காதலின் பெயரால் ஏமாற்றப்பட்டார்... கத்திக் குத்து வாங்கி சாலையில் ரத்தத்தில் மிதந்தார்... மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்!
மனம் திறக்கும் மால்வி மல்ஹோத்ரா!
பெண்ணாக இருப்பதே பெரிய டாஸ்க்... அதிலும் சினிமா நடிகையானால் எவ்வளவு பெரிய டாஸ்க் இருக்கும்?
 அப்படிதான் மரண வாசல் வரை சென்று திரும்பியிருக்கிறார் மால்வி மல்ஹோத்ரா. துரத்திய விதி தயாரிப்பாளர் யோகேஷ் வடிவத்தில் விரட்டியது. ஒருதலைக் காதல் என்கிற பெயரில் கொடுத்த நெருக்கடி, எல்லை மீறி போன், சென்ற இடங்கள், வீட்டு வாசல் வரை வந்து நின்றது. விளைவு... உடலில் மூன்று இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். சைக்கிளில் வந்த இளைஞர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். தேசமே குரல் கொடுத்தது மால்விக்கு.
 2020ம் ஆண்டு நடந்த இந்தத் தாக்குதலில் இருந்து மீண்டு இதோ தற்போது இரண்டு மடங்கு பலமாக மொழி கடந்து நான்கைந்து மொழிகளில் நடித்து வருகிறார் இந்த குட்டி ஜெனிலியா. ஆம்,பாலிவுட் குட்டி ஜெனிலியா என இந்தி டிவி ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார் மால்வி. எப்படி இருக்கீங்க? வெல்கம் டூ தமிழ் சினிமா! நன்றி, நலமா இருக்கேன். தென்னிந்தியாவே என் கதவைத் தட்டியிருக்கு. இனிமே எல்லாமே நல்லா இருக்கும்ன்னு ஒரு நம்பிக்கை வந்திருக்கு.
‘ஜென்ம நட்சத்திரம்’..?
இந்தப் படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்தப் படத்துக்கும் நான் முழு உழைப்பு கொடுத்து வேலை செய்திருக்கேன். கதை முழுக்க ஹீரோயின் மேலதான் பயணிக்கும். அதுல ஹீரோயினா என்னைத் தேர்வு செய்திருக்காங்கன்னு நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு. இந்த படம் ஒரு ஹாரர் த்ரில்லர்தான்.
ஆனா, அதனுடன் இணைந்த காதல் டச்சும் இருக்கு. கதை பற்றி ரொம்ப சொல்ல முடியாது இப்போ. ஆனா, ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்... படம் ரிலீஸானதும், எல்லாருக்கும் ஒரு நல்ல தியேட்டர் அனுபவமா இருக்கும். இயக்குநர் மணியுடன் பணியாற்றிய அனுபவம்..?
இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்த டைரக்டர் பி.மணி வர்மனுக்கு நான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லணும். அவர் என்மீது வைச்ச நம்பிக்கைக்கு நான் கடமைப்பட்டிருக்கேன். காரணம், ஒரு நல்ல பிரேக் வேணும்ன்னு காத்திருந்தேன்.
அதற்கு இந்தப் படம் சிறப்பான வாய்ப்பு கொடுத்திருக்கு. தமிழில் கிளாசிக் ஹிட் ஆக பழைய ‘ஜென்ம நட்சத்திரம்’ எப்படி ஒரு பெஞ்ச் மார்க் வச்சிருக்கோ... அதே மாதிரி இந்தப் படமும் ஒரு பக்கா ஹாரர் எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கும். தமன் அக்ஷன்... என்னுடைய கோ - ஸ்டார். அவரும் டெடிகேஷனான நடிகர். தமிழ் புரிஞ்சுக்க நிறைய உதவினார். டிவியில் துவங்கிய பயணம் இப்போ தென்னிந்திய சினிமா வரை வந்திருக்கு..?
டிவி எனக்கு ஒரு மிகப்பெரிய பயிற்சிப்பட்டறைன்னு சொல்லலாம். கேமரா அனுபவம் கிடைச்சதே அங்கேதான். அதிலிருந்து நான் பாலிவுட், தொடர்ந்து தென்னிந்திய படங்களுக்கு வந்தபோது கூட சீரியல், டிவி ஆர்டிஸ்ட்ன்னு யாரும் என்னை ஒதுக்கலை. கலைஞர்களுக்கு எல்லாமே நடிப்பு, எல்லாமே கேமராதான். அப்படியான மக்களை என்னுடைய பயணத்தில் சந்திச்சேன். அப்படித்தான் ‘ஜென்ம நட்சத்திரம்’ டீம் கூட என்னுடைய நடிப்பை நம்பினாங்க.
இந்த கம் பேக் எப்படி இருக்கு?
5 வருஷங்கள் ஆச்சு. சில லீகல் விஷயங்கள் எல்லாம் முடிஞ்சு ரிலாக்ஸா இருக்கேன். இன்னமும் அந்த மொமெண்ட், பயம் கொஞ்சம் மனசிலே இருக்கு. அவ்வளவு சீக்கிரம் வெளியே வர முடியாது இல்லையா? மரணத்தின் வாசல் வரை போய் திரும்பியிருக்கேன்.
நிறைய சவால்கள். உடல், மனதளவில் உடைஞ்சிட்டேன். எந்தப் பொண்ணுக்கும் இது நடக்கக் கூடாது. எனக்காக ஆதரவா நின்ன அத்தனை பேரும்தான் நான் திரும்ப ஸ்ட்ராங்கா வந்ததுக்குக் காரணம். அவங்களுக்கு எல்லாம் நன்றி சொல்லணும். பாலிவுட்டில் குடும்ப அரசியல் இந்தியாவே அறிந்தது... உங்களுக்கு அந்த சிரமம் இருந்ததா?
இதை நான் குடும்பப் பின்னணின்னு பார்க்க மாட்டேன். ஒரு நபர் ஏற்கனவே இருக்கும் துறையில், இன்னொருவருக்கு சிபாரிசு என்கிற பழக்கம் எல்லா துறையிலும் இருக்கு. குடும்பம்ன்னு இல்லை... நண்பர்களே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரிஞ்சா ஒரு வாய்ப்பு இருக்குன்னா சொல்ல மாட்டோமா?! அப்படித்தான் இதை நான் பார்க்கறேன். நமக்குக் கிடைக்கணும்ன்னு ஒரு விஷயம் இருந்தா அதை யாரும் தடுக்க முடியாது.
பன்மொழிகளில் நடிப்பு... மொழிகளை எப்படிப் புரிஞ்சிக்கறீங்க?
நான் உணர்வுகளாதான் புரிஞ்சிப்பேன். எந்த மொழியானாலும் உணர்வுகள் ஒண்ணுதான். அந்தப் புரிதல் இருந்தாலே மொழி சுலபமாகிடும். அதனால் என் மொழியில் அல்லது எனக்குத் தெரிஞ்ச மொழியில் நான் காட்சியின் உணர்வைப் புரிஞ்சுப்பேன். பிறகு அந்த எமோஷனலுடன் வசனம் பேசும்போது சுலபமாகிடும். மேலும் நிறைய மொழிகள் கத்துக்கப் பிடிக்கும். கூடிய சீக்கிரம் தமிழும் கத்துக்கிட்டு ஒரு படம் நடிப்பேன்.
உங்க ஃபிட்னஸ் ரகசியம்..?
யோகாதான் என்னுடைய ரகசியம். மனம், உடல், எல்லாமே ஒருசேர வேலை செய்யணும்ன்னா யோகாஸ் செய்யணும். என்னுடைய கடினமான சூழலில் கூட எனக்கு மிகப் பெரிய சப்போர்ட் கொடுத்தது நான் செய்த யோகாசனங்கள்தான்.
அடுத்தடுத்த படங்கள்..?
தமிழில் ‘ஜென்ம நட்சத்திரம்’ ரிலீஸுக்கு தயார். ஆர்.கண்ணன் சார் கூட ஒரு புராஜெக்ட் இருக்கு. இந்தியில் ‘டம் டம் மஸ்த் கலந்தர்’ படமும் போயிட்டு இருக்கு.
ஷாலினி நியூட்டன்
|