ஆங்கிலத் துறையில் உதவிப் பேராசிரியரான முதல் திருநங்கை!
இன்று பல்வேறு துறைகளில் திருநங்கைகள் சிறப்பாக சாதித்துக் காட்டி வருகின்றனர். டாக்டர், வழக்கறிஞர், போலீஸ், அரசியல் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதோ அந்த வரிசையில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்று சென்னை லயோலா கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பொறுப்பேற்று இருக்கும் முதல் திருநங்கையாக ஜொலிக்கிறார் ஜென்ஸி. சமீபத்தில் அவரைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்.  ‘‘ரொம்ப ரொம்ப சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருக்கு. முதல்வர் தொடங்கி பலரும் பாராட்டுவது பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் கிடைத்த அங்கீகாரம்னு சொல்லணும்...’’ நெகிழ்ந்தபடி உற்சாகம் பொங்கப் பேசுகிறார் ஜென்ஸி. ‘‘சொந்த ஊர் திருத்தணி பக்கத்துல இருக்கிற ஆர்.கே.பேட்டை புதூர்னு ஒரு சிறிய கிராமம். அப்பா என் சின்ன வயசுலேயே இறந்திட்டார். அம்மா ஜமுனாதான் பூ வியாபாரம் செய்து படிக்க வச்சாங்க. எனக்கு ஒரு அக்கா, அண்ணன் இருக்காங்க.
தொடக்கக் கல்வியை புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முடிச்சேன். அப்புறம், அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு வரை படிச்சேன். இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே நான் ஒரு திருநங்கை என்பதை உணர ஆரம்பிச்சிட்டேன்.
இருந்தும் என் குடும்பம் என்னை திட்டினதில்ல. அரவணைப்பாகவே இருந்தாங்க. ஆனா, என்னைச் சுத்தி இருப்பவர்களும், பள்ளிக்குப் போகும் வழியில் பார்ப்பவர்களும் என்னை ரொம்ப கலாய்க்க ஆரம்பிச்சாங்க. ஏளன வார்த்தைகளால் காயப்படுத்தினாங்க. இதை நார்மலாக கடந்து போகணும்னு நினைப்பேன். ஆனா, முடியல. உதாரணத்திற்கு பஸ்சில் ஒரு டிக்கெட் கொடுங்கனு கேட்டா என்னை எல்லோரும் திரும்பிப் பார்ப்பாங்க. என்னடா இந்தக் குரல் ஆணும், பெண்ணும் சேர்ந்திருக்குனு சிரிப்பாங்க. நடந்து போனாலோ, ஓர் இடத்தில் பேசினாலோ எல்லோருமே வித்தியாசமாக பார்த்தாங்க. ரொம்ப வேதனையாக இருந்தது.
இந்தமாதிரி குறைசொல்லும் ஆட்களுக்கு நடுவேதான் வளர்ந்தேன். ஆனா, கல்வினு வரும்போது என்னை யாரும் குறைசொல்லல. காரணம் நான் நல்லா படிப்பேன். என்னைச் சுத்தி இருக்கிறவங்க குறைவாக மார்க் வாங்குவாங்க. நான் நல்ல மதிப்பெண்கள் வாங்குவேன். இதனால் என்னைப் பாராட்டி, என்னைச் சுட்டிக் காட்டி பேசினாங்க. ‘அந்தப் பையனைப் பாரு, நிறைய மதிப்பெண் வாங்கியிருக்கான்’னு சொன்னாங்க. அந்த வயதில் இந்த விஷயங்கள் எனக்குள்ள ஊக்கமா இருந்துச்சு.
அப்பதான் நம்மை குறைவாக பார்ப்பவர்கள் இந்த இடத்துல மட்டும் ப்ளஸ்ஸாக பார்க்கிறாங்களேனு தோணுச்சு. இதுக்குக் காரணம் கல்விதான்னு புரிஞ்சது. அதனால், நான் கல்வியை கச்சிதமாகப் பிடிச்சுக்கிட்டேன்.கல்வி மூலமாகத்தான் நாம் வளர முடியும்னு மனசுல ஆணிவேராக பதிஞ்சது.
பத்தாம் வகுப்பு வரும்போதே இந்திய அளவில் படிப்பில் சிறப்பாக வந்து ஒரு பேராசிரியராக ஆகணும்னு தீர்மானம் பண்ணிட்டேன். அப்போ எந்தத் துறைனு தீர்மானிக்கல. ஆனா, அந்தக் கனவு இன்னைக்கு நிறைவேறியிருக்கு...’’ என்கிற ஜென்ஸி, அதே உற்சாகத்துடன் தொடர்ந்தார். ‘‘பிளஸ் டூவில் காமர்ஸ் எடுத்து படிச்சேன். 943 மதிப்பெண்கள் எடுத்து என் வகுப்பில் முதல் மாணவராக வந்தேன். ஆனா, ஆங்கிலத்தில் குறைவான மதிப்பெண்கள் எடுத்தேன். அதுதான் என்னை ஆங்கிலத்துறையை எடுத்து படிக்க ஊக்கப்படுத்துச்சு. எதில் மதிப்பெண் குறைஞ்சேனோ அதில் சிறப்பாக வரணும்னு நினைச்சேன். அதனால், படிச்சால் ஆங்கிலம்னுதான் நான் வேறெந்த டிகிரிக்கும் விண்ணப்பிக்கல. அப்படியாக திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் பிஏ ஆங்கிலம் சேர்ந்தேன்.
அந்நேரம் கல்லூரிக்குப் போயிட்டு வரும்போது ஆங்காங்கே திருநங்கைகளைப் பார்த்தேன். அவர்கள் பிச்சையெடுப்பதும், பாலியல் தொழிலாளர்களாக இருப்பதும் பார்த்தப்ப எங்கே நாமும் அதுபோல் ஆகிவிடுவோமோனு பயம் ஏற்பட்டுச்சு. அதனால், கல்வியில் இன்னும் என்னை பலப்படுத்திக்கணும்னு தீர்மானிச்சேன். பி.ஏ முடிச்சதும் மேற்கொண்டு படிக்க சென்னைக்கு வந்தேன். இங்க டாக்டர் அம்பேத்கர் அரசு கல்லூரியில் எம்.ஏ ஆங்கிலம் சேர்ந்தேன்.
நல்லா படிச்சேன். பிஏ, எம்ஏ, இரண்டிலும் கோல்டு மெடலிஸ்ட்டாக வெளியேறினேன். அப்புறம் இதே கல்லூரியில் எம்ஃபில் பண்ணினேன். பிறகு லயோலா கல்லூரியில் பிஹெச்.டி சேர்ந்தேன்...’’ என்கிறவர், சென்னையில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக அறிவிப்பாளராகவும் டியூசன் ஆசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். ‘‘பிஏ படிக்கிற வரை வீட்டுல எனக்கு சப்போர்ட் செய்தாங்க. சென்னைக்கு வந்ததும் என்னுடைய செலவுகள், தேவைகளுக்கு வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். ஆல் இண்டியா ரேடியோ, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் சென்னைப் புத்தகக் கண்காட்சி ஆகியவற்றில் அறிவிப்பாளராக வேலை செய்தேன்.
அடுத்து வி ஆர் யுவர் வாய்ஸ்னு ஒரு தன்னார்வ நிறுவனம் இருக்கு. அதிலும் அறிவிப்பாளராக இருந்தேன். அப்புறம் ஒரு எஸ்ஐ பையனுக்கு ஹோம் டியூசன் எடுத்தேன். அவங்க சம்பளம் தந்தாங்க. பிறகு போலீஸ் அகடமி எல்லாம் சென்று அங்க திருநங்கை மக்களைப் பத்தின விழிப்புணர்வு பயிற்சி எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சேன். அப்புறம், டாக்டர் அம்பேத்கர் கலை அறிவியல் கல்லூரியில் பகுதிநேர பேராசிரியராகவும் வேலை செய்தேன். இப்படியாக வந்த வருமானத்தில் என்னை நான் பார்த்துக்கிட்டேன். அப்படியே சர்ஜரியும் செய்து முழுமையாக மாறினேன்.
இதனால் நான் அரசு விடுதியிலிருந்து கரிமா கிரக் (Garima Greh) என்ற இடத்திற்கு மாறினேன். இது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் கீழ் வரும் திட்டம். இதன் நோக்கம் திருநங்கைகளின் திறமையை வளர்த்து வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கறது. அதனுடைய சென்னை இயக்குனர் ஜீவாம்மானு இருக்காங்க.
என்னுடைய மாற்றத்திற்குப் பிறகு நான் இங்கே மாறினேன். இதற்கிடையில் லயோலாவில் பிஹெச்.டி கிடைச்சது. ஆங்கிலத் துறைத் தலைவர் டாக்டர் பி.மேரி வித்யா பொற்செல்வி மேடம்தான் என் கைடு.
இதில் என் டாபிக் ‘ஈகோ கிரிட்டிசிஸம்’. அதாவது இயற்கைக்கும், இலக்கியத்திற்கும் உள்ள தொடர்பு பத்தினது. அதில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் வாங்கினேன்.லயோலாவை என் கோயில்னுதான் சொல்வேன்.
ஏன்னா, அங்க என்னைப்பத்தின புரிதல் எல்லோருக்கும் இருந்தது. இதன்பிறகு, லயோலாவிலேயே எனக்கு உதவிப் பேராசிரியராகவும் வேலை கிடைச்சதுதான் இன்னும் மகிழ்ச்சியைத் தந்தது. இதனால்தான் தமிழக முதல்வர் அவர்கள் என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார். அந்நேரம் என் கோரிக்கையையும் அவரிடம் சொன்னேன். அதாவது, ‘நான் படிச்சது எல்லாமே தமிழ்வழிதான். எம்.ஃபில் வரை அரசு பள்ளி மற்றும் கல்லூரியில்தான் படிச்சேன். கல்வியில் தகுதியுடையவளாக இருக்கேன். எனக்குக் கருணையின் அடிப்படையில் ஏதாவது ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத் துறையில் நிரந்தரமான வேலை வழங்கணும்’னு கேட்டேன்.
தமிழ்நாட்டுல எந்தக் கல்லூரியாக இருந்தாலும் ஓகேனு சொன்னேன். அவரும் பார்க்கறேன்னு சொல்லியிருக்கார். எனக்கு அரசு வேலை கொடுத்து என் வாழ்க்கையை நிலைநிறுத்திக்கிற மாதிரி செய்தால் எனக்கு ரொம்பப் பயனுள்ளதாக இருக்கும். அதேநேரம் மற்ற திருநங்கைகளுக்கும் இது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும்...’’ என முத்தாய்ப்பாய் சொல்கிறார் முனைவர் ஜென்ஸி.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|