300 விதமான ஜடை!



மத்திய சீனாவைச் சேர்ந்த ஹுவாங் என்ற குடும்பப் பெயரைக் கொண்ட 11 வயது சிறுவனைப் பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாக். தனது மூன்று வயது தங்கைக்குத் தினமும் ஜடை பின்னிவிட்டு பிரபலமாகியிருக்கிறான் இந்தச் சிறுவன்.

இதில் என்ன ஸ்பெஷல் என்கிறீர்களா?

ஒவ்வொரு நாளும் தங்கைக்குப் புதுப்புது ஸ்டைலில் ஜடை பின்னி விட்டிருக்கிறான் அண்ணன். தினமும் ஒருமுறை ஜடை பின்ன அதிகபட்சம் 20 நிமிடங்களே எடுத்துக்கொள்கிறான். ஒரு நாள் பின்னியதைப் போலவே, அடுத்த நாளும் அவன் பின்னுவதில்லை. மட்டுமல்ல, இதற்கு முன்பு யாருமே அந்த மாதிரி ஸ்டைலில் ஜடை பின்னியதே இல்லை. 

இதுவரைக்கும் 300க்கும் மேலான தனித்துவமான ஸ்டைல்களில் ஜடை பின்னி விட்டிருக்கிறான். ஒவ்வொரு நாளும் தனது மகளுக்கு மகன் ஜடை பின்னும் அற்புத தருணங்களை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் தட்டி விட்டிருக்கிறார் அம்மா. அந்த வீடியோக்கள் 1.5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை அள்ளி, வைரலாகிவிட்டன.

சீனாவில் உள்ள பல டிவி சேனல்கள் சிறுவனை நேர்காணல்கள் செய்திருக்கின்றன. மட்டுமல்ல, பிரபலமான ஹேர் ஸ்டைலிஸ்ட்கள் எல்லாம் அந்த வீடியோவைப் பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்து போயிருக்கின்றனர். ஜடை பின்னுவதற்கு முன்பு ஒரு சிறிய டப்பாவில் தண்ணீர், ஹேர்பின், சீப்பு, க்ளிப் உட்பட அனைத்து சாதனங்களையும் எடுத்து, தங்கைக்கு அருகில் வைத்துக்கொள்கிறான்.

ஏதுவான ஒரு நாற்காலியில் தங்கையை அமர வைத்து, முடியில் லேசாக தண்ணீர் தெளித்துவிட்டு, தேர்ந்த ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட் போல ஜடை பின்னுகிறான் அண்ணன்.
இந்த ஜடை பின்னலை அவன் எங்கேயும் கற்கவில்லை. மனதில் தோன்றும் கற்பனைப்படி செய்து பார்க்கிறான். 

‘‘எனது மகளுக்கு ஒரு வயதாக இருந்தபோதே மகன் ஜடை பின்ன ஆரம்பித்துவிட்டான். அவனுக்கு அது பிடித்திருக்கிறது. அதில் புதிதாக ஏதாவது செய்ய விரும்புகிறான். மகனின் திறமையைக் கேள்விப்பட்டு, பக்கத்து வீட்டிலிருக்கும் குழந்தைகள் எல்லாம் ஜடை பின்னுவதற்கு வருகின்றனர். அவர்களுக்கும் விதவிதமான ஜடை பின்னிவிடுகிறான்...’’ என்கிறார் அம்மா.

த.சக்திவேல்