இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட... யார் இந்த கமேனி
நவீன காலத்தில் ஓர் இஸ்லாமிய நாட்டில் முதல் புரட்சி நிகழ்ந்த நாடு என்றால் அது ஈரான்தான். 1979ல் அந்தப் புரட்சி நிகழ்ந்து ஈரானை புரட்டிப் போட்டது. 1941 முதல் 1979 வரை பரம்பரை பரம்பரையாக மன்னர் ஆட்சியே ஈரானில் நிலவியது.  அந்த வகையில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மொகமது ரெஷா ஷா பஹ்லவி என்பவர் சுமார் 38 வருட ஆட்சிக்குப் பின் நாட்டை விட்டே ஓடினார். ஈரானில் நிகழ்ந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க புரட்சிக்குக் காரணமானவர் ஒரு மதகுரு. அவர் பெயர்தான் அயதுல்லா ருஹொல்லா கொமேனி.  மன்னர் ஆட்சியில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்தார் கொமேனி. அப்பொழுது அவரது வழிகாட்டுதலுடன் ஈரான் புரட்சிக்கு தலைமையாக இருந்த கட்சி இஸ்லாமியக் குடியரசுக் கட்சி.
இந்தக் கட்சியை உருவாக்கியவர்களில் கொமேனியும் ஒருவர் என்றாலும் இதில் பலரும் இருந்தார்கள்.  அவர்களில் முக்கியமானவர் அலி உசேனி கமேனி (Khamenei). ஆம். சூப்பர் பவர் என்ற பெயர் எடுத்த இஸ்ரேல் நாட்டுக்கும், அந்த இஸ்ரேல் நாட்டின் உதவிக்காக நேசக்கரம் நீட்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் இன்றைய ஈரானின் தன்னிகரில்லாத சுப்ரீம் லீடராக இருக்கும் அதே கமேனிதான். 
1979க்கு முன்பு வரை ஈரானை ஆட்சி செய்து கொண்டிருந்த மன்னர் ஷா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் கைப்பிடிக்குள் இருந்தவர். ஈரானின் எண்ணெய் வளங்கள் மீது கண் வைத்த இந்த இரண்டு நாடுகளுமே ஈரான் மக்கள் மீது கவலை கொள்ளாமல், அந்நாட்டில் அள்ள அள்ள குறையாமல் இருக்கும் எண்ணெயை வேண்டிய மட்டும் சுரண்டிக் கொழுத்து வந்தது.
இதனால் ஈரானின் சமூக, கலாசார, பொருளாதார செல்வாக்கு சரிந்துகொண்டே வந்தது. அமெரிக்க மற்றும் பிரித்தானிய செல்வாக்கால் இந்த இரு நாடுகளின் வர்த்தகச் சந்தையும், கலாசார ஊடுருவல்களும் ஈரானில் புற்றீசல் போல் பாய்ந்தன.
இதை எதிர்த்து 1960ம் ஆண்டு முதலே ஈரானில் பல்வேறு புரட்சிகரக் குழுக்களும் தீவிரவாதக் குழுக்களும் இயங்கத் தொடங்கின. இந்தத் தருவாயில்தான் 1970களில் ‘இஸ்லாமியக் குடியரசுக் கட்சி’ ஆரம்பிக்கப்பட்டது.
இதனை ஆரம்பித்தவர்கள் சில மதகுருக்கள். இதில் முதன்மையானவர் கொமேனி. இவரது வலது கரமாக நின்று செயல்பட்டவர் கமேனி. 1979ல் ஈரான் புரட்சி வெற்றியை நோக்கி நடைபயில... தலைமறைவாக இருந்த கொமேனி ஈரானுக்கு வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து பெரிய எழுச்சி ஈரானில் நிகழ்ந்தது. இது ஈரானை புதிய பாதைக்கு இட்டுச் சென்றது. கொமேனியை எல்லோரும் அயதுல்லா கொமேனி என்றுதான் அழைப்பார்கள். ‘அயதுல்லா’ என்பது ஒருவரின் பெயர் கிடையாது. அது ஒரு பட்டப் பெயர். பொதுவாக ஈரானில் சில கால இடைவெளியில் மதகுருமார்களிலேயே சுமார் 12 பேரை தேர்வு செய்து அவர்களை எல்லோருக்கும் மேலானவர்களாக அறிவிப்பார்கள். இந்த 12 பேரிலும் முதன்மையானவரை உச்ச தலைவர் எனும் வகையில் சுப்ரீம் லீடர் என்று அழைப்பார்கள். இதுதான் ‘அயதுல்லா’ எனும் பெயரைப் பெற்றது.
1979ல் ஈரான் புரட்சி வெற்றியடைந்ததும், நாடு திரும்பிய கொமேனிக்கு மக்கள் வைத்த பெயர்தான் சுப்ரீம் லீடர். அதாவது அயதுல்லா. இது மக்களாலேயே வழங்கப்பட்டதால் அதை மற்ற மதகுருமார்களும் ஏற்றனர். உண்மையில், இந்தப் பட்டப் பெயர் பொருத்தமானதாக இருந்தது. கொமேனி சுப்ரீம் லீடராக மாறியதும் முதலில் செய்த வேலை ஈரானை இஸ்லாமியக் குடியரசாக மாற்றியதுதான்.
மன்னர் ஆட்சி மற்றும் அமெரிக்கா - பிரிட்டனின் செல்வாக்கால் சீரழிந்த ஈரான் சமூக கலாசாரத்தை மீட்கவேண்டும் என்றால் ஈரான் ஓர் இஸ்லாமியக் குடியரசானால்தான் முடியும் என்பதால் இதை மக்களும் வரவேற்றார்கள். போலவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் கொமேனி செய்த வேலை... நாட்டின் எண்ணெய் வளங்களை நாட்டுடைமை ஆக்கியதுதான். குறிப்பாக இங்கிலாந்துக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனம்.
இந்த நிறுவனமே இங்கிலாந்தின் ‘உயிரைக்’ காப்பாற்றி வந்தது. மிகையில்லை. பிரிட்டனின் உள்நாட்டு ஜிடிபிக்கு பெரும் பலமாக ஈரானில் இருந்த எண்ணெய் நிறுவனமே செயல் பட்டது.இந்த நிறுவனத்தை கொமேனி எப்பொழுது நாட்டுடைமை ஆக்கினாரோ அப்பொழுது முதல் இங்கிலாந்தின் பொருளாதாரம் ஆட்டம் காணத் தொடங்கியது; இன்றும் அது ஆடியபடியேதான் இருக்கிறது!
அத்துடன் அமெரிக்கா, பிரிட்டன் தவிர்த்த மற்ற நாடுகளுடன் முழுமூச்சாக எண்ணெய் வர்த்தகத்தில் ஈரான் ஈடுபடத் தொடங்கியது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பொருளாதார வளத்தில் ஈரான் முன்னேற ஆரம்பித்தது.
இது ஒரு பக்கம் என்றால்... கொமேனியின் மரபார்ந்த சில சட்டதிட்டங்கள் மீண்டும் ஈரான் மக்களை வாட்டத் தொடங்கியது மறுபக்கம்.உதாரணமாக பெண்கள் தொடர்பான சட்டங்கள், கருத்துச் சுதந்திரம், கலை கலாசாரங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாடுகள் அதிகரித்தன. இந்நிலையில் 1989ல் கொமேனி காலமானார். கண்கொத்திப் பாம்பாக இதற்காகவே காத்திருந்த அமெரிக்காவும் பிரிட்டனும் மீண்டும் ஈரானை தங்கள் வசம் கொண்டுவர இதுவே சரியான தருணம் என தொடையைத் தட்டியபோது...
அவர்களைப் பார்த்து நாக்கை மடித்து கண்களை உருட்டியது ஓர் உருவம். அந்த உருவம்தான் கமேனி.கொமேனியின் இடத்தை கமேனி நிரப்பத் தொடங்கினார் என்றும் சொல்லலாம் அல்லது அமெரிக்காவும் இங்கிலாந்தும் மீண்டும் ஈரானுக்குள் நுழைய முடியாதபடி அந்நாட்டு அரணாக மாறினார் என்றும் குறிப்பிடலாம்.எப்படி அழைத்தாலும் ரோஜா, ரோஜாதான் என்பதுபோல் ஈரானின் முகமாக கமேனியே 1989 முதல் திகழ்கிறார் என்பது மட்டும் உண்மை.
1790ம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள உத்திரபிரதேச மாநிலம் கிண்டூர் கிராமத்தில் வசித்து வந்த கமேனியின் மூதாதையர்கள் பிறகு ஈரானுக்கு புலம் பெயர்ந்தனர். கமேனி 1939ல் பிறந்தவர். 8 பிள்ளைகளில் 2வது பிள்ளை. படித்தது இஸ்லாமியக் குருவாக மாறுவதற்கான சமயப் படிப்பு. கொமேனி சுப்ரீம் லீடராக உருவெடுத்ததும் கமேனியும் அரசில் பல பதவிகளை வகித்தார்.
உதாரணமாக பாதுகாப்புத் துறையில் துணை அமைச்சர், இஸ்லாமியப் புரட்சிகரப் படை எனும் ஈரானின் முக்கியமான இராணுவப் படையின் தலைமை, ஈரான் தலைநகரான தெஹ்ரானில் மிக முக்கியமான வெள்ளிக் கிழமை பிரார்த்தனையில் தலைமை குரு... என உயர்ந்த கமேனி 1982ல் ஈரானின் அதிபருமானார். கொமேனியின் ஆதரவு கமேனிக்கு தொடக்கம் முதலே இருந்ததால் அவர் முழு சுதந்திரத்துடன் செயல்பட ஆரம்பித்தார். இதுதான் அவரை மேலும் ஒரு இரும்பு மனிதராக மாற்றியது.
1989ல் கொமேனி இறக்கவே கமேனி சுப்ரீம் லீடராக, அயதுல்லாவாக பதவியேற்றார். 1979ல் புரட்சிக்குப் பின் ஈரான் ஓர் இஸ்லாமியக் குடியரசாக மாறியதை அடுத்து குடியரசின் குணங்கள் ஈரானில் பரவத் தொடங்கின.
அவை பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தின.நாடாளுமன்றம், நீதித் துறை, இராணுவம் உள்ளிட்டவை எல்லாம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட நபர்களால் வழிநடத்தப்பட ஆரம்பித்தன. ஆனாலும் ஈரானின் முக்கியமான கடைசி முடிவு என்பது அயதுல்லா எனும் சுப்ரீம் லீடரின் கைகளில்தான் இருக்கிறது. இதுதான் அன்று முதல் இன்று வரை ஈரானின் பிரச்சனை என விமர்சிப்பவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக 12 மதகுருக்களை தேர்வு செய்வது மற்ற மத குருக்களின் குழுவால் நிகழ்ந்தாலும் அதில் அயதுல்லா எனும் சுப்ரீம் லீடரை தேர்வு செய்வது நாடாளுமன்றத்தை கட்டுப்படுத்தும் 88 பேர் கொண்ட நிபுணர் குழுதான். கமேனி பல ஆண்டுகளாக அரசாங்கத்திலும், ஆட்சியிலும் இருந்ததால் இந்த நிபுணர் குழுவையே தன் கையில் போட்டுக்கொண்டு அயதுல்லா ஆக மாறினார் என விமர்சகர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அதேபோல் 12 உயரிய மதகுருக்கள் அனைவருமே மத படிப்பில் மர்ஜா (Marja) எனும் ஓர் உயரிய நிலையை அடைந்திருக்கவேண்டும். ஆனால், கமேனி இதில் தேர்ச்சி பெறாதவர் என்பதால் அவர் அயதுல்லாவாக பதவி ஏற்றதும் சர்ச்சைகள் எழுந்தன.இதை தன் செல்வாக்கால் கமேனி அடக்கினார்... அந்த சட்டத்தையே திருத்தி அயதுல்லா பதவியில் உட்கார்ந்து கொண்டார்... என்றெல்லாம் இன்று வரை விமர்சகர்கள் பட்டியலிட்டபடி இருக்கிறார்கள்.
இத்தோடு கருத்துச் சுதந்திரத்துக்கு கட்டுப்பாடு, பெண் விடுதலையில் கண்டிஷன்ஸ் அப்ளை, அரசியல் எதிரிகளை ஒன்று கைது செய்து சிறையில் அடைப்பது அல்லது கொலை செய்வது என்றெல்லாம் கமேனி செயல்படுகிறார் என விமர்சனம் உலக நாடுகளில் மட்டுமல்ல, ஈரானிலும் இருக்கிறது.
இதற்கு வலுசேர்ப்பதுபோலவே கமேனி நடந்து கொண்டார்; நடந்து கொள்கிறார். உதாரணமாக ஈரானில் ஒருகாலத்தில் பிரதமர் பதவி இருந்தது. அதை கமேனி தூக்கிவிட்டார். அத்துடன் தன் காலத்தில் பதவி வகித்த பல அதிபர்களை ஓரங்கட்டினார் என்கிறார்கள்.
ஆனால், கொமேனி காலம் முதல் கமேனியுடன் பயணித்தவர்கள் மேற்குலகம் பக்கம் - குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து பக்கம் - சாயத் தொடங்கியதாலே இந்த நடவடிக்கைகளை கமேனி மேற்கொள்ள நேரிட்டது என்று நியாயப்படுத்தும் மக்கள் ஈரானில் அதிகம்.
இப்படி கமேனிக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கமேனியின் சுப்ரீம் லீடர் பதவிக்கு ஆபத்து வரலாம் என மேற்குலகம் கணக்குப் போட்டது.
இதை மனதில் வைத்துதான் சமீபத்தில் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதலைத் தொடர்ந்து கமேனியின் அதிருப்தியாளர்கள் ஈரானில் ஒன்று சேர்வார்கள்... மக்கள் எழுச்சி ஏற்படும்... 1979ம் ஆண்டு போலவே ஈரானில் ஆட்சி மாற்றம் நிகழும்... அந்த ஆட்சி மேற்குலகுக்கு சாதகமாக இருக்கும்... என்றெல்லாம் திட்டமிட்டார்கள். இத்திட்டங்கள் அனைத்தும் பகல் கனவாக கரைந்ததுதான் மிச்சம்.
ஆம். ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதுமே கமேனியின் மீது வருத்தம் கொண்ட அதிருப்தியாளர்கள் அனைவரும் சுப்ரீம் லீடருக்கு ஆதரவாக மாறிவிட்டார்கள்! ஆம். கமேனியின் கரத்தை வலுப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
12 நாட்கள் நடைபெற்ற போரில் இஸ்ரேல் வெற்றி பெற்றதா அல்லது ஈரான் ஜெயித்ததா?
இந்த வினாவை இப்பொழுது யாருமே எழுப்பவில்லை. ஏனெனில் இருநாடுகளின் உள்கட்டமைப்புமே பலத்த சேதத்துக்கு ஆளாகியுள்ளன.ஆனால், அமெரிக்க ஆதரவுடன் களம் இறங்கிய இஸ்ரேல், தன் வாழ்நாளில் சந்திக்காத பின்னடைவை இப்பொழுது சந்தித்துள்ளது. இராணுவ ரீதியில் பலமான நாடு என மத்திய கிழக்கில் மார்தட்டி வந்த இஸ்ரேலின் பிம்பம் சுக்குநூறாக உடைக்கப்பட்டிருக்கிறது.
உடைத்திருக்கிறார் கமேனி என்பதுதான் முக்கியம். மரண பயத்தைக் காட்டியிருக்கிறார். இஸ்ரேல் மக்கள் இதுவரை அனுபவிக்காத உணர்ச்சி இது.இன்று விமர்சனம் இன்றி கமேனியை ஈரான் மட்டுமல்ல... மத்திய கிழக்கு நாடுகளும் அராபிய மக்களும் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.சுருக்கமாகச் சொல்வதென்றால் ஈரானின் சுப்ரீம் லீடரை ஒட்டுமொத்த அரபு மக்களின் அயதுல்லாவாக உயர்த்திய பெருமை இஸ்ரேலையும் அமெரிக்காவையும் மட்டுமே சேரும்!
டி.ரஞ்சித்
|