உலக தங்கத்தில் 30% உள்ள தேசம் ஏன் ஏழையாக உள்ளது?



தென் அமெரிக்காவை சேர்ந்த கியூபா நாட்டின் புரட்சியாளர் சே குவேராவின் பெயரை அறியாதவர்களே இருக்கமுடியாது. இன்றும் கியூபா மற்றும் தென் அமெரிக்கா மக்களின் மனங்களில் வாழ்ந்து வருபவர் அவர். இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும்கூட பலருக்கும் நம்பிக்கை விதைப்பவராக சே இருக்கிறார்.

ஆனால், ஆப்பிரிக்காவின் சே குவேரா பற்றி தெரியுமா?

நிச்சயம் அறிந்திருக்கமாட்டோம். மேற்கு ஆப்ரிக்காவில் கானா நாட்டின் அருகே நிலங்களால் சூழப்பட்ட ஒரு நாடு புர்கினோ ஃபாசோ. இங்கு 1983ம் ஆண்டில் இருந்து 1987ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் தாமஸ் சங்காரா. மார்க்சிய சிந்தனையாளரும், ராணுவத் தலைவருமான இவர் அங்குள்ள மக்களால் ஆப்பிரிக்காவின் சே குவேரா என அழைக்கப்பட்டார். 
காரணம், மக்கள் ஆதரவுடன் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி பல்வேறு சமூக சீர்திருத்தத் திட்டங்களுக்கு தாமஸ் சங்காரா வித்திட்டார் என்பதுதான். இதனால் 33 வயதில் அதிபராகப் பொறுப்பேற்றவர், 37 வயதிலேயே படுகொலையும் செய்யப்பட்டார்.   

இப்போது 38 ஆண்டுகளுக்குப் பிறகு அதே புர்கினோ ஃபாசோ நாட்டின் அதிபராக உள்ள இப்ராஹிம் ட்ரோரே ஆப்ரிக்காவின் சே குவேரா என வர்ணிக்கப்பட்டு வருகிறார்.
மேற்கு ஆப்ரிக்காவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அதிபர் இப்ராஹிம் ட்ரோரே குறித்த விஷயங்கள் சமீபத்தில் அத்தனை வைரலாகி இருக்கின்றன.

யார் இவர்? ஏன் ஆப்ரிக்கா சே குவேரா தாமஸ் சங்காராவுடன் ஒப்பிடப்படுகிறார்?

இப்ராஹிம் ட்ரோரே உலகின் இரண்டாவது இளம் வயது அதிபர் என்ற பெயரைப் பெற்றவர் இப்ராஹிம் ட்ரோரே. புர்கினோ ஃபாசோவின் இரண்டாவது நகரமான போபோ டியோலாசோவையும், நான்காவது பெரிய நகரமான ஓஹிகோயாவையும் இணைக்கும் சாலையில் உள்ள பாண்டோகுய் எனும் ஒரு சிறுநகரத்தில் 1988ம் ஆண்டு பிறந்தவர் இவர்.

ஆரம்பக் கல்வியை தன் நகரத்தில் பெற்றுவிட்டு போபா டியோலாசோவில் மேல்நிலைக் கல்வியைப் பயின்றார். தொடர்ந்து 2006ம் ஆண்டு தலைநகர் ஓவாகடூகோ பல்கலைக்கழகத்தில் புவியியலில் பட்டம் பெற்றார்.

அப்போதே முஸ்லிம் மாணவர்கள் சங்கத்திலும், மார்க்சிஸ்ட் தேசிய மாணவர் அமைப்பிலும் ஒரு பகுதியாக இருந்தார். பின்னர் 2010ம் ஆண்டு தன்னுடைய 22 வயதில் ராணுவத்தில்
சேர்ந்தார். தொடர்ந்து  புர்கினோ ஃபாசோவின் ஆயுதப் படைகளுக்கான அதிகாரிகள் பள்ளியான ஜார்ஜஸ் நமோனோ ராணுவ அகடமியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். 2012ல் இரண்டாவது லெப்டிெனன்ட்டாக ஆனார். தொடர்ந்து 2014ல் லெப்டினென்ட்டாக பதவி உயர்வு பெற்றார். பின்னர் அவர் மாலியில் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் இணைந்து பணியாற்றினார்.

இதன்பிறகு ட்ரோரே வடக்கு புர்கினோவில் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவில் இணைந்து பணிகளில் பங்கேற்றார். 2020ம் ஆண்டு அவர் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். அப்போது ட்ரோரேவுக்கு 32 வயது. இதனையடுத்து நடந்தவை எல்லாம் விறுவிறுப்பான வரலாற்றுச் சம்பவங்கள். 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் ராணுவ அதிகாரியான பால் ஹென்றி சான்டோகா டமிபா, நாட்டின் அதிபரான ரோச் மார்க் கிறிஸ்டியன் கபோரேவை சிறைபிடித்து ஆட்சியைக் கவிழ்த்தார்.

பின்னர் டமிபா அதிபரானார். அவர் இப்ராஹிம் ட்ரோரேவை வட மத்திய பகுதியில் பீரங்கி படைப்பிரிவின் தலைவராக நியமித்தார். இதன்பின்னர் ராணுவ ஆட்சிக்குழுவிற்குள் டமிபாவின் செல்வாக்கு குறைவதை தெரிந்துகொண்டார் ட்ரோரே. தொடர்ந்து டமிபாவின்  ஆட்சிக் கவிழ்ப்பை நிகழ்த்தினார். இதன்பிறகு ட்ரோரே 34 வயதில் இடைக்கால அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இளம் வயதில் ஒரு நாட்டின் அதிபராக பதவி வகிக்கும் இரண்டாவது நபர் ட்ரோரேதான்.  

சரி, ஏன் அவர் தாமஸ் சங்காராவுடன் ஒப்பிடப்பட்டு ஆப்ரிக்காவின் சே குவேரா என வர்ணிக்கப்படுகிறார்?

இதற்கு புர்கினோ ஃபாசோ நாட்டின் பின்புலத்தை அறிய வேண்டியது அவசியம். புர்கினோ ஃபாசோ, ஃபிரான்ஸ் அரசின் கீழிருந்த ஒரு நாடு. 1960ம் ஆண்டு ஃபிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்றது. இந்நாடு 1958ல் இருந்து 1984ம் ஆண்டு வரை அப்பர் வோல்ட்டா குடியரசு என்றே அறியப்பட்டு வந்தது. 1984ம் ஆண்டு அதிபராக ஆட்சியைப் பிடித்த தாமஸ் சங்காராதான் இதனை புர்கினோ ஃபாசோ எனப் பெயர் மாற்றம் செய்தார். இதற்கு ‘ஊழலற்ற மக்களின் நிலம்’ எனச் சொல்லப்படுகிறது.

தொடர்ந்து ஊழலை நீக்குவது, ஃபிரஞ்சு ஆதிக்கத்தைக் குறைப்பது, ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது, வெளிநாட்டு நிதியுதவிகளைத் தவிர்ப்பது, நிலம் மற்றும் கனிம வளங்களை தேசியமயமாக்கல், உலக வங்கியின் செல்வாக்கைக் குறைத்தல், நாட்டில் வறுமையை ஒழித்தல், நிலச்சீர்திருத்தம் செய்தல் எனப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதனால் ஆப்ரிக்காவின் சே குவேரா எனக் கொண்டாடப்பட்டார். அவரின் கொள்கைகள் பிடிக்காத இனக்குழுத் தலைவர்கள் சிலரும், மக்களும் இருந்தனர். இதனால் ராணுவப் புரட்சி மூலம் அவர் ஆட்சி அகற்றப்பட்டு படுகொலையும் செய்யப்பட்டார்.

அவரின் கண்ணோட்டத்தை தற்போது ஆட்சியைப் பிடித்திருக்கும் இளம் அதிபர் இப்ராஹிம் ட்ரோரேவும் பிரதிபலிப்பதாகச் சொல்கின்றன தகவல்கள். ட்ரோரே பதவிக்கு வந்ததும் முதல்கட்டமாக ஃபிரஞ்சு இராணுவப் படைகளையும் தொழிலாளர்களையும் அகற்றினார்.

காலனித்துவத்திற்குப் பிறகு புர்கினோ ஃபாசோவுடன் ஃபிரான்ஸ் வளர்ச்சி முகமை பார்ட்னராக இணைந்து பல்வேறு நிதியுதவிகளை செய்து வந்தது. இதனையும் ட்ரோரே நாட்டிலிருந்து அகற்றினார். ஃபிரஞ்சுக்காரர்கள் பிரதிபலன் அடையவே இந்த நிதியுதவியை செய்கின்றனர் என்றார் ட்ரோரே.

சமீபத்தில் அவர் ஈகோவாஸ் எனப்படும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டணியிலிருந்து விலகி மாலி, நைஜர் நாடுகளுடன் இணைந்து சாகேல் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்ல. பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் ஆப்ரிக்காவை அதன் வளங்களுக்காகவும், அங்குள்ள வனவிலங்குகளை தொலைக்காட்சி அல்லது பொழுதுபோக்கிற்காகவும் மட்டுமே பயன்படுத்துகின்றன என குற்றம்சாட்டினார் ட்ரோரே.  

அவர்கள் உண்மையில் ஆப்பிரிக்கா வளர வேண்டும் என நினைத்திருந்தால் அதை என்றோ செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் எண்ணம் அதுவல்ல. ஆப்ரிக்காவின் வளங்களை மட்டுமே அவர்கள் விரும்புகின்றனர் என்றார்.

மேலும் அவர், ‘உலகின் தங்கத்தில் சுமார் 30 சதவீதம் ஆப்பிரிக்காவிடம் உள்ளது. இது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு இருப்பு நாணயமாகும். நமது போன்களிலும், எலக்ட்ரானிக் சாதனங்களிலும் உள்ள கனிமமான கோபால்ட் தென்பகுதி ஆப்ரிக்காவில் 70 சதவீதம் உள்ளது.இவ்வளவு வளங்களுடன் பணக்கார தேசமாக உள்ள ஆப்பிரிக்கா ஏன் இன்னும் ஏழையாக வைக்கப்பட்டுள்ளது என்பதே என் கேள்வி’ என்கிறார். 

இதனால் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார் ட்ரோரே. தாமஸ் சங்காராவைப் போல் அவரும் மக்களின் முகமாக மாறினார். இந்நிலையில் அவரை சிலர் ஆப்ரிக்காவின் சே குவேரா என வர்ணித்தனர். இருந்தும் ஆப்பிரிக்காவின் சே குவேரா என சங்காராவுடன் ஒப்பிடுவதெல்லாம் கொஞ்சம் அதிகம் என்றும் சில தகவல்கள் ட்ரோரேவின் மைனஸை சுட்டிக்காட்டி வலம்வருகின்றன.

பேராச்சி கண்ணன்