2025ல் இந்தியாவின் ப்ளாக்பஸ்டர் படம் இதுதான்!



இதுவரை வெளியான குஜராத்தி படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சிறப்பைத் தன்வசமாக்கியிருக்கிறது, ‘லாலோ- கிருஷ்ணா சதா சகாயதே’. அங்கித் சாகியா இயக்கத்தில், கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான இந்தப் படத்தின் பட்ஜெட் வெறும் 50 லட்சம்தான். ஆனால், வசூலோ ரூ.100 கோடியைத் தாண்டிவிட்டது. உண்மையில் சூப்பர் ஹிட் படம் இதுதான்.

ஒரு ரிக்‌ஷா டிரைவர் பண்ணை வீட்டில் தீய சக்திகளிடம் மாட்டிக்கொள்ள, அவருக்கு கிருஷ்ணர் எப்படி உதவுகிறார் என்று இப்படத்தின் கதை செல்கிறது. இந்தப் படம் வருங்கால குஜராத் சினிமாவுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்நிலையில் குஜராத் சினிமா கடந்து வந்த பாதையைப் பார்ப்போம். 
நூறு வருடங்களுக்கு முன்பாகவே திரைத்துறையில் நுழைந்துவிட்டது, குஜராத்தி சினிமா. 1913 - 1931ம் வருடம் வரையில் குஜராத்தியர்களுக்கு இருபதுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்களும், தயாரிப்பு நிறுவனங்களும் இருந்தன. குஜராத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட இயக்குநர்கள் இயங்கி வந்தனர். இவர்கள் குஜராத் மக்களின் வாழ்க்கையையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் மௌனப்படங்களை எடுத்தனர். 
குஜராத்திய இயக்குநர் ரஸ்டோமோஜி தோட்டிவாலா இயக்கத்தில், 1919ல் ‘பில்வமங்கள்’ என்ற மௌனப்படம் வெளியானது. 132 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படத்தை எல்பின்ஸ்டன் பயாஸ்கோப் கம்பெனி தயாரித்திருந்தது.குஜராத்தி சினிமா தயாரிப்பாளரான துவாரகாதாஸ் சம்பத் என்பவர் ராஜ்கோட்டில் சினிமா தயாரிப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபட ஆரம்பித்தார். 

புரொஜக்டரை சொந்தமாக வாங்கி, பல மொழி திரைப்படங்களைத் திரையிட்டார். எஸ்.என்.படன்கருடன் இணைந்து ‘படன்கர் பிரண்ட்ஸ் அண்ட் கம்பெனி’யை ஆரம்பித்தார் துவாரகாதாஸ். இந்நிறுவனம் ‘ராஜா சிரியல்’ என்ற படத்தை முதலாவதாக எடுத்தது. 

பிரிண்ட் பிரச்னை காரணமாக இப்படம் வெளியாகவில்லை. அடுத்து 1920ல் ‘கச் - தேவ்யானி’ என்ற படத்தை படன்கர் இயக்கினார். இப்படத்தில் முதன்முதலாக குஜராத்தியர்களின் நடனமான கார்பா இடம் பிடித்திருந்தது. பிறகு துவாரகாதாஸ் கோஹினூர் ஃபிலிம் கம்பெனி என்ற நிறுவனத்தைத் தனியாக ஆரம்பித்தார். 1920ல் கோஹினூர் தயாரிப்பில் ‘சதி பார்வதி’ என்ற படம் வெளியானது. இப்படத்தை விஷ்ணுபாண்ட் திவாகர் இயக்கியிருந்தார். 

கோஹினூர் நிறுவனம் ஏராளமான மௌனப்படங்களைத் தயாரித்தது. 1920லேயே சமூகப் பிரச்னைகளைப் பேசும் முதல் குஜராத்திப் படமான ‘கதோரபார் கூன்’ வெளியானது. 1924ல் ‘மனோரமா’ எனும் படம் வெளியாகி, சக்கைப்போடு போட்டது. இதே வருடத்தில் வெளியான ‘கல்- இ- பகவலி’ எனும் படம் வெற்றிகரமாக 14 வாரங்கள் ஓடியது. 

த கிருஷ்ணா ஃபிலிம் கம்பெனி என்ற தயாரிப்பு நிறுவனம், 1925 முதல் 1931ம் வருடம் வரையில் 44 குஜராத்தி படங்களைத் தயாரித்தது. 1932ல் முதல் குஜராத்தி பேசும் படமான ‘நர்ஸின் மேத்தா’ வெளியானது. இப்படத்தை நானுபாய் வகீல் இயக்கியிருந்தார். கவிஞர் நர்ஸின் மேத்தாவின் வாழ்க்கையைத் தழுவிய இந்தப் படம் பெரும் வெற்றியடைந்தது. 

இப்படத்தைத் தொடர்ந்து, 1932ல் சத்யவான் சாவித்திரியின் கதையைத் தழுவி ‘சதி சாவித்திரி’ வெளியானது. 1932 முதல் 1940ம் வருடம் வரையில் 12 படங்கள் வெளியாகின. 1933, 1937, 1938 ஆகிய மூன்று வருடங்களில் ஒரு குஜராத் படம் கூட தயாரிக்கப்படவில்லை. மட்டுமல்ல, இரண்டாம் உலகப் போர் காரணமாக 1941 முதல் 1946ம் வருடம் வரையிலும் குஜராத்தில் ஒரு படம் கூட தயாரிக்கப்படவில்லை. 

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு குஜராத்தில் தயாராகும் படங்களின் எண்ணிக்கை உயர்ந்தது. 1948ம் வருடத்தில் மட்டும் 26 படங்கள் தயாரிக்கப்பட்டன. 1946 முதல் 1952ம் வருடம் வரையில் 74 படங்கள் தயாரிக்கப்பட்டன. இந்தப் படங்கள் எல்லாம் புனிதர்கள், சதிகாரர்கள், கொள்ளைக்காரர்களின் கதைகளை மையமாகக் கொண்டிருந்தன. 

இந்தக் கதைகள் எல்லாம் கிராமத்துப் பார்வையாளர்களுக்கு முன்பே தெரிந்தவை. அதனால் அவர்களால் படங்களோடு சுலபமாக ஒன்ற  முடிந்தது. 1951 முதல் 1970ம் வருடம் வரை படங்களின் தயாரிப்பு இறங்கு முகத்தில் சென்றது. இந்த 19 வருடங்களில் 55 படங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

கோவிந்த் சரையா இயக்கத்தில் 1972ல் வெளியான ‘குணசுந்தரினோ கர்சன்சார்’ என்ற படம் தேசிய விருதை வென்றது. 1981ல் மட்டுமே 368 குஜராத்திபடங்கள் தயாரிக்கப்பட்டன. தொலைக்காட்சியின் வருகையும், மக்களின் பார்வை இந்திப் படங்கள் பக்கம் திரும்பியதும் குஜராத்தி சினிமா நலிவடையத் தொடங்கியது. 

2000ம் வருடத்தின் ஆரம்பத்தில் ஒவ்வொரு வருடமும் 25 படங்கள் தயாரிக்கப்பட்டன. 2009, 2010ல் வருடத்துக்கு அறுபதுக்கும் அதிகமான படங்கள் தயாராகின. 2012ல் 70 படங்கள் தயாரிக்கப்பட்டன. 2005ல் ‘லவ் இஸ் பிளைண்ட்’ என்ற படம் வெளியானது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியான முதல் குஜராத்தி படம் இதுதான். 

2012ல் வெளியான வரலாற்றுப் படமான‘வீர் ஹமீர்ஜீ’ பெரும் வெற்றியைப் பெற்றதோடு, இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்படும் படங்களின் பட்டியலிலும் இடம் பிடித்தது. 2013ல் வெளியான ‘த குட் ரோட்’ படம் தேசிய விருதை தட்டியது. 2016 முதல் 2018ம் வருடம் வரையில் ஒவ்வொரு வருடமும் 50 முதல் 70 படங்கள் தயாரிக்கப்பட்டன. 

2018ம் வருடம் அமெரிக்காவில் முதல் சர்வதேச குஜராத்தி திரைப்பட விழா நடந்தது. ‘ராங் சைட் ராஜு’ (2016), ‘திக்’ (2017), ‘ரேவா’ (2018) ஆகிய படங்கள் தேசிய விருதை வென்றன. 
2019ல் வெளியான ‘ஹெல்லோரா’ என்ற பெண்ணியப் படம் தேசிய விருதை வென்றதோடு, சர்வதேச அளவிலும் கவனம் பெற்றது. 

இந்தியா முழுவதும் வெளியாகி 16 கோடியைக் குவித்தது. இதே வருடம் வெளியான ‘சால் ஜீவி லையே’ என்ற படம் ரூ.52.14 கோடியை வசூலித்து, அதிக வசூலைக் குவித்த குஜராத்தி படம் என்ற சிறப்பைத் தன்வசமாக்கியது. 

கொரோனா காலத்தில் பெரிதாக குஜராத்தி சினிமா இயங்கவில்லை. 2021ல் பான் நலின் இயக்கத்தில் வெளியான ‘லாஸ்ட் ஃபிலிம் ஷோ’ என்ற படம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.

2021க்குப் பிறகு குஜராத்திலிருந்து ஒவ்வொரு வருடமும் சுமார் 60 படங்கள் வெளியாகின்றன. ஒவ்வொரு படமும் ரூ.2 கோடி முதல் ரூ.2.5 கோடி பட்ஜெட்டில் தயாராகின்றது. குஜராத் சினிமாவின் வருடாந்தர பிசினஸ் ரூ.200 கோடியைத் தொட்டுவிட்டது. 

2025ல் வெளியான ‘வாஷ் லெவல் 2’ ரூ.16 கோடியையும், ‘உம்பரோ’ ரூ.17 கோடியையும், ‘சானியா டோலி’ ரூ.23 கோடியையும் வசூலித்துள்ளன. இச்சூழலில்தான் ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்ததோடு, இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது ‘லாலோ- கிருஷ்ணா சதா சகாயதே’. இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே 200  மடங்கு லாபத்தைக் கொடுத்திருக்கும் முதல் படமும் இதுதான்!

த.சக்திவேல்