வீடு பற்றிய கிளாசிக் கமர்ஷியல் படம்... 3 BHK ரகசியம்
‘‘என்னுடைய முந்தைய படங்கள்ல இருந்து இந்த படம் முற்றிலும் வேறு ஒரு டோனா இருக்கும். திரில்லர், ஆக்ஷன் இதெல்லாம் இல்லாம ஒரு லைட் வெயிட்டான குடும்ப படம் இது...’’ நிதானமாகவும் அழுத்தமாகவும் சொல்கிறார் ‘3BHK’ இயக்குநரான கணேஷ்.
 ‘8 தோட்டாக்கள்’, ‘குருதி ஆட்டம்’... இப்ப ‘3BHK’?
பொதுவா என்னுடைய படங்கள் திரில்லர், க்ரைம்னுதான் எதிர்பார்க்கிறார்கள். அந்த டெம்ப்ளேட்டை உடைக்க நினைக்கிறேன். ஓர் எழுத்தாளரா எல்லா கதையும் எல்லாருக்கும் சொல்லணும். எந்த எழுத்தாளரும் ஒரு க்ரைம் திரில்லர் கதைக்குள்ள பார்வையாளனை ஈஸியா கடத்திட முடியும். ஆனா, தினம் தினம் நடக்கிற குடும்பச் சூழல், சமூக சுற்றம் இதை மையமாக வைத்து ஒரு படம் எடுத்து அதில் பார்வையாளனை கடத்தறதுதான் பெரிய சவால்.
 அந்த சவாலை அனுபவிக்கணும்னு நினைச்சேன். இங்கிலீஷ் தெரியாத மக்களுக்கு கூட இந்த ‘BHK’ அர்த்தம் புரியும். அந்த அளவுக்கு வீட்டுத் தேவையும் வீட்டின் முக்கியத்துவமும் நம்ம கிட்ட இருக்கு. அதனால்தான் ‘3BHK’னு ஆங்கிலத்திலேயே பெயரும் தேர்வு செய்தேன்.
 ஏன் குறிப்பாக 3 பெட்ரூம் வீடு?
நமக்கென ஒரு சொந்த வீடு வாங்கணும் என்கிற எண்ணம் தினம் பத்து ரூபாய் சம்பாதிக்கிற மனுஷனுக்கு கூட கனவா இருக்கு. ஏதோ ஒரு கட்டத்தில் எல்லோருமே அதை நோக்கிதான் ஓடிக்கிட்டு இருப்போம். கைக்கு எட்டா தூரத்தில் இருந்தும் கூட அதற்கான ஓட்டம் நிற்காது.
 ஒரு நான்கு வகையான பொருளாதார நிலை இருக்கு. ஏழை, மிடில் கிளாஸ், அப்பர் மிடில் கிளாஸ், பணக்காரன். இதில் ஏழை டூ மிடில் கிளாஸ் வருவது மிகக் கடினம். அதே சமயம் மிடில் கிளாஸ் டூ அப்பர் மிடில் கிளாஸ் தொடும்போதுதான் சமூக அரசியல் சிக்கலுக்குள்ள மாட்ட ஆரம்பிப்போம். அதே சமயம் எனக்குன்னு ஒரு ரூம் வேணும்... நானும் என் மனைவியும் தனியா இருக்கணும்னு எப்ப யோசிக்க ஆரம்பிச்சானோ அன்னைக்கு அவன் அப்பர் மிடில் கிளாஸ்.
அப்பா, அம்மா, இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் அப்பா அம்மாவுக்கு ஓர் அறை, குழந்தைகளுக்கு ஓர் அறை, விருந்தினருக்கு ஓர் அறை... இதுதான்,தன் வீட்டுக்குள்ளேயே தனக்கான சுதந்திரத்தை உருவாக்குகிற நிலை.
அந்த நிலையை எடுத்து வைக்கணும்... அதனுடைய முக்கியத்துவத்தை உணர வைக்கணும்னு நினைச்சேன். அதனால்தான் ‘3BHK’.குடும்பப் படம்... ஆனாலும் படத்தின் விஷுவலில் ஒரு கிரே ஷேட் அல்லது ப்ளூ ஷேட் பார்க்க முடியுதே? ஒரு வீடு வாங்கும்போது அதைச் சார்ந்து நல்லதும் நடக்கும், பல கெட்டதும் நடக்கும். அது அத்தனையும் சேர்ந்த சமூக பார்வையில்தான் இந்தக் கதையை எழுதியிருக்கேன்.
ஒரு குடும்பம், ஒரு வீடு வாங்கறாங்க.
அந்த வீடு என்ன கொண்டு வருது... அதைச் சார்ந்து என்னென்ன வினைகள், விளைவுகள் நடக்குது... என்கிறதுதான் கதை. குடும்பப் படமா இருந்தாலும் இதிலும் ஒரு திரில்லர், அடுத்தது என்ன என்கிற கேள்விகள் இருக்கு. நடுத்தர மக்கள் சொத்து வாங்குவது இன்னைக்கு அவ்வளவு சுலபம் கிடையாது. அதையும் இந்தக் கதையில் பேசியிருக்கேன். சரத்குமார் - சித்தார்த், தேவயானி - மீதா ரகுநாத்... புது காம்போவான குடும்பமாக இருக்கே..?
இவங்க நாலு பேரையும் ஒரு குடும்ப போட்டோ ஃபிரேம் ஆக யோசிச்சுட்டுதான் கதையே சொல்லப்போனேன். இந்தக் கதையில் முதலில் வந்தவர் சித்தார்த்.
அதேபோல் மீத்தாவிடம், ஒரு சில உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுது தேவயானி மேடம் லுக் தெரியறதை நான் கவனிச்சிருக்கேன். இந்த காம்போ பெர்ஃபெக்டா செட் ஆகும்னு தோணுச்சு.
சரத் சார், எதார்த்தமான இயல்பான நடிகர். அவர் குரலில் ஓர் அரவணைப்பு இருக்கும். இந்தக் கதையில் அவர்தான் ஆணி வேர். ‘சப்த சக்கரதாச்சே இலோ’, ‘சைட் - பி’ சைத்ரா இன்னொரு ஹீரோயின்.யோகி பாபு , வீட்டு புரோக்கர்.
அவருடைய போர்ஷன் கதைக்கான ரிலாக்ஸா இருக்கும். இந்தப் படத்தில் எல்லாருக்கும் சரிசமமான கேரக்டர். எல்லாருமே கைதேர்ந்த நடிகர்கள் என்பதால் நான் கதை, காட்சி மட்டும்தான் சொன்னேன். நடிப்பு சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவையில்லை.
இந்தப் படம் ஐந்து வித்தியாசமான கட்டங்களில் காட்சிகளா நகரும். எனக்கு ‘ஜூன்’, ‘மதுரம்’ மலையாளப் படங்கள் பிடிக்கும். அந்தப் படங்கள் மாதிரி இருக்கணும்னு யோசிச்சப்ப அந்த ஒளிப்பதிவாளரே கிடைத்தார்.
ஜிதின் ஸ்டானிஸ்லாஸ். படத்தின் முதல் முக்கிய ரெண்டு போர்ஷன்கள் ஷூட் செய்தார். அதற்கிடையில் சித்தார்த் உடம்பு குறைச்சு, அடுத்த போர்ஷன் எடுக்கணும். அதற்குள் ஜிதினுக்கு ஒரு பெரிய புராஜெக்ட். அதற்காக ஐரோப்பா போகிற சூழல். அவரையடுத்து வந்தவர்தான் தினேஷ் கிருஷ்ணன். ‘வாத்தி’, ‘டிஎஸ் பி’, குறிப்பா ஆஸ்கர் புகழ் ‘ஆர்.ஆர்.ஆர்’ பட ‘நாட்டு நாட்டு...’ பாடல் ஒளிப்பதிவு செய்தவர். ‘விலங்கு’, ‘அயலி’ வெப் சீரிஸ், ‘கூழாங்கல்’, ‘கொட்டுக்காளி’ உள்ளிட்ட படங்களை எடிட்டிங் செய்த கணேஷ் சிவா, இந்தப் படத்துக்கு எடிட்டர். ‘வர்ஷங்களுக்கு ஷேஷம்’ பட இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் மியூசிக். ஒரு மலையாள பட ஸ்டைல் டோன், பேக்ரவுண்ட் இந்தப் படத்தில் பார்க்கலாம்.
சொத்து வாங்குவதில் ஏராளமான சிக்கல்கள் இருக்கு அதைப் பற்றி ‘3BHK’ பேசுமா..?
இருக்கு. படம் முழுக்க பார்க்கலாம். தமிழில் பாலு மகேந்திரா சாரின் ‘வீடு’ படத்தை இப்ப பார்த்தாலும் பெரிய பாடமா இருக்கும். அந்த அளவுக்கு இல்லைன்னாலும் இந்தப் படமும் 25 வருடங்கள் கழித்து பார்த்தாலும் நிச்சயம் ஒரு கிளாசிக்கல் படமாக இருக்கணும்னு நினைச்சுதான் இந்தக் கதையை உருவாக்கியிருக்கேன்.
அதைத் தாண்டி குடும்பமாக பார்த்து ரசிக்க இந்தப் படத்தில் நிறைய விஷயங்கள் இருக்கு. பார்த்துப் பார்த்து ஒரு வீட்டைக் கட்டியிருப்போம் அல்லது ஒரு வீட்டில் பல வருடங்களாக வாழ்ந்திருப்போம். ஆனா, அந்த வீட்டை நாமலே முழுமையா ரசிச்சோமானு கேட்டா இருக்காது. நம்ம வீட்டையே நாம திரும்பிப் பார்க்குறதுக்கான ஒரு ரிமைண்டரா இந்தப் படம் இருக்கும்.
ஷாலினி நியூட்டன்
|