ஒரு சிறுவனின் கனவுதான் அவதார்
“நான் சிறுவனாக இருந்த போது படித்த ஒவ்வொரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதையும் ‘அவதாரு’க்கு இன்ஸ்பிரேஷன்...” என்கிறார் ஜேம்ஸ் கேமரோன். ‘அவதார்’ படத்துக்கோ, அதை இயக்கிய ஜேம்ஸ் கேமரோனுக்கோ அறிமுகம் தேவையில்லை. ஆனால், சினிமா தொழில்நுட்பத்தில் பெரிய புரட்சி செய்து, வசூலில் உலக சாதனை படைத்த ‘அவதார்’ படத்துக்கு உந்துதலாகவும், ஆரம்பமாகவும் இருந்த நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்ப்பது, சினிமாத்துறையில் சாதிக்க விரும்புகிறவர்களுக்கெல்லாம் ஒரு பாடம். கடந்த 2009ம் ஆண்டின் இறுதியில் வெளியான ‘அவதாரு’க்காக ஐடியாக்களையும், கதையோட்டத்தையும் 1994லேயே 80 பக்கத்தில் எழுதிவிட்டார் ஜேம்ஸ். இந்த 80 பக்க ஸ்கிரிப்ட்தான் அவதாரின் ஆரம்பம்.
 வெறும் எழுத்தாக மட்டுமல்லாமல், குழந்தைப் பருவத்தில் படித்த சயின்ஸ் ஃபிக் ஷன் கதைகளின் இன்ஸ்பிரேஷனில் படத்துக்கான ஓவியங்களையும் வரைந்துவிட்டார். குறிப்பாக எட்கர் ரைஸ் பாரோஸ் மற்றும் ஹெச்.ரைடர் ஹக்கார்டு எழுதிய அட்வெஞ்சர் நாவல்களிலிருந்து ஓவியங்களுக்கான இன்ஸ்பிரேஷனைப் பெற்றிருந்தார். தான் வரைந்த ஆயிரக்கணக்கான ஓவியங்களைத் தத்ரூபமான காட்சிகளாக மாற்றி சினிமாவாக்குவதுதான் அவரது இலக்கு.
 மட்டுமல்ல, சிறு வயதில் ஜேம்ஸ் கேமரோனுக்கு அடிக்கடி ஒரே மாதிரியான கனவுகள் வந்துகொண்டிருந்தன. அந்தக் கனவுகளில் பூமியிலே இல்லாத வித்தியாசமான மரங்கள், விலங்குகள், மலர்கள், பறவைகள், நதிகளுடன் பிரகாசமாக ஒளிரும் காடு என ஆச்சர்யமான இயற்கை சார்ந்த விஷயங்கள் எல்லாம் வந்தன. உண்மையில் கனவில் ஜேம்ஸ் வேறொரு உலகில் வாழ்ந்தார். ஒவ்வொரு நாளும் காலையில் விழிக்கும்போது, தான் கண்ட கனவை ஓவியங்களாக வரைந்து வைப்பது அவரது வழக்கம். இந்த ஓவியங்களை முன்மாதிரியாக வைத்துதான் ‘அவதாரி’ல் வரும் பண்டோராவை உருவாக்கியிருக்கிறார் ஜேம்ஸ்.
 ஆம்; ஒரு சிறுவனின் கனவுதான் ‘அவதார்’. கனவுலகத்தை அப்படியே படமாக்கிவிட முடியாது. ஏதாவது ஒரு கதையின் வழியாக கனவுலகத்தைப் படமாக்கினால்தான் மக்கள் ரசிக்கும்படி சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் ‘அட் பிளே இன் த ஃபீல்ட்ஸ் ஆஃப் த லார்ட்’, ‘த எமரால்ட் ஃபாரஸ்ட்’, ‘பிரின்சஸ் மொனோனோக்கி’, ‘டான்சஸ் வூ வோல்வ்ஸ்’ போன்ற படங்கள் கொடுத்த உந்துதலில் படத்துக்கான கதையையும், உலகையும் வடிவமைத்தார்.
குறிப்பாக பண்டோராவின் சூழலியல் அமைப்புக்கு பெரிதும் உந்துதலாக இருந்தது ‘பிரின்சஸ் மொனோனோக்கி’ எனும் ஜப்பானிய அனிமேஷன் படம்.கடந்த 1996ம் வருடம் ஆகஸ்ட் மாதம் ‘டைட்டானிக்’கின் படப்பிடிப்பை முடித்தவுடன், ‘அவதாரை’ எடுக்கப்போவதாக அறிவிப்பு செய்தார். பண்டோராவாசிகள் கதாபாத்திரத்துக்காக சிந்தடிக் அல்லது கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் இமேஜரி எனும் சிஜிஐயைப் பயன்படுத்தப்போவதாகவும் சொல்லியிருந்தார். அப்போதே பட்ஜெட் 10 கோடி டாலராகும் என்று திட்டமிட்டிருந்தார்.
முக்கியமான கதாபாத்திரத்தில் 6 பேர் நடிப்பதாக இருந்தது. அந்த 6 கதாபாத்திரங்களின் தோற்றம் உண்மையாக இருக்கும். ஆனால், இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள் போல இருக்க மாட்டார்கள் என்று முடிவு செய்து வைத்திருந்தார். இதற்காக ‘டிஜிட்டல் டொமைன்’ எனும் விஷுவல் எஃபெக்ட்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து இயங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். படப்பிடிப்பை 1997லிருந்து ஆரம்பித்து, படத்தை 1999ல் வெளியிடத் திட்டம்.
ஆனால், அப்போதிருந்த தொழில்நுட்பத்தால் அவரது மனதிலிருந்த கனவுலகைக் காட்சிப்படுத்த முடியாது என்பதை சில பரிசோதனைகளில் தெரிந்துகொண்டார். அதனால் ஆவணப்படங்கள் பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார். தனது கனவுகளைப் படமாக்குவதற்கான தொழில்நுட்பம் வரும் வரை காத்திருப்பது அல்லது, தானே அதை உருவாக்குவது என்று முடிவு செய்தார்.
இதற்காக புதுப்புது கேமராக்களை வடிவமைத்தார். அவரது தேடல் 3டி தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சியையே செய்தது. ஜேம்ஸின் கனவுலகைக் காட்சிப்படுத்தும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளராமல் இருந்ததே அவதாரின் முதல் பாகம் மட்டுமல்ல, இரண்டாம் பாகமும் தாமதமாகக் காரணம்.
மட்டுமல்ல, 1999ல் இருந்த விஷுவல் எஃபெக்ட்ஸை கொண்டு படத்தை உருவாக்குவதற்கான பட்ஜெட்டும் அவரிடம் இல்லை. மற்ற ஸ்டூடியோக்களும்படத்தைத் தயாரிக்க முன்வரவில்லை. காரணம், அவர் படமாக்கும் விதம் பற்றி பெரிதாக யாருக்குமே புரியவில்லை.
வருடங்கள் ஓடின. ‘அவதாரை’க் கிடப்பில் போட்டுவிட்டு, வேறு பட வேலைகளில் இறங்கினார் ஜேம்ஸ். இந்நிலையில் 2002ல் வெளியான ‘த லார்ட் ஆஃப் த ரிங்ஸ் : த டூ டவர்ஸ்’ படத்தில் கொல்லம் என்ற கற்பனைக் கதாபாத்திரம் வரும். இக்கதாபாத்திரத்தை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் உருவாக்கியிருந்தனர்.
கொல்லம் கதாபாத்திரத்தைப் பார்த்தபிறகு, முன்பைவிட குறைந்த பட்ஜெட்டில் ‘அவதாரை’ எடுக்க முடியும் என்ற நம்பிக்கை ஜேம்ஸுக்கு வந்தது.மீண்டும் ஒரு முறை ‘அவதாரி’ன் திரைக்கதையைப் புதுப்பித்து, நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்தார். தேர்வான நடிகர்களையும், நடிகைகளையும் ஹவாயில் உள்ள காடுகளுக்கு அழைத்துச் சென்று மலையேற்றப் பயிற்சி கொடுத்தார் ஜேம்ஸ். சில நாட்களின் பகல் பொழுதில் அந்தக் காடுகளில்தான் நடிகர்களும், நடிகைகளும் இருந்தனர். இந்தப் பயிற்சிதான் ‘அவதாரி’ன் கதை நிகழும் பண்டோரா காடுகளில் அவர்கள் இயல்பாக நடிப்பதற்கு உதவியிருக்கிறது.கடந்த 2005ம் வருடம் ‘20th செஞ்சுரி ஃபாக்ஸ்’ எனும் படத்தயாரிப்பு நிறுவனம் ஜேம்ஸுக்கு ஒரு கோடி டாலர் கொடுத்து, ‘அவதாரி’ன் சில காட்சிகளைப் படமாக்கச் சொல்லிக் கேட்டது.
ஜேம்ஸும் அந்தத் தொகையில் ஒருசில காட்சிகளைப் படமாக்கி, அத்தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாகிகளுக்குக் காட்டினார். அவர்கள் எல்லோரும் அதிர்ந்து போய்விட்டனர். அதற்கு முன்பு இப்படியான காட்சிகள் எந்த சினிமாவிலும் வரவேயில்லை.
பிறகு. ‘அவதாரை’ உலகம் முழுவதும் விநியோகம் செய்தது ‘20th செஞ்சுரி ஃபாக்ஸ்’மீண்டும் இன்னொரு முறை 2006ல் திரைக்கதையில் சில மாறுதல் களை உண்டாக்கி, நவி மக்களின் கலாசாரத்தையும் புதிதாக உருவாக்கினார். நவி மக்கள் பேசுவதற்காக மொழியியல் வல்லுநர் பால் ஃப்ராமருடன் இணைந்து புதிய மொழியையே உருவாக்கியிருக்கிறார் ஜேம்ஸ். தவிர, பண்டோரா உலகத்துக்காகவும், மனிதர்களின் உலகத்துக்காகவும் இரண்டுவிதமான ப்ரொடக்ஷன் டிசைனர்களைப் பயன்படுத்தினார் ஜேம்ஸ்.
இந்த ப்ரொடக்ஷன் டிசைனுக்குத்தான் நீண்ட நாட்கள் பிடித்தன. அதனால்தான் படப்பிடிப்பு தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. எல்லாம் முடிந்தபிறகு 2007ம் வருடம் ஏப்ரலில் ‘அவதாரு’க்கான பிரின்சிபல் போட்டோகிராபி ஆரம்பமானது. நிஜ சூழலில் கம்ப்யூட்டரால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்களை வைத்து கதை சொல்லும் முறை ஜேம்ஸை வெகுவாக உற்சாகப்படுத்தியது.
60 சதவீதம் கம்ப்யூட்டர் உதவியுடனும், 40 சதவீதம் லைவ் ஆக்ஷனாகவும் படம் இருக்க வேண்டும் என்று ஒரே முடிவில் இருந்தார் ஜேம்ஸ். அப்போதுதான் படம் பார்க்கிறவர்களுக்கு எதார்த்தமான ஓர் உணர்வையும், நம்பகத்தன்மையையும் கொடுக்க முடியும் என்று நம்பினார்.அவர் நம்பியபடியும், நினைத்தபடியும் ‘அவதார்’ படமாக்கப்பட்டு, 2009ல் வெளியானது.
த.சக்திவேல்
|