பட்டையைக் கிளப்பும் இந்திப்படத்தை இயக்கிய தமிழ் இயக்குநர்!
‘சினிமா நட்சத்திரங்களுக்கு வயசு இல்லை’ என்று சொல்வார்கள். ரசிகர்களும் அதை மறந்து தங்கள் அபிமான நடிகர்களின் ஸ்டைலில் கிறங்கிப் போவதுண்டு. அந்த வகையில் 60 வயது அமீர்கான் நடித்துள்ள ‘சித்தாரே ஜமீன் பர்’ (இந்தி) ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் மாபெரும் வெற்றியடைந்துள்ளது.  இந்தப் படத்தை தமிழ் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணமில்லாமல் இல்லை. இதன் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா நம்மூர் என்பதாலேயே படத்துக்கு இங்கும் நல்ல வரவேற்பு. இவர் தமிழில் ‘கல்யாண சமையல் சாதம்’ செய்தவர். அந்தப் படத்துக்குப் பிறகு பாலிவுட்டில் ‘சுப மங்கள் சாவதன்’ என்ற ஹிட் கொடுத்ததால் அமீர்கானை இயக்கும் ஜாக்பாட் இவருக்கு அடித்துள்ளது.  மகிழ்ச்சியில் இருந்த பிரசன்னாவிடம் ‘குங்குமம்‘ இதழுக்காக பிரத்யேகமாகப் பேசினோம். ‘சித்தாரே ஜமீன் பர்’ படம் ‘தாரே ஜமீன் பர்’ படத்தின் தொடர்ச்சியா?

அது சாப்டர் ஒன் என்றால் இது சாப்டர் 2 என்று சொல்லலாம். அந்தப் படத்தை தொடவே முடியாது. அது மாஸ்டர்பீஸ். அது தாய் என்றால் இது செல்லப் பிள்ளை. இது இந்த ஜெனரேஷனுக்கு புது எனர்ஜி தரக்கூடிய படம். அந்தப் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை இரண்டு படங்களும் சமூக கருத்துகளைத் தாங்கி வெளிவந்தவை என்பதுதான்.
அந்தப் படத்தில் யார் மீதும் வெறுப்பு காண்பிக்கக் கூடாது என்று சொல்லப்பட்டிருக்கும். அதுல டீச்சர் மாணவனுக்கு கத்துக் கொடுப்பார். இதில் ஸ்டூடண்ட் டீச்சருக்கு கத்துக் கொடுப்பார். அதுல அந்த குழந்தை வாழ்க்கையில் எவ்வளவு வலியும் வேதனையும் இருக்குனு காண்பிச்சிருந்தாங்க. இதுல மாற்றுத்திறனாளி வாழ்க்கையில் எவ்வளவு சந்தோஷம் இருக்குனு காட்டியிருந்தோம்.
‘சாம்பியன்ஸ்’ என்ற ஸ்பானீஷ் படத்தோட ரீமேக்தான் ‘சித்தாரே ஜமீன் பர்’ படமா?
ரீமேக்னு சொல்ல முடியாது. அந்தப் படத்தை அதிகாரபூர்வமாக தழுவி எடுக்கப்பட்ட படம்னு சொல்லலாம். அந்தப் படம் அப்போது ஆஸ்கர் நாமினேட்டாச்சு. சொல்லப்போனால் ஸ்பானீஷ் படத்தின் தயாரிப்பாளர்கள் ஐந்து வருடங்களுக்கு முன் என்னை அப்ரோச் பண்ணி இந்தியில் செய்வதற்கு கேட்டார்கள்.
படம் பார்த்ததும் எனக்குள் இனம்புரியாத உணர்வுகள். இந்தப் படத்தை நம்முடைய மக்கள் பார்க்கணும்னு முடிவு பண்ணி நம் மக்களின் ரசனை, கலாசாரப் பின்னணியில் கதை பண்ணினேன். யாரிடம் போனால் எல்லோரிடமும் சேரும்னு நினைச்சு அமீர்கான் சாரிடம் போனேன். படத்தில் நடித்த மாற்றுத்திறனாளிகளின் நடிப்பு அருமையாக இருந்துச்சு. 2500 பேர் கலந்துகொண்ட ஆடிஷனில் 10 பேரை மட்டும் எப்படி தேர்வு செய்தீங்க? 2022ல் அந்த வேலையை ஆரம்பிச்சேன். அதுஅற்புதமான பிராசஸ். இந்தியா முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்களை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னோம்.
மெயின் லீட் கேரக்டருக்கு 10 பேர், சப்போர்ட்டிங் கேரக்டருக்கு 90 பேர் என 100 பேர் தேவைப்பட்டார்கள். பல இடங்களிலிருந்து ஆர்வமாக ஆடிஷனில் கலந்துகிட்டாங்க. 10 மாதம் அந்தப் பிராசஸ் நடந்துச்சு. செலக்ட்டானவர்களுக்கு 6 மாதம் ஒர்க்ஷாப் நடத்தி ஆக்டிங், டயலாக் ப்ராக்டீஸ், கூடைப்பந்து பயிற்சி என பலவித பயிற்சி கொடுத்தோம்.
மாற்றுத்திறனாளிகளுடன் வேலை செய்த அனுபவம் எப்படி இருந்துச்சு?
அவர்களுடன் வேலை செய்யும் அனுபவம் மகிழ்ச்சியானது. அது வேலையே கிடையாது. குழந்தைகளுடன் இருப்பதை எப்படி நாம் கஷ்டமாக பார்க்க மாட்டோமோ அதுமாதிரிதான் அவர்களுடன் பழகிய அனுபவம். திடீர்னு முத்தம் கொடுப்பாங்க, சாக்லேட் கொடுப்பாங்க, இன்னொரு டேக் போலாம்னு சொன்னா துள்ளிக் குதிச்சு ஓடி வருவாங்க.
விஜய் சேதுபதி ஒரு பேட்டியில், ‘ஆக்டர் என்பவர் தோசை, பரோட்டா மாஸ்டர் மாதிரி. டைரக்டர் கேட்கக் கேட்க சுடச் சுட தோசை போட்டு தரணும். அதுமாதிரி என்னுடைய ஆர்ட்டிஸ்ட்ஸ் கேட்கக் கேட்க கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.
கடின உழைப்பின் உச்சத்தை அவர்களிடம் பார்த்தேன். அவர்களை நம்பி ஒரு டயலாக் கொடுத்தால் டைரக்டர் திருப்தியாகும் வரை விடமாட்டாங்க.
எல்லோருக்கும் ஆரம்பத்திலேயே டிராமா மாதிரி ரிகர்சல் பண்ணியதால் எளிமையாக இருந்துச்சு. மத்த ஆர்ட்டிஸ்ட் டயலாக் மறந்திருந்தாலும் அவர்கள் மறக்காமல் ஆயத்தமாக இருந்தார்கள்.
ஆரம்பத்தில் அமீர்கான் நடிக்க மறுத்தார் என்றும் சிவகார்த்திகேயனை அப்ரோச் பண்ணினீர்கள் என்றும் நியூஸ் வந்துச்சு. அது உண்மையா?
ஆமா, அது உண்மை. அதைப் பற்றி சொன்னால் என்னுடைய ஆட்டோ பயோகிராஃபிக்ல பெரிய சாப்டராக இருக்கும்.
‘லால் சிங் சத்தா’ படம் முடிஞ்சதும் இந்தப் படத்தின் ஷூட்டிங் போகலாம்னு இருந்தோம். ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றி கொடுக்காததால் அமீர் சார் அப்செட்ல இருந்தார். அமீர் சார் எதைப் பண்ணினாலும் நேசிச்சுப் பண்ணக்கூடியவர். அப்படிப்பட்டவர் மனதளவில் சோர்வாகி நடிப்பே வேண்டாம் என்ற மனநிலையில் இருந்தார். ‘தயாரிப்பாளராக மட்டும் இருக்கிறேன்’ என்றார்.
நான் அவரை தொந்தரவு பண்ணாமல், ‘சார் நீங்க மனதளவில் சரியாவதற்கு டைம் எடுத்துக்குங்க. அதன் பிறகு உங்க முடிவை சொல்லுங்க’னு சொல்லிட்டேன். அதன்பிறகும் அவர் நடிப்பதாகத் தெரியவில்லை.
இன்னொரு பக்கம் ஆடிஷன் செய்து செலக்ட் ஆனவர்கள் தயாராக இருந்தார்கள். அந்த நிலையில் மற்ற நடிகர்களிடம் டிரை பண்ணலாம்னு முடிவு செய்து தமிழ் வெர்ஷனுக்காக சிவகார்த்திகேயனிடம் பேசினோம். சிவகார்த்திகேயனை சந்திச்ச அந்த மீட்டிங்ல அமீர் சாரும் இருந்தார். இந்தியில் ஃபர்கான் அக்தர் ரெடியாக இருந்தார். இந்த நிலையில் ஸ்கிரிப்ட் ஃபைனல் பண்ணி அமீர்கான் சாரிடம் கொடுத்தேன். அதைப் படிச்சுட்டு ‘நான் ஏன் இந்தப் படத்துல நடிக்காம இருக்கேன்’னு கேட்டார். அப்புறம் ஏற்கனவே பேசி வெச்சிருந்த ஹீரோக்களிடம் உண்மையைச் சொல்லி ‘சாரி‘ கேட்டதும், அவர்களும் புரிஞ்சுகிட்டாங்க.
அமீர்கானுடன் வேலை செய்த அனுபவம் எப்படி?
அமீர்கான் சார் டைரக்டர் டிலைட். டைரக்டருக்கு என்னவெல்லாம் தேவையோ அதைத் தருவார். செட்ல எவ்வளவுக்கு எவ்வளவு டென்ஷனை குறைக்கலாம்னு பார்ப்பார். படத்துக்காக சில காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வந்துச்சுன்னா பொறுமையா இருப்பார். டைரக்டர் மீது நம்பிக்கை வந்ததும் தன்னை முழுமையா ஒப்படைச்சுடுவார். சினிமாவுல இருக்கிறவங்க அமீர் சாரை ஒருமுறையாவது பார்க்கணும்.
உதவியாளராக இருந்தாலும் சரி, ரைட்டராக இருந்தாலும் சரி அவ்வளவு மரியாதை தருவார். சஜஷன் சொல்வதாக இருந்தாலும் ‘எனக்கு இந்த மாதிரி தோணுது, இந்தக் காட்சியை இப்படி பண்ணட்டுமா’ன்னு தன்மையா கேட்பதோடு, டைரக்டர் ஓகே சொன்னால் மட்டும்தான் அதையும் பண்ணுவார். ‘வேண்டாம்’ என்றாலும் அதையும் கேட்டுக்கொள்வார்.
‘குளோஸ் அப் வையுங்க, எனக்கு வெயிட் இல்லை. ஹீரோயிசம் கம்மியா இருக்கு’னு சொல்லவேமாட்டார். முக்கியமா தன்னை ஹீரோவாக காட்டிக்கணும் என்ற இடத்துக்கு போகமாட்டார். அது அதிசயம்!அமீர்கான் 60 வயசு, ஜெனீலியா 37 வயசு.
ஜோடிப் பொருத்தம் எப்படி முடிவு செய்தீங்க?
படம் பார்த்தவர்கள் எல்லோரும் இருவருக்குமான ஜோடிப் பொருத்தம் பிரமாதமா இருந்துச்சுன்னு சொன்னாங்க. சினிமாவுல ‘ஸ்கிரீன் ஏஜ்’ன்னு ஒண்ணு இருக்கு. இந்த ஜோடி திரையில் எப்படி இருப்பாங்கனு டெஸ்ட் பண்ணினோம்.
அமீர்கான் சார் யூத் லுக் இருந்ததோடு கதைக்கு ஏத்தமாதிரி இருவரும் சரியான பொருத்தமாக இருந்தார்கள். இதுல ஹீரோயின் கேரக்டர் பாசிடிவ்வான கேரக்டர். வாழ்க்கையைப் பற்றிய புரிதல் உள்ளவர். தமிழில் ஜெனீலியா துறுதுறுன்னு பண்ணியவர். இப்போது அவரிடம் மெச்சூரிட்டியும், அதே அழகும் இருக்குது. பாலிவுட்ல தமிழ் இயக்குநர்களுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?
எப்பவும் சிறப்பாக இருக்கும். இப்போதும் அது தொடர்கிறது.சஞ்சய் தத், பாபி தியோல் போன்ற பாலிவுட் நடிகர்கள் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார்களே..?
எல்லோருமே இந்தியன் ஃபிலிம் மேக்கர்ஸ்.
‘ஹேராம்’ல ஷாரூக்கான் சார் இருந்தார். ரஜினி சார் நிறைய இந்திப் படங்கள் செய்துள்ளார். சீரஞ்சீவி சார் தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். அது ரொம்ப அழகாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். பான் இந்தியா அப்போது முதல் இருக்கும் நடைமுறை. கதை எங்கு நல்லாயிருக்கிறதோ அங்கே சேர்ந்து வேலை செய்தால் சினிமா நல்லாயிருக்கும். ‘சித்தாரே ஜமீன் பர்’ ஓடிடி ரீலிஸ் குறித்து எந்த தகவலும் இல்லையே?
அமீர்கான் சார், இந்தப் படம் தியேட்டரில் மட்டுமே வரும், வேறு எங்கும் பார்க்க முடியாதுன்னு சொல்லியிருந்தார். அது ரீச் ஆச்சு. தியேட்டருக்கு பெரியோர், சிறியோர் என குடும்பமாக வர்றாங்க. நல்ல படத்தை தியேட்டரில் பார்க்கும்போது அது தனி அனுபவம்.
மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள். வீல் சேருடன் மக்கள் படம் பார்க்க வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகளை பெரிய திரையில் பார்ப்பது பெரிய அனுபவம். இப்போதைக்கு ஓடிடி பற்றி யோசிக்கவில்லை.
எஸ்.ராஜா
|