அதிக தனிநபர் பதுங்குக் குழிகள் கொண்ட நாடு!



சமீபத்தில் இஸ்ரேல் - ஈரான் போர் உலகையே உலுக்கியது. பனிரெண்டு நாட்கள் நீண்ட இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாகக் களமிறங்கிய அமெரிக்கா பி2 ரக போர் விமானங்கள் மூலம் பங்கர் பஸ்டர் குண்டுகளை ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது குறிவைத்துத் தாக்கியது. இந்நிலையில் பி2 விமானங்கள் பற்றியும், பங்கர் பஸ்டர் குண்டுகள் குறித்தும் பல்வேறு தகவல்கள் உலா வந்தன. ஆங்கிலத்தில் பங்கர் (Bunker) என்றால் பதுங்கு குழி என்று அர்த்தம்.

அதாவது பூமியின் அடியில் ஊடுருவி ராணுவ பதுங்கு குழிகளைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை இந்த பங்கர் பஸ்டர் குண்டுகள். ஈரான் பூமிக்கு அடியில் அமைத்துள்ள அணுசக்தி மையங்களைத் தகர்க்கவே இந்தக் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே ஈரான், இஸ்ரேல் மீது சக்தி வாய்ந்த குண்டுகளை வீசியது. இதனால் இஸ்ரேல் அரசு மக்களை முன்கூட்டியே பதுங்கு குழிகளில் தஞ்சமடைய கேட்டுக் கொண்டது.

இந்நிலையில் பதுங்கு குழிகள் குறித்தான தகவல்கள் வைரலாகி உள்ளன. இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் அண்டை நாடுகளுடனான பிரச்னையால் அது தொடர்ந்து பதுங்கு குழிகளை உருவாக்கிப் பராமரித்து வருகிறது.போரின்போது ஏதாவது குண்டுகள் தாக்குதல் தெரிந்தால் உடனடியாக இஸ்ரேல் சைரன் ஒலி எழுப்பி மக்களை பதுங்கு குழிகளுக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்ளும். அத்துடன் இஸ்ரேல் பதுங்கு குழிகளால் கட்டமைக்கப்பட்ட நாடு என்றெல்லாம் அந்தத் தகவல்கள் சொல்கின்றன.  

ஆனால், இஸ்ரேலைவிட அதிக தனிநபர் பதுங்கு குழிகளைக் கொண்ட நாடு சுவிட்சர்லாந்துதான் என்கின்றன செய்திகள். சுவிட்சர்லாந்தில் மொத்தம் 9 மில்லியன் மக்கள், அதாவது சுமார் 90 லட்சம் பேர் உள்ளனர். 

ஆனால், இந்நாடு 3 லட்சத்து 70 ஆயிரம் பதுங்கு குழிகளைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.அணு ஆயுத அச்சுறுத்தலில் இருந்து தங்கள் மக்களைக் காக்கும்பொருட்டு இந்தக் குழிகளை உருவாக்கியுள்ளது அந்நாடு. இவை இப்போது உருவாக்கப்பட்டதல்ல. சுமார் அறுபது ஆண்டுகளாக தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருபவை.  

இப்போது உலகளாவிய பதற்றங்கள் அதிகரித்து வருவதால் சுவிட்சர்லாந்தின் தனித்துவமான இந்த அணுகுமுறை மீண்டும் உலகின் கவனத்திற்கு வந்துள்ளது. அதுமட்டுமல்ல. சுவிட்சர்லாந்து மக்களும் இப்போது விழித்துக்கொண்டு தங்களின் பதுங்கு குழிகள் எங்கே இருக்கிறது என அரசிடம் கேட்டு வருகின்றனர்.

ஏன் சுவிட்சர்லாந்து பதுங்கு குழிகளை உருவாக்கியது?

ஜெர்மனி, ஃபிரான்ஸ், இத்தாலி என மிகப் பெரிய சக்தி வாய்ந்த நாடுகளால் சூழப்பட்ட ஒரு நாடு சுவிட்சர்லாந்து. இது இரண்டாம் உலகப் போரின் போதும், அதன்பிறகான பனிப்போரின்போதும் நடுநிலையே வகித்தது. இதனால் நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கும்பொருட்டு சில விஷயங்களை மேற்கொண்டது. குறிப்பாக 1963ம் ஆண்டு பனிப்போரின் போது ஒவ்வொரு வீட்டுக்கும் பதுங்கு குழிகளை ஏற்படுத்தும் கொள்கையை உருவாக்கியது.

முழுமையான பாதுகாப்பு என்ற மனநிலையிலிருந்து இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டு சட்டமாக்கியது. இந்தச் சட்டம் இன்றும் அங்கு நடைமுறையில் உள்ளது.
புதிய குடியிருப்புக் கட்டடங்கள் ஒரு இடத்தில் பதுங்கு குழிகளை உள்ளடக்கி இருக்க வேண்டும் என்பது இதன் அம்சம். 

அல்லது அருகிலுள்ள பொது இடத்தில் பதுங்கு குழிகளை அமைக்க பங்களிப்பு செய்ய வேண்டும். பல தசாப்தங்களாக இந்தக் கொள்கை ஒவ்வொரு நகரத்திலும் உள்ள வீடுகள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலைகளுக்கு அடியில் எனக் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதன்விளைவாக சுவிட்சர்லாந்து 3 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதுங்கு குழிகளின் வலையமைப்பை ஏற்படுத்தியது.

ஏதாவது போர் அல்லது பேரழிவு சூழல் வந்தால் 90 லட்சம் மக்கள்தொகை உள்ள சுவிட்சர்லாந்துக்கு இந்தப் பதுங்கு குழிகள் போதுமானவை.இந்தப் பதுங்கு குழிகள் தடிமனான கான்கிரீட் சுவர்களுடனும், அணுக் கதிர்வீச்சை தடுக்கும் காற்று வடிகட்டுதல் அமைப்புகளுடனும் துல்லியமாக வடிவமைக்கப்பட்டன. 

ஒவ்வொரு பதுங்கு குழியிலும் 14 நாட்கள் வரை இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், 1990களின் ஆரம்பத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்ததும் இந்தப் பதுங்கு குழிகள் சாதாரணமாகின. இவை மது சேமிப்புக் கூடங்களாகவும், மரவேலை செய்யும் இடங்களாகவும், இசைப் பயிற்சி அறைகளாகவும், கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களுக்கான சேமிப்பு இடங்களாகவும் மாறின.

இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் போர் ஆரம்பிக்க சுவிட்சர்லாந்து மக்களும் விழித்தெழுந்தனர். சம்பந்தப்பட்ட சிவில் பாதுகாப்புத் துறை அலுவலகங்களுக்குப் போன் செய்து என் பதுங்கு குழி எங்கே இருக்கிறது? தயாராக உள்ளதா... எனக் கேள்விகள் எழுப்பினர். 

இதன்பிறகே அரசு பதுங்கு குழிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கான ஆலோசனைகளைத் தொடங்கியது. மோசமான பதுங்கு குழிகள் கண்டறியப்பட்டன. அதன் உரிமையாளர்கள் அதனை சரிசெய்ய வேண்டும் என்றும் இல்லையெனில் பொது இடங்களில் உள்ள பதுங்கு குழிகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியது.

இத்துடன் பொது இடங்களில் உள்ள பதுங்கு குழிகளைப் பழுதுபார்க்க 220 மில்லியன் சுவிஸ் பிராங்குகளை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 2300 கோடி ஒதுக்கியுள்ளதாகச் சொல்கின்றன தகவல்கள். இதனால் அழகான மலைகளுக்குக்கும், சுற்றுலாவிற்கும் பெயர்போன ஒரு நாடு பதுங்கு குழிகளுக்கும் பெயர்பெற்றுள்ளது இப்போது ஆச்சரியமாகப் பேசப்படுகிறது.

மற்ற நாடுகள்...

சுவிட்சர்லாந்து மட்டுமல்ல, நார்வேயும் அதிக ராணுவப் பதுங்கு குழிகளைக் கொண்டுள்ள நாடாக இருக்கிறது. பனிப்போரின் போது ரஷ்யா ஏற்படுத்திய பதற்றத்தில் அந்நாடு அதிக பதுங்கு குழிகளை அமைத்துள்ளது. இதுதவிர, அல்பேனியா சுமார் 7 லட்சம் பதுங்கு குழிகளைக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவற்றுடன் பின்லாந்து, இஸ்ரேல், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளும் அதிக பதுங்கு குழிகளைக் கொண்டவையாக இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை ஐரோப்பிய நாடுகளைப் போல தேசிய அளவிலான செயல்முறையாக இல்லை. ஆனால், எல்லைக் கோடு அருகே நிறைய பதுங்கு குழிகளைக் கொண்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் மட்டும் 9,500 பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப இன்னும் நிறைய பதுங்கு குழிகள் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேராச்சி கண்ணன்