பானிய H-II பரிமாற்ற வாகனம் (HTV), ஐரோப்பிய தானியங்கு பரிமாற்ற வாகனம் (ATV) மற்றும் டிராகன், சிக்னஸ் மற்றும் ஸ்டார்லைனர் விண்கலன்கள் அனுப்பப்படுகின்றன.
இந்திய விண்வெளி நிலையம்
சீனா ஏற்கனவே தனக்கான டிங்கோங் - விண்வெளி நிலையத்தை உருவாக்கி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவும் வரும் 2030ம் ஆண்டுக்குள், பாரதிய அந்தரிக் ஷ நிலையம் உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் இஸ்ரோ தற்போது செயல்பட்டு வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 8 டன் எடையுள்ள ரோபோ திறன்களைக் கொண்ட சர்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐ.எஸ்.எஸ்.) முதல் தொகுதியை இஸ்ரோ நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது.
‘பாரத் விண்வெளி நிலையம்’ என குறிப்பிடப்படும் இந்த லட்சிய திட்டப்பணிகள் வருகிற 2028ம் ஆண்டு தொடங்கப்படும். தொழில்நுட்ப முன்னேற்றங்களை பயன்படுத்தி, 20 முதல் 1,215 டன்கள் வரை சுமந்து செல்லும் திறன் கொண்ட புதிய ராக்கெட்டை உருவாக்க உள்ளது.
தற்போதைய இந்திய ராக்கெட்டுகளால் 10 டன் எடையுள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் கருவிகளைக் கொண்டு செல்ல முடியும். 2035ம் ஆண்டிற்குள் சர்வதேச விண்வெளி நிலைய பணியின் ஒரு பகுதியாக விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்துடன் எதிர் காலத்தில் இஸ்ரோ பணிகளுக்கு ஒரு பெரும் மைல்கல்லாக விண்வெளி நிலையப் பணி அமைந்துள்ளது, யார் இந்த சுபான்ஷு சுக்லா?
சுபான்ஷு சுக்லா, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.பீம் (BHEEM) எனப் பெயரிடப்பட்ட ஆய்வில், வேற்றுக்கிரகங்களின் மாதிரி வாழ்விடத்தை வடிவமைப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் சுபான்ஷு சுக்லாவும் இடம் பெற்றிருந்தார்.
சுபான்ஷு சுக்லா, உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவில் அக்டோபர் 10, 1985ம் ஆண்டு பிறந்தார். கார்கில் போரில் இந்திய வீரர்கள் அடைந்த சாதனைகள் அவரை ஆயுதப்படைகளில் சேரத் தூண்டின. அவர் புனேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் பட்டம் பெற்றார். இது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் எதிர்கால அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் இராணுவ அகாடமியாகும் .சுக்லா ஜூன் 2006ல் இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் சேர்ந்தார். MiG -21, MiG -29, சுகோய் Su-30, டோர்னியர் மற்றும் ஹாக் போன்ற விமானங்களை இயக்குவதில் சுமார் 2,000 மணிநேர விமான அனுபவத்தை பெற்றார்.
ஜூன் 2019ல் அவர் விங் கமாண்டராக பதவி உயர்வு பெற்றார். அதே ஆண்டு விண்வெளி மருத்துவ நிறுவனம் மூலம் IAFன் விண்வெளி வீரர் தேர்வு செயல்முறைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவின் ககன்யான் பணிக்கான நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவராக சுக்லா பட்டியலிடப்பட்டார். 2021ம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள காகரின் விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் அடிப்படை விண்வெளி வீரர் பயிற்சியை முடித்த சுக்லா, திரும்பிய பிறகும் பெங்களூருவில் உள்ள விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் தொடர்ந்து பயிற்சி பெற்றார். 2024ம் ஆண்டு இந்திய விமானப்படையில் குழு கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். கம்னா சுபா சுக்லா என்ற பல் மருத்துவரை சுக்லா மணந்தார். இந்திய பாதுகாப்புப் படையில் சேர்ந்த அவரது குடும்பத்தில் முதல் நபர் இவர்தான்.
பா.ஸ்ரீகுமார்
|