Must Watch
 பிக் வேர்ல்டு
‘நெட்பிளிக்ஸி’ல் பார்வைகளை அள்ளி வரும் சீன மொழிப்படம், ‘பிக் வேர்ல்டு’. பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறான் லியூ. மன, உடல் ரீதியான வலிகளைக் கடந்து, இந்த உலகத்தில் தனக்கான ஓர் இடத்தை அடைய வேண்டும் என்ற லட்சிய வேட்கையுடன் இருக்கிறான்.
லியூவின் பாட்டி சென், தனது பேரனை எந்தக் குறையும் இல்லாத ஒரு மனிதனாகவே பார்க்கிறாள். அதனால் லியூவை படிக்கச் சொல்லியும், வேலைக்குப் போகச் சொல்லியும் உற்சாகப் படுத்துகிறாள்.
அதனால் இயல்பான ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் எல்லாமே தனக்கும் கிடைக்கிறது என்று நம்புகிறான் லியூ. அத்துடன் லியூவை உணர்வுபூர்வமாக அவனது பாட்டியால் மட்டுமே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், மற்றவர்கள் லியூவை குறை உள்ள மனிதனாகவே பார்க்கிறார்கள்.
அது அவனை முடக்குகிறது. இவ்வளவு பெரிய உலகத்தில் தனக்கான ஓர் இடத்தை லியூ எப்படி பிடிக்கிறான் என்பதை நெகிழ்ச்சியாக சொல்கிறது மீதிக்கதை.மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எவ்வளவு குறைகள் இருந்தாலும் கூட, நம்மை உற்சாகப்படுத்த ஒருவர் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையூட்டுகிறது இந்தப் படம். இதன் இயக்குநர் யாங் லினா. ஹாலந்து
ஒரு வித்தியாசமான திரில்லர் படத்தைப் பார்க்க வேண்டுமா? உங்களுக்காகவே ‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கிறது, ‘ஹாலந்து’ எனும் ஆங்கிலப்படம். தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.
படத்தின் கதை 2000ல் நடக்கிறது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஹாலந்தில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறாள் நான்சி.நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நான்சிக்கு ஃபிரட் என்ற கணவனும், 13 வயதில் ஹாரி என்ற மகனும் இருக்கிறார்கள்.
அடிக்கடி ஃபிரட் காணாமல் போகிறார். வீட்டுக்கு வருவதே இல்லை. அதனால் வேறு யார் கூடவாவது தொடர்பில் இருக்கிறாரோ என்று ஃபிரட் மீது நான்சிக்கு சந்தேகம் எழுகிறது.
ஃபிரட்டிடம் போலராய்டு கேமராவே இல்லை. ஆனால், அவரிடம் சில போலராய்டு புகைப்படங்கள் இருக்கின்றன. இதைக் கவனிக்கும் நான்சிக்கு ஃபிரட்டின் மீதான சந்தேகம் அதிகமாகிறது.
ஃபிரட் என்ன செய்கிறார் என்பதை கண்டுபிடிக்க தன்னுடன் பணியாற்றும் தேவின் உதவியை நாடுகிறாள் நான்சி. தேவிற்கும் நான்சிக்கும் இடையில் காதல் மலர சூடுபிடிக்கிறது திரைக்கதை. இப்படத்தின் இயக்குநர் மிமி கேவ்.
லவ்லி
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மலையாளப் படம், ‘லவ்லி’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது. இறந்துபோன அப்பாவின் அரசாங்க பணிக்குச் செல்லப்போகும் மகிழ்ச்சியில் இருக்கிறான் போனி. ஆனால், அவன் வாழ்க்கையில் எதிர்பாராத பல சம்பவங்கள் நடக்கின்றன. போனியின் மீது தவறான குற்றச்சாட்டு வைக்கப்பட்டு, 14 நாட்கள் சிறையில் அடைக்கப்படுகிறான். உண்மையில் அவன் எந்தக் குற்றமும் செய்யவில்லை.
சிறைக்குள் ஒரு ஈ-ஐ சந்திக்கிறான். அந்த ஈக்கு ‘லவ்லி’ என்று பெயர் வைத்து, அதனுடன் நட்பு கொள்கிறான். சிறைக்குள்ளேயே லவ்லிக்கு ஒரு வீட்டையும் ஏற்பாடு செய்கிறான். பெயிலில் வெளியே வரும் போனி, லவ்லியை மிஸ் பண்ணுகிறான். வேண்டுமென்றே ஏதாவது செய்துவிட்டு, சிறைக்குள் போகலாம் என்றுகூட நினைக்கிறான். ஆனால், அது நடப்பதில்லை.
சிறைக்குள் இருக்கும் லவ்லியும் போனியை மிஸ் செய்கிறது. போனியும் லவ்லியும் எப்படி இணைகின்றனர் என்பதே மீதிக்கதை.ஃபேண்டஸி கதைகள் பிடிப்பவர்கள் தவறவிடக்கூடாத ஓர் படம் இது. போனியாக கலக்கியிருக்கிறார் மேத்யூ தாமஸ். இப்படத்தின் இயக்குநர் திலீஷ் நாயர்.
ரெய்டு 2
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, வசூலை அள்ளிய இந்திப்படம், ‘ரெய்டு 2’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் பார்க்கக் கிடைக்கிறது. வருமானவரித்துறை அதிகாரி, பட்நாயக். நேர்மையாகவும், கறாராகவும் இருக்கும் மனிதர். வரி ஏய்ப்பு செய்தவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சும்மா விட மாட்டார். வருமான வரி சோதனையின் போது 4200 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்திருக்கிறார். அவருடைய நேர்மையால் அடிக்கடி பணி இடமாற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தார்.
74வது தடவையாக பணி இடம் மாற்றப்பட்டு, மத்தியப்பிரதேசத்துக்கு வருகிறார். அங்கே ஊழல் அரசியல்வாதி மனோகர் வீட்டுக்கு வருமான வரி சோதனைக்குச் செல்கிறார். அவர் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பது பட்நாயக்கிற்குத் தெரிய வருகிறது. சோதனையின்போதே பணி இடை நீக்கம் செய்யப்படுகிறார் பட்நாயக்.
மீண்டும் பணிக்குத் திரும்பினாரா பட்நாயக்? மனோகர் வீட்டில் சோதனையை முடித்தாரா என்பதை அறிய படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.எங்கேயும் சுவாரஸ்யம் குறையாமல் வேகமாகச் செல்கிறது திரைக்கதை. படத்தின் இயக்குநர் ராஜ்குமார் குப்தா.
தொகுப்பு: த.சக்திவேல்
|