32 வருடங்களுக்குப் பின் இது 7வது டைனோசர்!
இன்று உலகம் முழுவதும் டைனோசர் என்ற விலங்கைத் தெரிவதற்கும், அதன் உருவம் எப்படியிருந்திருக்கும் என்பதை அறிவதற்கும் முக்கிய காரணம், ‘ஜுராசிக் பார்க்’தான் என்றால் அது மிகையாகாது.  அந்தளவுக்கு இந்தப் படம் டைனோசரைப் பட்டி தொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தது. இதற்குப் பிறகு எவ்வளவோ படங்கள் டைனோசரை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் இந்தப் படம் ஏற்படுத்திய தாக்கத்தை எதனாலும் ஏற்படுத்த முடியவில்லை.  எண்பதுக்குப் பிற்பகுதியிலும், தொண்ணூறுகளிலும் பிறந்தவர்களின் குழந்தைப் பருவத்தின் முக்கிய நினைவாகவும் இந்தப் படம் மாறிப்போனது. ‘ஜுராசிக் பார்க்’ வெளியான காலத்தில் படத்தைப் பார்த்துவிட்டு, தங்களது நண்பர்களிடம் டைனோசரைப் பற்றிப் பேசாத குழந்தைகளே இல்லை என்று சொல்லலாம். குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்து, ஆச்சர்யப்பட வைத்தது இந்தப் படம்.

இப்படத்தை இயக்கியதால் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கும் உலகப் புகழடைந்தார். இதற்கு முன்பே அற்புதமான படங்களை அவர் இயக்கி இருந்தாலும் ‘ஜுராசிக் பார்க்’ பெற்றுத் தந்த புகழுக்கும், பிரபலத்துக்கும் இணையாகாது.  வெறும் சினிமாவாக மட்டுமல்லாமல் ஒரு பிராண்டாகவும் மாறியது, ‘ஜுராசிக் பார்க்’. இப்படத்தின் போஸ்டர் பிரிண்ட் செய்யப்பட்ட ஸ்கூல் பேக்குகள் மட்டுமே லட்சக்கணக்கில் விற்பனையாகின. வீடியோ கேம்ஸ், காமிக்ஸ், தீம் பார்க் என பல இடங்களிலும் இடம் பிடித்து, புதிய பிசினஸ் கதவுகளைத் திறந்துவிட்டது ‘ஜுராசிக் பார்க்’. மைக்கேல் கிரைடன் எழுதிய ‘ஜுராசிக் பார்க்’ நாவலைத் தழுவி டேவிட் கெப்பும், கிரைடனும் திரைக்கதை எழுத, படத்தை இயக்கினார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். இதற்குக் கிடைத்த வரவேற்பால் அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்தன. இப்போதும் வந்து கொண்டேயிருக்கின்றன. இப்படி ‘ஜுராசிக் பார்க்’ பட வரிசையில் வெளியாகியிருக்கும் ஏழாவது திரைப்படம்தான், ‘ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த்’. இதன் பட்ஜெட் இந்திய மதிப்பில் 1550 கோடி ரூபாய்.
சமீபத்தில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது ‘ ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த்’. ஆங்கிலம் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, இந்தியிலும் பார்க்கலாம். இந்த 7ம் பாகத்தை கரேத் எட்வர்ட்ஸ் டைரக்ட் செய்திருக்கிறார். இப்படத்துக்கு முன்பு ‘ஜுராசிக் பார்க்’ (1993), ‘த லாஸ்ட் வேர்ல்டு: ஜுராசிக் பார்க்’ (1997), ‘ ஜுராசிக் பார்க் III’ (2001), ‘ஜுராசிக் வேர்ல்டு’ (2015), ‘ஜுராசிக் வேர்ல்டு: ஃபாலன் கிங்டம்’ (2018), ‘ஜுராசிக் வேர்ல்டு டொமினியன்’ (2022) ஆகிய படங்கள் வெளியாகி, வசூலை அள்ளின என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜுராசிக் பார்க்’ படத்தின் மீது பெருங்காதல் கொண்டவர் கரேத் எட்வர்ட்ஸ். ‘ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த்’தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததும், அதை கரேத்தால் நம்ப முடியவில்லை. கனவு நிறைவேறியதைப் போல நினைத்தார். மற்ற பட வேலைகள் மற்றும் தனிப்பட்ட வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முழுமூச்சாக படத்தில் இறங்கினார்.
மட்டுமல்ல, ‘ஜுராசிக் பார்க்’கிற்குத் திரைக்கதை எழுதிய டேவிட் கெப்தான் இப்படத்துக்கும் திரைக்கதை எழுதுகிறார் என்பது கரேத்தை மேலும் இன்ப அதிர்ச்சியில் உறைய வைத்தது. காரணம், பெரும் வெற்றிபெற்ற ‘ஜுராசிக் பார்க் (1993)’, ‘த லாஸ்ட் வேர்ல்டு: ஜுராசிக் பார்க் (1997)’ ஆகிய முதல் இரண்டு படங்களுக்கு டேவிட்தான் திரைக்கதை எழுதியிருந்தார். இதற்குப் பிறகு வெளியான மற்ற நான்கு படங்களுக்கும் திரைக்கதை எழுத டேவிட்டை அணுகினார்கள். ‘‘என்னிடம் புதிதாக சொல்வதற்கோ, திரைக்கதைக்கு சரியான வழியில் பங்களிப்பு செய்வதற்கோ எதுவுமில்லை...’’ என்று மறுத்துவிட்டார். இருந்தாலும் அந்தப் படங்களின் திரைக்கதைகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார். ‘ஜுராசிக் வேர்ல்டு ரீபர்த்’துக்கு டேவிட் திரைக்கதை எழுதுவது தெரிந்ததும் கரேத் மட்டுமல்ல, ‘ஜுராசிக் பார்க்’கின் ரசிகர்களும் உற்சாகமாகிவிட்டனர்.
ஹாலிவுட்டில் அதிக வசூலை அள்ளிய படங்களுக்குத் திரைக்கதை எழுதியவர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கிறார் டேவிட். இதுவரை டேவிட் திரைக்கதை எழுதிய படங்கள் 2.6 பில்லியன் டாலர் வசூலை அள்ளியிருக்கின்றன.
இந்திய மதிப்பில் 22,375 கோடி ரூபாய்!கரேத் எட்வர்ட்ஸும் ‘மான்ஸ்டர்ஸ்’, ‘காட்ஜில்லா’, ‘ரூஷ் ஒன்: ஏ ஸ்டார் வார்ஸ் ஸ்டோரி’, ‘த கிரியேட்டர்’ போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கரேத்துக்கு முன்பு இப்படத்தை இயக்கும் வாய்ப்பு ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் டேவிட் லீச்சிடம் சென்றது. இறுதியில் படத்தை இயக்க கரேத்தை தேர்வு செய்தனர். டைனோசர்கள் வாழக்கூடிய ஒரு தீவுக்கூட்டத்துக்கு டிஎன்ஏ ஆராய்ச்சிக்காக ஒரு குழு செல்கிறது. யாருமே செல்லக்கூடாத ஓர் ஆபத்தான இடம் என்று அந்தக் குழுவுக்குத் தெரிய வருகிறது. அங்கிருந்து அவர்கள் தப்பித்தார்களா? அவர்களுக்குத் தேவையான டிஎன்ஏ கிடைத்ததா என்பதே கதை.
பழைய ‘ஜுராசிக் பார்க்’ கொடுத்த உணர்வை இந்தப் புதுப்படத்திலும் கொடுக்க வேண்டும் என்று முயற்சி செய்திருப்பதாக இயக்குநர் சொல்கிறார்.முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்கார்லட் ஜொஹான்ஸன் நடித்திருக்கிறார்.
குழந்தைப் பருவத்திலிருந்து ‘ஜுராசிக் பார்க்’கின் பரம ரசிகை ஸ்கார்லட் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நடிப்பதற்காக கிடைத்த வாய்ப்பு மூலம் தனது வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டதாகச் சொல்கிறார். லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இப்படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்தான்!
த.சக்திவேல்
|