சிறுகதை-யாத்திரை



அருணாச்சலம் பெட்டியில் துணிகளை அடுக்கிக் கொண்டிருந்தார். பூரி ஜெகன்னாதரைத் தரிசிக்க, மனைவியுடன் யாத்திரைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார்.உள்ளே பூஜை அறையில் விளக்கேற்றிவிட்டு சாமி படங்களுக்கு பூ வைத்துக்கொண்டிருந்தார் அவரின் மனைவி அலமேலு.“கார்த்தால ஏழு மணிக்கு ரயில். ராத்திரியே பூரி செஞ்சிடு. 
தொட்டுக்க தக்காளித் தொக்கு...”“க்கும்...” தாடையில் இடித்துக்கொண்டார் மனைவி அலமேலு. அந்த செய்கையில் கோபம் தொக்கி நின்றது.“ஸ்வெட்டர் எடுத்துக்கோ. பூரில காத்து இருக்கும்...”“பூரிக்குள்ளே காத்து இருக்கும்தான். அப்போதான் உப்பலா இருக்கும்...”அருணாச்சலம் மனைவியைக் கூட்டிக் கொண்டு அடிக்கடி ஆன்மீகப் பயணம் கிளம்பி விடுவார்.

“கார்த்தால ஏந்திரிக்கறதுக்கு அலாரம் வைச்சிக்கோ. அலாரம் சரியா அடிக்கணும்னு அங்காளபரமேஸ்வரியை வேண்டிக்கோ. ரயிலைத் தவற விட்டுடக் கூடாது...”
“நாம பூரி போறது இது எத்தனாவது தடவை?”“ஜஸ்ட் ஏழாவது தடவைதான். ஓம்காரேஸ்வர் லிங்கத்தைப் பார்க்க ஒன்பது தடவை போயிருக்கோம். பூரி ரெண்டு கம்மி...” 
கம்மி என்று வருத்தத்துடன் சொல்லும் போது குரல்  கம்மியது. 

பிறகு தொடர்ந்தார்.“சிவன் கோயிலை ஒன்பது தடவை பார்த்துட்டோம். விஷ்ணுவுக்கு மட்டும் ஏழுங்கறது பாரபட்சம். என்னைப் பொருத்தவரை ஹரியும் சிவனும் ஒண்ணு...”“ஒண்ணுதான். அதுக்காக ஒன்பது தடவை போறதா? எனக்கும் பக்தி இருக்கு. உங்களை விட அதிகம். ஆனா, நீங்க ரொம்பப் படுத்தறீங்க...”
“பூரிக்குப் பக்கத்திலே என்ன இருக்கு தெரியுமா?”“உருளைக் கிழங்கு மசாலா...”

“இல்லே. புவனேஸ்வர். அங்கே லிங்கராஜ் கோயிலுக்கும் போறோம்...”
“போலாம். அப்படியே கொனார்க் பீச்சுக்கும் போலாமே!”
“நோ. பக்தியையும் பீச்சையும் இணைக்கக் கூடாது. அடுத்த மாசம் நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரரை தரிசிக்கப் போறோம்...”
“அடுத்த மாசம் அக்கா பேத்திக்குக் கல்யாணம்...”
“எந்த ஊர்ல? ஏதாவது புண்ணியத் தலமா?”
“ஒரு பீச் ரிசார்ட்ல...”

“பழனில செய்யக் கூடாதா? நான் அப்படியே ஒரு மொட்டையும் போட்டிருப்பேன்...”
“கல்யாணத்துக்குப் போனா மொய்தான் வைக்கணும். மொட்டை போடக் கூடாது...”
இதற்கு மேல் அவரிடம் பேசிப் பலனில்லை என சமையலறைக்குள் நுழைந்தாள் அலமேலு.

பூரி செய்ய ஆரம்பித்தாள்.அருணாச்சலத்துக்குத் தல யாத்திரை போவதென்றால் மிகவும் பிடிக்கும். ஆயிரம் தல யாத்திரை செய்த அபூர்வ அருணாச்சலம் எனப் பட்டப் பெயர் கொடுக்கலாம் அவருக்கு.பத்து வருடங்களுக்கு முன்பாகப் பஞ்ச பூதக் கோவில்களுக்கு முதன் முதலாக யாத்திரை சென்றார். 

போய்விட்டு வந்ததும் சொன்னார்.“அலமேலு. அஞ்சுக்கு அப்புறம் ஆறு...” என்றார்.இந்தக் கணிதக் கண்டுபிடிப்பை ஏன் திடீரெனச் சொல்கிறார் என அலமேலுக்குப் புரியவில்லை.“அடுத்ததா அறுபடை வீட்டுக்கு நாம யாத்திரை போகப் போறோம்...”அதற்கும் போய் வந்து விட்டார்கள். ஆறுடன் அவர் மனம் ஆறவில்லை.“அலமேலு. அறுபடை வீடு முடிஞ்சது. 

அடுத்தது ஒன்பது...”“ஒன்பது படை வீடு இல்லே. மொத்தமே ஆறுதான். மருதமலை கூட 6A தான்...”“ஒன்பது கிரகம். நவக்கிரகத் தலத்துக்கு யாத்திரை போறோம்...”அதற்கும் போய் வந்து விட்டார்கள். வருடா வருடம் குருப் பெயர்ச்சி நடைபெறும். அவரும் வருடா வருடம் குருப் பெயர்ச்சி சமயத்தில் ஆலங்குடிக்கு அட்டெண்டன்ஸ்  போட்டுவிடுவார். தனியாகப் போகாமல் கும்பலாகப் போவார். வாட்ஸ்அப்பில் குருப் பெயர்ச்சி க்ரூப் என ஒன்றையே  உருவாக்கி விட்டார்.

“கோயில் கோயிலா சுத்தினது போதும். வீட்லயே நிம்மதியா பூஜை செய்யலாம்...” என அலமேலு கூறிய போது குதிக்க ஆரம்பித்தார்.“இப்போதான் சிங்கிள் டிஜிட் ஓடிகிட்டிருக்கு. அடுத்தது டபுள் டிஜிட்...” “என்ன சொல்றீங்க?”“பன்னிரண்டு. அதாவது டபுள் டிஜிட். பன்னிரண்டு ஜோதிர்லிங்கத்துக்குப் போறோம்...”ஜார்க்கண்டில் ஒரு ஜோதிர்லிங்கம் இருந்தது. வைத்தியநாத் லிங்கம். அங்கிருந்து ஜம்ப் செய்து மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் மஹாகாளேஸ்வருக்குப் போனார்.மூன்று மாதங்கள் ஆனதும் மெதுவாக ஆரம்பித்தார்.

“அலமேலு. நீ கோபிச்சுக்கல்லேன்னா டிரிபிள் டிஜிட்டுக்குப் போலாம்...”“புரியல்லே...”“108 திவ்ய தேசம்...”அலமேலுக்கு திக்கென்றது. இதே ரேட்டில் போனால் மில்லியன் மாரியாத்தா என்று கூட சொல்ல ஆரம்பித்து விடுவார்.“எதுவும் வேணாம். அப்படியே யாத்திரை போகணும்னா வேற எங்கேயாவது ஜாலியான இடத்துக்குப் போலாம். என் மனசுக்கும் ஒரு சேஞ்ச் தேவைப்படுது...”“எங்கே போறது?”“சிம்லா போலாம். 

குலு மணாலி போலாம்...”“அதெல்லாம் ஹனிமூன் போறவங்களுக்கான இடம்...”“அந்தக் காலத்திலேதான் ஹனிமூன் போகல்லே. இப்போ போலாமே. எனக்கு உறை பனில விளையாடனும்னு ரொம்ப நாளா ஆசை. உங்கமேலே ஐஸ் கட்டி எடுத்து வீசணும். அதை வீடியோ எடுக்கணும்...”“உனக்கு ஆசையா இருந்தா நீ மட்டும் சிங்கிளா சிம்லா போயிட்டு வா. நான் சிக்கல் சிங்காரவேலரைப் பார்க்கப் போறேன்...”அதற்கு மேல் பேசினால் சிக்கல். எனவே அலமேலு நகர்ந்தார்.

இரண்டு மாதங்கள் போயிருக்கும்.“வைஷ்ணோதேவி யாத்திரை போகலாம்...” என்றார் அண்ணாமலை. 
“வைஷ்ணோதேவி என்ன வளசரவாக்காத்திலயா இருக்கு? ஜம்மு காஷ்மீர்ல இருக்கு...” என்றார் அலமேலு.
“தெரியும். வளசரவாக்கத்திலேர்ந்து ஒரு க்ரூப் போகுது. ரெண்டு டிக்கெட் சொல்லிட்டேன்...”
“நான் வரல்லே...”

“வைஷ்ணோதேவிக்கு வைஃப்போட போனாப் புண்ணியம். மாதாஜி அருள் கிடைக்கும்...”
“மாங்காடு போய் மாதாஜி கிட்டே நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். தப்பா நினைச்சுக்க மாட்டாங்க...”அதன்பிறகு பலமுறை பேசிப் பார்த்தார் அருணாச்சலம். அலமேலு உறுதியாக நின்றார். 

“ஒரு வாரம் தனியா இருப்பியா?”
“நான் ஏன் தனியா இருக்கப் போறேன்? கூட நாப்பது பேர் இருக்கப் போறாங்க...”
“நாப்பது பேரும் தெரிஞ்சவங்களா?”
“இல்லே. தெரியாதவங்க...”

அருணாச்சலத்துக்குக் கவலையாகப் போய் விட்டது. யார் அந்த நாற்பது பேர்? என்ன செய்யப் போகிறாள்? ஏதாவது அலமேலுவும் நாற்பது திருடர்களும் கதையாகி விடப் போகிறது!
“நான் கூர்க் டூர் போறேன். நாப்பது பேர் கூட...”
“கூர்க்னு ஒரு ஊர் இருக்கா அலமேலு?”

“உங்களுக்குத்தான் புண்ணியத் தலம் தவிர வேற எதுவும் தெரியாதே! இது கர்நாடகால இருக்கு. அருமையான இடம். சுத்திலும் மலை. ஏகப்பட்ட அருவிகள். நிறைய காபி எஸ்டேட் இருக்கும்...”“சிக்கரி எஸ்டேட் இருக்காதா?”“ஏதாவது பிணாத்தாதீங்க. அருமையான வெதர். நாள் முழுக்க ஜிலு ஜிலுன்னு ரம்மியமா இருக்கும். இந்த ஒரு தடவை ஜாலி டிரிப் அடிச்சிடலாம். அடுத்த தடவை மறுபடியும் கோயிலுக்குக் கிளம்பிடலாம்...”“நெவர். 

குன்றக்குடி வருவானே தவிர கூர்க்குக்கு வர மாட்டான் இந்த அருணாச்சலம். மகாதேவனைத் தேடிப் போவானே தவிர மலர்த் தோட்டத்துக்குப் போக  மாட்டான்...”“போதும். நான் மட்டும் கூர்க் போறேன். குஷியா இருந்திட்டு வரேன்...”“சரி. ஜாக்கிரதையாப் போயிட்டு வா...”“நான் அனிமல் சஃபாரி போகப் போறேன். புலியோட போட்டோ எடுத்து அனுப்பறேன்...”“நான் வைஷ்ணோதேவி கோயில் முன்னால நின்னு வீடியோ எடுத்து உனக்கு அனுப்பறேன். வீடியோவைக் கும்பிட்டுக்கோ...”இருவரும் புறப்பட்டுப் போய் விட்டார்கள்.

அருணாச்சலம் தன் குழுவுடன் ஜம்மு நகரை அடைந்து விட்டார். அங்கிருந்து காத்ரா எனும் ஊருக்கு நேரடி ரயில் இருக்கிறது. அதன்பிறகு வைஷ்ணோதேவி மலையேற்றம்தான்.
தங்கியிருந்த தர்மசாலா வாசலில் இருந்த கடையில் டீ குடித்தார். குளித்தார். தலையில் ‘ஜெய் மாதா ஜீ...’ என்று போட்டிருந்த ரிப்பனைக் கட்டிக் கொண்டு எங்கு பார்த்தாலும் கும்பல்.
திடீரெனக் குழுத் தலைவர் வந்தார்.“நம்மால வைஷ்ணோதேவி போக முடியாது...” என்றார்.“ஏன்?” என்றார் அருணாச்சலம்.

“அந்த ஏரியால திடீர்னு தீவிரவாதிகள் தாக்குதல் நடந்திருக்கு. யாத்ரீகர்கள் யாரும் வரவேணாம்னு அறிவிச்சிட்டாங்க...”“போச்சுடா. இப்போ என்ன செய்யறது?”“காத்திருந்து பார்க்கலாம்.

அதுவரைக்கும் இந்த ஏரியால இருக்கற பிக்னிக் ஸ்பாட்டுக்கு எல்லாம் போகலாம். ரெண்டு மணி நேரம் பயணிச்சா ஒரு ஏரி இருக்கு. நமக்கு அதிர்ஷ்டம் இருந்தா அங்கே உறை பனி பார்க்கலாம்...”புறப்பட்டு விட்டார்கள். என் கடன் பனி செய்து கிடப்பதே என இயற்கை அந்தப் பகுதியில் பனியை விரவியிருந்தது. பனியில் விளையாடினார் அருணாச்சலம். 

வைஷ்ணோதேவி பகுதியில் இயல்பு நிலை திரும்பவில்லை. எனவே வேறு பல தோட்டங்களுக்குப் போனார்கள். ஒரு ரோஜாத் தோட்டத்தில் வெள்ளை ரோஜா முன்பு படம் பிடித்துக் கொண்ட அருணாச்சலம் அதை அலமேலுவுக்கு அனுப்பினார்.“கோயிலுக்குப் போக முடியல்லே. நேரத்தை ஓட்டனுமேன்னு பிக்னிக் ஸ்பாட் ஒவ்வொண்ணா சுத்திகிட்டிருக்கோம். போட்டோ எல்லாம் பார்த்திருப்பியே! நீயும் போட்டோ அனுப்பு. காபி எஸ்டேட்ல டீ குடிக்கற மாதிரி ஒரு போட்டோ அனுப்பு...” என்றார் போனில்.

“அதையேன் கேக்கறீங்க? இங்கே ஒரே மழை. எட்டு மணி நேரத்துல இருபது சென்டி மீட்டர் மழை. மரம் எல்லாம் விழுந்துடுச்சு. எல்லா ரோடும் மூடிட்டாங்க...”
“அடடா...”“எங்களால ஹோட்டலுக்குக் கூடத் திரும்பிப் போக முடியல்லே. நடு வழில மாட்டிகிட்டோம்...”“ஐயோ! இப்போ எங்கே இருக்கே?”“தேசிய பேரிடர்க் குழு வந்திருக்கு. எங்களையெல்லாம் பத்திரமா ஓர் இடத்திலே தங்க வைச்சிருக்காங்க...”“எங்கே?”“ஒரு கோயில்ல..!”

நந்து சுந்து