என்னை நான் ஹீரோயினாக பார்த்ததே கிடையாது!



‘ஹேப்பி வெட்டிங்’ படம் மூலம் மலையாள சினிமாவுக்குள் ஹேப்பியாக காலடி எடுத்து வைத்தவர் கிரேஸ் ஆண்டனி. தொடர்ந்து பிஜு மேனன், திலீப், மேத்யூ தாமஸ் உள்ளிட்டோருடன் நடித்தவர், திடீரென ‘கும்பலாங்கி நைட்ஸ்’ படத்தில் கிரே ஷேட் வில்லனாக நடித்த பகத் ஃபாசில் மனைவியாக நடிக்க... பக்கத்து ஸ்டேட் வரை கிரேஸ் புகழ் பரவியது.
அவ்வளவுதான். அந்த கிரேஸ் அன்று முதல் ஏறிக்கொண்டே செல்கிறது. மம்மூட்டி, மோகன்லால், நிவின் பாலி... இப்படி பறந்து பறந்து வருடத்திற்கு குறைந்தது நான்கு படங்கள் கொடுக்கத் துவங்கிய கிரேஸ் ஆண்டனி, இப்போது ‘பறந்து போ’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமாகியிருக்கிறார்.

நன்றாக நடிக்க வேண்டும் என்றாலே ஒரு நடிகைகள் லிஸ்ட் மலையாள சினிமாவில் உண்டு. அந்தப் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருக்கிறார் கிரேஸ் ஆண்டனி.
தமிழ் சினிமா உங்களை அன்புடன் வரவேற்கிறது... முன்பே உங்களை எதிர்பார்த்தோம்..?

ரொம்ப நன்றி! தமிழில் நடிக்கவேண்டுமென்ற ஆசை எனக்கு நீண்ட நாட்களாகவே இருந்தது. நிறைய வாய்ப்புகளும் வந்துச்சு. ஆனால், ஒரு நல்ல அறிமுகத்துக்காகக் காத்திருந்தேன்.
ஒருநாள் நிவின் பாலி என்னிடம் கேட்டார்... ‘தமிழில் நடிக்க விருப்பமா? ராம் சார் படம்னா ஓகேவா?’

மறுவார்த்தை பேசாம ஓகே சொல்லிட்டேன். ராம் சார் படங்களை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ படம் என்னை இரண்டொரு நாட்கள் மனதளவில் பாதிச்சது. 

அவர் நான் நடிச்ச ‘அப்பன்’ படம் பார்த்துட்டு என்னைத் தேர்வு செய்ததா சொன்னார். கதை, என்னுடைய கேரக்டர் எல்லாமே மலையாளத்தில் மொழி பெயர்ப்பு செய்து எனக்குப் புரிகிற மாதிரி சொன்னார். ராம் சார் என்றதும் நான் கதை கேட்க வேண்டிய அவசியம் கூட இல்லைன்னு நினைச்சேன்.

ஆனால், அவர் செம ப்ரொஃபஷனல். அவ்வளவு டெடிகேஷனா என் கேரக்டரை விளக்கினார். இதுதான் எனக்கான தமிழ் அறிமுகம்னு முடிவு செய்தேன்.

ராம் படங்கள் என்றாலே சவால்கள் அதிகம் இருக்குமே... இந்தப் படம் எப்படி?

ஒரு சர்ஜரியே செய்கிற அளவுக்கு விழுந்து காயம் வாங்கினேன்! ஆனால், என் நடிப்பைப் பார்த்துட்டு உங்க கேரக்டரை இன்னும் ஆழமாக்கலாம்ன்னு தோணுதுன்னு சொன்னார்.
ஒரு தேசிய விருது வாங்கின இயக்குநர்கிட்டருந்து இப்படி ஒரு பாராட்டு. 

இதுக்கு மேல என்ன வேணும்! பெரும்பாலும் கோயம்புத்தூர், பாலக்காடு வட்டாரங்கள்லயே ஷூட்டிங் இருந்துச்சு.என்கிட்ட மலை ஏறணும், ஏரியில் நீந்தணும் அப்படின்னு சொன்னார். சில லொகேஷன்களில் காட்டு யானைகள் வர வாய்ப்பிருந்தது. அதேபோல் இருட்டறதுக்குள்ள கட்டாயமா ஷூட் முடிக்க வேண்டிய சூழ்நிலையிலும் கூட வேலை செய்தோம்.

நான் மட்டுமில்லை... என்னுடன்  நடிச்ச சிவா  உட்பட மெனக்கெட்டு நடிச்சிருக்காங்க. ராம் சார் லொகேஷன் தேர்வுகள் கூட அவ்வளவு தனித்துவமா இருக்கும். அவர் கூட வேலை பார்த்ததை நல்ல பாடமாக பார்க்கறேன். 

மலையாள ரசிகர்கள்கிட்ட ராம் சாருக்கு ஒரு பெரிய மரியாதை உண்டு. சிவா... எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்து என்னை கம்ஃபோர்ட் ஆக்கினதே அவர்தான். செம ஜாலியான பெர்சன். சீக்கிரம் எல்லார் கூடவும் ஃப்ரெண்ட் ஆகிடுவார். அவரால்தான் நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் எங்கேயும் வேறு ஒரு மொழி சேர்ந்தவ என்கிற எண்ணமே இல்லாம இருந்தேன்.

மம்மூட்டி, மோகன்லால்... போன்றவர்களிடம் கற்றுக்கொண்டது என்ன?

‘நீ ஒரு ஹீரோயின் என்கிற எண்ணத்தை என்னைக்கு மனசிலே ஏத்திக்கிறியோ, அன்னைக்கு உன்னுடைய திறமை மங்க ஆரம்பிச்சிடும்...’ இது ‘தமாஷா’ (மலையாளம், 2019) பட இயக்குநர் அஸ்ரஃப் ஹம்சா சொன்ன வார்த்தைகள். 

அதைத்தான் நான் ஃபாலோ செய்கிறேன். மம்மூட்டி சார், லால் சார்கிட்டல்லாம் யாரும் எப்பவும் பேசலாம். ரொம்ப எளிமையா இருப்பாங்க. கதைதான் ஹீரோ, அதற்கான கருவிதான் நடிகர்கள் என்கிறதுதான் அவங்க மந்திரம். அதையே தான் நானும் கடைப்பிடிக்கிறேன்.

என்னை நான் எங்கேயும் ஹீரோயினாக பார்த்தது கிடையாது. குறிப்பா உடல் எடை பிரச்னைகள் மலையாள சினிமா உலகத்தில் இல்லை. திறமையைதான் அடையாளப் படுத்துவாங்க.

என்னுடைய உடல் பருமன் யாரையும் இடையூறு செய்யலை. ஆனால், நானாகவே ஆரோக்கியமான உடலுக்காக இப்போ சில டயட், உடற்பயிற்சிகள் செய்யறேன். ஆனால், இந்த ஜீரோ ஸ்ட்ரக்ச்சர், ஃபேஸ் கரெக்‌ஷன் எல்லாம் நோ.

உங்களைப் பற்றி சொல்லுங்க..?

சொந்த ஊர் எர்ணாகுளம். இப்போ கொச்சியில் செட்டிலாகிட்டோம். அப்பா ஆண்டனி, கான்ட்ராக்டர். அம்மா ஷைனி, ஹவுஸ் ஒயிஃப். எனக்கு ஒரு சகோதரி, செலினா.
சினிமா பேக்ரவுண்ட் இல்லாத குடும்பம். சினிமான்னா பயப்படுவாங்க. முதன் முதலில் ‘ஹேப்பி  வெட்டிங்’ ஆடிஷன்னு சொன்னப்போ அப்படி ஒரு பயம் அம்மாவுக்கு. நோ சொல்லிட்டாங்க. கெஞ்சிதான் பர்மிஷன் வாங்கினேன்.  

சின்ன வயதில் இருந்தே நடிப்பு மேல ஆர்வம். மலையாள தூர்தர்ஷன் டிவி பார்க்க ஞாயிற்றுக்கிழமைகள்ல பக்கத்து வீட்டுக்குப் போவேன். அப்படிதான் ‘மணிச்சித்ரத்தாழ்’ படம் பார்த்தேன். அதில் ஷோபனா மேடம் நடிப்பு மேலே ஒரு ஈர்ப்பு. அங்கே ஆரம்பிச்சது இந்த சினிமா ஆசை. பிஏ பரதநாட்டியம் படிச்சேன். தொடர்ந்து ஒரு ஸ்கூலில் டீச்சராகவும் வேலை செய்தேன். படிச்சிட்டு இருந்தபோதே வந்த ஆஃபர்தான் ‘ஹேப்பி வெட்டிங்’.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துச்சு. ‘கும்பலாங்கி நைட்ஸ்’ படம் பிரேக் கொடுத்தது. இதோ இப்போ ‘பறந்து போ’ படம் மூலம் தமிழில் அறிமுகம். சின்ன வயதில் இருந்தே தமிழ்ப் படங்கள் அதிகம் பார்த்து வளர்ந்தவ நான். ஏராளமான கனவுகள் இருக்கு. சப்போர்ட் செய்யுங்க.

ஷாலினி நியூட்டன்