சமையல் கலையின் ஆஸ்கர் விருதை வென்ற தமிழர்!



மதுரைக்கு அருகிலுள்ள நத்தம் எனும் ஊரைச் சேர்ந்த விஜய் குமார் என்ற சமையல் கலைஞர், தமிழ்நாட்டின் கிராமத்து உணவுகளைச் சமைத்து, நியூயார்க் மாகாணத்திலேயே சிறந்து விளங்கும் சமையல் கலைஞர் என்ற ‘ஜேம்ஸ் பியர்ட் ஃபவுண்டேஷன்’ விருதை வென்றிருப்பதுதான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். உலகளவில் சிறந்த சமையல் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் இதுவும் ஒன்று. சமையல் கலையின் ஆஸ்கர் என்று அழைக்கப்படுகிறது இந்த விருது.

‘‘தமிழ்நாட்டைச் சேர்ந்த கருப்பு நிறத்து பையன் ஒருவன், இவ்வளவு பெரிய இடத்துக்கு வருவான் என்று ஒருபோதும் நினைத்ததில்லை...’’ என்று தன்னடக்கமாகப் பேசும் விஜய் குமாருக்கு விருது கிடைத்திருப்பது, அமெரிக்காவின் உணவுக் கலாசாரத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்கின்றனர். இதற்கு முன்பு இந்த விருதை மேற்கத்திய சமையல் கலைஞர்கள்தான் பெற்று வந்தனர். தமிழர் ஒருவர் பெறுவது இதுவே முதல்முறை.

அதனால் தென்னிந்தியர்கள் மற்றும் தென்னிந்திய உணவுகளின் மீது அமெரிக்கர்கள் கொண்டிருக்கும் அணுகுமுறையையும், பார்வையையும் இந்த விருது கண்டிப்பாக மாற்றும் என்கின்றனர்.
நீண்ட காலமாக அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய சமையல் கலைஞர்கள் அங்கிருப்பவர்களுக்கு உகந்ததுபோல் சமைத்து வந்தனர். உதாரணத்துக்கு, மசாலாப் பொருட்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது; வழக்கத்தைவிட குறைவான காரம்; கறிவேப்பிலை சேர்க்காமல் சமைப்பது என இந்திய சமையல்களில் பயன்படுத்தப்படும் எதையும் சேர்க்காமலேயே சமைத்தனர். அதனால் உண்மையான இந்திய உணவுகள் அமெரிக்காவில் கிடைக்காமலேயே இருந்தது.   

ஆனால், விஜய் குமாரோ எந்த சமரசத்துக்கும் உடன்படாமல் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் ஓர் உணவு வகை எப்படி சமைக்கப்படுமோ, அதே மாதிரி சமைத்தார்.
வெளிநாட்டினருக்காக மசாலாப் பொருட்களிலோ அல்லது சமைக்கும் முறையிலோ அவர் எந்த சமரசத்தையும் செய்யவில்லை. இந்த அசலான சமையல் தான் அவருக்கு உயர்ந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.

விஜய் குமாரின் சமையல் கலைக்கு வித்திட்டவர் அவருடைய பாட்டிதான். ‘‘என்னுடைய தாத்தாவும், பாட்டியும் அரசம்பட்டியில் வாழ்ந்து வந்தனர். அங்கே போவதற்கு பஸ் வசதி கூட இல்லை. பள்ளி விடுமுறை நாட்களில் பாட்டி வீட்டுக்குச் செல்வது வழக்கம். நத்தைகள், மீன்களைப் பிடித்து வந்து சமைப்போம்...’’ என்கிற விஜய் குமார், பாட்டி நத்தைகளைச் சமைப்பதைப் பார்த்துதான் சமைக்க கற்றுக்கொண்டார்.

ஆரம்ப நாட்களில் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் சமையல் கலைஞராக வேலை செய்து வந்தார். பிறகு அமெரிக்காவுக்குச் சென்று, வர்ஜீனியா மாகாணத்தில் இருந்த ஒரு ஹோட்டல் தலைமை சமையல் கலைஞருக்கு அடுத்த இடமான துணை சமையல் கலைஞராக வேலை செய்தார். 

விஜய் குமார் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த புதிதில் பட்டர் சிக்கன், நாண், ரொட்டி ஆகியவைதான் இந்திய உணவுகளின் அடையாளமாக இருந்தன. இது அவருக்கு அதிர்ச்சியை அளித்தது.

நம்முடைய உண்மையான உணவுகளே இவை இல்லை என்று வருத்தமடைந்தார். இது தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை அமெரிக்காவில் அறிமுகப்படுத்த தூண்டுதலாக அமைந்தது.

வர்ஜீனியாவிலிருந்து கலிபோர்னியாவுக்குச் சென்று, அங்குள்ள பிரபலமான ஓர் இந்திய உணவகத்தில் பணிபுரிந்தார். கடந்த 2021ம் வருடம் ரோனி மசூம்தாரும், சிந்தன் பாண்டியாவும் இணைந்து ‘செம்ம’ என்ற உணவகத்தை நியூயார்க்கில் ஆரம்பித்தனர்.

இந்த உணவகத்தில் தலைமை சமையல் கலைஞராக இருக்கிறார் விஜய். அவர் விருப்பப்படி உணவுகளைச் சமைப்பதற்கான ஓர் இடத்தை உணவகத்தின் நிறுவனர்கள் ஏற்பாடு செய்து தந்தனர்.

அந்த சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, விதவிதமான தமிழ்நாட்டுப் பாரம்பரிய உணவுகளைச் சமைத்து, அமெரிக்கவாழ் இந்தியர்களை மட்டுமல்லாமல், அமெரிக்கர்களையும் அசத்தினார்.

இங்கே கல் தோசையுடன் கிடைக்கும் நத்தைப் பிரட்டலை இந்தியாவில் உள்ள பிரபல உணவகங்களில் கூட காண முடியாது. விஜய்யின் குழந்தைப்பருவத்தில் அவரது வீட்டிலும், பாட்டியின் வீட்டிலும் அடிக்கடி சமைக்கப்படும் உணவுதான் நத்தை பிரட்டல் என்பது குறிப்பிடத்தக்கது. 

‘‘இந்த உணவகத்தில் என்னுடைய வாழ்க்கையைப் பரிமாறுகிறேன்; தென்னிந்தியாவின் வாழ்க்கையைப் பரிமாறுகிறேன்; எனது உணவுக் கலாச்சாரத்தைப் பரிமாறுகிறேன்...’’ என்கிற விஜய் குமார், ‘செம்ம’ உணவகத்தின் மெனுவில் சென்னையின் தெருவோர உணவுகளை விரைவில் கொண்டுவரப்போகிறாராம்!

த.சக்திவேல்