கேரள கலாமண்டலத்தில் கதகளி ஆடிய முதல் முஸ்லிம் பெண்!



வரலாற்றில் முதல்முறையாக புகழ்பெற்ற 95 ஆண்டுகள் பாரம்பரிய கலை நிறுவனமான கேரள கலாமண்டலத்தில் ஒரு முஸ்லிம் பெண் கதகளி நடனம் ஆடி சாதனை படைத்திருக்கிறார். அவர் பெயர் சப்ரி. கொல்லத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் புகைப்படக் கலைஞர் நிஜாம் அம்மாஸ் மற்றும் அனீஷாவின் மகள் சப்ரி. 
இவருக்கு சிறுவயதிலேயே கதகளி மீது காதல். இதற்குக் காரணம் தந்தை நிஜாம். புகைப்படக் கலைஞரான தந்தையுடன் கதகளி நிகழ்ச்சிகளுக்குச் சென்றபோது அந்தக் கலை வடிவத்தின் துடிப்பான வண்ணங்கள், விரிவான உடைகள் மற்றும் நாடக வெளிப்பாடுகளில் மயங்கியுள்ளார் சப்ரி. தானும் ஒருநாள் அந்த உடையை அணிந்து ஆடவேண்டும் எனக் கனவு கண்டுள்ளார். 
இந்நிலையில் மகளின் ஆர்வத்தை அறிந்த தந்தை நிஜாம், கேரளாவின் பாரம்பரிய கலை மற்றும் கலாசார பல்கலைக்கழகமான கேரள கலாமண்டலத்தில் சேர்க்க முயன்றுள்ளார். 2021ம் ஆண்டுதான் முதல்முறையாக கேரள கலாமண்டலம், பெண்களுக்கான சேர்க்கையை அறிமுகப்படுத்தியது.  
 இதில் எட்டாம் வகுப்பிலிருந்தே சேர்க்கை. ஆனால், அப்போது சப்ரி ஆறாம் வகுப்பே படித்துக் கொண்டிருந்தார். இதனால், இடைப்பட்ட காலத்தில் உள்ளூர் கதகளி ஆசிரியரிடம் சேர்த்து பயிற்சியெடுக்கச் செய்தார்.  

பின்னர் 13 வயதானதும் எட்டாம் வகுப்பில் சேர்க்க முயற்சித்துள்ளார். அப்போதும் வயது பிரச்னையாக கேரளாவின் புகழ்பெற்ற கதகளி ஆசிரியர் கோபி, சப்ரிக்காக தலையிட்டார். இதனால் சபரிக்கு படிக்க வாய்ப்பு கிடைத்தது.அத்துடன் ஆசிரியர் கோபி, சப்ரிக்கு ஆரம்ப முத்திரைகள், சைகைகள் உள்ளிட்ட நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தார். சப்ரியும் அர்ப்பணிப்புடன் கற்றுக் கொண்டார். இதற்கிடையே அவரின் குடும்பத்தினரும் முழு ஆதரவு அளித்தனர்.

‘‘அவள் கதகளி நடன வடிவத்தைக் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்ததால், அதைப் படிக்க அனுமதித்தோம். கலையில் மதத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியமில்லை. இதை அவளுடைய படிப்பின் ஒரு பகுதியாகவே நாங்கள் பார்க்கிறோம்...’’ என்கிறார் தந்தை நிஜாம். அதிகாலையில் இருந்து கதகளி பயிற்சி செய்யும் சப்ரி, மதியம் தனது படிப்பில் கவனம் செலுத்துகிறார். அப்படியாக இப்போது கேரள கலாமண்டல மேடையில் அவரின் சகாக்களுடன் இணைந்து கிருஷ்ணர் வேடத்தில் நடனமாடி தன் நீண்டநாள் கனவை நனவாக்கியுள்ளார். 

பி.கே.