வரும்... ஆனா, வராது கணக்காக இந்தியாவில் கண்டுபிடிப்புகள் நடக்கின்றன... ஆனால், நடக்கவில்லை!
உலக கண்டுபிடிப்புகளுக்கு உரிமை வழங்குவது ‘வேர்ல்ட் இண்டலக்சுவல் ப்ராப்பர்டி ரைட்ஸ்’ என்ற அமைப்புதான்.இந்த அமைப்பு அண்மையில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் பெயர் ‘க்ளோபல் இன்னவேஷன் இண்டெக்ஸ்’ என்பது. அதாவது அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளில் எந்த நாடு முன்னிலையில் இருக்கிறது எனும் தரவரிசைப் பட்டியல் அது. இதில்தான் சீனா இந்தியாவைவிட பல மைல் தூரம் முந்தியிருக்கிறது என சான்றிதழ் கொடுக்கிறது இந்த அமைப்பு.  வேறு என்ன சொல்கிறது?
இந்தப் பட்டியலில் ஸ்வீடன், ஸ்விட்சர்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முறையே முதல் 5 இடங்களில் இருக்கின்றன.சீனா இதில் 10வது இடம். இந்தியா 38வது இடம். சீனா 10வது இடத்தைப் பிடித்து, அந்த இடத்தில் இருந்த ஜெர்மனை 11வது இடத்துக்கு தள்ளியிருக்கிறது. இந்தப் பட்டியலில் துருக்கி, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மொராக்கோ, இரான் நாடுகள் எல்லாம் ஏற்றம் பெற்றிருப்பதாக மெச்சுகிறது இந்த அமைப்பு.
 மேலும் ருவாண்டா, செனகல், துனிசியா மற்றும் மலாவி போன்ற சிறுசிறு ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் கண்டுபிடிப்புகளில் உயரக்கூடிய அளவில் இருக்க இந்தியா போன்ற நாடுகள் ஏன் பின்வரிசையில் இருக்கின்றன எனக் கேட்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
‘ஒரு கண்டுபிடிப்புக்கு மிக முக்கியமானது அந்தக் கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்குவது. இந்த விஷயத்தில் ஒரு நாட்டின் மொத்த உற்பத்தியில் அந்த நாடு கண்டுபிடிப்புகளுக்கு எவ்வளவு ஒதுக்குகிறது என்பதை வைத்து அந்த நாட்டின் ஊக்குவிப்பை அளவிடுகிறார்கள் நிபுணர்கள்.
உதாரணமாக சீனா இந்த விஷயத்தில் மொத்த உற்பத்தி வருமானத்தில் சுமார் 2.4 சதவீதம் ஒதுக்குகிறது. தென் கொரியா 4.9 சதவீதம் ஒதுக்குகிறது. இந்தியா? இந்தியா வெறும் 0.7 சதவீதம்தான்.
இத்தோடு தனியார் நிறுவனங்கள் இந்த விஷயத்தில் எவ்வளவு நிதி கொடுக்கிறார்கள் என்பதும் முக்கியம். உதாரணமாக அமெரிக்க அரசு இந்த விஷயத்தில் ஒதுக்கும் அளவைவிட அந்நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் ஒதுக்கும் அளவு சுமார் 70 சதவீதம் என்கிறது இந்த ஆய்வு.
இந்த அடிப்படையில் இந்தியாவிலுள்ள தனியார் நிறுவனங்கள் இந்திய கண்டுபிடிப்புகளுக்கு எவ்வளவு ஒதுக்குகின்றன?
வெறும் 35 சதவீதம்தான் என்கிறது ஆய்வு.
பொதுவாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் அனைத்தும் தொழில்களுடன் இணைந்து பயணிக்கவேண்டும். ஆனால், இந்தியாவில் கண்டுபிடிப்புகள் ஒருபக்கமும், தொழில்கள் மறுபக்கமும் பிளவுபட்டிருக்கின்றன. அதாவது இணைவு சாத்தியமில்லாமல் இருக்கிறது. இதனால் இந்தியர்களின் கண்டுபிடிப்புகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் அப்படியே தேங்கிவிடுவதாக நிபுணர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
மொத்தத்தில் இந்தியா எனும் உடம்பில் கைகளும் கால்களும் மற்ற உறுப்புகளும் தனித்தனியே செயல்படுகின்றன. இணைந்து ஒரே அலைவரிசையில் இயங்கவில்லை. எனவே, இந்தியா என்னும் உடல் முழுமையாக இல்லை. இதுவே இன்றைய எதார்த்தம். இதை மாற்றி அனைத்தையும் ஒருங்கிணைக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கு இருக்கிறது. ஒருங்கிணைக்குமா என்பதுதான் கேள்விக்குறி.
டி.ரஞ்சித்
|