மணிக்கு ஒருதடவை போன்... பிரஷர்... மன அழுத்தம்... SIR... முடியலை சார்... சாகறோம் சார்...
எஸ்ஐஆர் எனும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளும், அலுவலர்களும் பணிச்சுமையால் மாரடைப்புக் காரணமாகவும், அழுத்தத்தால் தற்கொலை செய்தும் உயிரிழப்பது இந்திய நாட்டையே கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் தமிழகம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக எஸ்ஐஆர் பணிகள் நடந்து வருகின்றன. இதில் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (பிஎல்ஓ), தேர்தல் பணியாளர்கள் எனப் பலர் பணிச் சுமையால் இறந்துள்ளனர். கடந்த வாரம் காங்கிரஸ் கட்சி, அவசரகதியில் மேற்கொள்ளப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளால் மனஅழுத்தம் ஏற்பட்டு இந்தியா முழுவதும் 26 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்தில் மட்டும் 40 தேர்தல் அதிகாரிகள் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்ல, மத்தியப் பிரதேசத்தில் சோஹாக்பூர் தாலுகாவில் வாக்குசாவடி நிலை அதிகாரியாகப் பணியாற்றி வந்த பள்ளி ஆசிரியர் மணிராம் நபிட் எஸ்ஐஆர் பணியின்போது உடல்நிலை மோசமாகி இறந்தார்.
அவர் மகன் ஆதித்யா, தனது தந்தைக்குக் கணக்கெடுப்பு இலக்குகளை முடிக்க மிகப் பெரிய அழுத்தம் தரப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் வாக்குச்சாவடி நிலை அதிகாரியாக இருந்த உதயபானு ஷிகாரே பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த நவம்பர் 11ம் தேதி முதல் மத்தியப் பிரதேசத்தில் 5 வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் இறந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேபோல் கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிச்சுமை காரணமாக அனீஷ் ஜார்ஜ் என்பவர் தற்கொலை செய்துள்ளார்.
ராஜஸ்தானில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு அலுவலர்கள் இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.குஜராத்தில் தினேஷ் ராவல் என்ற வாக்குச்சாவடி நிலை அதிகாரி மாரடைப்பால் இறந்துள்ளார். தமிழகத்தில் கடந்த வாரம் எஸ்ஐஆர் பணி நெருக்கடியால் திருக்கோவிலூரைச் சேர்ந்த 37 வயது கிராம உதவியாளரான ஜாகிதா பேகம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இளையான்குடியைச் சேர்ந்த வருவாய் ஆய்வாளர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பானது. இதனால் வருவாய்த்துறையினர் எஸ்ஐஆர் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்குப் பின்னர் கைவிட்டனர். இப்படி இந்தியா முழுவதும் எஸ்ஐஆர் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் மரணங்கள் தொடர்கின்றன. இதுகுறித்து வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் முருகையனிடம் பேசினோம்.
‘‘கடந்த நவம்பர் 4ம் தேதி முதலாக எல்லாருமே இரவு பகலாக வேலை செய்திட்டு இருக்காங்க. வழக்கமான பணிகளுடன் இந்தப் பணியும் சேர்வதால் பணிநெருக்கடியாகி மனஅழுத்தம் அதிகமாகுது. அதுதான் தற்கொலைகளுக்கும், தற்கொலை முயற்சிகளுக்கும் காரணம். மாவட்ட ஆட்சியரில் இருந்து பிஎல்ஓ வரை எல்லோருமே தொடர்ந்து இந்த வேலையைத்தான் பார்த்திட்டு இருக்காங்க.
ரொம்ப குறைவான நாளில் இந்த வேலையை முடிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. முப்பது நாட்கள்ல நிச்சயம் முடியாது. ஆனா, முடிக்கணும்னு சொல்லும்போது நெருக்கடி அதிகமாகுது. இப்போ, நகர்ப்புறங்களில் நிறைய பேர் வீடு மாறிப் போயிருக்காங்க. அதனால், அவங்க நினைக்கிற மாதிரி இது வரையறுக்கப்பட்ட பணியாக இல்ல. ஒரு இடம் போனங்கனா பத்து முதல் 20 பேர்கள் வரை கவர் பண்ண வேண்டியிருக்கும். ஆனா, மாவட்ட ஆட்சியர்ல இருந்து எல்லோரும் ரொம்ப நெருக்கடி கொடுக்குறாங்க. சமீபத்துல எங்க போராட்டத்திற்குப் பிறகு கொஞ்சம் குறைஞ்சிருந்தாலும் பல இடங்கள்ல அதிகமாகவே இருக்கு.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை போன் பண்ணி என்னாச்சு என்னாச்சுனு கேட்கும்போது மனஉளைச்சலுக்கு ஆளாகுறாங்க. இது ரொம்ப கஷ்டமாக இருக்கு. அதுமட்டுமில்ல. இவ்வளவு பெரிய பணிகளுக்கு இதுவரைக்கும் போதுமான நிதி உதவியை தேர்தல் ஆணையமோ, அரசோ கொடுக்கல.
அதனால பணிகள்ல ரொம்ப சிரமம் ஏற்படுது. அடுத்து, வழக்கமாக இதுபோன்ற பணிகள் நடக்கும்போது ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கூடுதலாக பணியாளர்கள் நியமனம் செய்வாங்க. அந்தப் பணியிடங்களையும் கொடுக்கல.இது எல்லாம் சேரும்போது அனைத்து இடங்களிலும் எஸ்ஐஆர் பணிகளை முடிப்பதில் சிரமம் உருவாகுது. இருந்தும் இப்ப நிறைய மாவட்டங்கள்நல்லபடியாக பண்ணி முன்னேறிப் போயிருக்காங்க. சில மாவட்டங்கள் கொஞ்சம் பின்தங்கி இருக்கு.
இது பெரும்பாலும் நகர்ப்புறங்கள்லதான். குறிப்பா சென்னை, கோவை போன்ற நகர்ப்புறங்கள்லதான் கணக்கீடு பிரச்னை இருக்கு. தமிழகத்துல மட்டும் இதுவரைக்கும் திருக்கோவிலூர்ல ஜாகிதா பேகம்னு ஒரு கிராம உதவியாளர் தற்கொலை செய்து இறந்து போயிருக்காங்க.இதுதவிர, நிறைய பேர் விபத்துக்கு ஆளாகியிருக்காங்க.
பலர் அலுவலகத்திலேயே மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க. வருவாய்த் துறையில் பல நிலையில் உள்ள அலுவலர்கள், குறிப்பாக வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்னு பலர் மயங்கி விழுந்திருக்காங்க.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்வளவு படிவங்கள் முடிக்கணும்னு டார்கெட் இருக்கு. முதல்ல இந்த படிவங்கள் கொடுக்கும்போது இரண்டு நாள்ல முடிக்கணும்னு சொன்னாங்க. இரண்டு நாள்ல முடிக்க சாத்தியமே கிடையாது. பிறகு, 20ம் தேதிக்குள் முடிக்கணும்னு சொன்னாங்க. அடுத்து 26ம் தேதினு மாத்தினாங்க.
ஆனா, தேர்தல் ஆணையம் டிசம்பர் 4ம் தேதி வரைக்கும் நேரம் கொடுத்திருந்தும் அதுக்கு முன்னாடி இன்னைக்கே முடிங்க என்கிற மாதிரி சில அழுத்தங்கள் கொடுக்கப்படுது.
தமிழகத்தில் இந்த வாக்காளர் திருத்தப்பணியில் கிட்டத்தட்ட 90,000 பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்காங்க.
வருவாய்துறைப் பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள்னு பலர் இருக்காங்க. பிஎல்ஓவே கிட்டத்தட்ட 68,000 பேர் இருக்காங்க. அதில்லாமல் சூப்பர்வைசர்கள் இருக்காங்க. இப்ப கிராம நிர்வாக அலுவலர்கள் இந்தப் பணியில் நேரடியாக இல்லை என்றாலும் அவங்களும் இந்தப் பணிகளைப் பார்த்திட்டுதான் இருக்காங்க.
எங்களுக்கு அந்தந்த மாவட்ட சங்கங்கள் மூலமாக நெருக்கடி அதிகமாக இருக்குனு தகவல்கள் வருது. நாங்க போராட்டம் பண்ணினோம். இப்பவும் அது சம்பந்தமாக பேசிட்டு இருக்கோம்.
நாங்க எங்க துறையினர்கிட்ட, ‘இயன்ற அளவுக்குப் பாருங்க. அதுக்காக உடலை வறுத்திப் பண்ண வேண்டாம்’னு சொல்றோம். எதுக்கும் தற்கொலை தீர்வாகாது. இதுக்கு முன்னாடி 2002ம் ஆண்டு பண்ணினப்ப எல்லாம் இந்த அளவுக்கு நெருக்கடி கிடையாது. அப்பவும் கஷ்டப்பட்டுதான் பண்ணினோம். இந்த அளவுக்கு அதிகமான மன உளைச்சலோ, மனஅழுத்தமோ இருக்கல.
ஆனா, இப்ப மீட்டிங் என்கிற பேர்ல ஒரு நாளைக்கு மூணு தடவை பேசுறாங்க. அதே மாதிரி பிஎல்ஓவே தொடர்ச்சியாக போன் பண்ணி எவ்வளவு முடிச்சீங்கனு கேட்டுட்டே இருக்காங்க. அதுவே உளவியல் ரீதியாக அவங்களுக்கு மனஅழுத்தத்தை உண்டு பண்றதை பார்க்கிறோம்.
பிஎல்ஓவும் எங்க துறை நபர்களாக இருந்தாலும் அவங்களுக்கு தேர்தல் ஆணையம், சூப்பர்வைசர்னு அதற்கு மேலிருக்கிறவங்க பேசுவாங்க. அதனால், நாங்க இதுக்கு முறையாக நிதி ஒதுக்கி பணிகள் செய்தால் சிறப்பாகப் பார்க்க முடியும்னு சொல்றோம். அப்புறம், மேலும் ஒருவாரம் கால அவகாசம் கேட்குறோம். அத்துடன் கூடுதலாக பணியாளர்களை நியமனம் செய்யுங்கனு கோரிக்கை வைக்கிறோம்.
ஏன்னா, நாங்க வழக்கமான வேலைகளைப் பார்த்திட்டுதான் இந்தப் பணியை மேற்கொள்றோம். இது கூடுதல் பணிதான். முன்னாடியெல்லாம் மாவட்டம் தோறும் பணியிடங்கள் ஏற்படுத்துவாங்க. இந்தமுறை அதைப் பண்ணல. அதுதான் பிரச்னையே...’’ என்கிறார் முருகையன். தற்போது தேர்தல் ஆணையம் இந்தப் பணியை முடிக்க கூடுதலாக ஒருவார கால அவகாசம் அளித்துள்ளது.
இருந்தும் இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும் நேரத்தில் உத்தரப்பிரதேசம் மொராதாபாத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரும், பிஎல்ஓவாக இருந்தவருமான 46 வயது சர்வேஷ் சிங் எஸ்ஐஆர் பணிச்சுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராச்சி கண்ணன்
|