தாத்தா சினிமாவில் தோல்வி அடைந்தவர்... அதனால திரைத்துறை பக்கமே போகக் கூடாதுனு வீட்ல முடிவெடுத்துட்டாங்க!



பிரபுசாலமன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘கும்கி 2’. இதில் நாயகியாக அறிமுகமாகி தனது கணக்கை துவங்கியுள்ளார் ஸ்ரீதா ராவ். ஷூட்டிங் பிசிக்கு நடுவே நம்மிடம் சின்சியராக பேசினார்.

உங்களுக்கு ஒரு அறிமுகம் கொடுங்களேன்? 

எனக்கு சினிமா பேக்ரவுண்ட் இருக்கு என்றும்  சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம். அதற்கு காரணம் எங்க குடும்பம்தான். எங்க தாத்தா தேவேந்திரா. இந்தி பாடலாசிரியர். பாலிவுட்டில் சில படங்களையும் இயக்கியுள்ளார்.

ஆனால், தாத்தா தோல்வியை சந்தித்ததால் வீட்ல உள்ளவர்கள் சினிமா பக்கமே போகக்கூடாது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். தயாரிப்பாளர் மதியழகன் என்னுடைய தாய் மாமா.சினிமா பின்னணி உள்ள குடும்பமாக இருந்தாலும் என்னுடைய சொந்த முயற்சியால் சினிமாவில் நடிக்க வந்தேன் என்று சொல்லலாம். நான், நடிகையாவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

இயல்பாகவே நான் சற்று பருமனாக இருப்பேன். உடல் ஆரோக்கியத்துக்காகவும், மன ஆரோக்கியத்துக்காகவும் ஐதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் டிராமா கிளாஸ் சேர்ந்தேன். எனக்கு தியேட்டர் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், எப்படி சேர்ந்தேன், ஏன் சேர்ந்தேன் என்பதெல்லாம் பெரிய கதை. வீட்டில் என் உடல் பருமனை சுட்டிக்காட்டி அதற்கு ஒரு முயற்சி எடுக்க சொன்னார்கள். தியேட்டரில் சேர்ந்தாலும் ஸ்டேஜுக்கு பின்னாடிதான் என்னுடைய பங்களிப்பு இருந்துச்சு. 
ஒருமுறை ஒரு ஷோவில் நடிக்க வர வேண்டியவர் வராத காரணத்தினால் இரண்டு நிமிடமே வரக்கூடிய காட்சியில் நடித்தேன்.அதன் வீடியோ சினிமா கோ-ஆர்டினேட்டர் வழியாக இயக்குநர் பிரபு சாலமன் சாரிடம் வந்து சேர்ந்தது. அப்போது இயக்குநர் பிரபுசாலமன் சார் ‘கும்கி 2’ படத்துக்காக பெரிய கண்கள் உள்ள ஹீரோயின்களை தேடிக் கொண்டிருந்தார். 

வழக்கமாக அவருடைய கதாநாயகிகள் அமலாபால், பார்வதிமேனன் போன்றவர்கள் அதுபோன்ற  தோற்றத்தில் இருக்கக்கூடியவர்கள் என்பதால் அதே தோற்றத்தில் நாயகியைத் தேடினார். எனக்கும் பெரிய விழிகள் என்பதாலும், அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப இருந்ததாலும் ஹீரோயின் சான்ஸ் கிடைச்சது.

பிரபு சாலமன், ஆர்ட்டிஸ்ட்ஸ் நுட்பமாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவர். அவருடன் வேலை செய்த அனுபவம் எப்படி?

உண்மையை சொல்வதாக இருந்தால் பிரபு சாலமன் சாருடன் வேலை செய்வது என்பது சற்று சவாலானது. இந்தப் படத்தில் கமிட்டாகும்போது கேமரா முன் எப்படி நிற்க வேண்டும் என்றுகூடத் தெரியாது. ஏனெனில், அதுதான் எனக்கு முதல் படம். 

ஆனால், அவர் மிகவும் சப்போர்ட்டிவாக இருந்தார். அவருக்கு பொறுமை அதிகம். ஒவ்வொரு எக்ஸ்பிரஷனையும் வெயிட் பண்ணி வாங்கினார். அவருடன் வேலை செய்த இந்த ஒரே படத்தில் சினிமா நுட்பத்தை கத்துக்க முடிஞ்சது. 

ஆனால், இதுல எனக்கு வருத்தமும் இருக்கு. என்னுடைய பல காட்சிகள் நீக்கப்பட்டன. ஏறத்தாழ 60 நாட்கள் நடித்தேன். திரையில் 20 நிமிட காட்சிகள்தான் இருந்துச்சு.

யானையுடன் துணிச்சலாக நடித்திருந்தீர்களே?

யானை மீது உட்கார வேண்டும், யானையுடன் கட்டி அணைக்க வேண்டும் என்று நிறைய சவால் இருந்துச்சு. அதற்காக சிறப்பு பயிற்சி எடுத்தேன். யானையிடம் கொஞ்சம், கொஞ்சமாக பேசிப் பேசிப் பழக ஆரம்பிச்சேன்.நாலைந்து நாட்களுக்குப் பிறகுதான் யானை பக்கத்துல பயம் இல்லாமல் நிற்க முடிஞ்சது. 

நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளிடம் எப்படி நெருங்கிப் பழகுவோமோ அதுமாதிரி யானையிடம் என்னால் நெருங்க முடிஞ்சது. சொல்லப்போனால் என்னால்தான் யானைக்கு பிரச்னை இருந்ததே தவிர, யானையால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இருந்ததில்லை.கேரள எல்லையையொட்டிய மலைப்பிரதேசத்தில் படப்பிடிப்பு நடந்துச்சு. வன விலங்குகள் அச்சுறுத்தல், விஷப் பூச்சி, செல்ஃபோன் சிக்னல் இல்லாதது என எல்லாமே சவாலாகவும், புது அனுபவமாகவும் இருந்துச்சு.

‘லெனின் பாண்டியன்’?

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. சிவாஜி சார் பேரன் தர்ஷன் கணேசன் ஹீரோ. ‘கும்கி 2’ படத்துக்கும் இந்தப் படத்துக்கும் சம்பந்தமே இல்லாத ரோல். நகர்ப்புற பெண்ணாக வர்றேன். ‘பருத்திவீரன்’, ‘விருமாண்டி’ பட நாயகிகள்போல் அழுத்தமான ரோல். இயக்குநர் பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். ஸ்ட்ராங் கன்டன்ட் சொல்லியுள்ளார். இந்தப் படம் எனக்கு பெரிய திருப்புமுனையைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

எந்த மாதிரி ரோல்களில் நடிக்க ஆர்வமாக இருக்கீங்க?

ஒரு நடிகையாக பல கேரக்டர்ஸ் பண்ணணும். அடிப்படையில் நான் தியேட்டர் பேக்ரவுண்ட் என்பதால் எந்தவித ரோல் கொடுத்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன். நடிகை என்பதைவிட பெர்ஃபாமர் என்று பெயர் எடுக்க விரும்புகிறேன். தற்போது உமாபதி ராமையாவின் பெயரிடப்படாத படம் செய்கிறேன். தவிர, புதுமுகம் ராஜ் நடிக்கும் படம். 

நடிகையானபிறகு உங்களை ஆச்சர்யப்படுத்திய அம்சம் என்ன?

இப்போதுதான் நடிக்க ஆரம்பித்துள்ளேன். இன்னும் டிராவல் பண்ணணும். புகழ் பெற்ற நடிகர், நடிகைகளுக்கு வெளி உலக அழுத்தங்கள் இருக்கும். நான் இன்னும் அந்த இடத்துக்கு வரவில்லை. மற்றபடி சினிமா எனக்கு பிடிக்கும். அதனால்தான் நடிக்க வந்தேன். நடிகையானபிறகு என்னுடைய இயல்பு வாழ்க்கை எந்தவிதத்

திலும் மாறவில்லை. எல்லாவற்றுக்கும் டைம் ஒதுக்குகிறேன். என்னைப்பற்றி மட்டுமே யோசிக்காமல் என்னைச் சுற்றி இருக்கிறவர்களைப் பற்றியும் யோசித்து அவர்களுக்காகவும் டைம் ஒதுக்குகிறேன்.சினிமாவில் தினம் தினம் பல புதுமுகங்கள் வரும் நிலையில் போட்டி, வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?

எனக்குள் சந்தோஷம் ஏற்படும்போது வெற்றியடைந்ததாக நினைக்கிறேன். காலையில் எழுந்ததும் கண்ணாடி முன் நின்று பேசினால் ஒருவித எனர்ஜி கிடைக்கும். அதுவும் எனக்கு வெற்றி மாதிரிதான். பெரிய படம் செய்து தோல்வியடைந்தாலும், சிறிய படம் செய்து வெற்றியடைந்தாலும், அது முக்கியமல்ல. ஆர்ட்டிஸ்ட்டாக கேரக்டரை எப்படி பண்ணியிருக்கிறேன் என்பது முக்கியம். ‘கும்கி 2’ படத்துக்காக பல வருஷம் காத்திருந்தேன். 

வெளியீட்டுக்கு முன்பே என் காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல் வந்துச்சு. பல வருட காத்திருப்புக்குப் பிறகு நல்ல ரிசல்ட் வரவில்லை. இந்த பிராசஸில் நான் கத்துக்கிட்டது, ரிசல்ட் நெகட்டிவ்வாக வருகிறதோ, பாசிட்டிவ்வாக வருகிறதோ அதுபற்றி கவலைப்படக் கூடாது. அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று வேலையைத் தொடர வேண்டும் என்று ‘கும்கி 2’ கத்துக்கொடுத்துள்ளது. வெற்றி, தோல்வி என்னைப் பாதிக்காதளவுக்கு ‘கும்கி 2’ படத்துக்குப் பிறகு பக்குவமடைந்துள்ளேன். அப்படியொரு மனவேதனை அடைந்தேன். இதை நீங்க கண்டிப்பாக எழுதுங்க. 

யார், உங்களை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவுகிறார்கள்?

யாருமில்லை. என்னை நானே உற்சாகப்படுத்திக்கொள்வேன். முன்பு நான் அதிக பருமனாக இருந்தேன். இப்போது அதைக் குறைத்து ஆளே அடையாளம் தெரியாதவளவுக்கு மாறியுள்ளேன். இன்ஸ்பிரேஷனாக யாரையாவது சொல்வதாக இருந்தால் பிரியங்கா சோப்ராவைச் சொல்வேன்.

எஸ்.ராஜா