நீ ஒரு இடியட் னு ராஜமவுலி திட்டிகிட்டே இருக்கார்!
நடிகைகள் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். ஆனால், மம்தா மோகன் தாஸ் சந்தித்த தடைகளும், அவர் அதை எதிர்கொண்ட விதமும் இப்போது இருக்கும் நடிகைகளுக்கு மட்டுமல்ல, அத்தனை பெண்களுக்கும் இன்ஸ்பிரேஷன் என்றே சொல்லலாம். மலையாளத்தில் டாப் நடிகர்களுடன், அதுவும் கதையின் நாயகியாக வலம் வருகிறார். ‘மகாராஜா’ படத்திற்குப் பிறகு மீண்டும் தமிழில் அடுத்த படம் ‘மை டியர் சிஸ்டர்’. அதில் அந்த அன்புக்குரிய சகோதரி மம்தாதான்.
 ‘‘மை ஃபேவரிட் நடிகர் விஜய் சேதுபதியுடன் மெயின் லீட், இதோ அடுத்து இன்னொரு படம். என்ன அக்கா, தங்கை பாத்திரம்னு கேட்டாங்க. ஆனால், நான் இந்தக் கதையை தலைப்பில் இருந்தே எனக்கான படமாக பார்த்தேன். ‘மை டியர் சிஸ்டர்’ தலைப்பே எனக்கானதுதானே!’’ முகம் மலரும் சிரிப்பை 20 வருடங்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல் கொடுக்கிறார் மம்தா மோகன் தாஸ்.
 இரண்டு வருடங்கள் எடுத்துக்கிட்டீங்களே, மீண்டும் தமிழில் அடுத்த படம் கொடுக்க?
பொதுவாகவே நான் ரொம்ப செலக்ட்டிவ் பர்சன். எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு தேர்வு செய்வதில்லை. நிறைய படங்களில் ஹீரோயின் கேரக்டர்... ஒரு பாட்டு மூன்று நான்கு சீன்கள்னு கதை சொன்னாலே கூடுமானவரை அதற்கு அடுத்த கேரக்டரான அக்கா, தங்கை கேரக்டராக இருந்தாலும் பரவாயில்லைனு என்னுடைய ஸ்கிரீன் ஸ்பேஸ் எவ்வளவு இருக்கோ அதைப் பொறுத்துதான் கேரக்டர் தேர்வு செய்வேன்.
 நடிச்சா ஹீரோயின்தான் என்கிற கட்டுப்பாடெல்லாம் இல்லை. எனக்கான முக்கியத்துவம் எவ்வளவு இருக்கு... என்னுடைய ஸ்கிரீன் நேரம் எவ்வளவுனு பார்த்துதான் ஒரு படத்தை தேர்வு செய்வேன். மலையாளத்திலேயே நிறையப் படங்கள். அங்கயே பிஸியாகிட்டதால தமிழில் இடைவெளி. தவிர எனக்கான முக்கியத்துவம் இருக்கும் கேரக்டருக்காக காத்திருந்தேன். அதற்கான வாய்ப்பு இப்ப கிடைச்சிருக்கு.
 20 வருடங்கள் சினிமாவில் பயணம்... என்ன கத்துக்கிட்டீங்க?
ஹையோ! ஆமா... 20 வருடங்கள். யோசிச்சுப் பார்க்கவே முடியலை. பெரிய பயணம்தான். எவ்வளவு தடைகள், எவ்வளவு சிக்கல்கள், மருத்துவப் பிரச்னைகள் வேறு கடந்து வந்திருக்கேன்.
முதலில் நல்ல மனுஷியா இருக்கணும்னு கத்துக்கிட்டேன். நிறைய மாற்றங்கள். வந்த புதிதில் இருந்த சினிமாவுக்கும் இப்ப இருக்கற சினிமாவுக்கும் கதை சொல்லும் விதத்தில் கூட நிறைய முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் பார்க்கறேன்.
நடிகைகளுக்கான கதாபாத்திரங்களும் அவங்களுக்கான வாய்ப்புகளும் கூட வெறுமனே இரண்டு பாட்டுக்கு டூயட் ஆடினோம், ஒரு காட்சியில் அழுதோம் என இல்லாமல் ‘லோகா: சாப்டர் 1 சந்திரா’ வரை வந்திருக்கோம். நல்ல ஆரோக்கியமான மாற்றங்கள் நடந்திருக்கு.
இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். எந்த மொழியில் நடிப்பது சற்றே கடினமாக இருக்கிறது?
தெலுங்கு... ஒருவேளை தமிழ் எனக்கு பக்கத்து மாநிலம் என்கிறதால ரொம்ப சுலபமா என்னால் அந்த வசனங்களையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியுதோ என்னவோ! ஆனா, தெலுங்கு இன்னமும் எனக்கு அந்நியமாதான் இருக்கு. மற்றபடி முகபாவங்கள், ரியாக்ஷன்ஸ் எல்லாமே ஒண்ணுதான்.
அருள்நிதியுடன் ‘மை டியர் சிஸ்டர்’?
முதலில் அருள்நிதி பற்றி சொல்லிடுறேன். மனுஷன் செம கூல் பர்சன். எப்பப் பார்த்தாலும், யாரையாவது கலாய்ச்சிட்டு, காமெடி செய்திட்டு இருப்பார். அவர் அதீத சீரியஸாக இருந்து பார்த்ததே கிடையாது.
எவ்வளவு பெரிய பிரச்னையானாலும் ஒரு ஜோக் அந்த மொமெண்டை மாற்றிடும். உடன் இயக்குநர் ஜெயராம் பிரபு. அவருடைய ‘என்னங்க சார் உங்க சட்டம்’ படத்துக்கு கிரிட்டிக்கலான விமர்சனங்கள் இருக்கு. ரொம்ப ஆழமா கதை உருவாக்கறார். எனக்கு ரொம்ப வித்யாசமான படமாக இருந்துச்சு. என்னுடய கேரக்டர் பெயர் நிர்மலா. திருநெல்வேலி பொண்ணு. ‘என்னலே...’னு ஆரம்பிச்சு மொத்த வசனமும் எனக்கு புதுசா இருந்துச்சு. தென் தமிழக பொண்ணுங்க கேரக்டரே ரொம்ப வித்யாசமா இருக்கு. படபடன்னு மனசுல எதுவும் இல்லாம பேசிட்டு அப்பறம் ‘அடடா இப்படி பேசிட்டோமே’னு யோசிக்கற கேரக்டர். எனக்கு மேல அருள்நிதி. அவ்வளவு வசனம், தமிழ் கலாசார ஆணி வேர் கதை. சூப்பரா வந்திருக்கு. கதையை நான் சொல்லக் கூடாது!
ஏதாவது ஒன்று இரண்டு படங்கள் கைக்கு வந்து நீங்க மிஸ் செய்து அது பிளாக்பஸ்டர் ஹிட்டாகி இருக்கா?
அப்படி ஒருசில படங்கள் இருக்கு. ஆனா, நான் இப்பவும் வருத்தப்படற ஒரு படம் ‘அருந்ததி’. முதலில் அந்த வாய்ப்பு எனக்குதான் வந்தது. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி சார் என்னைப் பார்க்கும் போதெல்லாம் சொல்வார்... ‘எப்படிப்பட்ட வாய்ப்பை நீ மிஸ் செய்திட்டே தெரியுமா? அனுஷ்காவுக்கு கரியரே அங்கே தான் ஸ்டார்ட் ஆயிருக்கு.
நீ ஒரு இடியட்’னு செல்லமா திட்டுவார். நிச்சயமா எனக்கும் அது மிகப்பெரிய வருத்தம்தான். ஆனா, அதுக்கு ஈடு செய்யற மாதிரி ராஜமவுலி சாருடைய ‘எமடோங்கா’ படத்தில் நடிச்சேன். அதன்பிறகு தெலுங்கில் என்னுடைய மார்க்கெட் பிக்கப் ஆனது. உங்க அடுத்தடுத்த படங்கள்..?
தமிழில் ‘மை டியர் சிஸ்டர்’ இருக்கு. பிரபுதேவா மாஸ்டருடன் ‘ஊமை விழிகள்’ படத்தின் மீதி வேலைகளும் கூடிய விரைவில் ஆரம்பிக்கப் போறதா சொல்லியிருக்காங்க. பிஜு மேனன் சார் கூட ‘பேபி சிஸ்டர்’. ஆமா, மலையாளத்திலும் ஒரு சிஸ்டர் படம்! அப்புறம் மம்மூட்டி சார், அர்ஜுன் தாஸ் கூட ‘பிலால்’ படங்கள் இருக்கு.
சாதாரணமா ஒரு நடிகையின் வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களைக் காட்டிலும் இரட்டிப்பான சவால்களை சந்தித்தவர் நீங்கள்.
மற்ற பெண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
‘எத்தனை தடைகள் வந்தாலும், எவ்வளவு பிரச்னைகள் சூழ்ந்தாலும் உங்களுக்கு ஒரு விஷயம் பிடிச்சு, அதை மானசீகமா மனதார செய்தால் அந்தத் துறையும் சரி நீங்களும் சரி ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்க மாட்டீங்க...’ இதைத்தான் சொல்ல விரும்பறேன்.
இதுக்கு சிறந்த உதாரணம் நான்தான். என் கரியரை விடுங்க... நான் உயிர் பிழைப்பேனா அப்படிங்கிற கேள்வி எனக்குள்ளேயே இருந்துச்சு. அந்தளவுக்கு உடல்நிலை மோசமாகிடுச்சு. அதையெல்லாம் தாண்டி இப்பவும் பிஸியா நான்கைந்து படங்களில் நடிச்சிட்டு இருக்கறேன். எதைச் செய்தாலும் மனசார சந்தோஷமா இஷ்டப்பட்டு செய்யுங்க.l
-ஷாலினி நியூட்டன்
|