வாராரு வாராரு கருப்பரு வாராரு!



11. நொண்டிக் கருப்பரும் 11 அடி நீள நாக்கும்!

முக்கியமான வினா ஒன்று எழும். இதற்கான விடையை அறிந்துவிட்டு ‘நொண்டிக் கருப்பர்’ குறித்து தெரிந்துகொள்வது நல்லது.கேள்வியே அதுதான். உடல் குறைபாட்டுடன் எந்தவொரு மனிதரையும் அடையாளப்படுத்தக் கூடாது என இன்று நினைக்கிறோம். இதற்காகவே ‘மாற்றுத் திறனாளிகள்’ என்ற சொல்லையும் உருவாக்கியிருக்கிறோம்.
அப்படியிருக்க, கண்கண்ட தெய்வமான கருப்பரை, ஊனமுற்றவர் என்று பொருள்படும் ‘நொண்டிக் கருப்பர்’ என அழைக்கலாமா?

அழைக்கலாம். ஒவ்வொரு முறையும் திரும்பத் திரும்ப கருப்பரை ‘கிராமத்து தெய்வம்’, ‘காவல் தெய்வம்’ என அழைப்பது சரியென்றால் இதுவும் சரிதான்.

அப்படியானால் கருப்பண்ணசாமி கிராமத்து தெய்வம் கிடையாதா..? காவல் தெய்வம் என இவரை அழைக்கக் கூடாதா..?

கூடாது. இன்றைய நகரமயமாக்கல் சூழலில் இருந்து கருப்பரை இப்படி அழைத்து அவரது பெருமைகளைக் குறைக்கக் கூடாது.

விரிவாகவே பார்க்கலாம். கருப்பண்ணசாமியைக் குறித்து என்ன நினைக்கிறோம்?

‘‘கிராம தெய்வங்களில் முதன்மையானவர் கருப்பசாமி. தலைப்பாகை அணிந்து, உக்கிர விழிகளுடன் ஏந்திய வீச்சரிவாளுமாக இவரின் தோற்றமே அத்தனை கம்பீரமானது.கல்வி, செல்வம், ஆரோக்கியம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தெய்வம் இருந்து வரும் நிலையில், இவை அத்தனையையும் உள்ளடக்கி காவல் தெய்வமாகப் பரிணமித்து வருகிறார் கருப்பசாமி. எளிமைக்கு பெயர் பெற்ற ஸ்தலம் இவருடையது. 

கோபுரம் இன்றி பல இடங்களில் வெட்டவெளியில் நின்று அருள்பாலிக்கிறார். இவரை தரிசிக்க நடைத்திறப்பு என்று எந்தக் கட்டுப்பாடும் இல்லை. பெரிய அளவிலான துதிப்பாடல்களோ, வழிபாட்டு முறைகளையோ இவர் எதிர்பார்ப்பதில்லை. மக்களின் மனோநிலைக்கு ஏற்ப படையலிட்டு இவரை வழிபட்டுச் செல்கின்றனர்.

சலங்கையும், சாட்டையும் இவருக்கான பிரத்யேக அடையாளங்கள். கிராமக் கோயில்கள் அனைத்திலும் இவரின் அருள்பாலிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மாயாஜால ஆயுதங்கள், கூடுதல் அங்கங்கள் எதுவும் இன்றி ‘இயல்பாக’க் காட்சியளிக்கிறார். இதனால், இவர் ‘நம்மவர்’ என்று பக்தர்களுக்கு சட்டென்று ஒரு நெருக்கம் ஏற்பட்டு விடுகிறது.தீவினைகளுக்கு எதிரான சக்திவாய்ந்த பாதுகாவலரான இவர், மனக்குழப்பங்களை விரட்டுவதில் வல்லவர்.

இதனால் துக்கம், கடன் பிரச்னை, கவலை, உறவுகளின் துரோகம் போன்ற நேரங்களில் இவரிடம் சரணாகதி அடைந்து வழிபடுவது வழக்கம். பல இடங்களில் இவருக்கு தனிக்கோயில்களும் உள்ளன. வயல்வெளிகள் போன்ற திறந்தவெளிகளிலும் இவருக்கு சிலை வைத்து வழிபாடு நடைபெற்று வருகிறது.

சங்கிலிக் கருப்பன், நொண்டி கருப்பசாமி, கொம்படி கருப்பண்ணசாமி, கோட்டை கருப்பசாமி, சோணை கருப்பசாமி என்று பல்வேறு ஊர்களில் பல்வேறு பெயர்களில் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். 

சலங்கையும், சாட்டையும், ஆக்ரோஷ முகபாவமும் தீவினையை விரட்டுகின்றன. இருப்பினும், தன்னிடம் சரணடைந்த பக்தர்களின் மனதுக்குள் இவர் பாந்தமான தோற்றத்துடன் தோழமை தெய்வமாகவே இருந்து வருகிறார்...’’இவையெல்லாம் பொதுவான குறிப்புகள். இன்று நம் மனதில் கல்வெட்டாகப் பதிந்திருப்பவை.

இது சரியா?

நிச்சயமாகக் கிடையாது.கருப்பண்ணசாமி ஆதியும் அந்தமும் இல்லாதவர். மனிதகுலம் தோன்றிய காலம் முதலே மக்களைக் காப்பவர். புராணங்களில் மறைந்திருப்பவர். வரலாற்று ஆதாரங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்டவர்.

பொதுவாக தெய்வங்களை மக்கள் எப்பொழுது முதல் வழிபட்டு வருகின்றனர்?

துல்லியமான பதிலில்லை. ஆனால், கற்கால மனிதர்கள் அன்று குகைகளில் வசித்தார்கள். அப்பொழுது இறைவனின் இருப்பிடமாகக் குகைகளையே உருவகப்படுத்தினார்கள். மனிதர்கள் காடுகளில் வாழ்ந்தார்கள். வனங்களையே தெய்வங்களின் இருப்பிடமாக்கினார்கள். கடலில் பயணம் செய்தார்கள். 

சமுத்திரத்தையே இறைவனாக வணங்கினார்கள்.களிமண்ணால் வீடு கட்டத் தொடங்கியபோதும், மர இல்லங்களை அமைத்தபோதும் இறைவனுக்கும் களிமண், மரத்தால் ஆலயம் எழுப்பினார்கள்.அப்படித்தான் கருப்பருக்கான கோயிலும் நம்முடன், நம் குருதியுடன் இரண்டறக் கலந்தது.

நகரம் என்பதெல்லாம் இப்பொழுதுதான். அன்று கிராமமே உலகம். எனவே, மக்கள் வசித்த கிராமங்களே கருப்பண்ணசாமியின் இருப்பிடமாகவும் ஆனது.நகரமயமாக்கல் தோன்றியதும் நாகரீகம் வளர்ந்ததும், ‘தலைப்பாகை அணிந்து, உக்கிர விழிகளுடன் ஏந்திய வீச்சரிவாளுமாக’க் காட்சி தரும் கருப்பரை கிராமங்களிலேயே விட்டுவிட்டார்கள். மாறாக, ஆபரணங்கள், உயர்தர ஆடைகள்... என நகரத்துக்கான இலக்கணங்களாக ‘தாங்கள் கருதும் நாகரீகத் தோற்றத்தில்’ இருக்கும் தெய்வங்களை தங்கள் நகரக் குடியிருப்புகளில் எழுப்பினார்கள்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தெய்வமான கருப்பர், இதைக் குறித்து கவலையேபடாமல், எந்த இடத்தில் இருந்தபடி மக்கள் தன்னை நினைக்கிறார்களோ... எந்தத் தருணத்தில் தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று தன்னை நினைத்து மனதார பிரார்த்தனை செய்கிறார்களோ... அங்கெல்லாம் இருக்கிறார்... தோன்றுகிறார்... அருள்பாலிக்கிறார்.

இதைப் புரிந்து கொள்ளாமல் கருப்பண்ணசாமியை ‘கிராமத்து தெய்வம்’, ‘காவல் தெய்வம்’ என அடையாளப்படுத்துகிறோம்.அப்படித்தான் ‘நொண்டிக் கருப்பர்’ என்ற அழைப்பும்.

அக்காலத்தில் மக்கள் ஒருவரையொருவர் பெயர் சொல்லி அழைப்பதற்கு பதில், காரணப் பெயர் சொல்லிக் குறிப்பிட்டார்கள். சக மனிதர்களைத் தாழ்த்துவதோ அல்லது கேவலப்படுத்துவதோ இதன் பின்னால் இருக்கும் நோக்கமல்ல. அதுவொரு ‘செல்லப் பெயர்’. அப்படித்தான் வெள்ளந்தியாக மக்கள் நினைத்தார்கள்.

இந்தவகையில் அழைக்கப்பட்டவர்தான் ‘நொண்டிக் கருப்பர்’. மதுரை திருமங்கலத்துக்கு அருகிலுள்ள கள்ளிக்குடி பக்கத்தில் அமைந்துள்ள கிராமமே ஓடைப்பட்டி. இங்கிருக்கும் கருப்பரைத்தான் மக்கள் நினைவு தெரிந்த நாள் முதலாக ‘நொண்டிக் கருப்பர்’ என அழைக்கிறார்கள்; வணங்குகிறார்கள். 

இவரது கதையும் பெருமையும் மெய்சிலிர்க்க வைப்பவை.ஓடைப்பட்டி கிராமத்தில் அக்காலத்தில் நாயக்கர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருடைய தோட்டத்தில் விளைந்த நெல், காய்கறிகள், பருப்பு போன்றவைகளை மூட்டைகளாகக் கட்டிக்கொண்டு மதுரையில் உள்ள சந்தைக்கு மாட்டு வண்டியில் எடுத்துச் செல்வார்.

அப்படி ஒருநாள் விளைந்த சரக்குகளை விற்பனைக்காக மாட்டு வண்டியில் ஏற்றி மதுரையை நோக்கிப் புறப்பட்டார். வழியில் கால் ஊனமுற்ற ஒரு மனிதன் அவரை வழிமறித்தான். “எனக்கு யாருமில்லை ஐயா! நான் அனாதை! என்னை உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். நான் உங்களுடனே இருந்து வீட்டு வேலைகளை கவனிக்கிறேன். 

எனக்கு சம்பளம் எதுவும் வேண்டாம். மூன்று வேளை சாப்பாடு போதும்...’’ என்றான்.நாயக்கருக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. உடனே அவனை மாட்டு வண்டியில் ஏற்றி மதுரைக்குச் சென்றார். கொண்டு சென்ற பொருட்களை சந்தையில் விற்றுவிட்டு கிராமத்துக்குத் திரும்பினர்.

‘‘வீட்டிலுள்ள ஆடு, மாடுகளை கவனித்துக் கொள். என்ன முடியுமோ அந்த வேலையைச் செய். இங்கிருக்கும் மாட்டுக் கொட்டகையில் தங்கிக் கொள்...’’ என்றார் நாயக்கர்.
ஊனமுற்ற அந்த மனிதனும் மகிழ்ச்சியோடு அங்கு தங்கினான். வேலைகளைச் செய்து வந்தான். ஒரு நாள் நாயக்கர் ஒரு வேலையாக வெளியூர் சென்றார். வீட்டில் அவரது நிறைமாத கர்ப்பிணி மகளும் ஊனமுற்ற அந்த மனிதனும் மட்டுமே இருந்தனர்.திடீரென்று வானம் கருத்தது. மாலையில் இடி, மின்னலுடன் மழை பொழியத் தொடங்கியது.

சரியாக நாயக்கரின் மகளுக்கு இடுப்பு வலி வந்தது. வலி தாங்க முடியாமல் அப்பெண் கதறத் தொடங்கினாள். ஊனமுற்ற அந்த மனிதனைத் தவிர அங்கு யாருமில்லை. பலத்த மழையினால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தத்தம் வீடுகளில் முடங்கிவிட்டனர்.ஊனமுற்ற மனிதனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. வீட்டுக்குள் அந்த மனிதன் செல்லக் கூடாது. அன்றைய சமூக வழக்கம் அப்படி. எனவே வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தான். 

வீட்டினுள் மண்ணெண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அதேநேரம் அணையும் தருவாயில் இருந்தது. காரணம், விளக்கின் திரி தூண்டப்படவில்லை. விளக்கு அணைந்தால், துடித்துக் கொண்டிருக்கும் அந்தப் பெண் பயந்துவிடுவாள். அந்த அச்சம் அவளது உடலைப் பாதிக்கும்.

என்ன செய்யலாம்?

யோசித்த அந்த ஊனமுற்ற மனிதன், உடனேஒருகாரியத்தைச்  செய்தான். அதுவும் வீட்டுக்குள் நுழையாமல், வீட்டு வாசலில் நின்றபடி.வேறொன்றுமில்லை. தனது நாக்கை நீட்டினான். வீட்டினுள் இருந்த அந்த மண்ணெண்ணெய் விளக்கை நெருங்கும் அளவுக்கு நீட்டினான். நாக்கின் நுனியால் விளக்கின் திரியைத் தூண்டினான்.அவ்வளவுதான், அணையும் தருவாயில் இருந்த விளக்கு, பிரகாசமாக எரியத் தொடங்கியது. இந்த அதிசயத்தைக் கண்ணாரக் கண்ட நாயக்கரின் மகள் அதிர்ந்தாள்; திகைத்தாள். அவளது இடுப்பு வலி குறைந்து மறைந்தது.

வீடு திரும்பிய நாயக்கர், இந்த விஷயத்தை அறிந்தார். அவரது இதயம் வேகமாகத் துடித்தது. என்னவென்று சொல்ல முடியாத அளவுக்கு அவர் உடல் தள்ளாடியது. 
தன்னைச் சமாளித்துக் கொண்டு மருத்துவச்சியை அழைத்து வந்தார். சுகப் பிரசவம். தாயும் சேயும் நலம். துண்டினால் தனது முகத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டு அந்த ஊனமுற்ற மனிதனை நாயக்கர் நெருங்கினார். ‘‘நீ... நீங்கள் யார்? எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்? சாதாரண மனிதராகத் தெரியவில்லையே...’’நாயக்கர் இப்படிக் கேட்டதும் அந்த ஊனமுற்ற மனிதன் கடகடவென்று சிரித்தான்.

‘‘இன்னுமா என்னைத் தெரியவில்லை? நான்தான் கருப்பன்... மனிதர்களைக் காப்பதே எனது கடமை. உங்கள் முன் இப்பொழுது ஊனமுற்று காட்சியளிப்பதால் என்னை ‘நொண்டிக் கருப்பன்’ என்று அழையுங்கள். மனிதர்களில் வலுவானவன், பூஞ்சையானவன், ஊனமுற்றவன்... என்றெல்லாம் யாருமில்லை. திடகாத்திரமான தோற்றத்தில் இருந்தாலும் சரி... ஒடிசலாக இருந்தாலும் சரி... எல்லோரும் எனது பிள்ளைகள்தான். அனைவருமாக இருப்பவனும் நானேதான்.

இதை உலகுக்கு உணர்த்தவே ஊனமுற்றவனாக வந்திருக்கிறேன். இந்தத் தோற்றத்திலேயே இனி இந்த ஊரில் குடியிருப்பேன்.காவல் தெய்வமாகவே என்னை அடையாளப்படுத்துகிறீர்கள் அல்லவா? அப்படியே இருக்கட்டும். இந்த ஊரிலுள்ள வலகுருநாதர் - அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் காவல் தெய்வமாக இருந்து கொண்டு இந்த ஊர் மக்களைக் காப்பாற்றுவதற்காகவே இந்த ஊர் எல்லைக்கு வந்துள்ளேன். 

இந்த ஊர் மக்கள் அனைவரும் எனக்கு கோயில் எழுப்பி என்னை வணங்கி வந்தால் உங்களைக் காத்து நிற்பேன்...” என சிரித்துக்கொண்டே கூறினான் அந்த ஊனமுற்ற மனிதன். அல்ல... அல்ல... மனிதர் உருவில் இருந்த கருப்பர்.

சொன்னபடியே இன்றும் ‘நொண்டிக் கருப்பராக’ அங்கு அருள்பாலிக்கிறார். இந்த ஓடைப்பட்டி கிராமத்தைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் வருடம்தோறும் மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று பொங்கல் திருவிழாவைக் கொண்டாடுகின்றனர். நொண்டிக் கருப்பருக்கு அடைக்கலம் கொடுத்த அந்த நாயக்கர் வீட்டிலிருந்து ஒரு கருப்பண்ணசாமி சிலையைச் செய்து அங்கேயே கண் திறந்து அதனை ஊர் முழுக்க எடுத்துச் செல்கின்றனர்.

பிறகு கோயிலில் அந்தக் கருப்பரை இறக்கி வணங்குகின்றனர். இந்த பொங்கல் திருவிழாவில் நொண்டிக் கருப்பருக்கு அக்னிச் சட்டி எடுத்தல், அலகு குத்துதல், பொங்கல் வைத்தல், கிடாய் வெட்டுதல் போன்ற சடங்குகளைச் செய்கின்றனர்.இந்த நொண்டிக் கருப்பரை பிள்ளை வரம் வேண்டி வணங்கும் பெண்களுக்கு உடனடியாக மக்கள் செல்வம் கிட்டும். 
 
அதுமட்டுமல்ல, குடிக்கு அடிமையானவர்கள் ஓடைப்பட்டி நொண்டிக் கருப்பரை வேண்டிக்கொண்டால் அந்தக் குடியை மறந்துவிடுவார்கள். நோய்வாய்ப்பட்டவர்கள், கல்வியில் பின்தங்கிய மாணவர்கள், குடும்பப் பிரச்னைகள் உள்ள மக்கள்... என சகலரும் இந்த நொண்டிக் கருப்பர் கோயிலுக்கு வந்து தங்கள் குறைகளைச் சொல்லி வேண்டிக் கொண்டால் அந்தக் குறைகள் நிவர்த்தி
யாகும். 

ஓம் கருப்பண்ணசாமியே நமஹ:
ஓம் நொண்டிக் கருப்பரே நமஹ...

(கருப்பர் வருவார்)

- கே.என்.சிவராமன்